Thursday, March 3, 2022

நிழலாடும் நினைவு

 2017ல் சில நண்பர்களோடு கோவையில் உள்ள ஸ்ரீ ராமனந்தர் ஜீவ சமாதியைத் தரிசித்து விட்டு வெளியில் வந்ததும் போரூர் கோவிலுக்கு அருகில் வண்டியை நிழலில் நிறுத்தி விட்டு தோழி கொண்டு வந்திருந்த உணவு டப்பாவைத் திறந்தோம். எங்களது காருக்கு அருகில் ஒருவர் வந்து எங்களை உற்றுப் பார்த்தபடி நின்று கொண்டார்.  அவரை நாங்கள் அந்த தெருவில் நுழைந்து ஜீவ சமாதிக்குச் செல்லுமுன்னரும் பார்த்தோம், கையிலிருக்கும் பிஸ்கட் பாக்கட்டிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து தன்னை சுற்றி நின்று கொண்டிருக்கும் நாய்களுக்கு போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது நாய்கள் ஏதும் பக்கத்தில் இல்லை அவர் மட்டும் காருக்கு அருகில் நின்றபடி காரினுள்ளே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது காருக்குள் எங்களோடு உடனிருந்த நண்பர் அவரை நகர்ந்து போகுமாறு  சைகை செய்ய அவர் சட்டை செய்யாது நின்று பார்க்கத் துவங்கினார்,  ஒரு வேளை உணவு தேவைப் படுகிறதோ என்ற எண்ணத்தில் அவர் இறங்கி சில ரூபாய் நோட்டுக்களைக் கொடுக்க எத்தனிக்க,   அவர் துணுக்குற்று வேண்டாமென வேகமாக மறுத்து விட்டார்.  ஆனால் அந்த இடத்தை விட்டு நகராது காருக்குள் தொடர்ந்து நோக்கிய படி இருக்க, நான் அவருக்கு மிகவும் நேராக முதல் இருக்கையில் இருந்ததால் கொஞ்சம் தர்ம சங்கடமாக உணர்ந்து இறங்கி இணக்கமாக அதே சமயம் கேள்வியோடு அவரைப் பார்க்க, அவர் செய்த செயல் மிகவும் விகசிப்பானது.

எனக்காக காத்திருந்தது போல என்னைக் கண்டதும் கண்கள் மின்ன முகத்தில் வாத்சல்யமும் அன்பும் மகிழ்வும் கூட கை கூப்பியபடி அம்மே அம்மே என்று பரவசத்தோடு அரற்றினார். நானும் தெரிந்தவர் எவரையாவது நினைவுருத்தியிருக்கலாம் என்ற எண்ணத்தில் சிரித்துக் கொண்டே எனக்குத் தெரிந்த மலையாளத்தில் என்ன விஷயம் யாரானு என்று கேட்க, அம்மே தன்னே, குறி காணுன்னு, குறி காணுன்னு, குறி காணுன்னு  என்று தனது நெற்றியில்  விரலால் கோடிழுத்த படி மீண்டும் மீண்டும் சொல்ல எனக்கு என்ன சொல்ல வருகிறார் என்று முற்றும் புரியாத நிலையில் வேறு பேச்சு மாற்றலாம் என்றபடி ஸ்தலம் எவ்வடயா என்று கேட்க அவர் அவர் மலையாளக் கரையின் ஏதோ ஒரு புழை=ஆற்றின் பெயரைச் சொல்லி அவ்விடையும் உண்டு இப்ப இவ்விடக் கண்டு என்று கண்களில் நீர் வழிய கை கூப்பி வணங்க, என்னையறியாது நானும் கை கூப்பிக் கொண்டேன். பேச்சற்ற சில நிமிடங்கள் பின்னர் சற்று நிதானித்து கழிச்சோ என்று கேட்க, அவர் அதே பரவசத்தோடு ஆம் என்பது போல் தலையசைத்தார். ஆனாலும் நான் கைகளில் இருந்த பர்சில் இருந்து ஏதோ ஒரு நோட்டை எடுத்துக் கொடுத்ததும் பரவசத்தோடு வாங்கி தலையில் வைத்து கண்களில் ஒற்றிக் கொண்டு வேகமாக நகரத் துவங்கினார். அதற்குள் அனைவரும் காரில் இருந்து இறங்கி விட்டனர் எனவே, அவர் அதை வாங்குவதைக் கண்ட மற்றொரு தோழியும் இன்னொரு நோட்டைக் கொண்டு கொடுக்க வர அவர் மறுத்து விட்டு அந்த இடம் விட்டு நகர்ந்து போனார், எங்கள் காட்சியில் இருந்து அவர் நகர்ந்து போனாலும் மனதால் அந்த நிகழ்வை அசை போட்டபடி உண்டு முடித்து விட்டு மீண்டும் கிளம்பிச் செல்கையில் அவர் மீண்டும் தெரு நாய்களுக்கு இடையில் நின்றபடி கை நிறைய பிஸ்கட் பாக்கட்டை ஏந்திக் கொண்டு அவைகளுக்கு உண்ணத் தந்து கொண்டிருந்தார். அப்போதும் அதே பரவசமான கண்கள் இன்று நினைத்தாலும் அந்த கருத்த தெளிந்த ஒல்லியான முகமும், இடையில் கட்டியிருந்த சற்றே அழுக்கான லுங்கியும், மேலே இட்டிருந்த பழுப்பு நிற சட்டையும் தோளில் தொங்கிக் கொண்டிருந்த துண்டும் இல்லாத, போர்வையும் இல்லாத அந்த நீண்ட வஸ்த்தரமும் , அவரது வார்த்தைகளும், கண்களும் இப்போது நிகழ்ந்தது போல நினைவிலுள்ளது. 

புறக் கண்களின் காட்சிக்கு அப்பால் விரியும் சூட்சுமங்களை காண அகக் கண் கொண்டும் நோக்குதல் தேவை என்ற சூத்திரம் உணர்த்தப்பட்ட  தருணம் அது. இப்படித்தான் கற்றுக் கொடுக்கப் படுகிறது.

தினமும் கண்ணாடியில் பார்த்துக் கொள்கையில் நிழலாடும் நினைவு தான். இன்று இங்கு பகிரத் தோன்றியது.

No comments:

Post a Comment