பந்தர்ப்பூர் அல்லது பண்டரிபுரம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள நகரம். இந்த நகரம் பீமா ஆற்றின் கரையில் உள்ளது. இங்கு உள்ள விட்டலர் கோயில் இந்துக்களின் முக்கிய வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இங்கு கோயில் கொண்டுள்ள விட்டலரின் பக்தர்களில் புகழ் பெற்றவர்கள் சோகாமேளர் மற்றும் புரந்தரதாசர் ஆவார்.
ஆலயத்துக்கு நான்கு வாசல்கள். கோயிலின் கிழக்கு வாயிலுக்கு 'நாமதேவ் வாயில்’ என்று பெயர். கையில் தம்புராவுடன் இறைவனின் இசையில் மூழ்கியிருக்கும் நாமதேவரின் பித்தளைச் சிலை இங்கு உள்ளது.
இந்தப் பிரதான வாயிலின் வழியே உள்ளே நுழைந்தால் கருவறையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு மகாமண்டபம். இங்கே எழுந்தருளி யிருக்கும் தத்ராத்ரேயரையும், கணபதியையும் தரிசித்துவிட்டுச் சென்றால், அடுத்து விளங்குவது அழகியதொரு மண்டபம்.
வழவழப்பான 16 கருந்தூண்கள் தாங்கும் இந்த மண்டபத்தில் ஆங்காங்கே மாடங்கள். ஒரு மாடத்தில், பளிங்கில் செதுக்கப்பட்ட நரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். இன்னொரு மாடத்தில் சிருங்கார ராதாவும், அவளது மையலில் மயங்கியிருக்கும் கிருஷ்ணனும் காட்சி தந்து, அந்த மண்டபத்துக்கு அழகு சேர்க்கிறார்கள். மற்றும் ஒரு மாடத்தில், செந்தூரத்தில் மூழ்கிய கோலத்துடன் கணபதி தரிசனம் தருகிறார்.
இந்த மண்டபத்தில், ஒரு தூணுக்கு முழுக்க முழுக்க வெள்ளிப் பூண் போடப்பட்டிருக்கிறது.
இந்தத் தூணுக்குக் கருட கம்பம் என்று பெயர். புரந்தரதாசர் கம்பம் என்ற காரணப்பெயரும் இதற்கு உண்டு.
No comments:
Post a Comment