Saturday, November 6, 2021

கனியுமோகாதல்_6

 #கனியுமோகாதல்

கனியுமோகாதல்_6

தொடர்கதை: கனியுமோ காதல் அத்யாயம்: 6

 'அப்பா, எனக்கு கொஞ்சம் பணம் தேவைப் படும்ப்பா ரெண்டு மாசத்துல.'

'என்னடா என்ன விஷயம்?'

அன்றைய தினம் கோர்டில் நடந்ததையும் பிறகு பிக்‌ஷேஸ்வரன் கூறியதையும் அப்பாவிடம் விவரித்தான்.

'ரொம்ப சந்தோஷம்டா.  பிக்‌ஷேஸ்வரனே பாராட்டியிருக்கார்னா ஆச்சர்யம்தான்.  உனக்கில்லாத பணமா?  போஸ்டாஃபீஸ்ல டெபாஸிட்டா அஞ்சாறு லக்ஷம் இருக்கு.  அங்கேயும் இங்கேயும் பாங்குகள்ல சேமிப்பு கணக்குகள்ல ஒரு அம்பதாயிரம் தேறும்.  எடுத்துக்கோ.  எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கோ.  எப்படி இருந்தாலும் உனக்கு சேர வேண்டிய பணம்தான அது.'

'அப்பா அப்பா.  அவ்வளவெல்லாம் வேணாம்ப்பா.  ஏதோ ஒரு எடத்த பாத்து அட்வான்ஸ் தர ப்ளஸ் ஓரளவு இன்டீரியர் பண்ற அளவுக்கு இருந்தா போதும்.  கொஞ்சம் லா புக்ஸும் வாங்கணும்.'

'சரி.  எப்ப தேவையோ ரெண்டு நாள் முன்னாடி சொல்லு.  ட்ரா பண்ணி வைக்கறேன்.'

'சார் தன் கையில இருக்கிற ஒரு பத்து கேஸ ப்ராக்டீஸ் ஆரம்பிக்கும் போது எடுத்துக்கோன்னு சொல்லியிருக்கார்.  அத நம்பிண்டுதான் இறங்கலாம்னு இருக்கேன்.'

'நீ உன் மேலையே நம்பிக்கை வெச்சு இறங்கு.  அவர் கொடுக்கறது உனக்கு  நம்பிக்கை வரணும்ங்கறதுக்காக இல்ல.  உன் மேல அவர் வெச்சிருக்கிற அபிமானத்துல.'

'அப்பா, இப்பெல்லாம் நிறைய அட்வகேட்ஸ் வத்துண்டிருக்கா.  கொஞ்சம் லேட்டா என் ப்ரொஃபஷன் பிக் அப் ஆனாலும் கவலைப் படாதீங்கோப்பா.  எப்படியும் நல்ல பேர் எடுத்துடுவேன்.'

'ஃபூல்.  நாம ரெண்டு பேர் நன்னா சாப்பிடற அளவு எனக்கு பென்ஷன் வர்ரது.  வீடோ சொந்தம்.  வாடக பி்ரச்சனை இல்ல.  ஓரளவு சேர்த்தும் வெச்சிருக்கேன்.  எல்லாம் சமாளிச்சுக்கலாம்.  எனக்கு ஒரே குறையே செங்கமலம் நம்ம ரெண்டு பேரோட இல்லையேங்கறது தான்.  அவ இருந்திருந்தா நம்ம ரெண்டு பேருக்குமே பலமா இருந்திருக்கும்.'

சொல்லும் போதே செங்கமலத்தின் உணர்வுகள்.  வாழ்க்கைல பணத்த இழப்பதை விட சொந்தங்கள இழக்கும் கொடுமை இருக்கே. என்னவோ பாதி பலம் குறைந்து போன மாதிரி.

ஸ்ரீதர் வெளியே போன தருணங்களெல்லாம் அவரை வாட்டுவது செங்கமலத்தின் நினைவுகள் தான்.

'நீ இருந்திருந்தா அவனுக்கு புரிய வெச்சு காலா காலத்துல ஆத்துக்கு ஒரு மாட்டுப் பொண்ண அழச்சிண்டு வந்திருப்ப.  இத்தனை நேரம் பேரனோடையும் பேத்தியோடையும் சொப்பெல்லாம் வெச்சு விளையாடிண்டி காலத்தில் ஓட்டிண்டிருந்துருப்பேன்.'

'நான் தொலச்சது ஒன்ன மாத்திரம் இல்லேடி.  சோர்ந்து போய் அவன் வந்தா படுத்துக்கறதுக்கு ஒரு மடியையும் தொலச்சிட்டு அனாதையா நிக்கறேன்.'

அவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே மனம் எங்கெங்கோ செங்கமலத்தோடு போகிறது.

'அப்பா ..  கூல்.  என்ன இது?'

'ஒண்ணுமில்லேடா.  இந்த வருத்தம் ஒண்ணும் எனக்கு புதுசில்லையே?  நீ கவலப் படாத.'

'நீ தப்பா நெனச்சுக்கலைனா ஒண்ணு சொல்லட்டுமா?'

'அடிக்கடி நம்மாத்துக்கு வராளே மைதிலி.  அதாண்டா ஒன்னோட மை.  வேணும்னா அவளையும் உன்னோட பார்ட்னரா சேர்த்துக்கோயேன்.'

'பார்ட்னர்?'

'அந்த பார்ட்னரைப் பத்தி அப்புறம் பேசுவோம்.  நான் சொல்றது ப்ரொஃபஷனல் பார்ட்னர்.'

'அவ கிட்ட நான் இன்னும் பேசல இது பத்தி.  பேசறது தேவையான்னு யோசிச்சிண்டிருக்கேன்.  அவ அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு.  இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல அவ அப்பா ரிடையர் ஆயிடுவார்னு சொல்லியிருக்கா.  நான் ஏதோ அவளுக்கு நம்பிக்கை கொடுத்து அவாளுக்கு பிரச்சனை ஆகிடக் கூடாது.  கஷ்டமோ நஷ்டமோ என்னோடையே போகட்டும்னு பார்க்கறேன்.'

'கேட்கறத கேட்டுடு.  அப்புறம் தன்ன பார்ட்னரா, ஐ மீன் பிஸினஸ் பார்ட்னரா சேக்கலையேன்னு வருத்தப் படப் போறா?'

'நான் பார்த்துக்கறேம்ப்பா.  நல்ல பொண்ணு அவ.  நல்ல ஃப்ரெண்ட் கூட.  அது எந்த விதத்துலையும் ஸ்பாயில் ஆயிடக் கூடாது.  பிக்‌ஷேஸ்வரன் சார் கிட்ட அவ இன்னும் ஒரு வருஷம் இருந்தா அவளுக்கே நல்ல ஸெல்ஃப் கான்ஃபிடென்ஸ் வரும்.  அப்ப பார்க்கலாம்.  நீங்க அமைதியா இருங்கோ.'

'அப்புறம் சொல்ல மறந்துட்டேனே.  டாக்டர் தெய்வசிகாமணி ஒரு ஆயின்மெண்ட் கொடுத்தானே.  அது கால் எரிச்சலுக்கு நன்னா  கேட்கறதுடா.'

'அப்பா, ஆயின்மெண்ட் தான் இருக்கேன்னு நான் அன்னண்ட போனதுக்கப்பறம் சர்கரைய வாயில் அள்ளிப் போட்டுக்காதீங்கோ.  கால் எரிச்சலுக்கே டாக்டர் ஷுகர தான் காரிலேட் பண்றார்.'

'சரி சரி.  சும்மா அதையே சொல்லாத.  நான் ஜாக்ரதையா இருக்கேன்.  நீ என்ன பத்தி துளிக் கூட கவல படாதே.'

அவன் வெளியே கிளம்பியதும் ஏதேதோ கற்பனை.

'அந்த பொண்ணு நல்ல மாதிரியா தெரியரா?'

'நானும் எப்படி எப்படியோ பேசிப் பார்க்கறேன்.  புடி கொடுத்து பேச மாட்டங்கறானே?'

'பஞ்சும் நெருப்பும் பக்கத்துல பக்கத்துல பழகிண்டிருக்கு.  ஒரு நாளைக்கு பத்திக்காமயா போகப்போறது?'

'ஸ்மார்த்தா என்ன ஸ்மார்த்தா?  ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் அக்கறை எடுத்துக்கறா.  இத விட என்ன வேணும்?'

'இவா மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுடுத்துன்னா அந்த பொண்ணோட அப்பாவ கத்திய காமிச்சு மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க மாட்டேன்?'

'இவன் அவள மைன்னு கூப்டறதும் அவ இவன ஸ்ரீன்னு கூப்டறதும் இவாளுக்குள்ள ஒண்ணுமில்லாமையா இருக்கும்?'

'செங்கமலம் இருந்து அவ காதுல ஒரு வார்த்தை போட்டிருந்தா சித்த நாழியில கண்டு பிடிச்சிருப்பா.'

'அவா ரெண்டு பேர் மனசுல பத்திக்கலைனா என்ன?  நாம எதுக்கு இருக்கோம்.  ஏதாவது செய்வோம்?  நமக்கு வேணுங்கறது நல்ல மாட்டுப் பொண்ணு ஆத்துக்கு.  அதுக்கு ஏதாவது திரிஸமனம் பண்றது தப்பில்லையே?'

'நமக்கு வேற ஷுகர் ஆள கொன்னுண்டிருக்கு.  போய் சேரதுக்கு முன்னாடி இதுங்க ரெண்டையும் சேர்த்து வெச்சு பார்க்கணும்.'

'ரெண்டு பேரும் வக்கீல்.  ஒண்ணுக்கொண்ணு ஆத்துல எப்படி சண்ட போடறதுன்னு பார்க்கணும்.  என்ன ஜட்ஜா கூப்பிடுங்கேளே.  யார் பக்கம் தீர்ப்பு சொல்றது?'

இதுவரை செங்கமலத்தின் நினைவுகளில் சுழன்று சுழன்று சோகங்களையும் துக்கங்களையும் சுமந்து  கொண்டிருந்தவருக்கு  ஸ்ரீதரின் வாழ்க்கையில் மைதிலியின் வரவு கொஞ்சம் கற்பனைகளை கொடுத்துக் கொண்டிருந்ததில் ஆச்சர்யம் இருக்கிறதா என்ன?

நினைவுகளோடு வாழ்பவர், சற்று கனவுகளோடுதான் காலத்தை கழிக்கட்டுமே.

தொடரும்.....

No comments:

Post a Comment