Tuesday, March 29, 2022

ஈஸி சேர் - 23

 #Easychair_23

எழுதியது பாஸ்கர் சத்யா 

ஈஸி சேர் : 23. ..  ஈஸி சேர்.

இரண்டாம் நாள் திருமண வைபவம்.  பெரிய மாற்றம் இல்லை.  எல்லாம் முதல் நாள் போலவே.  என்ன, இன்னும் கொஞ்சம் சொந்தங்கள் இணைந்து சந்தோஷங்களுக்கு ஸ்ருதி சேர்த்தன.

அப்புவும் மடிக்காராளுக்கு பொங்கலுக்கு பதில் அரிசி உப்மாவையும் மற்றவர்களுக்கு இட்லிக்கு பதில் தோசையையும் சிறிது மாற்றம் செய்தான்.

வாத்ய கோஷ்டி துவங்கி வைக்க வைதீக கோஷங்கள் சற்று தூக்கலாக ஆரம்பித்தது.  பெரியவர்கள் வைதீகத்தைச் சுற்றி அமர்ந்தனர்.

வைதீகம் முடிந்து மதிய உணவுக்கு ஒரு சிறு அளவு ஜாங்கிரி ஸ்வீட் ஆனது. ஒரு பச்சடி, கடலைப் பருப்பு கோசுமல்லி, வாழைக்காய் கறி, சாம்பார், ரசம், மோர், மாங்காய் இஞ்சி என்று கொஞ்சம் மெனுவை மிகைப் படுத்தியிருந்தான்.  வாயார உண்டு வாழ்த்தினர் வந்தவர்கள்.

மறுநாள் மாப்பிள்ளை அழைப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய கோபால் வைத்தாவை கேட்டுக் கொண்டு பக்கத்தில் உள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலையம் வந்தான்.  ஆலயத்தை பார்த்தவுடன் அசந்துவிட்டான்.  என்ன ரம்யமான கோயில்!  ஸ்வர்ணாம்பிகா சமேத அகஸ்தீஸ்வரின் அற்புத தரிசனம் அவனை மெய்சிலிர்க்க வைத்தது.

ஸ்தல புராணமும் அவனை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.  ஏனெனில் அந்த ஸ்தலத்தில் அங்காரகனுக்கு இருந்த தோஷத்தை ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் நீக்கியதாக கேள்வியுற்றான்.  ரகசியமாக வைத்துக் கொள்ளும்படி ஏற்கனவே வைத்தா இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட மனப் பொருத்த திருமணம் என்று.  இப்போதுதான் புரிகிறது, அங்காரக தோஷங்கள் அவர்களுக்குள் ஏதாவது இருந்திருந்தால் அதை போக்குவதற்காகத்தானோ என்னவோ இந்த திருத்தலத்தில் ஒப்புதல் பெறப்படுகிறது என்று ஆச்சர்யப் பட்டான்.

அகத்திய முனிவருக்கு உடல் முழுவதும் ஆபரணங்கள் அணிந்து வந்த பார்வதியும் பரமேஸ்வரனும் காட்சி கொடுத்த திருத்தலம்.  காட்சி கொடுத்த சிவபெருமான் அகஸ்தீஸ்வரர் ஆனார்.  அபரணங்கள் ஜொலிக்க வந்ததால் பார்வதி ஸ்வர்ணாம்பிகை ஆனாள்.  அம்மனுக்கு எதிரில் ஸ்ரீமஹாலக்ஷ்மியும் சரஸ்வதி தேவியும் கொலு வீற்றிருக்கும் அற்புதக் காட்சியை கண்டான் கோபாலன்.  ஐநூறு வருடத்திற்கு மேல் ஸ்தாபிக்கப் பட்ட கோவில்.

நண்பனுக்கு இப்படி ஒரு பெரும் பாக்கியம் இவர்கள் அருளோடு சேர்ந்து கிடைப்பதை நினைத்து அவன் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.  கோவில் நிர்வாகியிடம் பேசிவிட்டு வைத்தாவிடம் சொல்லி சொல்லி மாஞ்சி போனான்.

வந்தவர்கள் சிலரிடமும் கோவிலைப் பற்றி ஸ்லாகிக்க அனைவரும் படையெடுத்தனர் தரிசனத்திற்கு.

சந்தோஷத்துடன் திரும்பியவர்கள் வரனையும் வடுவையும் மனதார ஆஸிர்வதித்தனர்.  கோவில்  வராதவர்களுக்கு பிரசாதங்களை கொடுத்தனர்.

இரவு ரவா கேஸரியும் அடை மோர்க் குழம்பும் பரிமாரப் பட்டன.

கலகலப்புடனுடனும் ஆனந்த பரிமாற்றங்களுடனும் உறவுகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

வைத்தாவும் பர்வதமும் மருதாணி இட்டுக் கொண்டார்கள்.  அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் கலகலப்பூட்டிக் கொண்டும் சூழ்ந்திருந்தன உறவுகள்.

தங்கள் ஊர்களில் நடந்த கதைகள் கூத்துக்கள், ளவிழாக்கள் தத்தம் வட்டத்தில் நடந்த நிகழ்வுகளை ஒருவொருக் கொருவர் பேசிக் கொண்டே உறக்கம் கண்டனர்.

தொடரும்.....

No comments:

Post a Comment