Tuesday, November 9, 2021

சிக்கல் தீர்க்கும் #சிங்காரவேலர்

சிக்கல் தீர்க்கும் #சிங்காரவேலர் 

முருகப் பெருமான், சூரனை வதைக்க, அம்பிகையிடம் வேல் பெற்ற இடம். அறுபடை வீடுகளுக்கு இணையாகப் புகழ்பெற்ற திருக்கோவில் . 

வசிட்டர், காமதேனுவின் வெண்ணெய்யினால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு, பூஜைமுடிவில் அதையெடுக்க முயன்றபோது முடியாமற் சிக்கிக் கொண்டமையின் 'சிக்கல்' என்று பெயர் பெற்றது. 

விசுவாமித்திரர், அகத்தியர், காத்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.

சம்பந்தர், அருணகிரிநாதர், சிதம்பர முனிவர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இது. முத்துஸ்வாமி தீக்ஷிதர், பாபநாசம் சிவன் ஆகியோர் முருகன்மீது பாடல் புனைந்துள்ளனர். தலவிருட்சம் மல்லிகை. தீர்த்தம் க்ஷேத்திர புஷ்கரணி (பாற்குளம்).

கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலமும் ஒன்றாகும். கோவிலின் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரமும் 7 நிலைகளையும் உடையது.

நகரத்தார் திருப்பணி பெற்ற முன்மண்டபம் அடுத்து வலப்பால் அம்பாள் சந்நிதியுள்ளது. கந்தசஷ்டி திருநாளின் முந்தைய நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி என்ற பெயர் ஏற்பட்டது. 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.

இத்ததல விநாயகர், சுந்தர கணபதி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சுந்தரகணபதியைத் தொழுது படிகளேறிச் கட்டுமலைமீது சென்றால் நேரே தியாகராஜ சந்நிதி உள்ளது. இது சப்தவிடங்கத்தலங்களுள் அடங்காது. மேலும் இங்கு மரகத லிங்கம் உள்ளது.

அதனை அடுத்து மூலவர் நவநீத நாதர் லிங்க வடிவில் அருள் புரியும் சந்நிதியும், சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன.

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வேல் வாங்கும் விழாவில் சூரபத்மனை அழிப்பதற்காக தன் தாயிடம் வேல் வாங்கி முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல் சிங்கார வேலருக்கு வியர்க்கும். 

பட்டுத்துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறுகிறது.

திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இத்தலம் வந்து சிவனை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக கூறப்படுகிறது. எனவே இத்தல பெருமாள் கோலவாமனப்பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயருக்கும் தனி சன்னதி உள்ளது.

சிவன், பெருமாள், முருகன், அனுமன் என நால்வரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது கோயில் தனி சிறப்பாகும்.

நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மி. தொலைவில் திருவாரூர் செல்லும் சாலை வழியில் சிக்கல் திருத்தலம் அமைந்துள்ளது.



No comments:

Post a Comment