Saturday, March 26, 2022

ஈஸி சேர் - 17

 #Easychair_17

அத்யாயம் : 17 ..  ஈஸி சேர்

காஞ்சிபுரம் வந்தார்கள் வைத்தா மற்றும் அவன் பெற்றோர்கள்.

மூன்று நான்கு கோவில் தரிஸனங்களை முடித்து விட்டு மடம் வந்தார்கள்.  அன்று அவ்வளவாக கூட்டம் இல்லை. கும்பகோணம் வேதகான கோஷ்டியோடு பலமுறை வந்திருக்கிறார்கள் இருவருமே.  சிலமுறை நாராயணியையும் அழைத்து வந்திருக்கிறார் விசு வாத்யார்.

அங்கு மடத்திலுள்ள முக்கிய பிரமுகர்களிடமும் கொஞ்சம் பரிச்சயம் உண்டு இருவருக்கும்.

பெரியவா ஜபம் பண்ணிண்டு இருக்கா.  சித்த நாழில வந்துடுவா.  கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ.  நானும் சொல்றேன் நீங்க வந்திருக்கிறதா என்று கண்ணன் மாமா கூறினார்.

எல்லோரையும் பார்க்க மஹாஸ்வாமி வெளியே வந்தவுடன் அப்பாவும் பிள்ளையும் கணீர் குரலில் வேதமந்திரங்களை உச்சஸ்தாயியில் ஒரு பிடி பிடித்தார்கள்.  நாராயணி கண்ணன் மாமா கொடுத்த பிரம்பு தட்டில் அவர்கள் வாங்கிய பழங்கள், பூக்கள், துளசி மாலை, தேங்காய், இவற்றை வைத்து கையில் ஏந்திக் கொண்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.

தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்று கூறாத நிலையில் மஹா பெரியவாளின் முதல் கேள்வியிலேயே மெய்சிலிர்த்தனர் மூவரும்.

என்ன பையனுக்கு கல்யாணம் வற்ரதா, என்பதே அந்த கேள்வி.

சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தனர் மூவரும்.  பிறகு தட்டை அவருக்கு முன்னால் வைத்தனர்.

பெரியவா அனுக்ரஹம் பண்ணினா மேற்கொண்டு வேலைகளை கவனிச்சுடலாம் என்று தழுதழுக்கும் குரலுடன் சொன்னார்.

ஒரு சஞ்சலமும் படாம ஏற்பாட்டெல்லாம் ஆரம்பி.  எல்லாம் நல்ல படியா நடக்கும்.

மறக்காம பத்திரிக்கை வைப்பையோன்னோ நேக்கு என்று சிரித்தார்.  சாப்பாடு போடுவியோன்னோ, என்றார் சற்று வேடிக்கையாக.

ஒங்களுக்குதான் முதலில்.  நேத்திக்கு தான் பெண் பார்க்கும் படலம் முடிஞ்சுது.  நிச்சயத்திற்கு முன் தங்கள் உத்தரவுக்காகத்தான் வந்தோம்.

சிரித்தார்.  பிறகு கையை சற்று உயர்த்தி ஆசீர்வதித்தார்.

சந்திரமௌலீஸ்வரர் பூஜையை பார்த்துட்டு மடத்துல சாப்புட்டுட்டுதான் போகணும்,என்ன?

பிறகு கண்ணன் பக்கம் திரும்பி, இவாள்ல்லாம் என்னோட ஸ்பெஷல் கெஸ்ட்.  நன்னா கவனித்து அனுப்பணும், என்ன?

மீண்டும் புன்சிரிப்பு, மீண்டும் மீண்டும் ஆசிகள்.

உள்ளங் கையை மூக்கிற்கும் வாய்க்கும் முன்னால் வைத்து கேட்டுவிட்டு சரி எனபதை தெரிவிக்கும் விதத்தில் தலையை அசைத்தார் கண்ணன்.

மூவரும் ஸ்தம்பித்து நின்றார்கள்.  எப்பேர்ப்பட்ட அனுக்ரஹம்?  என்ன புண்ணியம் செய்திருக்கணும் இந்த அருள் கிடைக்க.

விசு வாத்யாரின் சஞ்சலங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது இந்த அருளினால், ஆசியினால்.  ஆர்பரித்த ஆனந்தக் கண்ணீரை மூவருமே அடிக்கடி துடைத்துக்  சிறிது நேரம்.

பிறகு மடத்தின் ஒரு மூலையில் மூவரும் உட்கார்ந்தனர்.  விசு வாத்யாரும், வைத்தாவும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்க துவங்கினர்.

பூஜைக்கான ஏற்பாடுகள் மடத்தில் துரிதப்பட்டு கொண்டிருந்தன.

பெரியவா வந்தவுடன் பூஜை ஆரம்பித்தது.  முடியும் தருவாயில் கண்ணனை கூப்பிட்டு ஏதோ சொன்னார்.

கண்ணன் பூஜை மேடையை விட்டு கீழே இறங்கி வந்து விசு வாத்யாரிடம், நீங்க ஸ்ரீ ருத்ரம் சொல்லணுமாம், பெரியவா ஆசைப் படறா, என்றார்.

ஸ்ரீருத்ரம், ச்சமகம் இரண்டையுமே கணீர் குரலில், இருவரும் முடித்தனர்.  பூஜையும் முடிந்து பெரியவா வந்தவர்கள் அனைவருக்கும் ஆசி அருளிவிட்டு உள்ளே சென்றார்.

மடத்தில் பந்தி போடப் பட்டது.  மூவரும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து உட்காரப் போகிற சமயத்தில் ஸ்ரீ கார்யம் வந்தார்.  நீங்கள் மூவரும் ரூமுக்கு வந்திடுங்கோ.  அங்கு உங்களுக்கு எலை போட்டிருக்கு.

ஸ்ரீ கார்யம் மற்றும் கண்ணன் மேற்பார்வையில் சாப்பாடு.  உபசாரங்கள் விண்ணைத் தொட்டன.

சாப்பாடு முடிந்தவுடன்,  பெரியவா முன்னிலையில் வைத்தாவுக்கும் விசு வாத்யாருக்கும் வேஷ்டி அங்கவஸ்திரங்கள்.  நாராயணிக்கு புடவை, ரவிக்கை துண்டு.  மூவருக்கும் ஸ்ரீ காமாக்ஷி ஃப்ரேம் போட்ட அம்மன் படம், அட்சதை மஞ்சள், குங்கும, புஷ்பம் மற்றும் பழங்கள்.

விசு வாத்யாருக்கு புல்லரித்து போய்விட்டது.  வீட்டிற்கு வருபவள் காமாக்ஷி அம்மனோ என்ற அளவுக்கு சிந்தித்து விட்டார் ஒரு கணம்.

இறைவுணர்வு குடி கொண்டுவிட்டால் நம் கனவுலகில் கூட அதை வைத்து மகிழந்து விடுவோம்.  அப்படித்தான் விசு வாத்யார் மனநிலை அன்று.

அனைவரும் தாம்பரம் வந்தார்கள்.  ட்ரெயின் வரும் வறை சிறு அசதி தூக்கம் ஸ்டேஷன் பெஞ்சில்.

ராத்திரி சாப்பாட்டுக்கு ஏதாவது வாங்கி வரட்டா, என்றான் வைத்தா.  நாம என்ன ஹோட்டல் சாப்பாடாவ சாப்பிட முடியும்?  மடத்துல கொடுத்த பழங்களே எதேஷ்டம்.  நாங்க பார்த்துக்கறோம்.  உனக்கு தான் ரொம்ப லேட்டாயிடப் போறது.  நீ போர வழியில ஏதாவது பழத்தை மறக்காம வாங்கிண்டு போ, என்றாள் நாராயணி.

பெற்றோர்களை ரயிலில் ஏத்திவிட்டு மைலாப்பூர் திரும்பினான் வைத்தா.

தொடரும்.....

No comments:

Post a Comment