👩🏿🦰🧑🦰🧑காலம் தோறும் பெண்🧒👩🏻👦🏾
மூவலூர் 2
அங்கே ஆரம்பித்தது ராமாமிர்தத்தின் போராட்டம். உயிரே போனாலும் தாசியாகவும் மாட்டேன் பாட்டன் வயதில் இருக்கும் கிழவனையும் மணக்க மாட்டேன் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறினார். தனக்கு இசையும் நாட்டியமும் சொல்லிக் கொடுத்த இளம் வயதினரான சுயம்பு பிள்ளையுடன் தன் வாழ்வை இணைத்துக் கொண்டார். அப்படியும் சமூகம் அவரை நிம்மதியாக வாழவிடவில்லை. அவரின் மேல் கொலைப்பழி சுமத்தியது. ஒரு இளம் பெண்ணை ராமாமிர்தம் கொலை செய்துவிட்டதாகச் சொல்லி ராமாமிர்தத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. ராமாமிர்தம் எதற்கும் கலங்கவில்லை. கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட அதே பெண்ணை, உயிருடன் அரும்பாடுபட்டுக் கண்டு பிடித்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். யாரெல்லாம் அந்தச் சதிக்கு உடந்தை என்பதை அம்பலப்படுத்தி, அவர்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.
அதன்பின் கணவரின் துணையுடன் தேவதாசி முறையை ஒழிக்க போராட்டங்களில் ஈடுபட்டார். 1917-ல் மயிலாடுதுறையில் தனது முதல் போராட்டத்தைத் துவங்கினார். தேவதாசி குலப்பெண்களை அழைத்து பேசி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனால் ஊரில் பலரையும் பகைத்துக் கொண்டார். ஊர் பெரிய மனிதர்களில் இருந்து பணக்காரர், ரவுடிகள் அரசியல்வாதிகள் வரை பலரும் அவருக்கு எதிரியாகினர். பல இன்னல்களும் துன்பங்களும் அம்மையாருக்கு ஏற்பட்டன. அவர் கூந்தலைப் பிடித்து இழுத்து அறுத்து விட்டனர். ஒரு பெண்னை எந்த விதத்தில் எல்லாம் அவமானம் செய்ய முடியுமோ அத்தனை விதத்திலும் செய்தனர். இருப்பினும் அவர் கலங்கி நின்று விடவில்லை. எதிர்ப்புகள் வளர வளர அவரது திடமும் வளர்ந்து மேலும் உத்வேகம் பெற்றது.
காந்தியத்தின் மீது மிகவும் பற்று கொண்டவர் அம்மையார். விடுதலை போராட்டங்களின் போது ஆங்கிலேயர் மேடையில் யாரும் பேசக் கூடாது கூட்டம் கூட்டக் கூடாது என்றெல்லாம் கடும் சட்டம் போட்டிருந்தனர். அப்படியா சரி உன் சட்டத்தை நான் மதிக்கிறேன் என்ற பாவணையில் அம்மையார் மேடையில் பேசாமல் தான் சொல்ல வந்த கருத்துக்களை எல்லாம் கரும்பலகையில் எழுதி மக்களைப் படிக்கச் செய்தார். மகாத்மாவை கைது செய்த போது அதை எதிர்த்து மூவர்ணக் கொடியையே ஆடையாக அணிந்து போராடினார்.
1925-ம் ஆண்டு காங்கிரஸ்ஸில் இருந்த பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பெண்களின் அடக்கு முறைக்கும், கைம்மை நோன்பு, பால்ய விவாகம், தேவதாசி முறை, தீண்டாமை ஆகிய பல கொடுமைகளுக்கு எதிராக ராமாமிர்த அம்மையார் போராடினார். காங்கரஸில் இருந்த சிலர் தேவதாசி முறைக்கு ஆதரவாக இருந்ததால் அக்கட்சியில் இருந்து பெரியார் வெளியேறிய போது தானும் அவருடன் வெளியேறினார்.
தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்காக சட்டமன்றத்தில் வாதாடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும் நல்ல நட்பு இருந்தது. தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட தீர்மானத்தை காங்கிரசில் இருந்த மூத்த தலைவர்கள் சிலர் கடுமையாக எதிர்த்தனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அந்த சட்டத்தைக் கொண்டு வரத் தீர்மானம் இயற்றியபோது, ‘தேவதாசி முறை தொடர்ந்து நடக்க வேண்டும்.. இல்லாவிட்டால் பாரம்பரியம் மிக்க இந்தியக் கலாசாரம் சீரழிந்து விடும்’ என்று ஆவேசப்பட்டனர். அப்போது ராமாமிர்த அம்மையார் இவ்வாறு கூறும் படி முத்துலட்சுமியிடம் கூறினார். ‘அவர்கள் தேவதாசி முறை தொடர வேண்டும் என விரும்பினால், இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்தியப் பண்பாட்டைக் காக்க, இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும்’என்றார். அதைக் கேட்ட தலைவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர். பல போராட்டங்களுக்குப் பிறகு, 1947-ம் வருடம், உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானமாய் விளங்கிய தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இவரது போராட்ட காலங்களில் இவர் மீது கொலைக் குற்றங்களும் அபவாதங்களும் சுமத்தப்பட்டன. விஷம் கொடுத்து கொல்லும் வரை கூட எதிரிகள் போயினர். ஆனால் தன் உயிரையும் துச்சமாக நினைத்து தாம் நினைத்ததை சாதிக்க போராடினார் அம்மையார். 1936-ல் தன்னுடைய சுயசரிதை நூலான ‘தாசிகளின் மோசவலை(அ) மதிகெட்ட மைனர்’ என்ற புதினத்தை எழுதி சிவகிரி ஜமீந்தாரிணி வெ.வெள்ளத்துரைச்சி நாச்சியார் அவர்களின் உதவியுடன் தாமே வெளியிட்டார். மீண்டும் 65 ஆண்டுகள் கழித்துதான் அந்த நாவல் மறுபதிப்புக் கண்டது. அதில் தாசிகளின் பரிதாபமான வாழ்க்கை முறையும் தன் சொந்த அனுபவங்களையும் முன்னிருத்தி எழுதியிருந்தார். இது பற்றி ‘புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்தது இந்நாவல்’, என்று கூறினார்.
மேலும் அவர் ‘தாசிகளுக்குப் புத்திசாலித்தனமாக ஆராய்ந்து அறியும் திறன் கிடையாது. பொருள் தேடும் ஆராய்ச்சியும் தாசிகளுக்குக் கிடையாது. பொருள் தேடும் பேராசையால் யார் எப்படிச் சொன்னாலும், அப்படியே நடப்பார்கள். ஆனால், எவ்வளவு சாமர்த்தியமாக அவர்கள் பொருள் தேடினாலும் கடைசி காலத்தில் இளிச்சவாய்த்தனமாய் யாரிடத்திலாவது கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுவார்கள். எந்தத் தாசியாவது கடைசி காலத்தில் சுகமாயிருக்கிறாளா?’ என்று தனது நாவலில் ஓரிடத்தில் வேதனையோடு சொல்கிறார் ராமாமிர்தம்.
சுயமரியாதை இயக்க முன்னோடிகளில் ஒருவர். தேவதாசி சமூகத்திலே பிறந்து, அதனால் பாதிப்படைந்து, அந்தத் தளைகளை அறுத்து எறிந்து, அந்தக் கேடுகெட்டப் பழக்கத்தையே ஒழித்துக் கட்டும் வரை ஓயாமல் உழைத்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பெண்கள் வீட்டைவிட்டு கூட வெளியே வர முடியாதிருந்த காலத்தில் வாழ்ந்திருந்தாலும் தன் தைரியத்தாலும், சமூகத்துக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தாலும் ஆண்களுக்கு இணையாகப் பிரசாரம், போராட்டம் என நிகழ்த்தி வெற்றியடைந்து காட்டியவர் மூவலூர் மூதாட்டி.
இவை மட்டுமல்லாது கலை உலகிலும் தன்னுடைய பங்களிப்பை அளித்திருக்கிறார். அண்ணா, சிவாஜி கணேசன், டி.வி.நாராயணசாமி போன்றோர் நடித்த நாடகங்களில் தாயார் பாத்திரத்தில் தொடர்ந்து நடித்து, எழுத்து மூலமும் கலை மூலமும் புரட்சியை செய்திருக்கிறார். 50 ஆண்டு கால பொது வாழ்க்கை வாழ்ந்த அம்மையார் 26.6.1962 அன்று மறைந்தார். அவர் வாழும் போது அறிஞர் அண்ணா தன் கையால் திமுக சார்பில் விருது கொடுத்து கௌரவித்தார். அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் அவரின் பெயரால் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் ஒன்றை அறிவித்தார். அதுவே மூவலூர் ராமாமிர்ந்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டமாகும்.
அம்மையாரைப் பற்றி சுருக்கமாக சில குறிப்புகள்:
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பிறந்த ஆண்டு 1883.
1925-ம் ஆண்டு பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார்.
1930-ல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாக்க டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி யுடன் துணை நின்று போராடினார்.
1936-ல் தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்ற சுயசரிதப் புதினம் வெளிவந்தது.
1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். அதற்காக நவம்பர் 1938 சிறையில் அடைக்கப்பட்டார்.
சி.என்.அண்ணாதுரை ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளராக இருந்தார்.
தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் நினைவாக ஏற்படுத்திய சமூகநலத் திட்டம் - திருமண நிதியுதவித் திட்டம்
அறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்தின் அன்னிபெசன்ட் எனப் புகழப்பட்டவர் - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
பெண் உரிமைக்காக பாடுபட்ட விடிவெள்ளியாக திகழ்ந்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, ஒரு பெண் சீர்திருத்தவாதியாக இருந்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.
அம்மையார் இறந்த ஆண்டு - 1962.
No comments:
Post a Comment