Tuesday, March 8, 2022

அன்பான மேனேஜர்

 அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா நகரம். நள்ளிரவு நேரம். மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. நகரத்தையே மூழ்கடித்துவிடும் மூர்க்கத்தோடு அடைமழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. அந்த சின்ன ஹோட்டலுக்கு வெளியே ஒரு வாடகை கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு முதியவரும் அவர் மனைவியும் இறங்கினார்கள். மெள்ள அடியெடுத்துவைத்து ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள்.

வரவேற்பறையில் ஓர் இளைஞன் அமர்ந்திருந்தான். அவனருகே இருவரும் போனார்கள். அந்த முதியவர் தன் தலையில் அணிந்திருந்த தொப்பியைக்கழற்றி கைகளில் வைத்துக்கொண்டார். இளைஞனைப் பார்த்து முகமன் கூறினார்.

``இன்று இரவு தங்குவதற்கு இந்த ஹோட்டலில் எங்களுக்கு ஓர் அறை கிடைக்குமா?’’ என்று கேட்டார் வந்தவர்.

இளைஞன் புன்னகை மாறாமல் அவரையும் அவர் மனைவியையும் பார்த்தான். மென்மையான குரலில் அவரிடம் சொன்னான்... ``ஐயா மன்னிக்கவும். இன்றைக்கு இந்த நகரத்தில் மூன்று முக்கியமான பெரிய விழாக்கள், கூட்டங்கள் நடந்திருக்கின்றன. அதனால் நகரிலிருக்கும் எல்லா ஹோட்டல்களுமே நிரம்பி வழிகின்றன. எங்கள் ஹோட்டலிலும் ஒரு அறைகூட காலியில்லை... மன்னிக்கவும்...’’

அந்தப் பெரியவர் தன் மனைவியை திரும்பிப் பார்த்தார். `இருவரும் அந்த ஹோட்டலைவிட்டு வெளியே போகவேண்டியதுதான்’ என்கிற முடிவுக்கே வந்துவிட்டார் அந்தப் பெரியவர். அந்த கணத்தில் மறுபடியும் அந்த இளைஞன் பேசினான்.

``ஆனால்...’’

``ஆனால்... என்ன?’’

``ஒரு வழியிருக்கிறது. அது என்னவோ தெரியவில்லை உங்களை வெளியே அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. வெளியே மழை பெய்துகொண்டிருக்கிறது. நீங்கள் விரும்பினால், இன்று இரவு என் அறையில் தங்கிக்கொள்ளலாம். என்ன... அது ஆடம்பரமான அறை அல்ல. அதிக வசதிகள் இருக்காது. ஆனால், உங்கள் இருவருக்கும் போதுமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது.’’

``சரி... நீ எங்கே தங்குவாய்?’’

``என்னைப் பற்றிக்கவலைப்பட வேண்டாம். எனக்கு என் நண்பர்கள் உதவுவார்கள்.’’

முதியவரும் அவர் மனைவியும் இளைஞனின் உதவியை ஏற்றுக்கொண்டார்கள். அன்றிரவு அந்த இளைஞனின் அறையிலேயே தங்கினார்கள்.

அடுத்த நாள் காலை. இருவரும் இளைஞனிடம் வந்தார்கள். நன்றி சொல்லி விடைபெறும் நேரம் அது. அவர் சொன்னார்... ``உன்னைப் போன்ற ஒரு அன்பான மேனேஜர் ஒரு மிகச் சிறந்த ஹோட்டலுக்கு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஒருவேளை உனக்காகவே நான் ஒரு ஹோட்டலைக்கட்டினாலும் கட்டுவேன்.’’

அவர் சொன்னது ஏதோ பெரிய நகைச்சுவை என்பதுபோல மூவருமே வாய்விட்டு சிரித்தார்கள். பிறகு கிளம்பிப்போனார்கள்.

காரில் போகும்போது அவர் தன் மனைவியிடம், ``இப்படி நட்பாகவும் உதவி செய்யும் மனப்பான்மையுடனும் ஒருவர் இருப்பது அரிதானது.’’ என்று சொன்னார்.

``நிச்சயமாக.’’

சில வருடங்கள் கழிந்தன. அந்த இளைஞன் அந்த முதிய தம்பதியை கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தான். ஒருநாள் அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த முதியவர் எழுதியிருந்தார். அந்த மழை இரவை ஞாபகப்படுத்துவது மாதிரி சில வரிகள்... பிறகுதான் இளைஞனுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. `இத்துடன் ஒரு ஃபிளைட் டிக்கெட்டை இணைத்திருக்கிறேன். உங்களால் எங்களைப் பார்க்க நியூயார்க்குக்கு வர முடியுமா?’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இளைஞன் நியூயார்க்குக்கு கிளம்பிப்போனான். அவனை வரவேற்க தயாராக விமான நிலையத்திலேயே காத்திருந்தார் பெரியவர். அவனைக் காரில் ஏற்றிக்கொண்டு, நியூயார்க்கின் ஐந்தாவது அவென்யூவில், 34-வது தெருவுக்கு அழைத்துப்போனார். காரை நிறுத்தினார். அந்த இளைஞனுக்கு முன்பாக மிக பிரமாண்டமான ஒரு கட்டடம் தெரிந்தது.

``இதுதான். நீ நிர்வகிக்க வேண்டும் என்பதற்காக நான் கட்டிய ஹோட்டல்’’ என்றார் பெரியவர்.

``ஐயா நீங்கள் ஜோக் எதுவும் அடிக்கவில்லையே!’’

``நிச்சயமாக இல்லை.’’  அவர் உதட்டோரத்தில் ஒரு மர்மப்புன்னகை தெரிந்தது. அவர் சொன்னது உண்மை.

அந்தப் பெரியவரின் பெயர் வில்லியம் வால்டார்ஃப் அஸ்டர் (William Waldorf Astor). பெரும் பணக்காரர். அது அவருடைய ஹோட்டலேதான். அது, வால்டார்ஃப் அஸ்டாரியா ஹோட்டல். அந்த இளைஞன் அந்த ஹோட்டலின் முதல் மேனேஜர் என்கிற பொறுப்பை எடுத்துக்கொண்டான். அவர் பெயர், ஜார்ஜ் சி.போல்ட் (George C.Boldt) உலகின் மிக முக்கியமான, ஆடம்பரமான ஒரு ஹோட்டலுக்குதான் மேனேஜராவோம் என்று அவன் ஒருபோதும் நினைத்து பார்த்ததில்லை. ஆனால், அவனை அந்த உயரத்தில் கொண்டுபோய் வைத்தது அவனின் கனிவான நடவடிக்கையும் உதவி செய்யும் மனப்பான்மையும்தான்.


No comments:

Post a Comment