👩🏿🦰🧑🦰🧑காலம் தோறும் பெண்🧒👩🏻👦🏾
14. மூவலூர் ராமாமிர்தம்
By ஹேமா பாலாஜி | |
கண்களில் நீரோடு தன்னுடைய ஐந்து வயது குழந்தையை அப்பெண்மணியிடம் ஒப்படைத்துவிட்டு அதற்கான விலையாக பத்து ரூபாயும் ஒரு பழம் புடவையும் பெற்றுக் கொண்டு சென்றாள் அந்த அபாயக்கியவதி. அம்மா தன்னை எவரிடமோ விட்டுவிட்டு செல்கிறாளே என்று கண்களில் குளம் நீரோடு பயந்து போய் அழுது கொண்டிருந்தது அப்பெண் குழந்தை. தன் வாழ்நாள் முழுமைக்குமான அத்தனைக் கண்ணீரையும் பயத்தையும் குழந்தைப் பருவத்திலேயே செலவிட்டு விட்டதால் தானோ அதனால் இறுதி வரை உறுதியான மனத்தோடு அத்துணை போராட்டங்களையும் மேற்கொண்டு வெற்றி பெற முடிந்தது!
கண்ணீரோடு அன்று அந்த தேவதாசி பெண்ணுடன் நின்று கொண்டிருந்த குழந்தைதான் பின்னாட்களில் மிகப் பெரிய சமூகப் போராட்டம் நடத்தி சக பெண்களின் கண்ணீரை துடைத்தெரிந்தது. அவர் தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.
1883 வருடம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் என்ற கிராமத்தில் கிருஷ்ணசாமி, சின்னம்மாள் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார் ராமாமிர்தம். பின் நாட்களின் மூவலூர் மூதாட்டி என்றும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் என்றும் அன்புடன் அழைக்கப்பட்டவர். இவர்களது குடும்பம் இசை வேளாளர் குடும்பம் ஆகும்.
தேவதாசி முறை நடைமுறையில் இருந்த காலகட்டம் அது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மிகச் சிறு வயதிலேயே கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்கிற பெயரில், கோயில்களுக்கு ‘நேர்ந்து விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு சிறு வயதிலேயே நாட்டியம், பாட்டு போன்றவைகள் கற்றுத் தரப்படும். அவர்கள் நாட்டியமும் இசையும் மட்டுமல்லாது இலக்கியம் கவிதை போன்றவற்றில் சிறந்தவர்களாகவும் பயிற்றுவிக்கப்படுவர். சகலவிதத்திலும் தேர்ந்து தங்களது அழகாலும் அறிவாலும் மற்றவர் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் பயிற்றுவிக்கப்படுவார்கள்.
பருவ வயது வந்ததும் அவர்களை ஊர்ப் பெரிய மனிதர்களின் ஆசை நாயகிகளாகவும், ஊராரை மகிழ்விக்கும் நடனப் பெண்மணிகளாகவும் ஆக்கியிருந்தது சமூகம். அவர்கள் ‘பொட்டு கட்டப்பட்டவர்களாகவும்’ ‘தேவரடியார்களாகவும்’ இழிவாகப் பேசப்படும் பிரிவினராகவும் வைக்கப்பட்டிருந்தார்கள். அச்சமூகத்தில் பிறந்திருந்தாலும் தங்களது மகளை அவ்வாறு சிறுமைப்படுத்த விரும்பவில்லை ராமாமிர்தத்தின் பெற்றோர்கள். அதனால் தம் மகளை நாட்டியம் இசை போன்றவற்றை கற்றுக் கொடுக்காமல் வளர்க்க ஆசைப்பட்டனர். மற்றவர்கள் எவ்வளவோ சொல்லியும் தன் முடிவிலிருந்து மாறாமல் இருந்தனர். அதனால் ஊரின் பகைமையை சம்பாத்தித்துக் கொண்டனர். அவர்களை அவர்கள் சமூகமும் கூட விலக்கி வைத்துவிட்டது.
வருமானத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் மிகுந்த பிரச்னை ஏற்பட்டது. ஓரளவுக்கு மேல் சமாளிக்க இயலாத கிருஷ்ணசாமி வெறுப்பு மேலிட தன் குடும்பத்தை விட்டு விலகி எங்கோ போய்விட்டார். கணவனும் இன்றி, ஊரின் b வைத்துக் கொண்டு வாழ்க்கையுடன் போராடினார் சின்னம்மாள். ஓரளவுக்கு மேல் அவரால் சமூகத்துடன் போராட முடியவில்லை. வேறு வழியின்றி தன் ஐந்து வயது மகளை ஒரு தேவதாசியிடம் பத்து ரூபாய் பணத்துக்கும் ஒரு பழம் புடவைக்கும் விற்றுவிட்டார்.
அந்த தேவதாசியிடம் தான் வளர்ந்தார் ராமாமிர்தம். அவர்களின் குல வழக்கமாக ஆடல் பாடல் இசை என இளவயது முதல் கற்றுத் தேர்ந்தாலும் அவரின் மனதில் தாய் தந்தைக்கு இருந்த எண்ண ஓட்டமே இருந்தது. என்ன நடந்தாலும் தான் இந்த தேவதாசி முறைக்கு அடிமையாகக் கூடாது என்பதில் மிகுந்த மன உறுதியோடு இருந்தார். குழந்தை குமரி ஆனதும் ஆரம்பித்தது வாழ்க்கையின் போராட்டம். தேவதாசி முறைக்கு ஒத்துழைக்க மாட்டேன் என அடம் பிடித்த ராமாமிர்தத்தை பெரும் பணத்திற்காக 80 வயது முதியவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டாள் அவரை வளர்த்த தாசி.
தொடரும்
No comments:
Post a Comment