Tuesday, March 29, 2022

பெரியப்பா

 பெரியப்பா 

"செப்பு குடுவையோடு விட்டுவிடுங்கள்" என்று என் கணவனிடம் சொல்லியபடி கடலை  வணங்கி நிற்கிறேன்.

அதில் இருப்பது காலபைரவர் ப்ரசாதம். வந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது. இருங்கள்... விபரமாகச் சொல்கிறேன். யாராவது தவறிப்போனால், சரியாக காரியங்கள் செய்ய முடியவில்லை என்றால் ஒரு அதிருப்தி வருகிறது. அதேபோல் கொரோனா  காரணமாக திதி கொடுக்க முடியாவிட்டாலும். அப்போது ஆறுதலாக வருவது லிங்க பைரவியும், காலபைரவரும் தான்! இறந்தவரின் போட்டோ, உபயோகப்படுத்திய உடையின் சிறு துண்டு, பெற்றோர் மற்றும் இறந்த- பிறந்த தகவல் அனுப்பினால் அங்கிருக்கும் ஒரு தம்பதி நம் சார்பாக அந்த ஜீவனுக்கு அமைதி தரும் காரியங்களை செய்கிறார்கள். இதைத்தான் பெரியப்பாவுக்கு நாங்கள் செய்ய நேர்ந்தது. மகன் மருத்துவமனையில் இருக்கும் போது பெரியப்பா தவறிவிட்டார். மகன் வந்து சேர சில வாரங்கள் ஆகும். நாங்கள் இருப்பது வேறு ஊர். லாக் டெளன் வேறு. எனவே ஒரு ஆறுதலுக்காக பெரியப்பா போட்டோ மட்டும் ஆன்லைனில் அனுப்பி காலபைரவர் கர்மா செய்ய முடியுமா என்று கேட்டோம். "நிச்சயம் முடியும்!" நம்பிக்கை கொடுத்தார்கள். கொரோனா காலம் என்பதால் உடுத்திய உடைகளை அவர்கள் கொரியரில் பெற விரும்பவில்லயோ... என்னவோ...நான் அதிகம் நோண்டவில்லை. ப்ரசாதம் அனுப்பினால் அண்ணன்(பெரியப்பா மகன்) என் கணவரை கோபிக்கலாம், "நீ யாரடா என் தந்தைக்குச் செய்ய" என்று...எனவே "ப்ரசாதம் அனுப்ப வேண்டாம். காலபரவர் அருகில் இருக்கும் குளத்தில் நீங்களே கரைத்துவிடுங்கள்" என்று ஈ மெயில் அனுப்பினேன். அங்கு எப்போதும் செயலில் ஒரு நேர்த்தி இருக்கும். ஆனால் இம்முறை எப்படி இப்படி!? இரண்டு மாதம் கழித்து ப்ரசாதம் அனுப்பிவிட்டார்கள். அதை ஓராண்டு வரை நெற்றியில் இட்டு கொள்ளவேண்டும். பின் நீர்நிலையில் கரைக்கவேண்டும். அதை என்றால், 'சாம்பலை எண்ணெயில் குழைத்த' ப்ரசாதத்தை! இது என்னடா சோதனை....! அண்ணனிடம் சேர்க்கலாம் என்றால் கோபிப்பாரே என்று அப்படியே வைத்துவிட்டோம். 

இப்போது அவரிடம் இருந்து வாட்ஸப் தகவல் வருகிறது. தந்தை இறந்து ஓராண்டு ஆகிவிட்டது. அடுத்த மாதம்  வருஷாப்திகம் என்று.... 

இப்போது அந்த கொரியரை திறந்தால், ஒரு ருத்திராக்‌ஷம், ஒரு செப்புக் குடுவை, ஒரு காப்பு கயிறு.

குடுவையை மட்டும் எடுத்துக் கொண்டு காலையில் வேகவேகமாக சென்று, பீச்சில் கரைக்க இருவரும் நிற்கிறோம்.  

குடுவையைத் திறந்தால்......

ஒன்லி விபூதி!😄😄

ஆக்கம்: ஸ்ரீப்ரியா

No comments:

Post a Comment