Tuesday, March 29, 2022

ஈஸி சேர் - 21

 #Easychair_21

எழுதியது பாஸ்கர் சத்யா 

அத்யாயம் : 21 ... ஈஸி சேர்

(இதற்கு முதல் அத்யாயத்தில் திருமணத்தில் நடந்த வைதீக விஷயங்களை நடத்தினோம்.  ஆனாலும் நமக்குள் அவைகள் மாத்திரம் சந்தோஷங்களை கொடுத்து விடுமா என்ன?  அதற்கு இணையாக நடந்த சிறு சிறு சந்தோஷங்களை நாம் நினைத்து சந்தோஷிக்க வேண்டாமா?  அதற்காக ஒரிரு பதிவுகள்).

திருமணம் ஐந்து நாட்கள், கட்டு சாதக்கூடை உட்பட.  

திங்கள், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளி.  வியாழன் மகூர்த்தம்.

ஞாயிறு காலை பூவனூரிலிருந்து விசு வாத்யார் தம்பதியினர், வெங்கனகர் அத்தை ராஜம் மற்றும் அவள் கடைசி பையன் சீனு, பூவனூரிலிருந்து பட்டாமணியார் சதாசிவத்தின் மனைவி லக்ஷ்மி, கோபாலன், கோபாலன் மனைவி கமலம், மற்றும் அவன் குழந்தை ஸ்ரீராம், மூட்டை முடிச்சுகளோடு மைலாப்பூர் வந்தடைந்தனர்.

அதேபோல நடராஐ ஐயர் மைத்துனி கற்பகம் குடும்பத்தினர், பர்வதத்தின் பெரியப்பா, சித்தப்பா குடும்பத்தினர் நங்கநல்லூர் வந்தடைந்தனர்.

இரு குடும்ப உறவுகளின் ஆனந்த உணர்வுகளுக்கு ஸமுத்திரமே எல்லை.

சாப்பாடு, இளைப்பாறுதல் முடித்து விட்டு வில்லிவாக்கம் வந்தடைந்தனர் இரு வீட்டு உறவுகளும் மதியம் மூன்று மணி சுமாருக்கு.

கோபாலன் நேராக சமையல் கட்டில் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த அப்புவிடம் சமையல் சம்மந்தமான மெனு மற்றும் ஸ்டாக் வகையறாக்களை பற்றி கேட்டறிந்து விட்டு உறவுகளுடன் கலந்தான்.

அவன் பையன் ஓடிவந்தான் அவனிடம்.  அப்பா, அப்பா, பக்கத்தில நாதமுனி தியேட்டர் இருக்காம்பா, எல்லாரும் போகலாம்பா.

நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு உறவுகள் தயாராகின.

ஆறரை மணிக்கு ஷோ.  கமலம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் பர்வதத்திடம், அவளும் வரவேண்டும் என்று, அவளும் மறுத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது வேதராமன், மீனாக்ஷி, குட்டிப்பெண் சுமதி காரில் இறங்கினர்.  வேதராமன் புதிப்பித்த வீட்டை பார்வையிட்டு அவர்களின் உடனடி தேவைகளை கேட்டறியவே அங்கு வந்தார்.

சினிமா சமாச்சாரம் நடராஜ ஐயர் காதில் விழ தைய்யா தக்கா என்று குதித்துக் கொண்டிருந்தார், பர்வதத்தை அனுப்புவதற்கு.

என்ன நடக்கிறது என்று புரியாமல் அங்குமிங்கும் விவரங்களுக்காக அலை பாய்ந்து கொண்டிருந்தாள் நாராயணி.

மீனாக்ஷியும் களத்தில் குதித்து எல்லோரையும் சம்மதிக்க வைத்து பர்வதம் செல்ல அனுமதி கிடைத்தது.  வேதராமன் வைத்தா மனதிற்குள் விரும்பினாலும் சிரித்துக் கொண்டே மழுப்பிக் கொண்டிருந்தனர்.

நாளை முதல் தானே வைதீக வைபவங்கள்.  இந்த உறவுகள் ஒன்று சேர்ந்து பர்வதத்துடன் சினிமா பார்த்ததை எத்தனை ஆண்டுகள் சொல்லிக் கொண்டிருக்கலாம் என்ற மீனாட்சியின் வேண்டுகோளே வென்றது.

வேதராமன் குடும்பத்தினர் விடை பெற்றனர்,  புதன் அன்று மதியம் வருவதாக சொல்லி விட்டு.  கிளம்பு முன் அப்புவிடம் ஒரு குறை இல்லாமல் பார்த்துக் கொள்,பணம் காசெல்லாம் பார்த்துக் கொள்ளலாம், என்று கூற தலையசைத்தான் அப்பு.

பர்வதம், கீதா, கோபாலன் குடும்பத்தினர், கற்பகம் குடும்பத்தினர் எல்லோரும் நாதமுனி தியேட்டர் நோக்கி நடந்தனர்.  ஏதோ ஒரு படம், என்ன படமா இருந்தால் என்ன?  உறவுகள் குதூகலிக்க வேண்டும்.  நடந்து கொண்டே சிறு சிறு கிண்டல்கள் கேலிகள்.  பர்வதம் ஒரு வழி ஆகிவிட்டாள் தியேட்டர் வருவதற்குள்.

இத்தனை உறவுகளும் மொத்தமாக ஒரே நாளில் சங்கமித்த பூரிப்பு.  நாடி, நரம்பு, உடல், மனம் எல்லாம் அவள் ஆனந்தத்திற்கு மெருகூட்டின.

கோபாலன் மனைவி அவளுக்கு அக்காவானாள்.  கோபால் அத்திம்பேரானான்.  கீதா தங்கையானாள், இதர சிறு வயது உறவுகளுக்கு இவள் மன்னியானாள்.

தியேட்டரில் நல்ல வேளை கூட்டம் அவ்வளவாக இல்லை.  வாசலில் போர்டு இருந்தது காணவிருக்கும் படத்தை சித்தரித்து.

காத்திருந்த கண்கள்...இது படம்.

படம் மட்டும் தானா, பரவதத்தின் கண்களும் அதுதானே!!

மீண்டும் கிண்டல் கேலிகள் அதை வைத்து, பர்வதத்திடம்.  வெட்கத்துடன் அன்புச் சிறையில் அவள்.

ஸ்ரீராமனுக்கு மாத்திரம் கோபம், பழைய படம் என்று.  இருந்தாலும் கோபித்து கொண்டதால் ஐஸ்க்ரீம் உத்தரவாதம்.  சமாதானமாகி விட்டான்.  அவன் அழுகைக்கு பர்வதம் அணைப்பு சுகம் கொடுத்து சாந்தமளித்தது.

படத்தோடு விட்டதா சந்தோஷங்கள். திரும்புய பின்னரும் தொடர்ந்தது.  படத்தின் பாடல்கள் நடிப்பு அது இது என்று சொந்தங்கள் ஸ்லாகித்தன இரவு பனிரெண்டு வரை.  இடையிடையே வைத்தாவிடமும் சீண்டல்கள்.

வைதீகப் பறவைகளின் கானங்களை உறக்கமே ரசித்தது.

தொடரும்...

No comments:

Post a Comment