#கனியுமோகாதல்
கனியுமோகாதல்_1
தொடர்கதை: கனியுமோ காதல்
அத்யாயம்: 1
'வாம்மா. ஸ்ரீதர் குளிச்சிண்டிருக்கான். இந்த பெஞ்சுல உட்காரு. வந்துடுவான்.'
வாம்மா என்று அழைத்தது ஆராவமுதன். ஆராவமுத ஐயங்கார். வடகலை என்று அவர் நெற்றியில் இருந்த திருமண் சொன்னது. வந்தவளுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவளைப் பொருத்த மட்டில் அவர் ஒரு ஐயங்கார்.
வந்தவள் மைதிலி. பெற்றோருக்கு ஒரே பெண். ஒரு பிரபல அட்வகேட்டின் கீழ் ஸ்ரீதரோடு ஜூனியராக வேலை பார்க்கிறாள்.
'பிக்ஷேஸ்வரன் உங்க ரெண்டு பேரையும் கசக்கி பிழியறான் போல இருக்கே.'
அவர் சொன்ன அந்த பிக்ஷேஸ்வரன் தான் ஸ்ரீதருக்கும் மைதிலிக்கும் ப்ரொஃபஷனல் குரு. அவர் ஊதித் தள்ளுவது ஃபில்டர் வில்ஸ் சிகரெட்டுகளை மாத்திரம் இல்லை. எடுக்கும் கேஸுகளையும் தான். இவரிடம் ஜூனியராக பணியாற்ற கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த வரம் இவர்களுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் வாயைத் திறந்தால் திட்டல்களும் மிரட்டல்களும் மட்டுமே. வரும் க்ளையண்டுகள் பணத்தையும் கொடுத்துவிட்டு பேச்சுகளையும் கேட்டுக் கொண்டு போகவேண்டும்.
'ஆமாம் மாமா. படுத்தல்தான். என்ன பண்றது. சொந்த காலுல நிக்கற வரைக்கும் பொறுத்துக்க தான வேணும்.'
'முணுக்கு முணுக்குன்னு ஸ்ரீதருக்கு முன்னெல்லாம் கோபம் வரும். இப்ப ரொம்ப கொறஞ்சுடுத்து. ரொம்ப திட்டு வாங்கறானோ பிக்ஷேஸ்வரன் கிட்ட.'
'ஸ்ரீதர் மாத்திரமா வாங்கறான். நானும் தான். ஒத்தொருக்கொருத்தர் கண்ண தொடச்சி விட்டுண்டு காலத்த ஓட்டிண்டிருக்கோம் மாமா.'
'ஒன் பேரு என்ன? உனக்கு எங்க ஜாகை?'
'பேர் மைதிலி. எனக்கு மைலாப்பூர் மாமா. இன்னிக்கு நானும் ஸ்ரீதரும் யுனிவர்ஸிடி லைப்ரரி போறோம். ஆத்துக்கு வந்துடு, சேர்ந்து போகலாம்னு சொன்னான். சீக்கிரம் பஸ் கெடச்சதால பத்து நிமிஷம் முன்னாடி வந்துட்டேன்.'
'வந்து என் கிட்ட மாட்டிண்டுட்டேன்னு சொல்லு.'
'அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா.'
'மாமா, சமையல் உள்ளேந்து ஏதோ தீஞ்ச வாசன வர்றதே.'
'அட ராமா. பால காச்சிண்டிருந்தேன். உன்னோட பேசிண்டே பாலை கோட்டை விட்டுட்டேனா?'
ஓடிப்போய் gகேஸ் ஸ்டவ்வை அணைக்கிறாள் மைதிலி.
'காஃபி சாப்பிடணும் போல இருந்தது. காச்சிண்டிருந்தேன். ஒண்ணு செய்யேன். அவன் காப்பி சாப்பிடமாட்டான். நம்ம ரெண்டு பேருக்கு மாத்திரம் காப்பி போடறையா?'
'சரி மாமா. சர்க்கரை மீடியமா போடட்டுமா?'
'நல்ல வேளை கேட்டியே. ஸ்ட்ராங் அண்ட் டபுள் ஷுகர் இஸ் ஆல்வேஸ் மை ச்சாய்ஸ். நீ ஒனக்கு ஏத்தமாதிரி போட்டுக்கோ.'
'பொங்கினது போக பால் ஒண்ற டம்ளர் காப்பிக்குதான் வரும். உங்களுக்கு ஒரு டம்ளர், எனக்கு அரை. சரியா?'
'யூ ஆர் ஸோ ஜெனரஸ். Gகாட் ப்ளெஸ் யூ.'
கலந்து எடுத்துக் கொண்டு பெஞ்சுக்கு வருகிறாள்.
'தூக்கித்தான் சாப்பிடுவியோ? எனக்கு ஸிப் பண்ணி சாப்பிட்டாதான் காப்பி சாப்பிட்ட திருப்தி இருக்கும்.'
காப்பி குடித்துக் கொண்டிருக்கும் போது பாத்ரூமிலிருந்து தட புடா கட புடா என்று பக்கெட்டுகள் சத்தம்.
'குளிச்சு முடிச்சுட்டான்னு நெனைக்கிறேன். இப்ப ஏதாவது பாட்டு வரும் பாரு.'
ஆராவமுதன் சொல்லி வாயை மூடவில்லை. பாட்டு ஒன்று பாத்ரூம் கதவைத் தாண்டி.
'நெஞ்சம் மறப்பதில்லை. அது நினைவை இழக்கவில்லை. நான் காத்திருந்தேன். உன்னைப் பார்த்திருந்தேன். கண்களும் மூடவில்லை..'
'நிறைய தடவை கேட்டுட்டேன் இந்த பாட்டை அவன் வாயிலேந்து. யாரைடா நெனச்சிண்டு இருக்க மனசுலேன்னும் கேட்டுட்டேன். சொன்னா சட்டு புட்டுன்னு கல்யாணத்த முடிச்சுடுவேன். நீயாவது இன்னிக்கு அவன் கிட்ட கேட்டுட்டு நாளைக்கு என் கிட்ட சொல்றியா?'
'சித்த இப்படி திரும்பி உட்கார்ந்துக்கோ. அறிவு கெட்டவன், அரைத் துண்டோட வந்தாலும் வருவான் பாத்ரூம்லேந்து'
சிரித்துக் கொண்டே திரும்பி உட்கார்ந்து கொள்கிறாள்.
'மை, எப்ப வந்த?'
'அது என்னடா மை. அவ பேரே மூணு எழுத்து. அத்த கூட சுருக்கணுமா? சீதா பிராட்டி பேர சுருக்க எப்படித்தான் மனசு வரதோ?'
'வந்து பத்து நிமிஷம் ஆச்சு ஸ்ரீ.'
'ஏம்மா, நீயுமா? அச்சுதன் பேர சொச்சம் வெச்சு கூப்பிடறையே?'
'சாரி மாமா. இப்படியெல்லாம் யோசிக்கறதே இல்ல.'
'அவர் கெடக்கார் மை. யாராவது கெடச்சுட்டா விட மாட்டார்.'
'இருக்கட்டும் ஸ்ரீ. கொஞ்ச நாழி அவரோட பேசிண்டிருந்தது இன்ட்ரெஸ்டிங்காத்தான் இருந்தது.'
'அப்பா, இது என்ன காஃபி டம்ளர் அடியில சர்க்கரை.'
'அதுவா, உன்னோட ஃப்ரெண்டு அவளே சமையல் உள்ளுக்கு போய் அவளுக்கும் காஃபி போட்டு எனக்கும் எடுத்துண்டு வந்தா. அவளுக்கு தெரியாதோண்ணோ நான் டயபடிக்குன்னு. சர்க்கரைய போட்டு எடுத்துண்டு வந்துட்டா. ஆசையா போட்டு எடுத்துண்டு வந்தவ கிட்ட எதுக்கு அதெல்லாம் சொல்லிண்டுன்னு குடிச்சிட்டேன்.'
'அப்பா, போன தடவையே H1A1B வேல்யூ 9.5 தாண்டியிருந்தது. கொஞ்சம் கன்ட்ரோல் பண்றதுல சிரத்தை காட்ட கூடாதா? அப்புறம் நீங்கதான் ஆஸ்பத்திரி உபாதைன்னு கஷ்டப்படணும்.'
மைதிலி எங்காவது உண்மையை சொல்லிவிடப் போகிறாளேன்னு சைகை காட்டுகிறார்.
'மைதிலி, இனிமேலைக்கு ஷுகர என் கண்ணுல காட்டக் கூடாது என்ன?'
'மை, அப்பா கூட சித்த பேசிண்டிரு. பத்து நிமிஷத்துல ரெடியாயிடறேன்.'
சொல்லிட்டு சென்றுவிட்டான்.
'மாமா, உங்க கிட்ட ஜாக்ரதையா இருக்கணும் போல இருக்கே. என்ன கேட்டேள் ஸ்ட்ராங், அப்புறம் என்ன அப்புறம் என்ன டபுள் ஷுகர். ஆத்துல அம்மா கிட்ட சொல்லி வேப்பயில விழுத அறச்சு எடுத்துண்டு வரேன் நாளைக்கு.'
'உடம்ப பார்த்துக்கணும் மாமா. இன்னும் பச்ச குழந்த மாதிரி என்ன இது?'
'இல்ல மைதிலி. ஸ்வீட்டான ஒரு பொண்ணு கையால கசப்பா எப்படி காப்பி கேட்கறது? நீ ஒண்ணும் கவலைப் படாதே. ரெண்டு யூனிட் இன்ஸுலின் ஜாஸ்தி போட்டு காம்பென்ஸேட் பண்ணிடலாம்'
மைதிலி சிரிக்கிறாள் அவர் பேச்சைக் கேட்டு.
தொடரும்....
No comments:
Post a Comment