Easychair_16
அத்யாயம் : 16 ... ஈஸி சேர்
வேதராமன் அறிவுறுத்தலின் படி நடராஜ ஐயர் வைத்தாவின் பெற்றோர்களை சந்தித்தார்.
சம்பிரதாயப்படி பெண் பார்க்க குடும்பத்தினர் வருவதாக தீர்மானிக்கப் பட்டது, அடுத்த ஞாயிறு அன்று.
வேதராமன் குடும்பத்தாரையும் அக்கம் பக்கத்தில் இருப்போரில் ஒரு சிலரையும், சொந்தங்கள் சிலரையும் அந்த வைபவத்திற்கு அழைத்தார் நடராஜ ஐயர்.
பர்வதத்தின் அடுத்தாத்து தோழி கீதா வந்து பலகாரங்கள், அதாங்க பஜ்ஜி சொஜ்ஜி, செய்ய உதவினாள். கிண்டல் கேலிகள் அவர்களுக்குள் நிறைய இருந்து கொண்டிருந்தன.
அன்று எல்லோர் முன்னும் தைரியமாக பேசிய பர்வதத்திற்கு நாணம் மட்டுமே இருந்தது. மாப்பிள்ளையையும் பெரியவர்களையும் நமஸ்கரித்தாள்.
குறை ஒன்றும் இல்லை பாட்டை நன்றாக ஆரம்பித்து நாணத்தால் முடிக்க முடியாமல் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்க, கீதாவோடு சேர்ந்து முடித்தாள் பர்வதம்.
நிச்சயதார்த்தம் கார்த்திகை ஐந்தாம் தேதி பூவனூரில் வைத்துக் கொள்ளலாம் என்று விசு வாத்யார் சொல்ல, அன்று முக்கியமான அலுவலக மீட்டிங் இருப்பதால் தன்னால் பூவனூருக்கு வர இயலாது என்று வேதராமன் தெரிவித்தார்.
ஆனால் விசு வாத்யார் வேதராமனுக்காக சென்னையிலேயே நிச்சயதார்தத்தை வைத்துக் கொள்வதாக கூறினார். முஹூர்த்த தேதியையும் அப்போது சொல்வதாக விசு வாத்யார் சொன்னார்.
காஞ்சிப் பெரியவரை தரிசித்து ஆசீர்வாதம் வாங்கி விட்டு ஊர் செல்வதாக விசு வாத்யார் எல்லோரிடமும் கூறினார்.
நாராயணி தன் வருங்கால மாட்டுப் பொண்ணுடன் அளவளாவினாள். அன்னிக்கு என்னமோ கோர்டுல வக்கீல் வாதாடற மாதிரி பேசின, இப்போ எங்கே போச்சு அந்த பேச்செல்லாம் என்று நாராயணி கிண்டலடிக்க, தன் பங்குக்கு கீதாவும் வேதராமன் மனைவி மீனாட்சியும் சேர்ந்து கொண்டு வம்பிழுத்தனர் பர்வதத்தை.
வந்தவர்கள் விடைபெற்றனர். வந்த பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்து நமஸ்கரித்தாள் பர்வதம். ஆனந்தக் களிப்பொடு அனைவருக்கும் விடை கொடுத்தார் நடராஜ ஐயர்.
எல்லோரும் சென்றவுடன் ஒரு ஆனந்த நிஸப்தம் நிலை கொண்டிருந்தது நடராஜ ஐயர் வீட்டில்.
பர்வதத்தின் தலையை தடவிக் கொடுத்தார். எல்லாம் பகவத் சங்கல்ப்பம்டி. வேதராமனுக்கு தான் நாம ரொம்ப கடமைப் பட்டிருக்கோம் என்று கண்ணீர் மல்க பெண்ணிடம் சொல்ல, பர்வதம் அவரை தேற்றினாள்.
தொடரும்......
No comments:
Post a Comment