#Easychair_18
அத்யாயம் : 18 .. ஈஸி சேர்
பூவனூர் வந்தவுடன் முதல் வேலையாக பட்டாமணியார் சதாசிவ ஐயர் வீட்டிற்கு சென்றார் விசு வாத்யார்.
ஏற்கனவே இருவரும் விரும்பினர் என்ற விஷயத்தை மட்டும் மறைத்து மற்ற அனைத்து விவரங்களை ஒன்று விடாமல் கூறினார். அவரும் அவர் மனைவி லக்ஷ்மியும் மிக்க சந்தோஷமடைந்தனர். தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய காத்திருப்பதாக கூறினர்.
நிச்சயதார்த்தத்திற்கு வரமுடியாவிட்டாலும் வைத்தா கல்யாணத்திற்கு கண்டிப்பாக வந்து நடத்திக் கொடுப்பதாக கூறினர்.
அக்ரஹாரத்தில் உள்ள குடும்பங்களையும் நிச்சயதார்த்தத்திற்கு அழைத்தார். சொல்லி வைத்தார்ப்போல அனைவரும் திருமணத்திற்கே வருவதாக கூறினர்.
அதேபோல வேதராமன் நிச்சயதார்த்தத்தை ஐயப்பன் சமாஜத்தில் வாடகை இல்லாமல் நடத்திக் கொள்ள மற்ற நிர்வாகிகளின் அனுமதியை பெற்றுத் தந்தார். கார்த்திகை மாதம் ஐந்தாம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் நடத்திக் கொள்ள உத்தரவை வாங்கிக் கொடுத்தார் வேதராமன்.
நடராஜ ஐயரும் தனக்கு தெரிந்த மற்றும் உதவியாக இருக்கும் சில சாஸ்த்திரிகளிடம் சொல்ல அவர்களாகவே எவ்வித சம்பாவனையுமின்றி நடத்திக் கொடுப்பதாய் உறுதி அளித்தனர்.
வருகிறேன் என்று சொன்ன வைத்தாவின் பால்ய சிநேகிதன் கோபாலன் குடும்பத்தை மட்டும் அழைத்துக் கொண்டு இரண்டு நாட்கள் முன்னதாகவே அழைத்துக் கொண்டு சென்னை வந்தார்.
முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் திருவாரூரில் உள்ள நெருங்கிய உறவினர்களுக்கு மாத்திரம் போஸ்ட் கார்டுகள் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். அவர்களில் சிலரும் முதல் நாள் சென்னை வந்தனர்.
கோபாலன் பம்பரமாக சுழன்று எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டான்.
கார்த்திகை ஐந்தாம் தேதி, நிச்சயதார்த்தம். மாம்பிள்ளைக்கு வேஷ்டி, அங்கவஸ்திரம், வெற்றிலை பாக்கு, பூ, பழங்கள், திரட்டுப்பால், 21 எண்ணங்களில் சீர் பக்ஷணங்கள், மாம்பிள்ளைக்கு அரை பவுனில் தங்க மோதிரம், ... தன் சக்திக்கு ஏற்ப குறையின்றி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஐயப்பன் சமாஜத்தில் பர்வத்த்தோடு ஆஜரானார் நடராஜ ஐயர்.
ஏற்பாட்டுடன் இருந்த மாப்பிள்ளை வீட்டாரும் பன்னீர் தெளித்து சந்தன கும்கும புஷ்பத்துடன் அவர்களை வரவேற்றனர்.
வாத்யார்கள் ஏழெட்டு பேரும் வந்தனர். சமையல் வேலைகளில் அந்த ஏரியாவில் பிரபலமான அப்பு மாமா எல்லோருக்கும் அவல் கேசரி, மைசூர் போண்டா, ரவா கிச்சடி, பைன் ஆப்பிள் புட்டின், பருப்பு சேவை, சட்டினி, சாம்பார் என்று சமையல் அறையில் அமர்க்களப் படுத்தியிருந்தார். அவருக்கு வைத்தாவை தெரியும் என்பதால் அபிமானத்துடன் செய்து கொண்டிருந்தார்.
வேதராமன் ஆஃபிஸ் மீட்டிங் முடித்துவிட்டு வருவதில் சற்று அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. அவர் வந்த பின்னரே ஆரம்பிக்க வேண்டும் என்று விசு வாத்தியாரும் காத்திருந்தார்.
கணபதி பூஜையில் துவங்கி லக்னப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. தை மாதம் சுபயோக சுபதினத்தில் திருமணம் என்று அறிவிக்கப் பட்டது. வேத மந்திரங்கள் அந்த அறிவிப்பை ஆமோதித்தன.
அனைவர் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடியது. வைத்தா பர்வதம் முகங்களில் இனம் புரியாத சந்தோஷம்.
மாப்பிள்ளை தோழன் கோபாலனும், பெண்ணின் தோழி கீதாவும் பம்பரமாக சுழன்று விருந்தினர்கள் அனைவரையும் நன்கு கவனித்துக் கொண்டார்கள்.
விசு வாத்தியார் அனைவரிடத்தும் தனக்கு மடத்தில் கிடைத்த உபசரிப்பை விடாமல் சொல்லிக் கொண்டிருந்தார். வேதராமனை புகழ்ந்து தள்ளினார்.
விருந்தினர் விடைபெற்றுக் கொண்டு சென்ற பின்னர், நடராஜ ஐயர் தான் எப்படி இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் சொல்லுங்கள் என்று வேதராமன் இருக்கும் போதே விசு வாத்தியாரிடம் கேட்டார்.
காஞ்சி பெரியவா அனுக்ரஹத்தில் இந்த கல்யாணத்த நிச்சயம் பண்ணியிருக்கோம். ஒரு பைசா டௌரி கூட வாங்க மாட்டோம். நீங்களும் சிரம பட்டுக்காம ஆசைக்கு என்ன பண்ணனுமோ, அத செஞ்சா போதும். வேதராமன் போல நல்ல மனுஷாள சம்பாதிச்சுருக்கேள். இத விட என்ன வேணுங்காணும். நானும் நாராயணிய கலந்துண்டு ஒங்களுக்கு ஏதாவது எங்களாலான ஒத்தாச பண்றோம்.
நடராஜ ஐயர் கண்களில் கட்டுக்கடங்காமல் ஆனந்தக் கண்ணீர். தாயில்லாமல் வளர்ந்த பெண்ணை பகவான் கைவிடவில்லை. தனக்கு எப்பேற்பட்ட சம்மந்தம்?
கலங்கிய அவரை வேதராமன் தேற்றினார். என்ன பச்ச கொழந்தையாட்டம், கண்ண தொடச்சுக்கோங்கோ மாமா.
வேதராமன் விடைபெறும் முன், நடராஜ ஐயரை தனியாக கூப்பிட்டு, "ஒரு நாள் சொல்லிட்டு பொண்ண அழைச்சுண்டு வாங்கோ நம்மாத்துக்கு. நான் சொன்ன மாதிரி மாங்கல்யமும் கூரைப் புடவையும் தருகிறோம். அது கொழந்தைக்கு எங்களோட அன்பளிப்பு" என்றார். சரி என்றார்.
வேதராமன் தம்பதியினரை பர்வதம் நமஸ்கரித்தாள்.
வைத்தா நமஸ்கரிக்க முற்பட்டபோது வேதராமன் தடுத்தார். நீ எனக்கு வாத்யாராக்கும் என்றார். விசு வாத்யார் அதற்கு, ஆத்துக்கு வைதீகத்துக்கு வரும்போது தான் அந்த மாதிரியெல்லாம். இப்ப இவனுக்கு நீங்க ரெண்டு பேரும் அண்ணா மன்னி. நன்னா வாழ்த்துங்கோ, என்றார்.
அப்புவுக்கு எல்லோரும் நன்றி சொன்னார்கள்.
நிச்சயதார்த்தம் இனிதே நிறவுற்றது.
தொடரும்..
No comments:
Post a Comment