#கனியுமோகாதல்
கனியுமோகாதல்_9
தொடர்கதை: கனியுமோ காதல் அத்யாயம்: 9
'நானும் பார்த்துண்டே இருக்கேன். ஒரே யோசனையாவே இருக்கியே எப்ப பார்த்தாலும். ஏதாவது பிரச்சனையா?'
'ஒண்ணுமில்லேப்பா. ஸ்ரீயோட அப்பாவ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கு. ஹை ஷுகர் அவருக்கு. நாளைக்கு வேற அவன் ஆஃபீஸ் ஓபனிங் ஸெரிமனி. பாவம் இங்கைக்கும் அங்கைக்குமா அல்லாடிண்டிருக்கான். எனக்கு நீ எப்படியோ அவனுக்கும் அவன் அப்பா தான் எல்லாம்.'
'போஸ்ட்போன் பண்ணப் போறானா ஃபங்க்ஷன?.'
'ரெண்டுங்கெட்டானாத்தான் இருந்தான் முதல்ல. நான் தான் அப்புறம் அவனுக்கு தெம்ப கொடுத்தேன். நல்ல நாளா இருக்கு, தள்ளிப் போடாதேன்னு. நான் வேணா கார்த்தால உன் அப்பாவ ஆஸ்பத்திரில பக்கத்துல இருந்து பார்த்துக்கறேன் ஃபங்க்ஷன் முடியற வரைக்கும்னு சொல்லியிருக்கேன்.'
'இதெல்லாம் எதுக்கு தேவையில்லாம இழுத்து விட்டுண்டு'. இப்படித்தான் சொல்ல நினைத்தார் சுந்தரம். அப்போது அவள் மீது சற்று கோபமும் இருந்தது அவருக்கு.
'நேத்திக்கு அவசரம் அவசரமா முதல்நாள் அடையில ரெண்ட டிஃபன் பாக்ஸுல எடுத்துண்டு இவ கிளம்பினது இதுக்குத்தானா? அந்த பையன் மேல இவ ஏன் இவ்வளவு அக்கறை காட்டணும்? ஏதாவது நாம கேட்கப் போய் ஏடா கூடமா பதில் சொல்லிட்டா?'
'கோபத்தோடு பயம் வேறு அப்பைக்கப்ப சேர்ந்துக்கறதே? இத எப்படி ஹாண்டில் பண்றது? நாம ஸ்ட்ரெயிட்டா கேட்டு அவ ஆமாம்னு சொல்லிட்டா என்ன பண்றது? சட்டம் வேற படிச்சிருக்கா. சீக்கிரம் எமோஷன் ஆகற கொழந்த வேற. ஈஸ்வரா, எனக்கு ஏண்டா இப்பேர்ப்பட்ட சோதனைய கொடுக்கற?'
'சரி. இன்னும் கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். அவசரப் பட்டு நாம இப்ப எதுவும் கேட்டுடக் கூடாது.'
மனதை ஒருவழியாக தேற்றிக் கொள்கிறார்.
'ஏம்மா மயில் குட்டி. ஒண்ணு செய்யறேனே. நான் வேணா அந்த பெரியவர ஹாஸ்பிடல்ல பார்த்துக்கறேன். நீ தம்பு செட்டி தெரு போயேன்.'
'இல்லப்பா. அவனோட அப்பா உங்களுக்கு கட்டுப்பட மாட்டார். எதாவது ஹாஸ்பிடல்ல சாக்கு போக்கு சொல்லிட்டு ஃபங்க்ஷனுக்கு கம்பி நீட்டிடுவார். ஒண்ணு வேணா செய்யுங்கோ முடிஞ்சா. நீ என் சார்புல ஃபங்க்ஷன் போயிட்டு வா உங்களுக்கு சௌகர்யப் பட்டுதுன்னா. ஸ்ரீயும் சந்தோஷப் படுவான்.'
அவருக்கும் இது என்னவோ சரியென பட்டது. அங்கு போனால் இவா ரெண்டு பேரைப் பத்தி சுத்தியிருக்கறவா என்ன பேசிக்கறான்னு தெரிஞ்சிக்க வசதியா இருக்கும். ஏன், அந்த ஸ்ரீயே கூட ஏதாவது உளரலாமே என்று கணித்தார். ஏதாவது ஒரு சின்ன லீட் கெடச்சா தனக்கும் மேற்கொண்டு அவளிடம் பேசி புரிய வைக்க தோதாக இருக்கும் என்று நினைத்தார்.
'பெத்த பெண்ணையே வேவு பார்க்கும் நிலைல என்ன வெச்சுட்டியேடா சர்வேஸ்வரா? கொழந்த கல்யாணம் வில்லங்கம் இல்லாமல் போகணுமேங்கற கவலை வேற எனக்கு இப்ப வந்து வந்து வாட்றது.'
மறுநாள் காலையில் ஆறு மணிக்கு அவர் எழும்போது அவரது மயில் குட்டி ஆஸ்பத்திரிக்கு ஸ்கூட்டியில் பறந்து விட்டது.
'மைதிலி கிளம்பிட்டாளா, கௌரி?'
'நீங்க என்ன ப்ரொக்ராம் வெச்சிருக்கேள்? அதையும் சொல்லிடுங்கோ. இப்படி ஆளாளுக்கு எங்கேயாவது கிளம்பிடுங்கோ. உங்களுக்கெல்லாம் அந்த ஈஸ்வரிதான் நல்ல புத்தி கொடுக்கணும்.'
அவளிடம் தன் மன வருத்தங்களை பகிரத்தான் நினைத்தார். ஏதோ அவரை தடுத்தது.
'ஒண்ணுமில்ல கௌரி. மைதிலி அடிக்கடி சொல்லிண்டிருப்பாளே ஸ்ரீதர்னு ஒரு பையனப் பத்தி. அவன் தனியா ப்ராக்டீஸ் பண்ணப்போறான் போல இருக்கு. தம்பு செட்டி தெருவுல ஆஃபீஸ் ஆரம்பிக்கிறானாம். அவளுக்கு வேற ஏதோ வேலை இருக்கு போல இருக்கு. என்ன அந்த திறப்பு விழாவுக்கு அவளுக்கு பதிலா போக சொல்லியிருக்கா. போய் தலைய காமிச்சுட்டு சீக்கிரம் வந்துடறேன்.'
'உங்க ரெண்டு பேர் சமாச்சாரமும் எனக்கு ஒண்ணும் புரியாது. எங்க போனாலும் சமைக்கறதெல்லாம் ஆறி அவலா போகறதுக்கு முன்னாடி வந்து சேருங்கோ.'
'கௌரி, உன் கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா? மைதிலிக்கு ஏதாவது நல்ல வரன் இருக்கான்னு அக்கம் பக்கத்துல கேட்டு வைக்கறயா?'
'ஏற்கனவே உங்க பொண்ண செல்லம் கொடுத்து வெச்சிருக்கேள். இதுல வக்கீல் வேற. கேட்கறவா எல்லோரும் வக்கீலான்னு புருவத்த தூக்கிக்கிறா. என்னவோ லாயரா இருந்தா புக்காத்துல சட்டம் பேசுவான்னு அவா அவா நெனச்சுக்கறா. முதல்ல பொண்ணுக்கு நல்ல தனம் சொல்லி கல்யாணத்துக்கு சரின்னு சொல்ல வையுங்கோ. அப்புறம் வரன பார்க்கலாம்.'
'என்ன கௌரி இப்படி சலிச்சுக்கற. அவதான் சொல்லியிருக்காளோன்னோ. தனியா ரெண்டு கேஸ்கள் கிடச்சோண்ண பண்ணிக்கறேன்னு. பாவம்டி கொழந்த. அதுகளுக்கும் தனியா நாலு காசு சம்பாதிக்கணும்னு ஆசையிருக்காதா. அதுவே சொல்லியிருக்கே ஏற்கனவே. தனியா ப்ராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சோண்ண பண்ணிக கறேன்னு.'
'என் சொல்ல எங்க கேட்கப் போறேள். நீங்களாச்சு ஒங்க பொண்ணாச்சு. காலா காலத்துல நல்ல விஷயம் நடந்தாத்தான் எல்லாம் நன்னா இருக்கும்.'
'சரி கௌரி. சீக்கிரமா மயில் குட்டிக்கிட்ட சொல்லி புரியவெக்கறேன்.'
'அது என்ன மயில் குட்டியோ. உப்பு குதுராட்டம் வயசாயிண்டிருக்கு. சுதந்திரம் கொடுக்கறேன் அது இதுன்னு சொல்லி வளர்த்து அவ சம்மதிச்சாத்தான் கல்யாணம்ங்கற நிலைமைல நிக்கறது. சமச்சு கொட்ட நான் இருக்கேன். அரட்டைக்கு மயில் குட்டி. உங்க சுகத்துக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லையே. அப்புறம் என்ன? எங்கேயோ போகணும்னேளே கிளம்புங்கோ முதல்ல.'
சுருக்கென்று இருந்தது சுந்தரத்திற்கு. ஆனால் நியாயமான கேள்விகளுக்கு பதில் மௌனமாகவோ செயலாகத்தானே இருக்க முடியும்?
தொடரும்....
No comments:
Post a Comment