Wednesday, March 9, 2022

ஒரு பிராமண மாமீ

 ஒரு பிராமண மாமீ.

பல சிந்தனைகள்.

..........

இன்று  உறவினர் cum நண்பரின் திவசம். மதியம் ஒரு வேலை விஷயமாக போய்விட்டு அங்கிருந்து  கிளம்பிக்கொண்டு இருந்தபோது  ஒரு 60 வயது மதிக்கத்தக்க   மாமி‌ சட்டென்று  உள்ளே சமையலறையிலிருந்து மடிசாருடன்  வெளியே வந்து, 

" தம்பி !! நீங்க இப்போ கெளம்பறேளா?? அப்படினா நேக்கு ஒரு உதவி செய்யறேளா!! "

..... என்று கேட்க.. நானும் சொல்லுங்க மாமி எனச் சொல்ல,

என் சின்ன பிள்ளையாண்டான் எனக்காக ஆத்துல ரொம்ப நேரமா காத்துண்டு இருப்பான். சாப்பிட்டானான்னு தெரியல. போற வழியில ஒரு பஸ்ஸடாப்ல என்ன எறக்கி விட்டுடறேளா?? நான் ஊரப்பாக்கம் வரை பஸ்ல போனோம் ....

என்று ஸ்பஷ்டமான ஐயர் பாஷையில் விளித்தார்.

நானும் அதுக்கென்ன மாமி!!.தாராளமா கூட்டிண்டு போய் விடறேனே என்று சொன்னவுடன், சத்த இருங்கோ நான் மடிசார் மாத்திண்டு வந்துடறேன்.

இங்க இருக்க்கிற 2 கிலோமீட்டருக்கு இந்த ஆட்டோகாரன் 100ரூ‌பாய் கேக்கறான்பா...

என்று கூறியவாறு உள்ளே சென்று உடைமாற்றிகொண்டு வந்தார்..!!

பிறகு அவருடன் காரில் செல்லும்‌போது   மெதுவாக, யாரு மாமி நீங்க?? உங்களை நான் இதற்கு முன் இங்கு பார்த்ததில்லையே, அவங்களுக்கு நீங்க சொந்தக்காரங்களா என்று  நான் கேட்க..?

இல்லைப்பா!! அவாளுக்கு நான் எந்த சொந்தமும் இல்ல. நான் அவா வீட்டுக்கு தெவசத்துக்கு சமைக்கிறத்துக்காக வந்தேன். ஏறக்குறைய 20 to 30 items மடியோட பண்ணணும். பெரிய வேலை. 

ப்ரமணாளுக்கு , சாஸ்திரிகளுக்கு, பிண்டம்‌, அதிரசம், வடை, பெரண்ட தொகையல்னு நிறைய வேலை இருக்கு... இப்போ இருக்கிற நிறைய பேருக்கு தெவசசாப்பாட்ட சமைக்கதெரியாது.

நான் சின்ன வயசுல இருந்தே அக்ரஹாரத்துல வளர்ந்த பொண்ணு. கஷ்டப்பட்ட ப்ராமண குடும்பம். மெட்ராஸ் வந்து 45 வருஷம் ஆச்சு.. நான் நல்லா சமைப்பேன்.

தெவசம், சுபகாரியம்னு எதுக்கு கூப்பிடறாளோ அவா அவா வழக்கப்படி அவாளுக்கு சமைச்சு கொடுப்பேன். அதுக்கு ரூ1,250 வாங்கிப்பேன். அவ்ளோதான்.

விடிய காலைல எங்காத்துல இருந்து 4.30 மணிக்கு பஸ்புடிச்சி வந்து மடியோட வந்து சமைக்க ஆரம்பிச்சேனா 11.30 மணிவரைக்கும் வேலை இருக்கும். அப்பறம் அவா எல்லாரும் சாப்பிட்டு முடிச்ச உடனே  நான் கெளம்பிடுவேன்.

பகவான் புண்ணியத்துல நீங்க வந்தீங்க. இல்லாட்டி வேகாத வெயில்ல நான் நடந்துதான் போயிருப்பேன்....

 என்று கூற, எனக்கு உள்ளே எதுவோ செய்தது..!!

மாமி, மாமா என்ன பண்றார்? ஏன் இந்த வயசுல இவ்வளோ கஷ்டப்படறீங்க..? வீட்டுலயே இருக்கலாமே இல்ல?

.... என்று நான் கேட்க.!!

தம்பி !! நம்பி வந்த எங்க ஆத்துகாரர் என்னை  2 பிள்ளைகளோடு நடுத்தெருவில் விட்டுட்டு வேற ஒருத்தியோடு  போய் 40 வருடம் ஆச்சுப்பா. பொறந்த ஆத்துக்கும் போககூட முடியாத அளவு கஷ்ட ஜீவனம். புகுந்த ஆத்துலயும் எங்கள மதிக்கல. என்ன கர்மவினையோ. நான் படிச்சதும் 4 வது வரை தான்.. இவ்ளோ பெரிய ஊர்ல நான் தனியா என்ன செய்யமுடியும்னு இந்த ரெண்டு புள்ளேள வெச்சுண்டு நிராதரவா நின்னவப்பா நான்....

என்று கூற, எனக்குள் சொல்லமுடியாத ஒரு துயரம் ஏற்பட்டது..

எதுவும் பேசாமல் நான் அப்படியே இருக்க , அவரே தொடர்ந்தார்..

பிறகு ஒரு சாஸ்திரிகள் என்னை இந்த மாதிரி‌சமையல் உதவி கேட்க, நான் செஞ்ச விதமும் , ருசியும் எல்லோத்துக்கும் பிடிச்சு போக ஏறக்குறைய 30 வருடமா இந்த வேலைய செஞ்சுண்டு இருக்கேன். மாசம் 30,000 ரூபாய்‌ இந்த சமையல் வேலைலயே நான் சம்பாதிச்சுடுவேன்..

இன்னோன்னு தெரியுமோ!!!என் பெரிய பிள்ளையாண்டான் ஒரு Engineer. ஒரு IT கம்பெனிலதான் வேலை பண்ணிட்டு இருக்கான். Wiproவாமே அதுல இருக்கான்.

சின்னவனும் வேலைல  இருக்கான். இன்னும ஸ்திரமான வேலை கிடைக்கல. ஆனாலும் உத்யோகம் புருஷலட்சணமோன்னோ!! ஆத்துல புருஷா சும்மா இருக்கப்டாதோள்யோ...!! சம்பளம் கூடவோ , கொறைவோ, வேலைக்கு போய்கிட்டு இருக்கான் என்று கூறினார்.

முடியுதோ இல்லையோ வைராக்யத்தோட அத்தன கஷ்டத்தோட  அவாள நான் படிக்கவெச்சேன். அவாளும் இப்போ தலையெடுத்துட்டா என்று கூற, நான் ஒன்றுமே இல்லாத ஒரு  தனி மனுஷியாக செய்த பிரம்மாண்ட சாதனையை இவர் போகிற போக்கில் சாதாரணமாக சொன்ன விதத்தில் ஆச்சரியப்பட்டு போனேன்.

பிறகு நான் சும்மா இருக்காமல், என்ன மாமி பசங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்க??

அதுவரை தைரியமாக வீராப்பாய் இருந்து மாமி உடைந்து  கண்கலங்கினார். 

ஆமாப்பா பெரியவனுக்கு கல்யாணம் ஆய்டுத்து. ஆனா, அவன்கூட பேசி ரெண்டு வருஷமாச்சி..

 என்று கூற எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

பிறகு அழுகையை அடக்கி கொண்டு ஒன்று சொன்னார்.

 மாட்டுபொண்ணுக்கு  என்ன சுத்தமா பிடிக்கல. ஆத்துக்கு ஆத்து வாசப்படி. நான்‌ வாங்கிவந்த வரமோ என்னமோ..!! நான் யாருக்குமே பாரமா‌இருக்க விரும்பியதே இல்லை. 

முதல்ல தனிகுடித்தனம் போனா?? அது கூ‌ட‌ சந்தோஷம் தான். அவா ரெண்டுபேரும் சந்தோஷமா இருந்தா அதவிட எனக்கு என்ன‌வேணும். சரி 

மாட்டுபொண்ணு மதிக்கலேன்னா  பேசலேண்ணா என்ன ??பையன் இருக்கானேன்னு இருந்தேன்.

ஆனா என்ன நடந்ததுன்னே இப்பவரைக்கும் தெரியல.

ஆளாளுக்கு 1000 நியாயங்கள் இருக்கலாம்‌பா...  தர்மம் ஒண்ணுதானேப்பா!!

எனக்கு அப்பாவுக்கு அப்பாவா,  மகனுக்கு மகனா இருந்த என் பெரிய மகன் இப்போ ஆத்துக்கு வரற்து கூட இல்ல.. அட அதவிடுப்பா என்னோட பேசறது கூட இல்ல.. Atleast தெனம் ஒரு முறை,  அட அதுகூட  இல்லேண்ணா ஒரு வாரத்துக்கு ஒரு முறை,அட அதுவும் வேண்டாம் ஒரு  மாசத்துக்கு ஒரு முறை ஒரு 5 நிமிஷம் பேசகூட நேரம் இல்லைப்பா அவனுக்கு..

நான் என்ன அவன்கிட்ட பணம்காசா கேட்கபோறேன். ஆறுதலான ஒரு வார்த்தை  என்ன்ம்மா ? எப்படி இருக்க? சாப்டியா. இவ்ளோதாம்பா... அது போதும் எனக்கு... ஆனா அதக்கூட‌ கேட்க மனசில்லேப்பா அவனுக்கு....!!

மனசு கேட்காம நான் போன் பண்ணிணா கூட, 10 தடவைக்கு ஒரு தடவை எடுப்பான்..!!  ஏம்மா நான் எவ்ளோ பிசி.. சொல்லு என்னவேணும்னு அவன் கேட்கும் போது.. நான் என்னப்பா சாப்டியா‌ ?? நல்லா இருக்கியான்னு கேட்டா கூட..?? இதுக்குதான் போன் பண்ணியாமா?ஏம்மான்னு படுத்தறனு. வெச்சுடு வான்பா..!!

ஒரு அவசர உதவினாலும் 1000 முறை யோசிச்சுதான்‌ பெத்த மகனுக்கே போன் செய்யவேண்டி இருக்குப்பா இந்த வயசான காலத்துல...

 என்று கண்ணீருடன் கூற என் இதயம் கனத்தது..!!

சின்னவன் இன்னும் இருக்கான். அவன் எப்படியோ அவன்‌ கல்யாணத்துக்கு அப்புறம்‌.

என்றவாறே முடிக்கவும் பஸ் ஸ்டாப்வரவும் சரியாக இருந்தது..!

அவர் இறங்கும் போது சொன்னார்..

தம்பி என்ன தப்பா நினைக்காதீங்க .. முன்ன பின்ன தெரியாத ஒருத்தர் கிட்ட இந்த மாமி இப்படி பேசிட்டாளேன்னு... காலைல இருந்து மனசு சஞ்சலமா இருந்தது..!! ஒரு‌மாதிரி கஷ்டமா இருந்தது... கார்ல ஏறின உடனே‌ நீங்க ரொம்ப இயல்பா வேற பேசினேளா... என்னை அறியாம உங்ககிட்ட‌ கண்கலங்கிட்டேன்..

அந்த பகவான் உங்களுக்கு சகல சௌபாக்கியத்தையும் கொடுக்கட்டும்னு சொல்லியவாறு இறங்கி சென்றுவிட்டார்..!!

இன்றைய இளைய தலைமுறைக்கு என்ன ஆனது...? 

எனக்குத் தோன்றியது...

வயதான காலத்தில்  உங்கள் பெற்றோருக்கு நீங்கள்  கோடி ருபாய் கொடுக்க வேண்டும்‌ என்றோ, அவர்களுக்கு  பணிவிடைகள் செய்ய வேண்டும் என்றோ பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்ப்பதில்லை ‌..!!

அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது ஆறுதலான வார்த்தைகளை, இயல்பான  விசாரிப்புகளை.. ஜாலியான நகைச்சுவைகளை... நீங்கள் அவர்களுக்கு இருக்கிறீர்கள் என்ற ஒரு  தைரியத்தை..!!

தொலை தூரத்தில் இருந்தாலும் ஒரு வாரத்திற்கு Atleast அரைமணி நேரம் இயல்பாக அவர்களிடம்‌ பேசுங்கள்... முடிந்தவரை அவர்களை அடிக்கடி ஊருக்கு சென்று‌பாருங்கள்...!!

 சிறுவயது நினைவுகளை அவர்களிடம் பகிருங்கள்.

இதற்கு கூட உங்களால் முடியவில்லை என்றால்... உங்களை மனிதர்‌கள் என்ற கணக்கில்  கூட யோசிக்க முடிவில்லை...!!

வயதான காலத்தில் உங்களின் அன்புக்காக ஏங்கி அவர்கள்‌விடும் ஒவ்வொரு‌ கண்ணீர்துளியும்‌ 1000 கோடி சாபங்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்..!!!

A forwaded message...

No comments:

Post a Comment