Thursday, March 31, 2022

ஈஸி சேர் - 27

 #Easychair_27

அத்யாயம் : 27 ... ஈஸி சேர்

சப்தபதி முடிந்து, காலை முதல் ஹோம புகையில் இருந்த, விசு வாத்யார் சற்று தன்னை ஆஸ்வாசப் படுத்திக் கொள்ள வாசலுக்கு வந்தார்.

வாசலில் ஒரு கார்.  காரிலிருந்து இறங்கிய நபரை ஆச்சர்யத்துடன் வரவேற்றார்.  வந்தது வேறு யாருமில்லை.  காஞ்சி மடத்திலிருந்து கண்ணனும் மற்றும் இரண்டு மடத்து வேத விற்பன்னர்களும்.

வழியில் கொஞ்சம் ட்ராஃபிக்.  கொஞ்சம் லேட்டாயிடுத்து.  எல்லாம் நல்ல படியா நடந்ததோண்ணோ.  பெரியவா எங்களை அனுப்பிச்சா.

உள்ளே வந்தவுடன், ஆசீர்வாத மந்திரங்களை கணீரென்று ஆரம்பித்து, இருவருக்கும் மங்கல அட்சதை தூவி, கொண்டு வந்த வேஷ்டி, அங்கவஸ்திரம், புடவை, மஞ்சள், குங்குமம், பழம், கற்கண்டு மற்றும் 501ரூபாய் ஸ்வர்ணபுஷ்பத்தோடு அளி்த்தனர்.  அவர்களும் நமஸ்கரித்து வாங்கிக் கொண்டனர்.

பெரியவாளுக்குத்தான் வைதீக குடும்பளிடத்தில் எத்தனை ப்ரேமை.  குடும்பத்தினரோடு அத்தனை பேரும் சிலிர்த்து நின்றனர்.

மடி சமையல் மூவருக்கும் விசு வாத்யாரும் நடராஜ ஐயரும் தங்கள் கையாலேயே பரிமாறி மகிழ்ந்தனர்.  பிறகு விடை பெற்றனர், அவர்களின் இதயம் கனிந்த நன்றிகளோடு.

(சாப்பாட்டு மெனு சொல்ல வில்லை என்றால் முகநூல் நண்பர்கள் கோபிக்கிறார்கள்.  என்ன செய்வது, கல்யாணத்தில் எல்லோரையும் அனுசரித்து போக வேண்டியிருக்கே.  அதுவும் கட்டு கட்டாக ஆசீர்வாத பணங்களை வேறு வைத்திருக்கிறார்களே, விட்டுவிட முடியுமா?)

அப்புவின் முஹூர்த்த சாப்பாடு அட்டகாசம் போங்கள்.

பால் பாயசம், தயிர் பச்சடி, ப்ரூட் மிக்ஸ் பச்சடி, பருப்புசிலி, உருளைக் கிழங்கு கறி, அவரைக்காய் கறி, அவியல், வெத்தக்குழம்பு, கத்திரிக்காய் சாம்பார், முருங்கைக்காய் மோர்க்குழம்பு, பத்தமடை அப்பளம், ஆவக்காய் ஊறுகாய், வடை, கொத்தமல்லி ரசம், கெட்டி மோர், மைசூர்ப்பா ஸ்வீட், பூந்தி....ஆத்மார்த்தமாக செய்திருந்தான்.  ஒரு சிலர் முருங்கக்காய் சாம்பார் எதிர்பார்த்தாலும், மடி சமையலையும் உத்தேசித்து மோர்க்குழம்பில் சேர்த்திருந்தான் சாமர்த்தியமாக.

ஆசீர்வாதம் பண்றவா வாங்கோ, என்ற சபைக் குரல்.  தாராளமாக தங்கள் சக்திகளுக்கு மீறியே உறவினர்களும் ஸ்வர்ண புஷ்பங்களை அள்ளிக் கொடுத்தார்கள் தம்பதியினருக்கு.  ஒவ்வொரு பெரியவர்களையும் தனித்தனியாக நமஸ்கரித்தனர் இருவரும்.

வேதராமன் குடும்பத்தினரின் ஆசீர்வாத்த்திற்கு ஸ்பெஷல் மந்திரங்கள்.  சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.  இந்த ஆலமரத்தின் தெம்பில்தானே இந்த வைதீக வைபவம்!

பெரியவா அட்சதையையே கையில் எடுத்தனர் வேதராமன் தம்பதியினர், ஆசீர்வதிக்க.  பிறகு வெற்றிலை பாக்கு பழத்தட்டோடு தலைக்கு 5000 ரூபாய் பதினாயிரம் கட்டி வராஹனாக கொடுத்தனர் இருவரும்.  கண்ணிலே நீர் தளும்ப வைத்தா நன்றி கூறினான் இருவருக்கும், தம்பதியினரின் நமஸ்காரத்தோடு.

மீனாட்சி நலங்குக்காக இங்கு இருப்பாள், நான் மாத்திரம் சென்று இரவு வருகிறேன் என்றார்.

கிட்டத்தட்ட உறவினர்களை தவிர எல்லோரும் ஒவ்வொருவராக விடை பெற்றனர்.

சாப்பாடு முடித்ததும் அனைவருக்கும் அசதி.  அதிகாலை எழுந்தது, பரபரப்பாய் இருந்தது, எல்லாம் சேர்ந்து, கிடைக்கும் இடங்களில் எல்லாம் நித்திரை கண்டனர்.

மாலை 5 மணிக்கு நலங்குக்கு சம்பிரதாய அழைப்புக்கள் முடிந்து பட்டுப்பாயும் ஜமக்காளமும் விரிக்கப் பட்டன.

பிறகு விளையாடல் சாமான்கள், அப்பளங்கள், அரிசி, பருப்பு, தேங்காய் பந்து, சந்தனம், குங்குமம், சோப்பு, சீப்பு, கண்ணாடி, பூப் பந்துகள்....எல்லாம் தயார்.

வைத்தா பக்கத் தலைவி ராஜம் அத்தை, பர்வதத்தின் பக்கத் தலைவி மீனாட்சி, உப தலைவி கீதா.

ஒவ்வொரு விளையாட்டும் பெருத்த ஆரவாரங்களோடு.   சிலவற்றில் வைத்தா விட்டுக் கொடுத்தான், சிலவற்றில் பர்வதம் நாணத்தால் தோற்றுப் போனாள்.  பார்த்தவர்களுக்கு பேரானந்தம்.  கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் எல்லையே இல்லை.

காலையில் கையைப் பிடித்தான் வைத்தா.  கெட்டியாக பிடி என்று வாத்யார் சொன்னதின் மற்றொரு அர்த்தம் ஆண்மைக் கரத்தை அவளுக்கு உணர்த்து என்பது தானே.

தாம்பத்யத்திற்கு முன் மற்றைய ஸ்பரிசங்கள், நிதானமாக, நாசூக்காக.  பெண்மையை ஆண்மையும், ஆண்மையை பெண்மையையும் ஸ்பரிசங்கள் மூலம் ஒருவருக் கொருவர் உணரத்தானே இந்த நலங்கு வைபவம்.

ஹாரத்தியோடு இனிதே நிறைவு பெற்றது நலங்கு.

ஸ்பரிசம் ஸ்வாசமாயிற்று.  ஸ்வாசம் சுகந்தமாயிற்று.  சுகந்தம் சுகத்தை கொடுத்தது தாம்பத்யத்தில்.  தாம்பத்யம் வாழ்க்கையை கொடுக்கிறது.  வாழ்க்கை எதார்த்தத்தில் நிறுத்துகிறது தம்பதியினரை.

மறுநாள் கட்டுசாதக் கூடையும் முடிந்தது.

தொடரும்....

(பி்கு:  பாஸ்கர் சத்யா ஓதிவிட்ட பண விவரங்களில் அவன் முகநூல் நண்பர்கள் எப்படி வாரி வழங்கியிருக்கிறார்கள் என்று பார்த்தான்.  அவர்கள் வாயாலும் சொல்லிவிட்டால் கணக்கை சரி பார்த்துவிடுவான்.  என்ன சொல்றீங்களா?)

No comments:

Post a Comment