அம்பிகையின் தரிசனம்.
பச்சையம்மன் வாழைப்பந்தல்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணில இருந்து சரியா 12 கிமீ தூரத்துல இருக்கு ”வாழைப்பந்தல்”.
ஆரணில இருந்து அரை மணிக்கு ஒருதரம் பஸ் இருக்கு. ஆட்டோவுலயும் போகலாம். ஆனா, உங்க ஒரு நாள் சம்பளத்தை முழுசா கொடுக்க வேண்டி வரும். ஏன்னா, ரோடு அத்தனை மோசம்.
வேலூர், காஞ்சிபுரம், செய்யாறு ல இருந்து வாழைப்பந்தலுக்கு பஸ் இருக்கு. அது இல்லாம, செய்யாறு டூ ஆரணி ரோடுல மாம்பாக்கத்துல இறங்கி, அங்கிருந்து வாழைப்பந்தல் பஸ் ஏறி வரனும். வாழைப்பந்தல் ஊருல இருந்து 2 கிமீ தூரத்துல இருக்கு. “பச்சையம்மன்” கோவில். வாழைப்பந்தல்ன்னு புராணத்துல இருந்தாலும் முனுகப்பட்டு ஊராட்சிக்குள் இக்கோவில் இருக்குறதால முனுகப்பட்டு பச்சையம்மன் கோவில்ன்னும் சொல்வாங்க.
”அம்மா”ன்னா அன்பு, அறிவு, ஆனந்தம், அமுதம், ஆற்றல். அச்சமின்மைன்னு பல அர்த்தம் வருது.
அம்மாக்கு அம்மா யார்? பாட்டி. பாட்டியோட அம்மா? அந்த அம்மாக்கு அம்மா?! அந்த ஆதி யார்? அது தான் ”இயற்கை”. இயற்கை வனப்பின் நிறம் பச்சை. பசுமை நிறம் கண்ணுக்கு குளிர்ச்சி, மனதிற்கு வலிமைன்னு இன்றைய ஆராய்ச்சியாளர்களே ஒத்துக்கிட்டு இருக்காங்க.
அப்படி பெருமை வாய்ந்த பச்சை நிறத்தில் அருள் பாலிக்கும் அன்னையின் பெயர்தான் “பச்சையம்மன்”.
தல வரலாறு
”பிருங்கி” என்னும் மாமுனிவர் தீவிர சிவன் பக்தர். தேவர்கள், முனிவர்கள், பார்வதி சகிதமாய் கைலாயத்தில் இருக்கும்போது பிருங்கி முனிவர், சிவனை மட்டும் வலம் வந்து வழிப்பட்டு சென்றார். இதைக்கண்ட சிவசக்தியான பார்வதி தேவி, ஐயனே! இதென்ன நியாயம்?! எல்லாம் அறிந்த மாமுனிவரே நம்மை பிரித்து வணங்கலாமா?! அவர் மீண்டும் இத்தவறை செய்யாமல் இருக்க தங்கள் உடலில் சரிபாதி எனக்கு வேண்டும் என சிவப்பெருமானிடம் அன்னை வேண்டினார்.
இதற்கு சிவன் மறுக்க, எப்படியும் சிவனின் உடலில் சரி பாதி பிடிக்க வேண்டும் என வைராக்கியம் கொண்டு, அன்னை சிவனைப் பிரிந்து தவம் செய்ய பூலோகத்துக்கு வந்து தவம் செய்ய சரியான இடத்தை தேடி அலைந்த போது.....,
பசுமையான வாழை, அதன் கன்றுகளோடு வனப்பாகவும், வளமாகவும் தன் இனத்தோடு சேர்ந்து கூட்டுக்குடும்பமாய் இருக்கும் தோட்டத்தில் மண்ணால் ஆன சிவலிங்கத்தை கண்டதும் இதுவே சரியான இடம் என அன்னை உணர்ந்து, வாழை இலைகளால் பந்தலிட்டு, பூஜையை தொடங்க நீரைத் தேடினார்...,
ஆனால், சிவப்பெருமானோ தன் திருவிளையாடலை இந்த இடத்தில் தொடங்கினார்.
பசுமையான வாழைத்தோட்டத்தில் உள்ள நீர் நிலைகள், நீர் ஊற்றுகளையும் மறைத்து வைத்து விளையாடினார்.
மன உளைச்சலில் இருந்த அன்னை, சிவப்பெருமானின் விளையாட்டை உணராமல், தன் புதல்வர்களான விவேகமே உருவான விநாயகரையும், வீரத்தின் பிறப்பிடமான முருகனையும் அழைத்து பூஜைக்கு நீர் கொண்டு வரச் சொன்னார்.
தந்தையின் விளையாட்டை உணராத புதல்வர்களும் அன்னையின் கட்டளைப்ப்படி நீரை தேடி, மூத்தவர் கிழக்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு பாகத்துக்கு வந்தார், அங்கே ஒரு முனிவர் தன் கமண்டல் நீர் சிவனின் பூஜைக்கு மட்டுமே” என்று நீண்ட நாட்களாக தவம் செய்வதை உணர்ந்து தன் வாகனமான மூஞ்சூரை அனுப்பி கமண்டலத்தில் உள்ள நீரை கவிழ்க்க செய்தார், அந்த நீர் ”கமண்டல நதி”யாக பெருக்கெடுத்து அன்னையை நோக்கி ஓடியது.
இளையவரோ! எங்கு தேடியும் நீர் கிடைக்காததால் தன் வீர வேலை வீசி மலையை குடைந்து ஒரு ஆற்றை உருவாக்கினார்.
குழந்தை வடிவில் இருந்து முருகன் உருவாக்கிய நதி “சேய் ஆறா”க மாறி அன்னையை நோக்கி ஓடியது.
நீண்ட நேரமாகியும் நீர் கொண்டு வர சென்ற புதல்வர்களை காணாமல் அன்னையுடன் இருந்த நாகம்மா கிழக்கு தொடர்ச்சி மலையிலிருந்து நீரூற்றைக் கொண்டு வர, ”நாக நதி”யாக மாறி அன்னையை தேடி அதுவும் ஓடியது.
நீர் கொண்டு வரச் சென்றவர்களை காணவில்லையே என கவலைக்கொண்டு குறித்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டுமே என்று பூமாதேவியை வேண்டி சிறு குச்சியால் பூமியை தோண்ட ஊற்று பீறிட்டு வரவும், கணபதியின் ”கமண்டல நதி”யும், முருகனின் “சேய் ஆறு”ம், நாகம்மாவின் “நாக” நதியும், அன்னையின் பாதத்தை தழுவியது.
எங்கே குறித்த நேரத்தில் பூஜை செய்ய முடியாமல் போகுமோ என்ற எண்ணத்தில் இருந்த அன்னையின் திருமேனி திரிவேணி சங்கமத்தால் உடலும், உள்ளமும் குளிர்ந்து சிவந்த நிற மேனி மாறி பச்சை நிறமானது.
அன்னையும் குறித்த நேரத்தில் பூஜையை முடித்தார். தேவர்களும், முனிவர்களும் அன்னையின் நிலைக்கண்டு பூமாரி பொழிந்து வாழ்த்தினர்.
வானவர் மனம் மகிழ்ந்ததால் பெரு மழை பெய்தது.
மழை நீரால் எங்கே மண்ணால் செய்த லிங்கத்துக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சிய அன்னை, சிவலிங்கத்தை கட்டி அணைத்து மழைநீரை தன்மீது தாங்கினாள். அன்னையின் பிடியை தாளாத சிவப்பெருமான் “மண்ணாதீஸ்வரா”க காட்சி அளித்ததாக சொல்லப்படுகிறது.
இதனை அறிந்த அசுரர்கள் அன்னையின் தவத்தை குலைக்க பல வழிகளில் முயற்சி செய்தனர்.
அதனால், தேவர்களும், முனிவர்களும் சிவன், விஷ்னுவிடம் சென்று முறையிட்டனர். சிவன் “வாமுனி”யாகவும்.., விஷ்னு “செம்முனி”யாகவும் அவதாரம் எடுத்து காத்ததாக சொல்லப்படுகிறது.
இக்கோவிலில் அமைந்துள்ள அம்மனின் திருவுருவம் வைரம் பாய்ந்த மரத்தால் ஆனது.
அன்னையின் தியான ஜோதியாய் விளங்கும் விக்ரகம் மனித பிறவியில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும்.
No comments:
Post a Comment