Monday, March 21, 2022

ஈஸி சேர் - 8

 #Easychair_8

அத்யாயம் : 8 ..  ஈஸி சேர்

அவ இப்படித்தான்.  பையனுக்கு கல்யாண வயசு வந்துடுத்தோன்னோ.  யாரைப் பார்த்தாலும் தன் மாட்டுப் பொண்ணாவே நெனச்சுண்டடறா?

நடராஜ மாமாவிடம் அப்படி சொல்லிவிட்டு நாராயணி பக்கம் திரும்பினார்.

ஏண்டி அவா பொண்ணு, நாலு நல்லது கெட்டது பார்க்க வேண்டாமா?  நீ பொசுக்குனு கேட்டா கொடுத்துடுவாரா பொண்ண.  நோக்கு அறிவே இல்லடி.

சற்று சுதாரித்துக் கொண்டு நடராஜ வாத்யார் பேசினார்.

நேக்கு என்ன பேசறதுன்னே தெரியல. வைத்தா மாதிரி ஒரு புள்ள எங்காத்து மாப்பிள்ளையா கிடைக்க பர்வதம் புண்ணியம் பண்ணிருக்கனும்.  இருந்தாலும் உங்க புள்ளைய கேட்க வேண்டாமா?

உங்க பொண்ண சித்த கூப்பிடுங்கோ, என்றார் விசு வாத்யார்.

பர்வதம் வந்தாள்.  எங்காத்து மாட்டுப் பொண்ணா வரணும்னு வைத்தா அம்மா ஆசைப்படறா.  நோக்கு சம்மதம் தானே?

வெட்கப் பட்டாள் பர்வதம்.  தன் சம்மதத்தை நமஸ்காரம் மூலம் பட்டுனு சொல்லிவிட்டு விருட்டென சமையல் உள் பக்கம் போனாள்.  நாராயணியும் பரம சந்தோஷத்தில் அவளை பின் தொடர்ந்தாள்.

இனி என்ன பேச வேண்டிருக்கு.  ஒரே பொண்ணு.  ஜாதகம் எல்லாம் பார்க்கணுமேன்னு தான் பார்கறேன்.

அட நீங்க ஓய்.   சட்டு புட்டுனு எல்லார் சம்மதம் கிடைக்கறதே அதைப் பாரும் ஓய்.  இதெல்லாம் பகவத் சங்கல்ப்பம் மூலம் கிடைக்கறது.  சம்மதம் சொன்னா சாப்பிடறோம்.  இல்லாட்டி, சாயந்திரமே ஊர பார்க்க கிளம்பிடறோம்.

விசு வாத்யார் அழுத்தம் கொடுக்க, எல்லாம் அவன் நடத்தற நாடகம் போல தோணறது, என்று கூறி சம்மதித்தார்.

பிறகு என்ன, சாப்பாடு தான்.  பர்வதம் பறிமார ஒரு பிடி பிடித்தார் விசு வாத்யார்.  பாயசம் வேறு பண்ணியிருந்தாள் பர்வதம்.  

ஏண்டியம்மா, முதலிலேயே தெரியுமா, பெண் பார்க்க வரோம்னு என்று நாராயணி கிண்டலடிக்க.  முதல் முதல்ல ஆத்துக்கு வந்திருக்கேளேன்னு பண்ணினேன்மா, என்று சிவந்த கன்னத்தில் குழி விழ சிரித்தாள் பர்வதம்.

அப்போது வெளியே சென்று வந்த வைத்தா உள்ளே வர, வாங்க மாப்பிள என்றார் நடராஜ மாமா.  எல்லாம் சுமூகமாக முடிந்திருக்கிறது என்ற உணர்வை அந்த அழைப்பு அவனுக்கு கொடுத்தது.

சில நேரங்களில் ஆண்கள் பேசத் தயங்கிக் கொண்டே இருப்பார்கள் சில விஷயங்களை.  பெண்கள் பட்டுனு விஷயத்தைப் போட்டு உடைத்து புத்திசாலித்தனத்தோடு அதை முன்னிருத்தி சுலபமாக முடிப்பார்கள்.

அப்படித்தான் அன்று நாராயணி மஹாத்மியம் இருந்தது.

அடடா, இவ்வளவு நேரம் வைத்தா ப்ரேமையே ஸ்லாகித்து ரசித்துக் கொண்டிருக்கிறோமே, அங்கு வைத்யனாத ஐயர் தனக்குத் தானே பேசிக்கொண்டும் அழுது கொண்டும் இருக்காரே, அவரை சற்று கவனித்து விட்டு வரவேண்டாமா?

தொடரும்.....

No comments:

Post a Comment