எண்ணப்பறவை_44
எழுதியது பாஸ்கர் சத்யா
திங்கள் காலை மணி ஒன்பதரை. விலாசத்தை தேடி கண்டுபிடித்து கணபதி சுந்தரம் ஒரு வழியாக போஸ்டல் காலனி பவானி அகத்திற்கு வந்து விட்டார்.
வாசலில் பவானியின் அப்பா சதாசிவ ஐயரும் ராமனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
'வாங்கோ.. வாங்கோ...உள்ள வாங்கோ! பவானி, மாமா வந்திருக்கார் பாரு.'
'வாங்கோ மாமா' அனந்த கிருஷ்ணனும் வரவேற்கிறான்.
'ஆஃபீஸ் லீவா இன்னிக்கி'
'ராமனுக்கு நைட் ஷிஃப்ட். சாயந்திரம் கிளம்பிடுவான். இவாளெல்லாம் இருக்கறதால இன்னிக்கு லீவ் போட்டிருக்கேன்.'
வாங்கி வந்த வாழைப்பழ சீப்பையும் மல்லிகைப் பூ சரங்களையும் பவானியிடம் தருகிறார்.
'அப்புறம்...'. சம்பாஷணையை யதார்த்தமாக துவக்குகிறான் அனந்த கிருஷ்ணன்.
'நேத்திக்கு எங்காத்துக்கு வந்து எங்கள கௌரவப் படுத்தினதுக்கு த்தேங்க்ஸ்.'
'த்தேங்க்ஸோட நிக்கப் படாது மாமா. குமுதாவையும் எங்காத்து மாட்டுப்பொண்ணா கொடுக்கணும். ராமன் அநியாயத்துக்கு ஏங்கிண்டிருக்கான் நேத்திலேந்து.'
அனந்த கிருஷ்ணனின் அந்த ஜோக்கிற்கு எல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டனர். ராமனும் அனந்த கிருஷ்ணன் முதுகில் சற்று பலமான லேசாக தட்டினான்.
'ரொம்ப சந்தோஷம். முறைப்படி கல்யாணத்த முடிச்சிட்டு அனுப்பிச்சா போச்சு.'
'மாமா, எங்காத்துல எல்லாம் இருக்கு. பையனுக்கு நல்ல உத்யோகம். எங்க ரெண்டு பேருக்கும் ஊர்ல சகல சௌகர்யமும் இருக்கு. உங்க சக்திக்கு என்ன முடியுமோ அத பண்ணுங்கோ போதும். எங்காத்துல அத்தனை பேருக்கும் உங்க பொண்ண பிடிச்சு போச்சு. மீதி எல்லாம் உங்க சௌகர்யம்.'
'ரொம்ப சந்தோஷம் மாமா. திடீர்னு என்னோட ரெண்டாவது பொண்ணுக்கும் ஒரு வரன் கெடச்சிருக்கு. ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா பண்ணலாமான்னு தோணறது. ஆனா, எனக்கு அந்த சக்தி தற்சமயம் இல்ல. ஆத்துக்காரி சேர்த்து வெச்சிருந்த நகையும் பாத்திரங்களும் தவிர ஒரு அம்பது ரூபா வெச்சிருக்கேன். இன்னும் நாலஞ்சி இடத்துல கேட்டு பார்த்துட்டு அப்புறம் வந்து பேசட்டுமான்னு கேட்டுட்டு போகத்தான் வந்தேன். நேத்திக்கு நீங்க நாளைக்கே வந்து பேசுங்கோன்னு சொன்னேளா, அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.'
'மாமா, நீங்க வரன்னு சொல்றது என்னோட வேல பார்க்கிற பையனா இருந்தா கவலைய விடுங்கோ. நானும் பவானியும் இன்னிக்கு சாயந்திரமே பையனோட அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்கிடறோம். அந்த குடும்பத்த பத்தி ராமன் கிட்டேயும் என் மாமனார் மாமியார் கிட்டேயும் பேசிட்டோம். அவளாளும் ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா வெச்சுக்கலாம்னு சொல்லிட்டா. த்ருப்தி தானே.'
'ரொம்ப சந்தோஷமா இருக்கு இப்பேர்ப்பட்டவாத்துல எங்க குமுதா வாக்கப்படப்போறத நெனச்சு. மொதல்ல அந்த மாமி வந்தபோது விட்டேத்தியாத்தான் பதில் சொன்னேன். அப்ப குமுதா கல்யாணத்த பத்தி ஒண்ணும் புரிபடாம இருந்தது. இப்ப கொஞ்சம் தெம்போட பேசலாமில்லையா?'
'புரியறது மாமா. உறவுக்காரா மாதிரியே பழகுவா அந்த பையனும் மாமியும். நிஜமாவே அவா எங்களுக்கு சொந்தக்காராளா ஆனா ரொம்ப சந்தோஷப் படுவோம்.'
'நம்ம கையில என்ன இருக்கு? பகவான் அனுக்ரஹிச்சான்னா நாம நடத்திடப் போறோம்.'
பவானியிடம் பதிலளித்துக் கொண்டிருந்தபோது சதாசிவம் இடைமறித்தார்.
'கணபதி சுந்தரம், யோகம் ஏதோ உங்க கிட்ட பேசணும்கறா.'
'ஒண்ணுமில்ல மாமா. அவசரத்துல ஊர் காரா எல்லார் கிட்டேயும் பொண் பார்க்கர விஷயத்த சொல்லல. எங்களுக்கு நிச்சயதார்த்தத்த திருக்காட்டுப் பள்ளியில வெச்சிக்கணும்னு ஆசை. கல்யாணத்த திருச்சில வெச்சிண்டா பக்கமா இருக்கும். வண்டிச் சத்தம் அது இதுன்னு தேவையில்லாம காசு செலவாகறத மிச்சம் பண்ணலாம். நிச்சயதார்த்தம் வரும்போது ஆத்து சம்பிரதாயத்த சொல்லிடறோம். வைதீகத்துலேயும் மனுஷாள கவனிக்கறதுலேயும் கொற இல்லாம பார்த்துண்டாலே போதும். காஞ்சிப் பெரியவா சொல்படி டௌரியெல்லாம் நாங்க வாங்க மாட்டோம். நல்லபடியா கல்யாணத்த நடத்தினா போதும். என்னடா ராமா, நீ சொன்னபடியே சொல்லிட்டேன். த்ருப்திதானே உனக்கு?'
பின்னால் வந்து அம்மாவின் தோள்களை கட்டிக் கொள்கிறான்.
'ஏய், ஏய். கையை எடுடா. எலும்பெல்லாம் நொறுங்கறது.'
'நீங்க என்னன்னெவோ கேட்பேள், நான் என்னன்னெவோ சொல்லும்படியா இருக்கும்னு வந்தேன். என்ன பேச விடாம பண்ணிட்டேளே! ஒண்ணு நன்னா தெரியறது. எங்காத்துப் பொண்ணுக்கு வாழ்க்கை ரொம்ப நன்னா அமையப் போறது.'
அவர் கண்கள் கலங்கியதை பவானி கவனித்து விட்டாள்.
'மாமா, கண் கலங்காதீங்கோ இப்பவே. கொஞ்சம் மிச்சம் மீதி வெச்சிக்கோங்கோ. சாயந்திரம் நாலு மணிக்கு நானும் எங்காத்துக்காரரும் உங்காத்துக்கு வரோம். கொஞ்ச நாழி பேசிட்டு தாம்பரம் போவோம். அரவிந்த் அம்மா கிட்ட பேசி அமுதா கல்யாணத்தையும் முடிச்சிடுவோம்.'
'எனக்கு மனுஷா இல்லையே அங்க போய் பேசறதுக்குன்னு நெனச்சேன். அதையும் சுலபமாக்கிட்டேள்.'
'ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணி அரவிந்து கிட்டேயும் சீக்கிரம் ஆத்துக்கு போக சொல்றேன். அவனையும் வெச்சிண்டு பேசினா அல்மோஸ்ட் அமுதா கல்யாணம் தீர்மானமான மாதிரிதான்.'
'பவானி, மாமா முன்னாடி அப்பவே காஃபிய வெச்ச. இப்ப ஜில்லிட்டு போயிருக்கும். வேற கொண்டுவா. இது வேண்டாம்.'
பரவாயில்ல சார். நான் எப்போதும் ஆறித்தான் குடிப்பேன்.'
'உங்க அப்பாம்மா ஊருக்கு கிளம்பிட்டாளா?'
'ஊரெல்லாம் இல்ல மாமா. இங்க தான் பம்மல்ல சங்கர் நகர்ல இருக்கா. அண்ணாவோட இருக்கா. அண்ணா பேர் சோமசுந்தரம். சோமாசி சோமாசின்னு அவன விட்டு வரமாட்டா. அவன் மேல அவ்வளவு உயிரு அவாளுக்கு. நானும் அவாளுக்கு சோமாசி பிடிக்குமேன்னு விட்டுட்டேன். பவானிக்கு அவாள்லாம் பம்மல்லியே இருக்கான்னு ஒரே கோபம். இவாள்லாம் வந்திருக்காளே. ரெண்டுநாள் இருந்துட்டு போகலாம்னா கேட்டாத்தானே!'
'இப்ப எதுக்கன்னா அவர் கிட்ட போய் இதெல்லாம். அவர் வந்த விஷயத்த கவனிங்கோ.'
'பொண்கள் ரெண்டு பேரும் ஆஃபீஸ் போயிட்டாளா மாமா?'
'சின்னவ கெளம்பிட்டா. பெரியவ இத்தனை நேரம் கிளம்பியிருப்பா.'
'அடடா, அப்ப நாங்க சாயந்திரம் வரும்போது மன்னிய பார்க்க முடியாதா?'
'ஏண்டி பவானி. நேத்திலேந்து மன்னி மன்னின்னு சொல்லிண்டே இருக்கட்டும். த்ருஷ்டி படும். இங்கதான பக்கத்துல இருக்கா. ஏதாவது ஒரு சாயரக்ஷையா போனா மணிக்கணக்குல போய் பேசிட்டு வாயேன். பேரனையும் அழச்சிண்டு போ. ஜாலியா இருந்துட்டு வாயேன்.'
'மாமி, அந்த பொண்ண பார்த்தா பாவமா உங்களுக்கு தோணவே இல்லையா?'
வழக்கம்போல வந்த அனந்த கிருஷ்ணனின் ஜோக்கிற்கு ராமன் கை கொடுத்தான்.
'சரி, அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேன் எல்லார் கிட்டேயும்.'
'சரி மாமா. சரியா நாலு மணிக்கு ரெடியா இருங்கோ. சுபர்பன் ட்ரெயின் புடிச்சு தாம்பரம் போகணும். ஸ்டேஷன்லேந்து பத்து பதினஞ்சு நிமிஷ நட தான் அவாம்.'
ஆத்திற்கு வருவதற்கு முன் வழியில் உள்ள டெலிஃபோன் பூத்தில் குமுதாவிற்கும் அமுதாவிற்கும் சுருக்கமாக விவரங்களை தெரிவிக்கிறார்.
தொடரும்....
No comments:
Post a Comment