Wednesday, March 23, 2022

ஈஸி சேர் - 11

 #Easychair_11

அத்யாயம் : 11 ... ஈஸி சேர்

சுப்பிணி என்று கூப்பிட்டால் அவன் சுப்ரமணியன் தானே. தற்போது அவனுக்கு வயது முப்பத்தி இரண்டு.

அப்பா வேதராமன்.  அம்மா மீனாக்ஷி.  பரம்பரை பணக்காரர் வேதராமன்.  பணம் எவ்வளவு இருக்கிறதோ அதைவிட பக்தி ப்ரவாகமாய் குடி சூழ்ந்த ஒரு குடும்பம்.  மடிப்பாக்கத்தில் வேதராமனின் வீடு, இல்லை இல்லை அரண்மனை.

வேதராமன் மீனாக்ஷி தம்பதியினருக்கு சுப்ரமணியன் மற்றும் சுமதி இரு குழந்தைகள்.  சந்தோஷம், பாசம், மரியாதை,  எல்லாவற்றிலும் இந்த குடும்பம் ஒரு எடுத்துக்பாட்டு.

வேதராமன் போஸ்ட் மாஸ்டராக இருந்து போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக ரிடையர் ஆனவர்.  சில கோவில்களில் தர்ம கர்த்தா.  ஏதேதோ ஒரு சில தொண்டு நிறுவனங்களிலும் கௌரவ பதவிகள்.

நடராஜ மாமா மூலம் இந்த குடும்பத்திற்கு அறிமுகப் படுத்தப் பட்டவர் நம் வைத்யநாத ஐயர்.

அடிக்கடி பூஜைகள், ஹோமங்கள், விழாக்கள், வைபவங்கள் ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கும் வேதராமன் வீட்டில்.  திருப்தியோடு எல்லாவற்றையும் நடத்திக் கொடுப்பதால் வைத்யநாத ஐயர் தான் இவர் வீட்டுக்கு ஆஸ்தான வைதீகர்.

வைத்தா வாத்யார் மீதும் அவர் மனைவி மீதும் மட்டற்ற அபிமானம்.

இதோ இந்த சுப்பிணிக்கு ஆயுஷ்ய ஹோமம் நடத்தியவரே நம் கதாநாயகர் தான்.  தனக்கு பிள்ளையில்லா குறையை இவன் தான் இன்று வரை தீர்த்து வைத்துக் கொண்டுருக்கிறான்.

அப்பா பூஜை செய்யும்போது அங்கு பக்ஷணங்களும் பழங்களும் இருக்கும்.  அப்பா அனுமதிப்பதில்லை எடுப்பதற்கு, நிவேதனத்திற்கு முன்னால்.  தன் பஞ்சகச்சத்தில் அதை எடுத்து மறைத்து இவ்வனிடம் கொடுத்து யாருக்கும் தெரியாமல் சாப்பிடு என்று வைத்தா வாத்யார் கூறுவார்.  அவனும் வாங்கிக் கொண்டு ஓடிவிடுவான்.  இந்த லீலைகளை பாருவிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போவார்.  சில சமயங்களில் இவன் வாயை சரியாக துடைக்காமல் இவரும் வேதராமனிடம் மாட்டிக் கொள்வார்.

வேதராமனுக்கு பயந்து இருவருமே பொய் சொல்வார்கள். இதுவும் நடக்கும்.  வேதராமன் மனதளவில் இதையெல்லாம் ரசிப்பது இவருக்குத் தெரியும்.

நன்றாக படித்து பட்டங்கள் வாங்கி பெரிய உத்யோகத்தில் சேர்ந்தாலும் இவர் மீது உள்ள அன்பு மட்டும் சிறிதும் மாறவில்லை.

வேதராமன் வீட்டில் சுமங்கலி ப்ரார்த்தனை நடந்தால் முதல் அழைப்பு பாருவுக்குத் தான்.  வேதராமன் வீட்டு மடி சமையலுக்கும் பாரு தான்.  இவர்கள் வீட்டிலிருந்து கிடைத்த ஒன்பது கஜம் பட்டுப் புடவைகளுக்கென்று ஒரு தனி பீரோ தேவைப் பட்டது பாருவுக்கு.

சம்பாவனைகளை வேதராமனிடமே  விட்டு விடுவார் வைத்தா வாத்யார்.  ரொம்ப ஜாஸ்தி என்பது இவர் குரலாகவும், பரவாயில்லை வைத்தா வைத்துக்கொள் என்பது வேதராமன் குரலாகவும் இருக்கும்.

அவர் வீட்டு திருமண வைபவங்களில் பாருவின் உத்யோகமே பொக்கிஷங்களை பார்த்துக் கொள்வது.  எல்லாவற்றையும் ஒரு சிறு சந்தேகம் வராமல் பார்த்துக் கொள்வாள், அவர்களும் பாருவிடம் பொறுப்பை ஒப்படைத்தால் நிம்மதியாக வேறு வேலை பார்க்கலாம் என்று நிம்மதியாக இருப்பர்.

சைக்கிளிலிருந்து பைக் மாறினான் சுப்பிணி, பிறகு கார்.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாருவைப் பார்க்க வந்துவிடுவான்.  இவர்கள் வீட்டில் இவன் எல்லா விஷமங்களுக்கும் எந்த தடையும் கிடையாது.

சமையல் மேடையில் துள்ளிக் குதித்து உட்ககாருவான்.  பாருவோடு கிண்டலும் கேலியும் குறைவில்லாமல் இருக்கும்.  பாருவின் மடி அவனுக்கு எப்போதுமே பஞ்சு மெத்தை.  அவளும் அவனுக்கு விசிறிக் கொண்டே கதைகள் பல சொல்லுவாள்.  தொடையே வலித்தாலும் பொறுத்துக் கொள்வாள்.

இதற்கு மேல் இவன் வைத்தா பாரு தம்பதி மேல் வைத்த அன்பை நீங்கள் கற்பனை செய்தாலும் அவைகளும் நடந்திருக்கும்.

சரி... நாளை ஈஸி சேர் கதை சொல்லும் இவன் இந்த வைத்தா வாத்யாருக்கு மறக்க முடியாமல் செய்த உபகாரத்தை.

தொடரும்...

No comments:

Post a Comment