Tuesday, March 29, 2022

ஈஸி சேர் - 24

 #Easychair_24

எழுதியது பாஸ்கர் சத்யா 

அத்யாயம் : 24 ... ஈஸி சேர்

முஹூர்த்தத்திற்கு முதல் நாள்.  என்ன தவம் செய்திருக்க வேண்டும் இந்த வைபவங்களை உங்கள் கண்முன் கொண்டு செல்ல.  நடுத்தர மற்றும் ஏழை வர்க்க குடும்பங்களின் வைபவங்களில் ஒரு தனி சுகம் உண்டு. இங்கு இருக்கும் உறவுகளின் கண்களிலிருந்து வரும் ஆனந்த ப்ரவாஹத்திற்கு கங்கையின் சுவை உண்டு.

வழக்கம்போல மேள நாதஸ்வர கோஷம் நான்கரை மணிக்கே துவக்கம்.  அதே காப்பி வாளி டம்ளர்கள்.  ஒவ்வொருவராக குளித்து விட்டு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

மணமகன் வீட்டாருக்கு தனி அறை இருந்தாலும் உறவுத் தேனீக்கள் பர்வதத்தின் அறையையே வட்டமடித்துக் கொண்டிருந்தது.

மன்னி, இதைப் போட்டுக்கோங்கோ.  இது உங்களுக்கு எடுப்பா இருக்கும்.

உறவுகள் தாங்கள் அணிந்திருந்த நகைகளை அவளுக்குப் போட்டு அழகு பார்த்தன.

அக்கா, மருதாணி எப்படி பத்திருக்கு, காண்பிங்கோ.

திக்குமுக்காடினாள் பர்வதம்.

விரதம் முடியருதுக்குள்ள பசிக்கும் மாமி.  கொஞ்சம் பாலாவது சாப்பிடுங்கோ.  அப்பாவின் வாஞ்சை உபசாரங்களை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு ஒவ்வொரு உறவின் உபசரிப்பும் இதத்தை கொடுத்துக் கொண்டிருந்தது அவளுக்கு.

சாய்ந்து சாய்ந்து அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த நாராயணியை அழைத்தாள் பர்வதம்.  அம்மா இந்த சேரில் ஒரு இடத்தில் உட்காருங்கோ, அம்மா.

உறவுகளின் சீண்டல்கள்.  பாருங்கோ இங்க, வைத்தா அம்மா, மாட்டுப் பெண் சொன்னோண்ண உடனே உட்கார்ந்துட்டாள்.  இனி இப்படித்தான் நிலைமை.

போங்கடி போக்கத்தவங்களே.  அவ என் பொண்ணாக்கும்.

சிரிப்பொலி கொல்லென்று.  அந்த ஒலி அங்குமிங்கும் இருந்த ஆண்களையும் ஈர்த்தது.

ஏண்டி, எனக்கு இந்த மாம்பழ கலர் புடவை நன்னா இருக்கோ?

ரொம்ப நன்னா இருக்கும்மா, இது பர்வதம்.

ரெண்டு மாசம் முன்னாடி பட்டாமணியாராத்து சுமங்கலி ப்ராரத்தனையில் கொடுத்தா.  நான்தான் போட்டுக்காம வைத்தா கல்யாணத்துக்காக வெச்சுண்டிருந்தேன்.

ஏழைகள் தன் இயலாமையை கூட எப்படித்தான் சந்தோஷமாக்கிக் கொள்கிறார்களோ?

வேத கான கோஷ்டிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.  விரத, ஹோம, ஜபங்கள் உச்சஸ்தாயியில் ஒலிக்கத் துவங்கியது.

கிட்டத்தட்ட அழைக்கப் பட்ட சொந்தங்கள் அனைத்தும் வந்துவிட்டன.  எங்கும் பேச்சொலிகள், எங்கும் சிரிப்பொலிகள், எங்கும் ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும் ப்ரவாஹ காட்சிகள்.

ஹோமப் புகைகளுக்கு ஈடு கொடுக்க முடியாது நடுவுக்கும் வாசலுக்கும் அலை பாய்ந்த நெஞ்சங்கள்.  நடு நடவே சற்று இருமல் தும்மல்கள்,  அந்த ஒலிகள் கேட்காத வண்ணம் பார்த்துக் கொண்ட மேள வாத்ய ஓசைகள்.

நடு நடுவே, டிஃபன் ரெடியா என்று கேட்டுக் கொண்டிருந்த ஏக்கங்கள்.

டிஃபன் ரெடியாவதற்குள் ஏடு இலைகளை தாங்களே போட்டுக் கொண்டு காத்திருந்தனர் ஒரு சிலர்.  இதோ அப்புவும் கோபாலனும் கிளம்பி விட்டார்கள் பரிமாறுவதற்கு.

முதலில் நெய் மணம் வீசும் சர்க்கரைப் பொங்கல், பூரி மற்றும் கிச்சடி வகையறாக்கள்.  ஊதி ஊதி சாப்பிட்டு பூரித்துப் போன உறவுகள்.  இன்னும் கொஞ்சம் கிச்சடி மாமா, இன்னொரு பூரி போடுங்களேன்.  சர்க்கரைப் பொங்கல் இன்னும் கொஞ்சம் இருக்குமா?

பர்வதம் ஹரித கோத்திரத்திலிருந்து கௌண்டின்ய கோத்திரத்திற்கு மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருந்தாள்.

வைதீக தர்மங்கள் முடிவதற்கும் சாப்பாடு தயாராவதற்கும் சரியாக இருந்தன.

சேமியா பாயசம், வெள்ளரிக்காய் போட்டு தயிர் பச்சடி, ஃப்ரூட் மிக்ஸ் ஸ்வீட் பச்சடி, கொத்தவரை கறி, வெண்டைக்காய் கறி, அவியல், பொரித்த அப்பளம், சேனை வறுவல், வெண் பூசணி சாம்பார், தக்காளி ரசம், இத்யாதி இத்யாதிகள், சுமார் ஐம்பது பேருக்கு.  இவைகளில் பல மடிக்காரர்களுக்கு கிடையாது.  ஏக்கம்தான், என்ன செய்வது.  அந்த முப்பது பேர் மற்றவர்கள் ஸ்லாகித்ததை மனதால் ரசித்தார்கள்.

பலருக்கு ஏப்ப உறக்கம் சிறிது.  சிலருக்கு அரைத்தூக்கப் பேச்சு.  மற்றும் ஒரு சிலர் குரட்டைக்கே சென்றுவிட்டார்கள்.

வேதராமன், மீனாட்சி மற்றும் குழந்தை சுமதியோடு ஆஜர்.  விரத வைபவங்களுக்கு வரமுடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார்.  தனித்தனியாக வைத்தா, பர்வதம் ஆசி வேண்டி நமஸ்கரித்தனர்.  எல்லோருடைய உபசரிப்புகளோடு தன் குடும்பத்தினருடன் உணவருந்தினர். சற்று சூடு குறைந்திருந்தாலும் சுவையாக இருந்ததற்கு தன் பாராட்டை அப்புவுக்கு சொன்னார்.

பிறகு வைத்தா, கோபால் மற்றும் அப்புவுடன் நீண்ட ஆலோசனை.  எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்ததை மெச்சினாலும் அறிவுறைகளை வழங்கினார்.

சிறிது ஓய்வு எல்லோருக்கும்.  பிறகு பரபரப்பு.  மாப்பிள்ளை அழைப்புக்கு ஒவ்வொருவராக தயார்.  இடையே விருப்பமுள்ளவர்களுக்கு அப்பு ஒரு பால் கேக்கும் மிக்ஸர் காப்பி கொடுத்தான்.

மேள வாத்திய கோஷ்டியை கோவிலுக்கு செல்ல பணித்தனர்.  ஒவ்வொரு பெண்டிரும் ஒரு மங்கள தட்டுக்களை எடுத்துக் கொண்டனர்.  பர்வதம், மீனாட்சி கீதா மற்றும் ஒருசில ஆண்களைத் தவிர அநேகமாக எல்லோரும் கிளம்பிவிட்டார்கள் கோவிலுக்கு.  மீனாட்சியின் அலங்காரத்தில் ஜொலித்தாள் பர்வதம்.  இடையிடையே கீதாவின் சீண்டல்கள்.

வைத்தா முதன் முறையாக ஜிப்பாவில் காட்சி அளித்தான்.  கிளம்புமுன் சற்று தன்னை பர்வதம் பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம்.  வேண்டுமென்றே மணப்பெண் அறை அருகில் சென்று அம்மா இருக்காளா என்ற பொய்க் கேள்வி.  அவன் நிலையை புரிந்து கொண்டு மீனாட்சி கதவைத் திறந்து பர்வதம் அவனை பார்க்கும்படி செய்து விட்டு, அப்பவே கிளம்பியாச்சே என்றாள்.  பர்வதம் நாணத்தில் சிரித்தாள்.  இவன் பொய்க் கேள்வி அவர்களுக்கு தெரியாதா என்ன?

கோபாலின் உரத்த குரல்.  வா, வா வைத்தா, சீக்கிரம்.  எல்லோரும் கோவிலுக்கு போயாச்சு, சீக்கிரம்.

அவசரமாக கிளம்பினர் இருவரும்.

கோவிலில் சந்திப்போம்...

தொடரும்.

No comments:

Post a Comment