Wednesday, March 23, 2022

ஈஸி சேர் - 9

 #Easychair_9

அத்யாயம் : 9 ..  ஈஸி சேர்

பக்கத்து வீட்டு மலர் தன் தோழியோடு பேசியதை கேட்டு விட்டு வந்த வைத்யநாத ஐயர், உள்ளே வந்து சற்று தன்னை ஆஸ்வாசப் படுத்திக்கொள்ள சமையரறைக்கு சென்று காப்பி போட்டு குடிக்க நினைக்கிறார்.

அவருடைய பாரு இருந்த போது அவ்வளவாக சமையல் உள் வந்ததில்லை.  ஏதோ பிரம்மச்சாரியாக இருந்த போது காப்பி போடுவது, இட்லி, சாதம், ரசம் வைப்பதை கற்றுக் கொண்டிருந்தாலும், பல ஆண்டுகளாக பாரு சமைத்தே சாப்பிட்டிருக்கிறார்.  அவள் போன பின் இதையெல்லாம் மீண்டும் செய்து கொண்டிருக்கிறார்.

காப்பி போட்டுக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த சப்பாத்தி மேக்கரை பார்த்தார்.

அதை வாங்க பாரு தன்னை ரொம்ப கட்டாயப் படுத்தியது ஞாபகம் வந்தது.  இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு.

இல்லேண்ணா, கண்டிப்பாக வாங்கிக் கொடுங்கோண்ணா.  சித்த நாழில ஏழெட்டு சப்பாத்தி பண்ணிடலாண்ணா.

ஒரு பெரிய வைதீகத்திற்கு போய் விட்டு வந்து இந்தா இதை வெச்சுக்கோ என்று பாருவிடம் கொடுத்த 2000 ரூபாய்க்குள் ஆசையாய் வாங்கினாள்.  பிறகு அவள் சப்பாத்தி பண்ணும் போது சொல்லிக் கொடுப்பாள் எப்படி பண்ணுவது என்று.

நான் இல்லைங்கற போது இதுல நீங்களே சப்பாத்தி பண்ணலாம்.  தொட்டுக்க பயத்தம் பருப்பையும் பச்சமிளகாயையும் போட்டு வேகவைத்து ஒரு கரைசல பண்ணினா போதும் என்று குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கிறாப்புல சொல்லுவாள்.

பாவி அன்னிக்கு தான் ஒரு வருஷத்தில செத்துடுவோம்னு சொல்லாம சொல்லிட்டியே பாரு...... வேகமாக கத்தினான்.  அந்த சப்பாத்தி மேக்கரின் மேல் புறத்தில் வேகமாக அடித்தான்.

பாரு, பாரு .... எப்படியெல்லாம் சமச்சு போட்டிருக்க எனக்கு.  இப்ப ஒண்ணு கூட வாயில வைக்க முடியறதில்ல பார்த்தியா.

நன்னாத் தானே பகவான் வெச்சுருந்தான். குழந்தை இல்லைங்கற ஒரு குறைய தவிர.  எப்பப் பார்த்தாலும் குழந்தையாவே இருக்கேளே என்று நீயும், நீ எனக்கு எப்போதும் குழந்தைனு நானும் சொல்லிண்டே குழந்தை ஞாபகம் கூட வராம பேசிண்டிருந்தோமே பாரு.

போட்ட காப்பிய எடுத்துக் கொண்டு மீண்டும் ஈஸி சேர்.  குடித்துக் கொண்டே சிந்தனை.

பகவானே, எவ்வளவு பூஜை பண்ணிருப்பேன், எத்தனை ஹோமம் பண்ணிருப்பேன்...பலனே இல்லாம செஞ்சுட்டேயடா.  பாரு இருக்கற இடத்துக்காவது அழைச்சுண்டு போடா.  இந்த சித்ரவதை முடியலடா.

கொஞ்சம் யோசிச்சுண்டே ஈஸி சேரில் கண் அயர்ந்தார்.

தொடரும்.....

No comments:

Post a Comment