Wednesday, March 9, 2022

எண்ணப்பறவை_43

எண்ணப்பறவை_43

'அப்பா, ஏற்கனவே இங்க வந்தாரே அரவிந்த், அவர் சமாசாரமா குமுதாகிட்ட நிறைய பேசிட்டேன்.  வீணா என் மேல சந்தேக படவேண்டாம்னுதான் உங்க கிட்டேயும் பேசறேன்.'

'நம்பிக்கையில்லாமத்தான் உங்க ரெண்டு பேரையும் மெட்ராஸுல ஜாக வெச்சுட்டு அங்க நான் அல்லாடிண்டிருக்கேனாக்கும்?'

'அப்பா, அப்படின்னா அரவிந்தோட அம்மா நம்மாத்துக்கு வந்தோண்ண நான் ஆஃபீஸ்லேந்து வரதுக்குள்ள ஏன் திருச்சிக்கு நீங்க திடுதிப்புனு கிளம்பணும்.  ஏன் நீங்களே ஏதேதோ கற்பனை பண்ணிண்டு என் மேல கோப படணும்.'

'என்னயே சொல்லறயே.  அந்த பையன் வந்துட்டு போனோண்ண எங்க ரெண்டு பேர்கிட்டேயும் ப்ளெயினா பேசியிருக்கலாமே.  ஏன் பண்ணல?'

'அப்பா, அவரை பார்த்தவோண்ண என் மனசுக்கு பிடிச்சதென்னவோ வாஸ்தவம் தான்.  ஆனா, குமுதா கல்யாணம் முடியற வரைக்கும் உங்க ரெண்டு பேர்கிட்டேயும் சொல்லக் கூடாதுங்கறதுல குறியா இருந்தேன்.  இன்னும் அவரை எனக்கு பிடிச்சிருக்குங்கற விஷயத்த கூட அவர் கிட்ட கூட சொல்லலை தெரியுமா?  அன்னிக்கு அவர் நம்மாத்துக்கு வந்தது யதேச்சயா நடந்தது.  அத தொடர்ந்து அவரோட அம்மா இங்க வந்து பொண்ணு கேழ்ப்பாங்கறது நானே எதிர்பார்க்காம நடந்தது.'

'அமுதா, இப்ப எதுக்கு இதெல்லாம் அப்பாகிட்ட பேசிண்டு.'

'இல்ல குமுதா.  அப்பா என் கிட்ட ரெண்டு மூணு நாளா நடந்துண்டது மனச ரொம்ப ஹர்ட் பண்ணிடுத்து.  எனக்கு கல்யாணமே வேண்டாங்கற முடிவுக்கே வந்துட்டேன்.  அப்பா தன்னோட நிலைமைய சொல்லிட்டா.  கண்டிப்பா ஏத்துக்க கூடிய ஒண்ணுதான்.  என்னோட சம்பளத்தையும் சேர்த்து வெச்சிண்டு வந்தாத்தான் என் கல்யாணத்தப் பத்தி யோசிக்க முடியும் அப்பாவால.  அதையும் என்னால புரிஞ்சிக்க முடியறது. அரவிந்தோட அம்மாவுக்கோ அவர் வேற வேலைக்கு அவர் போகறதுக்குள்ள அவர் கல்யாணத்த முடிக்கணுங்கறதுல மும்மரமா இருக்காங்கறதே நீ சொல்லித்தான் எனக்கே தெரியும்.  இந்த நிலைமையில என்னாலையும் எதையும் யோசிக்க முடியல.  எல்லாருமே தன் மனசுக்கு புடிச்சவாளத்தானா கல்யாணம் பண்ணிக்கறா?  என் விதிப்படி நடக்கட்டும் எதுவும்.  வீணா எல்லோரும் குழப்பிக்க வேண்டாம்.'

'அமுதா, நான்தான் சொன்னேனோண்ணோ.  அவாத்துல போய் பேசிப் பாக்கலாமே.  வீணா கல்யாணம் வேண்டாம் கார்த்திக வேண்டாம்னு அச்சு பிச்சுன்னு பேசாத.'

'இல்ல குமுதா.  நான் இப்ப ப்ராக்டிகலாதான் பேசினேன்.  நல்ல வரனா உனக்கு வந்திருக்கு.  வீணா என் கல்யாணத்த மனசுல போட்டுண்டு உன்னோட வாழ்க்கைய கெடுத்துக்காத.  எனக்காக யாரும் ஸாக்ரிஃபைஸ் பண்ண வேண்டாம்.  அதுக்கு அவசியமும் இல்ல.'

அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை.  விருட்டென்று பெட்ரூம் செல்கிறாள்.  ஒரு தலையணையை தரையில் சற்று பலத்தோடு போடுகிறாள்.  குப்புறப் படுத்துகிறாள்.  கண்ணீர் ப்ரவாஹம்.

'நான் என்ன சொன்னேண்ணு இப்ப இப்படி நடந்துக்கறா குமுதா.  நான் சாதாரணமாத் தான என் நிலைமையை சொல்லிண்டு இருந்தேன்.  எனக்கு மாத்திரம் அவ மேல அக்கறை இல்லையா?'

'வேண்டாம்ப்பா.  நீங்க கோபமோ வருத்தமோ படாதீங்கோ.  அந்த அரவிந்தோட அம்மா கிட்ட போய் பேசுங்கோ.  கொஞ்சம் அவாளும் இவாளும் நம்ம நிலைமையை புரிஞ்சிண்டு லௌகீகம் பேசினா ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணாவே முடிச்சுடலாமே.  அவா கிட்ட பேசாமலேயே ஏன் நீங்களா ஒரு கணக்க போட்டுண்டு மனச போட்டு குழப்பிக்கறேள்.  என் கிட்ட பணமில்ல பணமில்லன்னு சொல்லிண்டு இருந்தா கல்யாண வயசுல இருக்கற பொண்ணு எப்படி கல்யாணத்துக்கு சம்மதிப்பா சொல்லுங்கோ.'

'நான் யதார்த்தமா தான சொன்னேன்.  என் குழந்தைகள் கிட்ட இதக் கூட பேச முடியாதா?  திருச்சிலே ஒக்காந்து உன் கல்யாணத்துக்காக ஏகப்பட்ட ஜாதகம் பார்த்துண்டிருந்தது எனக்குத்தான் தெரியும்.  அந்த மாதிரி இருக்கற சமயத்துல அமுதா கல்யாணத்தப் பத்தி நான் நெனச்சு கூட பார்க்க முடியல.  நான் சொல்லவந்தத முடிக்கறதுக்குள்ள அவ இப்படியா கொட்டிட்டு போவா?'

'அப்பா, அதெல்லாம் மனசுல போட்டுக்காதீங்கோ.  நானே ரெண்டு மூணு தடவ சொன்னேனே.  அவ மேல கோபத்த காட்டறதுல அர்த்தமும் இல்ல, ஞாயமும் இல்ல.'

இப்படி சொல்லிவிட்டு தனக்கும் ராமனுக்கும் தனியாக நடந்த சம்பாஷணைகளையும், ருக்மணி மாமிக்கு அவர்கள் சொந்தம் என்ற விவரத்தையும் கூறுகிறாள்.

'எல்லாருமே ஹெல்ப் பண்ண தயாரா இருக்கா.  நீங்க சொன்னதெல்லாம் வெச்சுப் பார்க்கும்போது அரவிந்தோட அம்மாவும் பணம் காசுக்கு ஆசப் படறவளா தெரியல.  தைரியமா போய் பேசுங்கோ.  வேணும்னா நம்ம ருக்மணி மாமியையோ பவானியையோ அழச்சிண்டு போய் பேசுங்கோ.  எனக்கென்னவோ ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா முடிக்கலாம்ப்பா.  கல்யாணம்னு வரும்போது பகவானா பார்த்து பணம் காச யார் மூலமாவாவது சேர்த்துடுவார்ப்பா.'

'நான் அமுதாவ நல்ல தனம் சொல்லி அழச்சிண்டு வரேன். அவளுக்கும் ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுங்கோ.  எங்களுக்கும் நீங்க தானே எல்லாமே.'

'அமுதா... அமுதா.... இங்க வா சித்த.  அப்பா கூப்பிடறா பாரு.'

வரவில்லை.  மீண்டும் அழைக்கிறாள்.

'நீ இப்படி பண்ணினா, எனக்கு கெட்ட கோபம் வரும்.  சொல்லிட்டேன்.'

வருகிறாள் அமுதா.  'என்ன பேசப் போறேள்.  நான்தான் சொல்லிட்டேனே எல்லாத்தையும்.'

'இங்க வாடா செல்லம்.  அப்பா கிட்ட ஏன் இவ்வளவு கோபம்.  ஏதோ தப்பு தப்பா புரிஞ்சிண்டு என்னன்னவோ சொல்லிட்டேன் நீ வருத்தப்படற அளவுக்கு.  இனிமே மாட்டேன்.'

அப்பாவின் இந்த வார்த்தைகளில் ஒரு சிரிப்பை தன்னையும் அறியாமல் உதிர்த்து விட்டாள்.

'பொல்லாததுப்பா சின்னது.  அப்பவே அம்மா சொல்லுவா இத சமாளிக்கறது கஷ்டம்னு.  இனிமே அந்த அப்பாவி பையன் பாடு.'

சொல்லிவிட்டு அணைத்துக் கொள்கிறாள் அமுதாவை.  தலையைத் தடவிக் கொடுக்கிறாள்.

'பாரு எப்படி அழுது அழுது இஞ்சி தின்ன குரங்காட்டம் செவந்து இருக்கு மூஞ்சியெல்லாம்.  அமுதா, அப்பா நாளைக்கே பவானிய அழச்சிண்டு அந்த பையனாத்துல பேசிட்டு வரச் சொல்லியிருக்கேன்.  எல்லாம் நல்லபடியா நடக்கும்.  உன்னோட எண்ணப்பறவை மாதிரியே.'

'ஒண்ணும் வேணாம்..'

'சரி, கற்பனைக் கதையெல்லாம் ஒண்ணும் வேணாம்.  கல்யாணம் மாத்திரம் பண்ணிக்கலாம்.'

'வாங்கோப்பா.  எல்லாரும் சாப்புடலாம்.  கேசரி மாத்ரம் கொஞ்சம் மீந்து போச்சு.  அதப் போட்டுண்டு மோருஞ் சாதம் கொஞ்சம் சாப்பிடலாம்.'

அப்பாவின் கண்ணீரை அவர் வேட்டித் தலைப்பு ஆறுதலோடு துடைக்கிறது.

தொடரும்...

No comments:

Post a Comment