நாட்களை காசிக்கு முன்னும், காசிக்குப் பின்னும் என்று வெகு எளிதாக பிரித்துப் பார்க்க முடிகிறது. ஆழ்நிலை மாற்றங்கள் தெள்ளத் தெளிவாக உணர வைக்கப் படுகிறது. எப்போது வேண்டுமானாலும் காசியில் கங்கையின் படிகளில் அமர்ந்து கொண்டிருக்கும் மனநிலை வாய்த்து விடுகிறது. காதுகளுக்கு அருகில் கேட்கும் நீரின் க்குளு க்குளு சப்தம் இதோ என்பதற்குள் கேட்கத் துவங்கி விடுகிறது. உடலுக்கும் மனதுக்கும் தொடர்பற்ற ஏதோ ஒரு வெளியில் ஆன்மா மிதந்து கொண்டிருப்பதான உணர்விலிருந்து மீண்டு வந்து சாம்பாரும், அவியலும், அபிஷியல் மெயில்களும், கடந்து செல்கிறது.
விஸ்வத்துக்கே அதாவது இந்த உலகத்துக்கே நாதனாக விளங்கும் விஸ்வநாதன் எனும் பேரண்ட நாயகன் தன முழு ஆற்றலோடு விரிந்து கிடக்கும் நகரமே காசி, ஒரு மஹா யந்திரமாக செயல்பட்டு நம்மை இந்தப் பிரபஞ்ச சக்தியோடு இணைக்கக் கூடிய செயலை செய்யும் பூமியாக அது செயல்படுகிறது என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் சொல்வது உண்டு. நம் உடலில் இருக்கக் கூடிய 72000 நாடிகள், 108 முக்கியமான சக்தி முடிச்சுகள், என்ற பலவிதமான கணக்குகளை அங்கு கோவில்களாகவும் சக்தி அமைப்புகளாகவும் அவர் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தக் கூடியது.
இதை எல்லாம் தாண்டி, அங்கு இருந்த சின்நாட்கள் அனுபவத்தில் காசியை ஒரு பறவை பார்வை காணக் கூடிய தாக்கத்தை நம்முள் ஏற்படுத்தி விடுகிறது. அஸ்ஸி எனும் துறையில் துவங்கும் காசி, வருணா என்னும் துறையில் முடிகிறது. இரண்டையும் சேர்த்து மொத்தம் 64 துறைகள், காட்ஸ் என்று சொல்கிறார்கள். சந்திர பிம்பத்தின் அரைவட்ட கோணத்தில் விரிந்து குவிந்து கிடக்கிறது இத்துறைகள். சிவபெருமானின் சடையில் துவங்கும் பிறைச் சந்திரன் என்று சொல்கிறார்கள் காசிவாசிகள். ஒவ்வொரு துறையையும் (காட்சையும் ) ஒவ்வொரு மாநிலங்கள், அமைப்புகள் பேணி வருகின்றன. அதையொட்டிய பெயர்களோடு அத்துறைகள் அமையப் பட்டிருக்கிறது.
அநேகமாக கரையை ஒட்டியே ஒவ்வொரு காட்டாக நம்மால் நடக்க முடிகிறது. நான் குறைந்த பட்சம் படிகளோடு ஒரு 20-22 துறைகள் நடந்திருப்பேன். இன்னும் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அது மிகையல்ல. அது தவிர ஒரு தோணி எடுத்துக் கொண்டு மொத்த துறைகளையும் ஒரு கண்களால் விழுங்கி வந்தோம். ஐந்து மிக முக்கியமான துறைகளில் ஸ்நானம் செய்தும் வந்தோம். ஆனால் இந்த சாங்கியங்களைத் தாண்டிய காசியை உள்ளே ஒன்று இன்னமும் உணர்ந்து கொண்டிருக்கிறது.
கேதார்காட்டில் நடந்த ஒரு அதிசயத்தையும், ஹனுமான் காட்டில் அதையொட்டி நடந்த ஒரு விகசிப்பையும் பகிர்ந்து கொள்வதற்கு முன் ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும்.
காசிக்கு முன்னான இந்துத்துவ உணர்வும் காசிக்குப் பின்னான உணர்வும் முற்றிலும் வேறு வடிவத்தில் என்னை ஆட்கொண்டுள்ளது. உங்களுக்குத் தெரிந்த, தமிழ்நாட்டில் உள்ள, ஒரு மிகப் பெரும் கோயிலை மனதில் கொண்டு வந்து கொள்ளுங்கள், அது ஸ்ரீ ரங்கமோ, இல்லை மதுரை மீனாட்சி கோவிலாகவோ கூட இருக்கலாம். இப்போது அதன் அத்தனை பிரகாரங்களிலும் ஒன்றரை அடி சாலையைக் மையமாகக் கொண்டு இரு புறமும் குடியிருப்புகளை, வியாபரஸ்தலங்களை, மசூதிகளை, கருவறை சுவர் வரை கற்பனை செய்து பாருங்கள், உங்கள் உடல் பதறுகிறதா? சுவாசம் முட்டி ஒரு அச்சம் தோன்றுகிறதா? பதறப் பதற ஒவ்வொரு வீடாக, கடையாக, மசூதியாக தாண்டி செல்கிறீர்களா, எதிர் பாராத ஒரு முட்டுச் சந்தின் பக்கவாட்டு இரண்டடி நிலையைத் தாண்டி நாலடி சதுர தளத்திற்குள் நுழைந்தால் நம்முடைய காலுக்கு கீழ் தளத்தில் பிரம்மாண்டமாக 6 அடி உயரத்தில் இருக்கிறாள் பாதாள பைரவி. அந்த மொத்த ஊரையும் தன் தலையில் சுமப்பவளைப் போல சற்றே அண்ணாந்த முகவாயோடு இருக்கும் அவளை இப்போது நினைத்தாலும் உள்ளே விதிர் விதிர்த்துப் போகிறது.
கண்டு பின்வாங்கி கொஞ்சம் ஆஸ்வாசப் படுத்திக் கொண்டு, இரண்டடிக்கும் குறுகலான சந்துகளில் பாய்ந்து ஏறி இறங்கி, சென்றால் சட்டென நமது தெருமுக்கில் இருக்கும் காத்தாயி கருப்பாயி கோவிலை விட சிறிய சந்நிதியில் உறைகிறாள் அந்த இந்த விஸ்வத்தையே ஆளும் விஸ்வநாதனின் நாயகி, விசாலமான இந்த அண்டத்தை ஆளும் விசாலாட்சி. நமது ஊரின் எல்லை தேவதைகளுக்குண்டான கோவில்களை விடச் சிறியது ஆனால் இதை எழுதும் இந்த நிமிடத்திலும் அவள் தனது முழு கருணையோடும் என் மனதை ஆண்டுகொண்டிருகிறாள். இப்படித்தான் ஒவ்வொரு சந்நிதியும் நினைத்துப் பார்க்குமுன் ஒரு குறுகிய சந்தின் இடப்பாகத்திலோ, வலப்பாகத்திலோ, முடிவிலோ ஆரம்பத்திலோ மொத்த அதிர்வையும் தாங்கியபடி நிற்கிறது. ஒன்று சொல்கிறேன் அன்றைக்கு காண வேண்டிய கோவில்களை எல்லாம் கண்டு விட்டு பின் அந்த காசியை ஆளும் கால பைரவரைக் காணச் செல்லுங்கள், ஏனெனில் மீண்டு வருவது யார் என்பதற்கு உறுதி ஏதுமில்லை. நானும் நானில்லை, என்னில் எதோ ஒன்று அங்கும் இங்கும் இருக்கிறது அவ்வளவே.
இந்த ஆக்கிரமிப்புகள் காசி விஸ்வநாதர் சந்நிதி வரை தொடர்கிறது. இப்போது பிரம்மப் பிரயத்தனப் பட்டு ஒரு 400 மீட்டர் அதாவது ஒரு உள்வட்டச் சுற்றில் இருக்கக் கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்கிறார்கள், மதில் போல ஒன்றைக் கட்டி வாசலோடு கொஞ்சம் தனித்துவம் விளங்கும் அளவிற்கு செய்திருக்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள். மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இதற்கு எத்தனை மெனக்கிட்டிருக்க வேண்டும் எனபதை சென்று பார்ப்பவர்கள் அறிந்து கொள்வார்கள்.
நினைத்துப் பார்க்கையிலேயே இத்தனை ஆண்டுகளாக எப்படி இப்படி ஆக்கிரமிக்க விட்டார்கள், 900 ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சி, அதற்குப் பிறகான ஆங்கிலேயே ஆட்சி, தாண்டி சுதந்திரம் பெற்ற பின் அமைந்த அத்தனை காங்கிரஸ் ஆட்சியாளர்களும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று பல்கடித்து நெற்றி புடைத்து, உள்ளே குருதி பொங்க கேட்பதற்கு நாம் ஒரு இந்துத்துவவாதியாகத்தான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டடியே சாலையாகக் கொண்ட தீப்பெட்டி கட்டுகள் போல் கட்டப் பட்டிருக்கும் கட்டடக் குவியலைக் கொண்ட அணைத்து தெருக்களின் வரிசைக்குள் பத்து தீப்பெட்டிக்கு ஒரு தீப்பெட்டி ஒரு கோவிலாக இருக்கிறது. அங்கு ஜபமும் தவமும் தியானமும் செய்யும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதைக் கோவில் என்று சொல்வதை விட நாலுக்கு நாலு இடம் சிலவை இன்னும் சிறியதாக, அதைத் தாண்டியும் ஒட்டியும், மேலும் கீழும் வீடுகள் ஆனால் அத்தனையும் நம் நரம்பை சுண்டி இழுக்கும் அதிர்வலைகளை பரப்பியபடி அமைந்திருக்கும் சக்தி மையங்கள். புற்றில் வாழ் அரவம் போல் அவைகளைத் தாண்டிச் செல்கையில் நம்மேல் உறைந்து மீளும் யோகியரகளின் சூட்சுமமான கண்களை நம்மால் உணர முடிகிறது.
இந்த அமைப்புகளைக் காண்கையில், ஒன்று ஆக்கிரமிப்புகள் பெருகிப் பெருகி இகோயில்கள் குடியிருப்புகளுக்குள், வியாபர மையங்களுக்குள் ஆழ்ந்து போயிருக்க வேண்டும் அல்லது ஆட்சியாளர்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் பயந்த காலத்தில் இக்கோவில்களை குடியிருப்புகளுக்குள் மாற்றி இருக்க வேண்டும். இதில் எது உண்மையானாலும் உள்ளே நரம்பு வெடித்துச் சிதறுகிறது. வியர்த்து விறு விறுத்து சுவாசம் முட்டிப் போனாலும், அன்போடும் கருணையோடும், அதிர்வோடும் நம்மை அரவணைத்துக் கொள்ளும் நமது குடும்பத்தின் பெரு மூதாட்டியைப் போன்று நிற்கிறது ஒவ்வொரு கோவில்களும்.
நமது வீட்டு வாசலில் அடுத்தவர் வண்டி நிற்கச் சகியாதவர்கள் தான் இந்த அமைப்பைப் பற்றிய எந்த விசனமும் இல்லாது இருக்கிறோம் என்பது தான் உண்மை.
கொதிகலனின் வெப்பம் போல் உள்ளே பொங்கிக் கொண்டிருக்கும் அந்த உணர்வு கொஞ்சம் அடங்கட்டும் மீண்டும் சொல்கிறேன் காசி பற்றி.
நானே எடிட் செய்த வீடியோ முடிந்தவரை எல்லா காட்களையும் தொகுக்க முனைந்திருக்கிறேன். 😂
No comments:
Post a Comment