Saturday, November 6, 2021

கனியுமோகாதல்_5

 #கனியுமோகாதல்

கனியுமோகாதல்_5

தொடர்கதை: கனியுமோ காதல் அத்யாயம்: 5

'மாலை சூடும் மணநாள்

மங்கையின் வாழ்வில் திருநாள்..'

'என்ன மைதிலி.  பாட்டெல்லாம் அமக்களப் படறது?  கோர்டுல ஏதாவது கேஸ் ஜெயுச்சிட்டியா என்ன?'

கேட்ட அம்மா கௌரியின் கன்னத்தை அழுத்தி கிள்ளுகிறாள்.

'இன்னிக்கு பிரபல வக்கீலோட கோர்ட்டுல என் கூட வேலை பார்க்கிற ஜூனியர் ஆர்க்யூமெண்ட்டுல வெளுத்து கட்டினான்.  ஸ்ரீதர்னு பேர்.  ஐயங்கார் பையன்.  என்னோட கிரிஸ்டியன் காலேஜுலேயும் ஒண்ணா படிச்சவன்.  அத நெனச்சு சந்தோஷப் பட்டுண்டிருந்தேன்.'

'அதான் பாட்டெல்லாம் அமர்க்களப் பட்டுதா?'

'அம்மா, அப்பா எப்போ வருவாம்மா?'

'என்னடி புதுசா கேட்கற.  அவருக்கு ஆஃபீஸ் இல்லையா?  சாயந்திரம் ஏழு மணிக்குதான் வருவா எப்போதும் போல.  எதுக்கு என்னிக்குமில்லாத திருநாளா கேட்கற?'

'அந்த கேஸைப் பத்தி அவர் கிட்ட பேசணும்.  ஒனக்கு ஒண்ணும் புரியாது.  அதான்...'

'உனக்கு சாயந்திரம் வக்கீல் ஆஃபீஸுக்கு போகணுமோன்னோ?'

'ஆறு மணிக்கே போகணும்மா.  ஒன்பது மணிக்கு மேல ஆச்சுன்னா அப்பாவ TVS50 ஐ எடுத்துண்டு வரச் சொல்லு.'

அப்பா சுந்தரத்தின் செல்லப் பெண் அவள்.  பல நாட்கள் அவளை பிக்‌ஷேஸ்வரன் ஆஃபீஸுலேந்து அழைத்து வருவது அவர்தான்.  அவர் கலெக்டர் ஆஃபீஸ் கதைகளை இவளுக்கு சொல்வதும் இவள் பிக்‌ஷேஸ்வரன் மாதிரி நடித்து காண்பிப்பதும் தினமும் நடக்கும் சந்தோஷங்கள்.

'கை வரண்டு போற அளவுக்கு பேசிண்டே இருக்கேளே.  மள மளன்னு சாப்டுட்டு ஒக்காந்து அரட்டை அடிங்கோளேன்.  பத்து பாத்திரம் ஒழிச்சு தேச்சுப் போட்டு எனக்கு ஒரு நாள பார்த்தாப்பல நேரத்துக்கு என்னிக்காவது தூங்க முடியறதா?'

கௌரியின் சத்தத்தை என்னிக்கு காதில் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்?

கொஞ்சம் அசதியில் ஐந்து மணிவரை தூக்கம்.  ஐந்தரைக்கெல்லாம் ரெடியாகி விட்டாள் பிக்‌ஷேஸ்வரன் ஆஃபீஸுக்கு.

தேசிகாச்சாரி ரோடுக்குள் நுழைவதற்கு முன் அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சடாரியையும் துளசி தீர்த்தத்தையும் வாங்கிக் கொண்டுதான் செல்வாள்.

ஆஃபீஸுக்குள் நுழையும் போதே அஸிஸ்டண்ட் நடராஜன், 'மேடம், உங்கள எல்லோரையும் சார் அவரோட ரூம்ல உட்கார சொல்லியிருக்கார்.'

'ஸ்ரீதர் சார் வந்தாச்சா?'

'இன்னும் இல்ல மேடம்.'

பிக்‌ஷேஸ்வரன் ரூமில் ஏஸி ஓடிக் கொண்டிருந்தது.  ஸ்ரீதரைத் தவிர மற்ற ஜூனியர்ஸ் ஏழு பேரும் உட்கார்ந்திருந்தார்கள்.

'என்ன எல்லாரும் வந்தாச்சாடா நடராஜா?'

'ஸ்ரீதர் ஐயாவைத் தவிர எல்லாரும் வந்தாச்சு சார்.'

'நீ போய் என்னோட சிகரெட் பொட்டியையும் லைட்டரையும் லானுக்கு எடுத்துண்டு வா.'

சிகரெட்டை ஊதி முடிப்பதற்கும் ஸ்ரீதர் வருவதற்கும் சரியாக இருந்தது.

'நன்னா பண்ணினியாடா ஆர்க்யூமெண்ட?'

'யார் வந்தா அந்த ஸைடு?'

'பெரியவரே வந்திருந்தார் சார்.'

ஊதிய சிகரெட்டை அணைத்து டஸ்ட்பின்னில் போட்டுவிட்டு உள்ளே நுழைகிறார்.

'கொஞ்ச நாழி முன்னாடி ராகவாச்சாரி ஃபோன் பண்ணியிருந்தான்.  ஸ்ரீதரோட ஆர்க்யூமெண்ட்ஸ் 

நன்னா இருந்ததுன்னு சொன்னான்.  சந்தோஷம்.'

'இந்த கேஸுல ஜெயிப்போம்னு எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்ல.  நானும் முடிஞ்ச அளவுக்கு மூணு வருஷமா தள்ளிண்டுதான் இருந்தேன்.  ராகவாச்சாரியே ஷொட்டு கொடுக்கறதால எனக்கே ஒரு நம்பிக்கை வரது கேஸுல.  அடுத்த ஹியரிங்க்ல நான் ராகவாச்சாரிய பார்த்துக்கறேன்.'

மைதிலி முகத்தில் சோகம்.  'ஸ்ரீயே மேற்கொண்டு வாதாடட்டும்னு சொல்ல மனசு வரதா பாரு.'

'ஒரு ஆர்க்யூமென்ட் நன்னா பண்ணினதால எல்லாத்தையும் ஜெயுச்சுடலாம்னு கர்வம் வந்துடக் கூடாது ஒனக்கு.  எனிவே, ஐ ஆம் க்லாட்.  இன்னும் ரெண்டு மூணு மாசத்துல ஸ்ரீதர் தனியாவே ப்ராக்டீஸ் பண்ண ஆரம்பிக்கலாம்.  நானே உனக்கு ஆஃபீஸ் வெச்சிக் கொடுத்து ஹெல்ப் பண்றேன்.  ஆரம்பத்துல கேஸுக்கெல்லாம் அலைய வேண்டாம்.  என் கையில இருக்கற கேஸுகள்ல பத்து கேஸ்கள தரேன்.'

'ஸ்ரீதருக்கு மாத்திரம்னு நெனைக்காதீங்கோ.  நீங்க எல்லாருமே எனக்கு ஒண்ணுதான்.  இங்கேயே ஹாய்யா இருந்துண்டு கதா காலக்ஷேபம் பண்ணிண்டு காலத்த ஓட்டிடலாம்னு நெனைக்காதீங்கோ.   சோம்பேறிகள்லாம் வெச்சு ஆதரிக்க இது ஒண்ணும் சந்த மடம் இல்ல.'

'மைதிலி கூட டேலண்டட் தான். ஆனா வெரி எமோஷனலா இருக்கா.  இந்த ப்ரொஃபஷன்ல கேஸ் ஜெயிக்கணுங்கறதுல இருக்கற ஆர்வத்தோட நன்னா ப்ரெஸன்ட் பண்ணினோம், நன்னா ஆர்க்யூ பண்ணினோம்ங்கற ஸேடிஸ்ஃபேக்‌ஷன் தான் முக்கியம்.'

'இந்த ப்ரொஃபஷன் ஒரு 'வித்தியாசமானது.  நன்னா ப்ரஸன்ட் பண்ணி கேஸும் தோக்கலாம். பெரிய அளவுல ஆர்க்யூ பண்ணாம கேஸும்  ஜெயிக்கலாம்.  கேஸோட ரிஸல்ட் எதுவும் நம்ம கையில இல்ல.  நாம டெடிகேட்டடா கேஸ ஹாண்டில்  பண்ணிண்டு இருக்கோமான்னு அடிக்கடி கேட்டுண்டே இருக்கணும் மனசுக்குள்ள.  என்ன, நான் சொல்றது புரியறதா?'

'நீங்கள்லாம் எனக்கு குழந்தைகள் மாதிரி.  நன்னா வரணும் நீங்க எல்லாம்.'

ஒவ்வொரு ஜூனியரின் குறைகளையும் சுட்டிக் காட்டி அவர்களை திருத்திக் கொண்டிருந்தார்.

அன்றைய தினம் பிக்‌ஷேஸ்வரன் சார் எல்லா ஜூனியர்ஸுகளுக்கும் வித்தியாசமாக முற்றிலும் மாறுபட்டவராக தெரிந்தார்.

ரூமை விட்டு வெளியே வரும்போது சக ஜூனியர்கள் ஒவ்வொருவராக ஸ்ரீதரின் கைகளைக் குலுக்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

'வஸிஷ்டர் வாயாலயே ப்ரம்ம ரிஷி வாங்கியாச்சு.  ரொம்ப கொடுத்து வெச்சிருக்கீங்க நீங்க.'

'ஸ்ரீதர், நான் டின்னர் முடிச்சிட்டு வரேன்.  ஓடிப்போயிடாதே.  லெட் அஸ் டிஸ்கஸ் புவனேஸ்வரி கேஸ் இன் டீடெய்ல்.'

சொல்லிவிட்டு பிக்‌ஷேஸ்வரன் ஆத்துக்குள் செல்கிறார்.

அதன் பிறகு வழக்கம்போல ஜூனியர்ஸ் ஆஃபீஸை பரபரப்பாக்கிக் கொண்டிருந்தனர்.

தொடரும்....

No comments:

Post a Comment