Monday, November 1, 2021

வைத்ய வீரராகஸ்வாமி" திருக்கோயில்

            எனக்குப் பிடித்த ஆன்மீகத் திருத்தலங்கள்

அநேகம் உண்டு! இருப்பினும் நாம் பிறந்ததும், தாயார்முகம் தானே முதல் அறிமுகம்!     அதைப்போல நான் பிறந்து, வளர்ந்து 16 வருடங்களாக தரிசித்து மகிழ்ந்த திருவள்ளூர் "ஸ்ரீ கனகவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ வைத்ய வீரராகஸ்வாமி" திருக்கோயிலே! பிடித்த முதல் தலம்!

        சிறுவயதில் அந்த ஸ்வாமியின் பெருமையை தெரியாது, ஓடி விளையாடும் இடமாக, அங்குள்ள கல் யானைகளில் மேலேறி தோழிகளுடன் விளையாடிய நினைவுகளை மறக்கமுடியாது! வீரராகவரின் பெருமையை நானறிந்த வரையில் சொல்கிறேன்...

     108 திவ்யத் திருத்தலங்களில் ஒன்று!

தலவரலாறு:

      சாலிஹோத்ர முனிவர் தினம் ஒரு அடியவருக்கு உணவிடுவது வழக்கம்!

அதுபோல் ஒருநாள், பசியோடு வந்த முதியவருக்கு தான் உண்ணும் மாவில் பாதி தர, அதை சாப்பிட்டும் பசி தீராத முதியவர் முனிவரின் பங்கையும் கேட்டு வாங்கி சாப்பிட்ட களைப்பில் ' 'எவ்வுள் கிடக்க!" என கேட்டதும், முனிவர் ஆசிரமத்தின் வுள்ளே! காண்பித்தாராம்! முதியவரும்

அங்கே கால் நீட்டீ படுத்தவர், காலையில் முனிவருக்கு "திரு எவ்வுள் கிடந்தானாக!" காட்சியளித்து முனிவரை வேண்டும் வரம் கேட்கும்படி சொல்ல, அவரும் "தாங்கள் இதே கோலத்தில் இங்குள்ளவர்களுக்கு, சகலவிதமான நோய்களையும் தீர்த்து வைத்து அருள் புரீய வேண்டும்!" என்றாராம்!

அதனால் ஊர் 'திருவள்ளூர்' என பெயர் பெற்றது! ஸ்வாமீயும் "ஸ்ரீ வைத்ய வீரராகவர்" என அழைக்கப்பட்டார். சன்னதியில் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க பாம்பணைமேல் பள்ளி கொண்டு, நாபிக்கமலத்தில்

பிரம்மன் தாமரையில் அமர்ந்திருக்க, வலது கரத்தை சாலிஹோத்ர முனிவரின் தலையில் வைத்திருக்க, இடது கரத்தை நமக்கு அருள்புரிய உயர்த்தியபடியான திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்!

         வசுமதி என்றும், கனகவல்லித்தாயார் எனவும் அழைக்கப்படும் தாயார் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார்!

        பின்புறச்சுற்றில் ஸ்ரீ ராமர் சன்னதி, ஆண்டாள் சன்னதிகள் உண்டு!

           பெருமாளின் திருப்பாதங்கள் அமைந்துள்ள இடத்திலும், முன்புறம் துவஜஸ்தம்பத்திற்கருகில் உள்ள பலிபீடத்திலும், பக்தர்கள் 'உப்பும் மிளகும்' சமர்பிக்கிறார்கள். அவ்வாறு செய்தால் தோல்சம்பந்தமான வியாதிகள், மரு முதலானவைகள் சரியாகி விடுகிறது!

       'ஹிருத்தாபநாசினி!" என்று அழைக்கப்படும் திருக்குளத்தின் மகிமை அளவற்றது! ஒன்பது மூலைகள் கொண்ட இத் திருக்குளத்தைப்போன்று வேறெங்கும் காணவியலாது!

1960 களில்கூட அந்த குளம் முழுவதும் நிரம்பியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதில் நடக்கும் தெப்போச்சவம்! காண கண்கோடி வேண்டும்! தற்போது நீர்வற்றினால் ஒருபுறம் பூங்கா போல் அமைப்பும், நடுவே நீராழி மண்டபமும் சுற்றி குளம் வெட்டி தினமும் அதில் நீர்விடுகிறார்கள். தற்போதும் அங்கே தெப்போற்சவம் நடப்பதாக கேள்வி! நான் பார்த்ததில்லை!

           வயிற்று வலி, கட்டிகள் கரைய வெல்லம் வாங்கி அத்திருக்குளத்தில் கரைத்தால் விரைவில் குணம் பெறுவது கண்கூடு!

அமாவாசை தினங்களில் பெருமாளை தரிசிப்பது சிறப்பு! வேண்டுதல் நிறைவேற மூன்று அமாவாசை தினங்களில் பெருமாளை வழிபடும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது!

      பௌரூமாளுக்கு சாற்றும் உடை இங்கே வித்யாசமாக இருக்கும்! கட்டம் கட்டமாக இருக்கும் இதை 'பப்ளி துப்பட்டீ" என்கிறார்கள்.இது அங்குள்ள கோவில் அலுவலகத்தில் மட்டும்தான் கிடைக்கும்.அதை பணம் கட்டி வாங்கி பெருமாளுக்கு சாற்றலாம்! விசேஷ தினங்களில் பெருமாளுக்கு 'முத்தங்கி' சார்த்துவார்கள்! பார்க்க ஆனந்தமாகயிருக்கும்!

      பெருமாளின் திருத்தேர் உற்சவம் மிக கோலாகலமாக நடக்கும்! அதில் பங்கேற்ற நாட்களும் மனக்கண்ணில் நிற்கிறது!

          பெருமாள் கோவிலின் அருகேயே அமைந்துள்ளது சிவன் கோயில்! 'ஸ்ரீ திரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ தீர்த்தீஸ்வரராக!' அருள்பாலிக்கிறார்! சிறிய கோவிலாயினும் மிகவும் சக்தி வாய்ந்தவர்! சிவன் சன்னதி, சுற்றில் சுவற்றீல் நர்த்தன விநாயகர், பக்கத்தில் தட்சிணாமூர்த்தி, எதிர்புறம், காசி விசாலாட்சி, விஸ்வநாதர், பக்கத்தில் மகிழமரம், கீழே பிள்ளையார், நாகர்கள், பின்புறம் ஒரு பிள்ளையார் சன்னதி, 'வள்ளி தெய்வானை ஸமேத சுப்ரமண்யஸ்வாமி சன்னதி, பக்கத்தில் 'திரிபுரசுந்தரி அம்பாள் சன்னதி, ஐய்யப்பன் சன்னதி, பழனி ஆண்டவர் சன்னதி, நவக்கிரக சன்னதி, எதிர்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி! என மிக அற்புத தரிசனத்தை எனது 16 வயது வரை தரிசித்து மகிழ்ந்திருக்கிறேன்! உற்சவங்களும் மிக விமர்சையாக நடக்கும்!

      1971 ம் வருடம் மாம்பலம் குடிவந்தபின்பும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் திருவள்ளூர்போய் சிவனையும், பெருமாளையும் தரிசித்து மகிழ்வோம்! தற்போது கொரோனா காலத்தில்  வீட்டிலேயே அவர்களது திருவுருப்படங்களைப் பார்த்து வழிபடுகிறோம்!

       மீண்டும் திருவள்ளூர் செல்லும் வாய்ப்பு விரைவில் கிட்ட வேண்டுமென மனதார வேண்டிக்கொண்டிருக்கிறேன்! நாம் நினைத்தால் போதுமா? அவனருளாலேதானே நம்மால் அவன்தாள் வணங்க இயலும்!

       காத்திருப்போம்!



No comments:

Post a Comment