#Easychair_20
அத்யாயம் : 20 ... ஈஸி சேர்
அத்யாயத்தை துவக்குமுன் ஒரு பணிவான வாக்கு மூலம். இது ஒரு திருமண வைபவம். மொழி தெரியாமல், மந்திரங்களை அறியாமல், அர்த்தங்கள் புரியாமல், எல்லாப் பிழைகளுக்கும் புரோஹிதர்கள் மீது மானசீகமாக பழியைப் போட்டு நம்பிக்கையுடன் ஒருத்தியை கைபிடித்த லக்ஷோப லக்ஷம் பேரில் நானும் ஒருவன். அதனால் திருமண வைபவங்களை ஸ்லாகித்து எல்லாவற்றையும் கூறுவதற்கு எனக்கு தெரியாது என்பது மட்டும் உண்மையல்ல, அறுகதையும் இல்லை என்று நன்கு அறிந்தே இந்த வைத்தா பர்வதம் திருமணத்தை உங்கள் கண் முன் கொண்டு செல்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
தற்போது இரண்டு நாட்கள் நடைபெறும் பிராமண குடும்ப திருமணங்களை ஓரளவு அறிவேன். அதை உங்களோடு பகிர்கிறேன் சுருக்கமாக. பக்கத்தில் இருந்து பார்த்தவைகளையும் கேட்டறிந்ததையும் உங்களிடம் பகிர்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
முதல் நாள் அன்று மாப்பிள்ளை கணபதி பூஜை, யாத்ராதானம் செய்துவிட்டு க்ஷேம தண்டுலம் பெற்று கல்யாண மண்டபத்தை அடைவார்.
மண்டபத்தில் கணேச பூஜை, சமிதாதான ஹோமம், விரத உபக்ரம சங்கல்ப்பம், பிரம்மச்சர்ய விரதலோப பிராயச்சித்தம், உத்ஸர்வண விரதம், நாந்தி, ஆசீர்வாதம், தூஷணம் சமாவர்த்தனம் முதலியவைகளை செய்கிறார்.
அன்று மாலை நிச்சயதார்த்தம், வஸ்திர ஆபரண தாம்பூலம் பரிவர்தனம் முடிந்து பெரியோர்களால் ஆசீர்வதிக்கப் படுகிறார்.
அதேபோல மணப்பெண் கணபதி பூஜை, ஜாதகாதி வ்ரதம், சங்கல்ப்பம், ஜாதகர்மா, காலாதீதம், நாமகர்ண நாந்தி, அன்னப் ப்ராஸனம், சூடா கர்மா அங்குரார்ப்பணம் (பஞ்ச பாலிகை), ப்ரதிசர பந்த ரக்ஷா பந்தனம் இவற்றை தந்தை துணையுடன் முடிக்கிறாள்.
மறுநாள் காலை மாப்பிள்ளையின் காசியாத்திரை முடிந்து, மாலை மாற்றுதல், ஊஞ்சல், பால் பழம் பெற்று ஹாரத்தி முடித்து மேடைக்கு வருகிறார்கள்.
விவாஹ சங்கல்ப்பம், அக்னிப்ரதானம், மதுபர்க்க கோ தானம் முடித்து, மணப்பெண்ணுக்கு வது விவாஹ வஸ்த்ர தானம் செய்யப் படுகிறது.
பிறகு அக்னி முகப்ரயோகங்கள் முடித்து, நுகத்தடி வதூ மந்திர ஸ்னானம், திருமாங்கல்ய தாரணம் நிறைவேற்றப் படுகிறது.
அதன் பிறகு, ப்ரதான ஹோமம், அஸ்மா வேசனம் (அம்மி மிதித்தல்),லாஜ ஹோமம், பதிப்ரயாண மந்திர ஜபம், ஆக்னேய ஸ்தாலிபாக ஹோமம், சேஷ ஹோமம், தாம்பூல சர்வணம், பல தானம், கர்ப்பாதான மந்திர படனம், ஆசீர்வாதம், ஹாரத்தியோடு விவாஹம் பூர்த்தியாகிறது. (சப்த பதியை நான் அறிந்தவரை கூறுகிறேன், பிறகு).
தேவர்களின் ஆசிகளையும் பித்ருக்களின் ஆசிகளையும் வேண்டி, தம்பதி மன ஒற்றுமைக்காகவும், தன தான்ய சம்ருத்திக்காகவும் கோரிக்கைகளும் பிரார்த்தனைகளும் விவாஹத்தில் மையப் படுத்தப் படுகின்றன்.
குறிப்பாக விவாஹ சங்கல்ப்பம் இந்த மந்திரத்திலேயே வெளிப் படுகிறது:
மம ஹ்ருத3யே ஹ்ருத3யம் தே அஸ்து |மம சித்தம் சித்த மஸ்துதே || மமவாசம் ஏக மணாஶ்ருனு மாமேவஅனுவ்ரதா சஹ சர்யா மயா பவ |
அதாவது, எனது இதயத்தில் உனது இதயம் இருக்கட்டும் நமது எண்ணங்களும் ரசனைகளும் ஒன்றாக ஆகட்டும் வார்த்தைகளும் ஒன்றாக இருக்கட்டும், நாம் பல நன்மைகள் வ்ரதங்கள் சேவைகள் செய்வோம் என்னவளாக எங்கும் என்னுடன் வருபவளாக வாழ்நாள் முழுவதும் இருப்பாயாக.
இதெல்லாம் நம் கதையில் வரும் வைதீகப் பறவைகளுக்கா தெரியாது? அன்று ஒன்றுமே புரியாமல் என் மனைவிக்கு தாலி கட்டிய நான் இன்று மிகச்சிறிய அளவில் அறிந்து கொண்டு தங்களிடம் மிக மிகச்சிறிய அளவில் பகிர்வதை பாக்கியமாகவே கருதுகிறேன்.
எல்லா வைபவங்களும் வைத்யநாதன் பர்வதவர்தினி திருமணத்தில் வேத கான முழக்கங்களுடன், தேவர்கள், பெரியோர்கள் ஆசீர்வாதங்களுடன், சிறியோர்களின் பிரார்த்தனைகளுடன் வெகு விமரிசையாக நடந்தது.
திருநெல்வேலிக்கே அல்வாவா? எத்தனை கல்யாணங்களை வைத்தாவே, விசு வாத்யாரே, நடராஜ ஐயரே செய்து கொடுத்திருப்பார்கள்? மேலே சொல்லப் பட்ட வைதீக தர்மங்கள் என் ஆத்ம திருப்திக்காகவும் எனக்கும் ஏதோ தெரிகிறது என்று நீங்கள் மெச்சுவதற்காகவும் மட்டுமே கூறப் பட்டன.
கதையின் ஸ்வாரஸ்யத்திற்காக சாப்பாடு, நலங்கு, அது இது என்ற சிறு சிறு சந்தோஷங்களை சேர்த்து அடுத்த அத்யாயத்தில் பதிவிடுகிறேன்.
தொடரும்...
No comments:
Post a Comment