Tuesday, March 8, 2022

சொல்ல வந்தது

 சொல்ல வந்தது.

"எத்தன தடவ சொல்றது உனக்கு, இந்த ஹேர் கிளிப் இங்க வைக்காதனு. கால்ல குத்திச்சு இப்போ",

நவீனுக்கு எரிச்சல். காலை நோண்டிக்கொண்டே சோஃபாவில் உக்கார்ந்தான்.

"கொஞ்சமாவது அறிவு இருக்கா? இதென்ன சோஃபா வா இல்லனா டஸ்ட்பின்னா . எவ்ளோ பொருள் இது மேல? நாள் எல்லாம் என்ன பண்றே  நீ?, வீட்டுக்குள்ள வரும் போதே நிம்மதி போகுது", 

சத்தம் கேட்டு வந்து பார்த்த ஷர்மி சிரித்தாள்.

"ஆஹா வந்தாச்சா நீங்க. மார்னிங் லேர்ந்து ஒரே அமைதி பூங்காவா இருந்த வீட்ல சடன் லௌட்ஸ்பீக்கர்  சவுண்ட் எங்கேர்ந்து வருதுன்னு யோசிச்சேன். காபி வேணுமா?', பேசியபடியே சோஃபா மேல் கிடந்த பொருள் எல்லாம் அள்ளிக் கொண்டு உள்ளே சென்றாள் .

"ஆங் அப்படியே எல்லாத்தையும் அள்ளி உள்ள கட்டில் மேலப் போட்டுட்டு போ. அப்போ தான் நான் படுக்க வரும் பொழுது ஏதாவது குத்திக் காயம் பண்ணும்". நவீன் குரல் அவளுக்கு 

கேட்டதா  தெரியவில்லை. பதில் வரவில்லை. ஒரு ஐந்து நிமிடம் கழித்து சுடச்சுட காபியும் ஒரு தட்டில் பிஸ்கட்டும் நீட்டியவள், "எப்படிங்க கரெக்டா என் மைண்ட் வாய்ஸ் கேட்ச் பண்றீங்க. கட்டில் மேலத் தான் எல்லாத்தையும் போட்டு வெச்சு இருக்கேன். பட் நீங்க கவலைப் பட வேண்டாம். அதுல குத்தற மாதிரி ஒரு பொருளும் இல்ல", சொல்லிக்கொண்டே ஒரு பிஸ்கட் எடுத்து நறுகென்றுக் கடித்துக் கொண்டே சோபாவில் பொத்தென்று அமர்ந்தாள்.

"சத்தம் பண்ணாதே, பிஸ்கட் கடிக்கும் போது ", நவீனுக்கு எரிச்சல் மண்டிக் கொண்டு வந்தது.

"எப்படி இப்படி கொஞ்சம் கூட சொரணையே இல்லாம பதில் சொல்லிகிட்டே போற? தினமும் சொல்றேன் அந்த வேலைய அப்போப்போ செய்யருதுல உனக்கு என்ன பிரச்சனை?",

"நீங்க ஏன் தினமும் சொல்றீங்க, கொஞ்சம் கண்டுக்காம விடறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை ? தினமும் இப்படி போட்டு வைக்கறது இல்ல. இன்னிக்கி வெளிய போனேன். வர லேட். மழை வர மாதிரி இருக்கு சரினு துணி எடுத்து வந்து இங்க போட்டேன். ரெண்டு கையிலும் துணி இருந்ததால, தலையில் இருந்து கிளிப் கீழ விழுந்தத எடுக்க முடியல. அவசரமா பாத்ரூம் வந்துச்சு. போயிட்டு வந்து எடுக்கலாம்னு நெனச்சு போனா, அதுக்குள்ள நீங்க வந்துடீங்க", ரொம்ப சாவகாசமாய் பிஸ்கட் கடித்துக் கொண்டே தலையை ஆட்டி ஆட்டி பேசியவளைப் பார்த்து கடுப்பாகி போனான் நவீன்.

எப்படித் தான் இப்படி இருக்கிறாளோ. எந்த விஷத்தையும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளவேத் தெரியாது. அவன் ஒரு பெர்பெக்ஷனிஸ்ட் . எப்படித் தான் இப்படி சேர்த்து வைக்கிறானோ கடவுள். அவள் எதற்கும் கவலைப் பட்ட மாதிரி தெரியவில்லை. தன்  பங்குக்  காபியை குடித்து முடித்து அன்றைய நிகழ்வுகள் பற்றி பேச தொடங்கினாள். அவனுக்கு கொஞ்சம் நேரம் கேட்டதற்கே  தலை வலிக்கத் தொடங்கியது. எப்படி இப்படி வாய் மூடாமல் பேசுகிறாள் .

"அந்த டிவி ரிமோட் எடுத்துக் குடு. நியூஸ் பாக்கணும்",  ரிமோட்டை அவன் கையில் கொடுத்து விட்டு, காபி டம்பளர் எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல தொடங்கியவள், " நீ போர் அடிக்காதன்னு நேராகவே சொல்லலாம். ஏழு மணிக்கு நியூஸ் பாக்கலேனா ஒண்ணும்  குடி முழுகி போகாது. அதான் சதா சர்வ காலமும் நியூஸ் சானெல்ஸ் ஓடிக் கிட்டே இருக்கே", நக்கல் சிரிப்பு சிரித்து உள்ளே சென்றவள் கையில் இருந்த பொருளை எல்லாம் சிங்கில் போட்டாள் . கழுத்து வலி கொஞ்சம் அதிகமான மாதிரி இருந்தது.

மூன்று நாளாய் வலி. வலியை பெரிதாக பொருட்படுத்தாமல் வேலை செய்து பழகி விட்ட போதும், வலிக்கும் போது கொஞ்சம் இதம் தேவை படுகிறது. திருமணம் ஆகி இருபது வருடங்கள் ஓடி விட்டது. ஒரே மகள். வெளியூரில் இன்ஜினீயரிங் படித்துக் கொண்டு இருக்கிறாள். அவள் இருந்த வரை எல்லாவற்றுக்கும் ஒரு துணை இருந்தது. நவீன் எப்போதும் பிசி. ஷர்மிக்கு பேசசுத்துணைக்கு யாராவது வேண்டும். அது இருந்தால் போதும். வேலை மடமடவென்று நடக்கும். அப்படியும் அவன் எதிர்பார்க்கும் அளவுக்கு அவளால் செய்ய முடியாது. 

"வீடுன்னா கொஞ்சம் இப்படி அப்படி இருந்தா தான் அழகு. இதென்ன ம்யூசியமா?' ஏதோ ஒரு சினிமாவில் வரும் இந்த வசனத்தை சொல்லிச் சொல்லி சிரிப்பாள்.

எல்லாருக்கும் அவளை பிடிக்கும். எப்போதும் சிரித்த முகம். சட்டென்று உதவிக்கு ஓடும் குணம்.  நாலு பேர் எதிரில் நவீன் அவளைக் குறை கூறினால் கூட அதைத் துடைத்துப் போட்டுவிட்டு நகர்ந்து விடுவாள். அவள் மகளுக்கு கோபம் வரும், "என்ன அம்மா இது கொஞ்சம் கூட சொரணை இல்லாம இப்படி இருக்க?', 

" சில பேர் குணம் மாத்த முடியாது, விட்டுத் தள்ளு", சொல்லிவிட்டு செல்லும் அவளைப் பார்க்கையில் அவள் மகள் அபிக்கு எரிச்சல் வரும். பெண்ணியம், சுயமரியாதை பற்றி எல்லாம் பேசும் அவளுக்கு அம்மாவின் சுபாவம் கொஞ்சம் வருத்தத்தைக் கொடுத்தது.

"வீட்டுக் கொடுப்பதால் யாரும் கொறஞ்சு போக போறது இல்லை. என்னிக்காவது ஒரு நாள் எல்லாம்  எல்லாருக்கும் புரியும், ரெண்டு பெரும் ஒருத்தர ஒருத்தர் குத்தி கிழிச்சுகிட்டு இருந்தா 

குடும்பம் எப்படி நடக்கும்?" தத்துவம் நம்பர் ஆயிரத்து ஒண்ணு மாதிரி உதிர்த்து விட்டு செல்வாள் ஷர்மி .

இரவு உணவுக்கு தோசை வார்த்து வைத்த விட்டு, பெட்ரூமிற்குள் சென்றாள். உள்ளே இருந்த டீவியை ஆன் செய்து சன் மியூசிக் சானலில் பாட்டுக்  கேட்டப்படியே துணியை மடித்து எடுத்து வைத்து நிமிரும் பொழுது கழுத்து திருப்ப முடியாத அளவிற்கு வலித்தது.

"ஷர்மி, பசிக்குது" நவீன் குரல். கொஞ்ச நேரம் படுக்கையில் பேசாமல் படுத்துக் கண்ணை மூடிக் கிடந்தாள். டிவியில் நறுமுகையே நறுமுகையே பாடல் ஓடிக் கொண்டு இருந்தது. அவளுக்கு ரொம்பப் பிடித்த பாட்டு. 

"ஏய் டிபன் கிடைக்குமா கிடைக்காதா?' கண்ணைத் திறந்தவள் டீவியை ஆப் செய்து விட்டு அவனுக்கும் தனக்கும் டிபன் எடுத்து வைத்தாள். "ஒன்பது மணிக்கு எலெக்க்ஷன் டிபேட் இருக்கு. அதுக்குள்ள சாப்டுடலாம். பால் கொஞ்ச நேரம் கழிச்சு குடிக்கறேன். ப்ரோக்ராம் சமயத்ல எதாவது பேசி டிஸ்டர்ப் பண்ணாத". நவீன் கொஞ்சம் கண்டிப்பாகச் சொன்னான்.

"எனக்கு இன்னும் கிச்சன் வேலை முடியல. உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்", சாப்டுட்டு பேசலாம்னு நெனச்சேன். 

"ஒன் அவர் ப்ரோக்ராம் தானே. அதுக்கு அப்புறம் பேசலாம்". மறுத்து எதுவும் சொல்லவில்லை அவள். சாப்பிடும் பொழுது பேசுவது அவனுக்கு பிடிக்காது. வேலை அரை மணி நேரத்தில் முடிந்து விட்டது. டிவியில் நான்கைந்து பேர் ஒருவரை ஒருவர் பேச விடாமல் எதோக்  கத்திக் கொண்டு இருந்தார்கள். நான் ஒருத்தி பேசுவது கேக்கவே இவருக்கு பொறுமை இல்லை. எப்படித் தான் இப்படி எல்லாரும் அலறுவதைக் கேட்கிறாரோ, மனசுக்குள் நினைத்தபடி பெட்ரூம்  சென்றவள், வோலினி எடுத்து கழுத்தில் தடவினாள். டிவியில் மியூசிக் சேனல் ஓட ஆரம்பித்தது. இளையராஜா பாடல்கள். கண் மூடி ஒரு நிமிடம் புன்னகைத்தாள். இசை, இதம். ரூமிற்குள் மருந்து நெடி அடித்தது. மெதுவாக ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். மெல்லிய காற்று, முகம் தழுவி, முன் நெற்றியில் இருந்த முடி கலைத்தது. ஆழ்ந்த பெருமூச்சு. படுக்கையில் சாய்ந்தவள், நவீன் வந்தவுடன் பேச வேண்டிய விஷயத்தை மனதிற்குள் சுருக்கமாக ஒரு முறை ஒத்திகைப் பார்த்தாள்  . இரண்டாம் முறை ஒத்திகை பார்க்கும் போதே உறக்கம் அவளை மெதுவாகச் சூழ்ந்தது. நித்திராதேவி மடியில் அவள்.

பீப் பீப். அலாரம் அடிக்கும் சத்தம். சட்டென்று கண் விழித்தாள் ஷர்மி. அடடா தூங்கிட்டோமா?பக்கத்தில் சன்னமாக குறட்டையுடன் தூங்கும் நவீனை எழுப்ப மனம் இல்லை. தனது  வேலையைத் தொடங்க மெதுவாக நகர்ந்தாள். காலை நேர பரபரப்புத் தொற்றிக் கொண்டது. நவீன் ஆபீஸ் கிளம்பும் வரை மூச்சு விட நேரமில்லை. மகள் ஹாஸ்டெல் போன பிறகு ஆசுவாசமாய் இருக்கலாம் என்ற கனவு நவீனுக்கு சர்க்கரை நோய் தொடக்கத்தில் இருப்பது ரிப்போர்ட் கண்ட நொடியில் இருந்து காற்றில் போனது. அவனுக்கு ஒரு ஒரு வேளைக்கும் அவளே உணவு கையில் பேக் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயம். முன்பு இருந்தது விட வேலை பளு அதிகம். உதவிக்கு ஆள் போடலாம் என்று நவீன் சொன்ன பொழுது மறுத்தாள்  "எனக்கு எப்படியும் மதியம் பூரா ரெஸ்ட் தான். நானே பார்த்துக் கோள்கிறேன்", என்று.

நவீன் கிளம்ப ஷூ போடும் போது தான் முந்தைய தினம் அவனிடம் பேச மறந்த விஷயம் நினைவில் வந்தது. "என்னங்க உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் சொன்னேனே" ஆரம்பித்தவளிடம், "டயம் ஆயாச்சு, இவ்ளோ நேரம் சும்மா இருந்துட்டு இப்போ வந்து சொல்றே? 

சாயங்காலம் பேசிக்கலாம்", 

அவள் முகம்  ஒரு நிமிடம் சுருங்கியது.

அவன் கிளம்பிச் சென்ற அரை மணி நேரம் கழித்து அவனது செல்போனிற்கு அழைப்பு கொடுத்தாள் .

"எனிதிங் இம்பர்ட்டண்ட்? ஐ ஆம் இன் எ மீட்டிங்", நவீன் குரல் கொஞ்சம் அதிகார தோரணையில் கேட்ட உடன், "நத்திங்" என்றபடி வைத்து விட்டாள. சரி அவனே லஞ்ச் டயத்தில் பேசுவான் என்று விட்டு விட்டாள்.

மதியம் சாப்பிட்டு விட்டு திருப்பி போன் எடுத்தாள் . காலையில் அவன் சொன்னது நினைவிற்கு வந்தது.

"இவ்ளோ நேரம் சும்மா இருந்து விட்டு", 

கீழ் உதட்டைக் கடித்தாள். பெருமூச்சு தன்னை மீறி வெளியேறியது. அவன் பேப்பர் படிக்கும் பொழுதுப்  பேச மாட்டான். சாப்பிடும் போதும் பேச மாட்டான். அவள் வேலை செய்யும் நேரத்தில் கிச்சனில் வந்து ஆவளுடன் உதவியாக இருக்கவோ, பேச நேரம் செலவிடவோ அவனுக்கு பழக்கம் இல்லை. எப்போது அவனுடன் பேசி இருக்க முடியும்? இரவில் தூங்கும் முன் கொஞ்ச நேரம் பேச முடியம். அதுவும் நேற்றைய தினம் இவளது தூக்கத்தால் போச்சு.

அவன் போன் செய்யவே இல்லை. அவனுக்கு இருக்கும் வேலை பளுவில் மறந்து இருப்பான். மதியம் மூன்று மணிக்கு மேல் அவனிடம் பேசலாம் என்று படுத்தவள் தூங்கி எழும்பும் பொழுது மணி நாலு. சட்டென்று படுக்கையில் இருந்து எழும்ப முயற்சி செய்தாள். தலை சுற்றியது. கழுத்து  வலித்தது. பக்கத்தில் இருந்த போன் எடுத்து அவன் நம்பரை டயல் செய்தபடியே எழுந்து நின்றவள், தலை சுற்றி கீழே விழுந்தாள். கையில் இருந்த போன் எகிரிப் போய் தள்ளி விழுந்தது. கட்டில் விளிம்பில் தலை முட்டியதில் முழுவதுமாய் நினைவு அற்று போனது.

அவன் போன்கால் அட்டென்ட் செய்யவே இல்லை.

ஐந்து மணிக்கு அவனுக்கு ஒரு போன். அன்றைய வேலை முடித்து வீடு கிளம்ப ரெடியாய் இருந்தவன் போன் எடுத்து ஹலோ என்றான்.

"சார், நான் மணிமேகலை பேசறேன் . வழக்கம் போல சாயங்காலம் வேலைக்கு வந்தேனுங்க. கதவு தொறந்து இருந்துச்சு. உள்ள வந்து பாத்தா அம்மா மயக்கமா கெடக்கறாங்க.', பதட்டமும் ஆழுகையுமாய் வேலைக்காரியின் குரல். அடித்து பிடித்து அவன் வீடு வந்து சேரும் முன்னரே அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஆம்புலன்சிற்க்கு போன் செய்து அவனை ஜி எச் சிற்கு நேராக வரும்படி சொன்னார்கள்.

"நோ நோ எதுக்கு ஜி எச்? பக்கத்துல இருக்கற மல்டி ஸ்பேசியலிட்டி ஹாஸ்பிடல் போங்க" நவீன் பதட்டமாகச் சொன்னான்.

"நவீன், உங்க பக்கத்துல யாரவது இருக்காங்களா?, கொஞ்சம் அப்படி யாராவது இருந்தா அவங்க கிட்ட போன் குடுங்க", பக்கத்துக்கு வீட்டுக்காரர் குரல் ஒரு மாதிரியாக கேட்டது. அருகில் நின்ற நண்பனிடம் போனைக் குடுத்தான் நவீன். பேசி போனை வைத்தவன்.

"நவீன், ஐ ஆம் சாரி" . நாம இப்போ ஹாஸ்பிடல் போகல. மார்ச்சுவரிக்கு போறோம்.

வழியில் போன் எடுத்துப்  பார்த்தவன் ஷர்மியிடம் வந்த மிஸ்ட் கால்ஸ் பார்த்தான். ஏதோ சொல்ல வேண்டும் என்று சொன்னாளே. என்ன அது? மனசுக்குள் இந்த ஆயுள் முடியும் வரைச் சுற்றி வரப் போகும் அந்த இக்கேள்வியின்  முதல் சத்தத்தில், கதறி அழத் தொடங்கினான்.

எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்த நவீன் காலில் ஏதோ குத்தியது. ஷர்மியின் ஹேர்பின்.

No comments:

Post a Comment