🐵சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர்🐵
🦧கற்றளி என்பது கருங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோவிலாகும்.சுண்ணாம்பு சேர்க்காமல் இவை அமைக்கப்பட்டன.
🦧இந்தக் கற்றளிக் கோவில்களுள் பல்லவர்,சோழர்,பாண்டியர் மற்றும் விஜயநகர அரசர்கள் என வெவ்வேறு அரசர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களிடையே அதிக வேறு பாடுகள் இல்லை என்றாலும் தூண்கள்,கூடுகள்,மேற்கோபுரங்கள் போன்றவற்றில் வேற்றுமைகள் தென்படுகின்றன.
🦧ஒவ்வொன்றும் தனி அழகுடன் காணப்படுகிறது.அவற்றுள் விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் கட்டப்பட்ட கற்றளிகளில் சிறப்பு வாய்ந்தவையாகத் திகழ்கிறது ''சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் திருக்கோவில்'’.
🦧காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு செல்லும் வழியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது கலவை கிராமம்.இங்கு தான் சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது.
🦧முன்புறத்தில் நெடிதுயர்ந்த தூண்களுடன் காட்சி தரும் இக் கோவில்,கலவையில் 'ஐயங்கார் குளம்’ எனும் பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ளது.
🦧சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு ஆஞ்சநேயர் பறக்கும் போது மலையை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றினாராம்.அப்போது மலையிலிருந்து ஒரு சிறு பாகம் கீழே விழ,அந்த இடத்தில் சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவில் உருவானதாக தகவல்.
🦧கி.பி. 1585-1614ல் விஜயநகரை ஆண்ட வேங்கடபதி என்ற மன்னனின் அமைச்சராகப் பணி புரிந்தவர் ஸ்ரீலட்சுமி குமாரதேசிகன்.அவர் ஒரு முறை ஸ்தல யாத்திரை வந்த போது இந்த இடத்தில் தங்கினார்.அப்போது அவருடைய கனவில் ஆஞ்சநேயர் வந்து அருள்பாலித்தார்.எனவே,அவர் இந்தக் கோவிலை கட்டினார்.
🦧கோவிலை ஒட்டி பின்புறம் குளம் ஒன்று படித்துறையுடன் அமைக்கப் பட்டுள்ளது.ஐயங்கார் ஒருவர் பணத்துடன் வரும் போது திருடர்கள் சிலர் வழிமறித்தனர்.உடனே ஐயங்கார் அதே இடத்தில் அமர்ந்து பூஜை செய்யத் துவங்கினார்.சற்று நேரத்தில் திருடர்களுக்குக் கண் தெரியாமல் போயிற்றாம்.அதனால் அவருடைய பணம் திருடர்களிடம் சிக்காமல் தப்பியது.இதற்கு நன்றிக்கடனாக ஐயங்கார்,மன்னன் கிருஷ்ண தேவராயர் மற்றும் அச்சுத தேவராயர் இவர்களின் உதவியுடன் எங்கும் இல்லாத அளவுக்கு 133 ஏக்கரில் குளம் வெட்டினார்.அதனால் அந்த இடத்துக்கு 'ஐயங்கார் குளம்’ என்று பேர் வந்தது.
(இன்று அதன் கரை மேடு மட்டுமே அடையாளமாக உள்ளது.கோவிலை ஒட்டிச் சிறிய குளமாகத் தற்போது காணப்படுகிறது.)
🦧அழகே உருவான இந்த சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் திருக்கோவில்,மூன்று ராஜகோபுரங்கள்,மூன்று சுற்றுப் பிராகாரங்கள்,மூன்று விமானங்களை உடையது.
🦧மகா மண்டபம் ஐம்பது தூண்களுடனும்,அர்த்த மண்ட பம் இருபத்தைந்து தூண்களுடனும் திகழ்கின்றன.அர்த்த மண்டபத்தின் வெளிப்புறச் சுவரில் ஆஞ்சநேயரின் இருபது ஸ்லோகங்களும் கல்வெட்டுகளாக உள்ளன.வடக்குப் பார்த்த ஆஞ்சநேயர் இவர் என்பது கோவிலின் சிறப்பு.தவிர, ராஜகோபுரம் உள்ள ஆஞ்சநேயர் கோவிலும் கூட!!
🦧கோவிலுக்குள் உள்ள தேய்ந்து போன கற்கள் அதன் காலத்தைப் பேசுகின்றன.கற்றளிகள் அதன் கலை அழகைப் பேசுகின்றன.அர்த்த மண்டபத்தின் உட்புறக் கூரையின் கீழ் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தாலும்,அவை இன்று சிதிலமடைந்துள்ளன.அர்த்த மண்டபத்தின் மேற் கூரை மூலைகளில் கருங்கல் வளையங்களைக் காணலாம்.இவற்றில் மிகச்சில மட்டுமே தற்போது முழுமையாக உள்ளன.
🦧முற்காலத்தில் இந்தக் கோவிலில் அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெற்றதாம்.அது போன்ற தினங்களில் புளியோதரை,தயிர் சாதம் போன்றவற்றைத் தயாரித்து மக்களுக்குத் தருவதற்கென்றே கற்படுகைத் தளம் ஒன்று பிரமாண்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் கற்படுகைத் தளத்தின் நீளம் 14 அடி;அகலம் 5 அடி.இதே அமைப்பில் மேலும் இரண்டு கற்தளங்கள் சமையல் கூடத்தில் சாதம் கிளறுவதற்கென்று அமைத்திருப்பதை இன்றும் காணலாம்.
🦧முன்பு ஐந்து அல்லது ஆறு அடுப்புகள் இருந்த இடம் தற்போது மண் மேடாகக் காட்சியளிக்கிறது.அன்று ஏழை எளிய மக்கள் அதிக அளவில் மதிய உணவாக கோவில் அன்னத்தை உண்டு மகிழ்ந்து பசியாறினர் என்று தெரிகிறது.சமையல் கூடத்தின் நான்கு கல் தூண்களுக்கு நடுவில் கிணறு எடுக்க முனைந்த போது கோழி கூவிய தாம்.இதனால் கிணறு தோண்டும் பணி நின்று போனதாம்.வேறு இடத்தில் இரண்டாவது முறையாக கிணறு தோண்டும் போது எண்ணெய் விற்பது போல் குரல் கேட்க...அதுவும் பாதியிலேயே நின்று போனது.பின்,ஏரிக்கரையை ஒட்டி வேறு இடத்தில் மூன்றாவது முறையாக கிணறு வெட்டப்பட்டு அதுவே இன்றும் நடைவாவி பாதாளக் கிணறாகத் திகழ்கிறது.
🦧சித்ரா பௌர்ணமியில் நடைவாவிக் கிணறு,திரு விழா காணும்.தரைக்குக் கீழே படியிறங்கிச் செல்லும் விதமாக அமைந்துள்ளது இந்தக் கிணறு.நடுவே கிணறு,சுற்றிலும் வேலைப்பாடுடன் கூடிய தூண்கள்,தண்ணீர் நிற்கும் விளிம்பு வரை அழகிய புடைப்புச் சிற்பங்கள் என அற்புதமாக அமைந்துள்ள நடைவாவி பாதாளக் கிணற்றைச் சுற்றி பிராகாரமும் உண்டு.அதிலும் தண்ணீர் இருக்கும்.சித்ரா பௌர்ணமியன்று தண்ணீர் இறைக்கப்பட்டு பக்தர்கள் சென்று பார்க்கலாம்.
🦧ஒரு முறை இந்தக் கோவில் விக்கிரகத்தை மூன்று பேர் திருடிச் சென்று விட்டனர்.திருடியவர்களின் வீட்டுப் பெண்மணிகள் சேலை எடுப்பதற்காக தென்மாவட்ட ஊர் ஒன்றுக்குச் சென்றார்களாம்.அங்கு ஒரு கடைக்கு வந்து அவர்கள்,'சீலையை எடுத்துப் போடப்பா’ என்று சொல்ல முயன்ற போது,அவர்கள் வாயிலிருந்து 'சிலை...சிலை...’என்ற சொல்லே மீண்டும் மீண்டும் வந்ததாம்.இதைக் கேட்டு அங்கிருந்த ஆட்கள் உஷாராகி,காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்கள்.காவல் துறை யினர் விசாரிக்க,உண்மை தெரிந்து,விக்கிரகம் திரும்பக் கிடைத்ததாம்.எனவே,இங்கு வழிபட்டுச் சென்றால் கைவிட்டுப் போன பொருள் நிச்சயமாகத் திரும்பக் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
🦧சித்திரை மூல நட்சத்திரத்தில் சந்தனக்காப்பும்,ஐப்பசி மூல நட்சத்திரத்தில் புஷ்பாங்கியும்,மார்கழி மூல நட்சத்திரத்தில்,அதாவது அனுமன் பிறந்த நாளில் வெண்ணெய்க் காப்பும் இங்கு விசேஷம்.நவராத்திரியிலும் விழா நடத்தப்படும்.
🦧பக்தர்கள் விரும்பும் அமைதியான இடம். மணிக்கணக்கில் அமர்ந்தாலும் சலிக்காது!!!
🙏🐵#ஜெய் #ஆஞ்சநேய🐵🙏
No comments:
Post a Comment