Monday, November 8, 2021

கனியுமோகாதல்_7

 #கனியுமோகாதல்

கனியுமோகாதல்_7

தொடர்கதை: கனியுமோ காதல் அத்யாயம்: 7

'அப்பா, இன்னிக்கு ஐ ஆம் ஸோ ஹாப்பி.'

சுந்தரம் இதைக் கேட்டவுடன் அவருக்கும் சந்தோஷம் காரணம் தெரியாமலே.  மைதிலி சந்தோஷித்தாலே அவர் சந்தோஷித்து விடுபவராச்சே.

'என்னடா என் மயில் குட்டிக்கு ஆச்சு இன்னிக்கு?'

வயது இருபத்தைந்து ஆனாலும் மைதிலி அவருக்கு மயில் குட்டிதான்.

'இன்னிக்கு ஸ்ரீதருக்கு பிக்‌ஷேஸ்வரன் கிட்டேந்து பாராட்டு மழை.'

'அடிக்கடி சொல்வியே அந்த ஐயங்கார் பையன் தானே?'

'ஆமாம்ப்பா.  அவனேதான்.  இன்னிக்கு கோர்ட்டுல NCR சார ஆர்க்யூமென்டுல உண்டு இல்லைனு ஆக்கிட்டானா.  அதான்.'

'பிக்‌ஷேஸ்வரனே பாராட்டினார்னா... க்ரேட் தான்.'

'அதோட மட்டுமா?  அவன் தனியா ப்ராக்டீஸ் பண்ணலாம்னு க்ரீன் ஸிக்னல் கொடுத்துட்டார்.'

'இஸ் இட்?'

'இன்னும் ரெண்டு மாசத்துல தன் கையில இருக்கிற பத்து கேஸ்களையும் அவன் கையில கொடுத்து.'

'என்னமோ சொன்னியே அவர் ஒரு முசுடு, ஜூனியர்களை எப்படி ட்ரீட் பண்ணனும்னே தெரியாது அப்படி இப்படின்னு.'

'அதுவும் உண்மை தாம்ப்பா.  உன்னோட மயில் குட்டிய எத்தனை நாள் படுத்தி அழ வெச்சிருக்கார் தெரியுமா?  நீ வருத்தப் படுவியேன்னு நான் உன்கிட்ட சொல்லறதுல்ல அதெல்லாத்தையும்.'

'வாத்யார்னா அப்படித்தான் இருப்பார்.  பாராட்ட வேண்டிய நேரத்துல பாராட்டுவார்.  குட்ட வேண்டிய நேரத்துல குட்டுவார்.'

'நான் உனக்கு அந்த முழு கேஸையும் சொல்லட்டுமா?'

'உனக்கு இன்னும் சந்தோஷம் கிடைக்கும்னா சொல்லு.  ஆனா நடுவுல நான் தூங்கிட்டா நாளைக்கு என்ன கோச்சிக்க கூடாது சரியா?'

'ஓ.  தூக்கத்துக்காக தான் கேட்கப் போறியா?  முகத்துல தண்ணி தெளிச்சு தண்ணி தெளிச்சு கேட்க வைக்கறேன்.'

'சரி சரி.  சொல்லு சொல்லு.  தூங்கல.'

ஒன்று விடாமல் சொல்கிறாள். ஸ்ரீதர் ஆத்துக்கு சென்றதையும் சேர்த்தே கதை ஓடுகிறது.

'எத்தனை நாழி இந்த லொட லொட.  தூங்க மாட்டேளா சீக்கிரம்?  நாள் முழுக்க அங்கேயும் இங்கேயும் அலஞ்சு வேல பார்க்கிறேள்.  கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க கூடாதா?  ஞாயித்துக் கிழமை வாக்குல இந்த அரட்டையெல்லாம் வெச்சுக்க கூடாதா?'

'அம்மா கோச்சிக்கறா பார்.  தூங்குடா மயில் குட்டி.  நாளைக்கு கன்டின்யூ பண்ணிக்கலாம்.'

போர்வைக்குள் சுருள்கிறாள்.

சுந்தரத்திடமிருந்தும் நிஸப்தம்.  ஆனால் உறக்கத்தை தடுத்த சிந்தனைகள் மெல்ல மெல்ல...

'ஒருவேளை....'

'ச்சே ச்சே.. நம்ம பொண்ணா? இருக்காது.  வீணா சந்தேகப் பட்டு எதுவும் கேட்டுடக் கூடாது.  நம்ம மேல உசுரையே வெச்சிருக்கா.'

'ஸ்ரீதர்ங்கற பேரையே நொடிக்கு நொடி சுருக்கி சுருக்கி ஸ்ரீ ஸ்ரீ ன்னு சொல்றாளே.  சுருக்கம் பேர்ல வந்துடுத்துன்னா நெருக்கம் வந்துடுத்துன்னு தானே அர்த்தம்.'

'நாம தான் அவளுக்கு பரிபூரணமா சுதந்திரம் கொடுத்திருக்கோமே.  அம்மா கிட்டையாவது மறைக்கலாம்.  என் கிட்ட மறைக்க ச்சான்ஸே இல்லையே.'

'ஒருவேளை அவளே நாளைக்கு ஆரம்பிச்சா எப்படி பதில் சொல்றது?  பையன் ஐயங்கார் வேற.'

'அவள கன்வின்ஸ் பண்ணினாலும் கேட்பாளா?'

'பகவானே அந்த மாதிரி நிலைமையெல்லாம் கொடுத்துடாதேடா.  சந்தோஷமா போயிண்டிருக்கற குடும்பம் சண்டை சச்சரவா மாறாம பார்த்துக்கோடா.'

கட்டிலில் படுத்துக் கொண்டு புரண்டு புரண்டு படுத்துக் கொள்கிறாரே தவிர தூக்கம் வரவில்லை அவருக்கு.

'செல்லம் ரொம்ப கொடுத்துட்டோமோ?'

'எவ்வளவோ ஆசைப்பட்டேன் அவ டிகிரி முடிச்சோண்ண UPSC எழுதி பாஸ் பண்ணனும்னு.  இல்லப்பா நான் லா படிக்கணும்ப்பான்னு கெஞ்சினா.  ஒருவேளை அவன் லா படிக்கப்போனதால இவ லா ச்சூஸ் பண்ணினாளா?'

'படிப்புல அவ்வளவு சுட்டி.  ஆனா வாழ்க்கைலேயும் இருக்க வேண்டாமோ?'

என்னவென்று தெரியாது என்பதென்னவோ வாஸ்தவம்தான்.  ஆனா அதுவாக இருக்க கூடாதோன்னோ?

கௌரவக் கேள்விகள் அவருடைய தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்தாலும் அவருடைய மயில் குட்டி மீது வைத்துள்ள நம்பிக்கைகள் தூக்கத்தை வரவழைக்காமலும் இல்லை.

தொடரும்....

No comments:

Post a Comment