Saturday, March 26, 2022

திருப்பனையூர் சௌந்தரேஸ்வரர்

 l: இன்றைய கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம்மிகவும் பழமையான தலம் திருவடி பணிந்து கோடி ஜென்ம வினைகள் தீர வேண்டிய நின்றேன்

 தர்மத்தின் வழி நடப்பவர்களுக்கு என்றும் ஸ்வாமி துணை நிற்பார் 🙏

136.திருப்பனையூர்:-

சிவஸ்தலம் பெயர்:-திருப்பனையூர்
இறைவன் பெயர்:-சௌந்தரேஸ்வரர், அழகியநாதர்,தாலவனேஸ்வரர்.
இறைவி பெயர்:-பிரஹந்நாயகி,
பெரியநாயகி.
தல விருட்சம்:-பனைமரம்.
தீர்த்தம்:-பராசர தீர்த்தம்,அமிர்த தீர்த்தம்.

🍁தேவாரப் பாடல்கள்🍁

"திருஞானசம்பந்தர்"

"சுந்தரர்"

🍁எப்படிப் போவது🍁

திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பனையூர். நன்னிலத்தில் இருந்தும் சுமார் 3 கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். பேரளம் - திருவாரூர் பேருந்து சாலை வழியில் சன்னாநல்லூரைக் கடந்து மேலும் சென்றால் "பனையூர்" என்று கைகாட்டி உள்ளது. குறுகலான அக்கிளைப் பாதையில் 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். இவ்வழியில் பேருந்து செல்லாது. கார், வேன் செல்லும்.

🍁ஆலய முகவரி🍁

நிர்வாக அதிகாரி
அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில்
பனையூர்
சன்னாநால்லூர் அஞ்சல்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 609504.

🍁திருவிழா🍁

சிவராத்திரி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, திருவாதிரை.

🍁தல சிறப்பு🍁


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 136 வது தேவாரத்தலம் ஆகும்.

🍁பொது தகவல்🍁

பிரகாரத்தில் முதலில் பராசர முனிவர் உருவம் உள்ளது.அடுத்து விநாயகர் சன்னதி உள்ளது.கோஷ்ட மூர்த்தமாக, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சன்னதி உள்ளது.

இக்கோயில் கி.பி.11 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும், கல்வெட்டில் இக்கோயில் "இராசேந்திர சோழப் பனையூர்" என்று குறிக்கப் பெறுகின்றது சொல்லப்படுகிறது.

🍁பிரார்த்தனை🍁

பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள்.

🍁நேர்த்திக்கடன்🍁

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள்.

🍁தலபெருமை🍁

கோயில் வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது- ராஜகோபுரமில்லை. வாயில்மேல் ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆக்கப்பட்டுள்ளது.

உள்நுழைந்ததும் வலதுபுறம் பெரியநாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம் - தெற்கு நோக்கியது. இத்தலத்தின் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. முன்னால் துணை இருந்த விநாயகர் சந்நிதி உள்ளது.

இப்பெயர்க்குச் சொல்லப்படும் காரணம் வருமாறு:-

தந்தையை இழந்து, பிறந்த கரிகாலனை, கொன்று அரசைக் கைப்பற்ற நினைத்த தாயத்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய்மாமனாகிய "இரும்பிடர்த்தலையார்'' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார்.அரசி, தன்மகனுடன் இவ்வூருக்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம் முறையிட்டு, அவர் துணையால் எட்டு ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்தான்.ஆகவே கரிகாற் சோழனுக்குத் துணையிருந்ததனால் இவ்விநாயகர் "துணையிருந்த விநாயகர்" என்னும் பெயர் பெற்றார். அடுத்துத் தலமரங்களாகிய இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. வளர்ந்துள்ளவை முதிர்ச்சியுறுங் காலத்தில், வித்திட்டு முளைக்காததாக, இரண்டின் அடியிலும் முறையே பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன.

இத்தல விநாயகர் சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையார் நினைவாக இவ்விநாயகரும், "மாற்றுரைத்த விநாயகர்'' என்றழைக்கப்படுகின்றார். பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி - தாலவனேஸ்வரர் - மேற்கு நோக்கியது - சதுர ஆவுடையார் இப்பெருமானே தலத்திற்குரிய இறைவராவார். மூலவர் சந்நிதி மண்டபத்துள் நால்வர் பிரதிஷ்டை - நடராஜர் சந்நிதி உள்ளன. துவாரபாலகர்கள் முகப்பில் உள்ளனர். உள்ளே சிவலிங்கத் திருமேனி அழகுடன் சற்று உயரமாக அருட்பொலிவுடன் விளங்குகின்றது. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான அமைப்புடையது இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணமுள்ளது.

🍁தல வரலாறு🍁

சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று "தம்மையே புகழ்ந்து" என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர் நினைத்து வந்தார்.அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி, "அரங்காட வல்லார் அழகியர்'' என்று பதிகம் பாடி, அருள் பெற்றார். இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் ஊர்க்கு வடகிழக்கில் உள்ள மணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் "சந்தித்த தீர்த்தம்'' என்றும் பெயருடன் திகழ்கிறது.

🙏சிவாயநம🙏

தேவார திருத்தல திருப்பதிகம் 

திருப்பனையூர்   சவுந்தர்யேஸ்வரர் திருத்தல திருப்பதிகம்        

 பண் - சீகாமரம்

பாடியருளியவர்:சுந்தரர்பெருமான்                             

பாடல் எண் : 1

மாடம் மாளிகை கோபு ரத்தொடு
         மண்ட பம்வள ரும்வ ளர்பொழில்
பாடல் வண்டுஅறையும் பழ னத்திருப் பனையூர்த்
தோடு பெய்துஒரு காதி னில்குழை
         தூங்கத் தொண்டர்கள் துள்ளிப் பாடநின்று
ஆடு மாறுவல்லார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : உயர்ந்த மேல்மாடங்களும் , சிறந்த மாளிகைகளும் , கோபுரங்களும், மண்டபங்களும் நாளும் நாளும் பெருகுகின்ற , ஓங்கி வளர்கின்ற சோலைகளில் இசைபாடுதலை யுடைய வண்டுகள் ஒலிக்கின்ற , நல்ல வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளி யிருக்கின்ற , ஒருகாதிற் குழை தூங்க , மற்றொரு காதினில் தோட்டினை இட்டு , அடியார்கள் ஆடிப்பாட நின்று ஆடுமாறு வல்லாராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையவர் .

பாடல் எண் : 2

நாறு செங்கழு நீர்ம லர்
         நல்ல மல்லிகை சண்ப கத்தொடு
சேறுசெய் கழனிப் பழ னத்தி ருப்பனையூர்
நீறு பூசிநெய் ஆடித் தம்மை
         நினைப்பவர் தம்ம னத்தர் ஆகிநின்று
ஆறு சூடவல்லார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : மணம் வீசுகின்ற செங்கழுநீர் மலரையும் , நல்ல மல்லிகை மலரையும் , சண்பக மலரையும் , சேறு செய்யப்பட்ட கழனி யாகிய வயல்களையும் உடைய திருப்பனையூரில் எழுந்தருளி யிருக்கின்ற , நீற்றைப் பூசி நெய்யில் மூழ்கி , தம்மை நினைப்பவரது மனத்தில் உறைபவராய் நிற்பவரும் , நீரை முடியில் தாங்குகின்றவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

பாடல் எண் : 3

செங்கண் மேதிகள் சேடு எறிந்து
         தடம்ப டிதலில் சேல்இ னத்தொடு
பைங்கண் வாளைகள்பாய் பழ னத்தி ருப்பனையூர்த்
திங்கள் சூடிய செல்வ னார்அடி
         யார்தம் மேல்வினை தீர்ப்ப ராய்விடில்
அங்கிருந்து உறைவார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : சிவந்த கண்களையுடைய எருமைகள் , வயலைச் சேறாக்கிக் குளங்களில் சென்று வீழ்தலினால் , அங்குள்ள கயல்மீனின் கூட்டமும் , பசிய கண்களையுடைய வாளை மீன்களும் துள்ளி வீழ்கின்ற வயல்களை யுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக் கின்ற , சந்திரனைச் சூடிய செல்வனார் , தம் அடியார் மேல் வருகின்ற வினையைத் தீர்க்கின்றவராகிவிடுவாராயின் , அத்தலத்தில் நீங்காது தங்கி வாழ்கின்ற அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

பாடல் எண் : 4

வாளை பாய மலங்கு இளங்கயல்
         வரிவ ரால்உக ளுங்க ழனியுள்
பாளை ஒண்கமுகம் புடை சூழ்தி ருப்பனையூர்த்
தோளும் ஆகமும் தோன்ற நட்டம்இட்டு
         ஆடு வார்அடித் தொண்டர் தங்களை
ஆளு மாறுவல்லார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : வாளை மீன்கள் துள்ள , மலங்கும் , இளமையான கயலும் , வரிகளையுடைய வராலும் ஆகிய மீன்கள் பிறழ்கின்ற கழனிகளில் பக்கம் எங்கும் , பாளையையுடைய கமுக மரங்கள் சூழ்ந் துள்ள திருப்பனையூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற , திரண்ட தோள் களும் , அகன்ற மார்பும் பொலிவுற நடனத்தை அமைத்து ஆடுபவரும் , தம் அடிக்குத் தொண்டராயுள்ளாரை ஆளுமாறு வல்லவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

பாடல் எண் : 5

கொங்கை யார்பல ரும்கு டைந்ந்து
         ஆட நீர்க்குவ ளைம லர்தரப்
பங்க யம்மலரும் பழ னத்தி ருப்பனையூர்
மங்கை பாகமும் மால்ஒர் பாகமும்
         தாம் உடையவர் மான்ம ழுவினொடு
அங்கைத் தீ உகப்பார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : மகளிர் பலரும் மூழ்கி விளையாடுதலினால் , குளத்து நீரில் குவளைப் பூக்கள் மலர , அவற்றிற்கு எதிராகத் தாமரை மலர்கள் மலர்கின்ற வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளி இருக்கின்ற , உமையையுடைய ஒரு பாகத்தையும் , திருமாலை உடைய ஒரு பாகத்தையும் உடையவரும் , அகங்கையில் , ` மான் , மழு , தீ ` என்னும் இவற்றை விரும்பி ஏந்துபவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

பாடல் எண் : 6

காவி ரிபுடை சூழ்சோ ணாட்டவர்
         தாம்ப ரவிய கருணை அங்கடல்
பாவி ரிபுலவர் பயி லும்தி ருப்பனையூர்
மா விரிமட நோக்கி அஞ்ச
         மதக ரிஉரி போர்த்து உகந்தவர்
ஆவில் ஐந்துஉகப்பார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : பக்கம் எங்கும் காவிரி நதி சூழ்ந்த சோழநாட்டில் உள்ளவர்கள் துதிக்கின்ற கருணைக் கடலாய் , பாக்களை விரித்துப் பாடுகின்ற புலவர்கள் பலகாலும் சொல்லும் திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , மான் தோல்வியுறுகின்ற பார்வையை யுடையவளாகிய உமாதேவி அஞ்சுமாறு , மதம் பொருந்திய யானை யினது தோலை விரும்பிப் போர்த்தவரும் , பசுவிற் றோன்றுகின்ற ஐந்தினை விரும்பி மூழ்குகின்றவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையார் .

பாடல் எண் : 7

மரங்கள் மேல்மயில் ஆல மண்டப
         மாடமா ளிகை கோபு ரத்தின்மேல்
திரங்கல் வன்முகவன் புகப் பாய்தி ருப்பனையூர்த்
துரங்கன் வாய்பிளந் தானும் தூமலர்த்
         தோன்ற லும் அறி யாமை தோன்றிநின்று
அரங்கில் ஆடவல்லார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : மரக்கிளைகளின்மேல் நின்று மயில்கள் ஆட, மண்டபம் , மாடம் , மாளிகை , கோபுரம் இவைகளின்மேல் , தோல் சுருங்கிய முகத்தையுடைய குரங்குகள் தாவுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , குதிரை உருவங்கொண்டு வந்த , ` கேசி ` என்னும் அசுரனது வாயைப் பிளந்து அழித்த திருமாலும் , தூய மலரின்கண் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அறியாதபடி விளங்கி நின்று , மன்றில் நடனம் ஆட வல்லாராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

பாடல் எண் : 8

மண்நி லாமுழ வம்அ திர்தர
         மாட மாளிகை கோபு ரத்தின்மேல்
பண்ணி யாழ்முரலும் பழ னத்தி ருப்பனையூர்
வெண்ணி லாச்சடை மேவிய
         விண்ண வரொடு மண்ண வர்தொழ
அண்ணல் ஆகிநின்றார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : மாடம் , மாளிகை , கோபுரம் இவைகளில் , மண் பொருந்திய மத்தளம் அதிர , யாழ்கள் பண்களை இசைக்கின்ற , நல்ல வயல்கள் சூழ்ந்த திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , வெண்மையான சந்திரன் சடைமேல் பொருந்தப்பட்ட , விண்ணவரும் மண்ணவரும் தொழுமாறு தலைவராகி நின்றவராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

பாடல் எண் : 9

குரக்கு இனம்குதி கொள்ளத் தேன்உகக்
         குண்டு தன்அயற் கெண்டை பாய்தரப்
பரக்கும் தண்கழனிப் பழ னத்தி ருப்பனையூர்
இரக்கம் இல்லவர் ஐந்தொடு ஐந்தலை
         தோள் இருபது தாள்நெ ரிதர
அரக்கனை அடர்த்தார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : குளத்தினுள் பூக்களில் உள்ள தேன் சிந்தும்படி குரங்கின் கூட்டம் குதிக்க , அவற்றின் அருகில் கெண்டை மீன் துள்ளும் படி பரந்திருக்கின்ற , குளிர்ந்த வயல்களாகிய பழனத்தையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , இரக்கமில்லாதவராய் , அரக்கனாகிய இராவணனை அவனுடைய பத்துத் தலைகளும் , இருபது தோள்களும் நெரியும்படி , தமது காலால் நெருக்கியவராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

பாடல் எண் : 10

வஞ்சி நுண்இடை மங்கை பங்கினர்
         மாத வர்வள ரும்வ ளர்பொழில்
பஞ்சின் மெல்அடியார் பயி லும்திருப் பனையூர்
வஞ்சி யும்வளர் நாவல் ஊரன்
         வனப்ப கைஅவ ள்அப்பன் வன்தொண்டன்
செஞ்சொல் கேட்டுஉகப்பார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையினை யுடைய உமையது பங்கை உடையவராய் , பெரிய தவத்தவர்கள் மிகுகின்ற , வளர்கின்ற சோலைகளையுடைய செம்பஞ்சு ஊட்டிய மெல்லிய அடிகளை யுடையவராகிய மகளிர் , ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , நொச்சியே யன்றி வஞ்சியும் வளர்கின்ற திருநாவலூரில் தோன்றியவனும் , வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்றொண்டனது செவ்விய சொற்களாகிய பாடல்களைக் கேட்டு மகிழ்கின்றவராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .


திருச்சிற்றம்பலம்

....சிவ சிவ


No comments:

Post a Comment