சிறுகதை: 1345 words
பரமு..
"பரமு இருக்கானா..?" என்றேன் நடையில் நின்று கொண்டே.
யார் வீட்டுக்குப் போனாலும் அந்த வீட்டு ஆண் இருக்கிறானா என்று தெரியாமல் நான் உள்ளே கால் வைப்பதில்லை. இது அம்மா சொல்லிக் கொடுத்தது.
குனிந்து தரையில் உதிர்ந்து கிடந்த வாதாம் மர இலைகளைப் பெருக்கிக் கொண்டிருந்த பெண், நிமிர்ந்து பார்த்தாள்.
"வெளிய போயிருக்கார். நீங்க..?"
"நான் அவன் கூட வேலை பார்க்கிறவன். பரமு ரெண்டு நாளா ஆபீஸ் வரலையே...அதான் என்னன்னு பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.."
"இ.பி ஆபீசரா? " என்றாள். ஆமாம் என்றான்.
அவள் முகம் ஒரு கணம் வாடி மீண்டது. "அவருக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை...அதான் வரலே.."
"என்ன உடம்புக்கு?"
"இருமல் தான்.." என்றாள் தயக்கமாய். அவனுடைய இருமல் இவளை ரொம்பவே படுத்தி இருக்கும் போல் இருந்தது.
பரமுவுக்குக் குடிப்பழக்கம் இருப்பது தெரியும். காலை ஷிப்டுக்கு வருகிறபோது கூட கொஞ்சமாகப் போட்டுக் கொண்டு தான் வருவான். எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தாகி விட்டது. மேலிடத்தில் யாராவது கம்ப்ளைண்ட் செய்து விட்டால் வேலை போய் விடும் என்று கூட பயமுறுத்திப் பார்த்து விட்டான். மசியவில்லை. "நான் என்ன சார் குடிச்சுட்டு வந்து கலாட்டாவா பண்றேன்? என்னால் யாருக்கு என்ன தொந்தரவு?" என்றான்.
"தொந்தரவு இருக்கட்டும். உன் உடம்புக்குக் கெடுதல் இல்லையா?" என்று கேட்டால் சிரிப்பான். "எனக்கு ஒன்னியும் ஆவாது சார்.. நீதான் தினம் எனக்காக சாமி கிட்ட வேண்டிப்பியே!"
அது என்னவோ வாஸ்தவம் தான். தினம் சாமி கும்பிடுகிறபோது இவன் முகம் மனதில் வந்து போகிறது. இவனுக்கு எதுவும் ஆகாமல் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறது.
அவன் ஃபோன் பேசிவிட்டு ரிசீவரை வைத்தால் ரீசீவரைத் துடைக்காமல் பேச முடியாது. ஒரு முறை ஒரு லேடி ஸ்டாப் மேனேஜரிடம் இதைப் பற்றி கம்ப்ளைண்ட் செய்துவிட அவர் இவனைக் கூப்பிட்டுக் கண்டித்தார். அதிலிருந்து ஃபோன் பேசி விட்டு இவனே ரிசீவரை நன்றாகத் துடைத்து வைக்கத் தொடங்கினான். ஆனால் குடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.
டீ பிரேக்கில் இரண்டு பேரும் டீ குடிக்க எதிர் கடைக்குப் போகிறபோது பரமு இருமிக்கொண்டே தெருவைக் கிராஸ் பண்ணுவான். வலது கைவிரல்களை வாயருகே குவித்து நாசுக்காக அவன் இருமுவதைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.
"நுரையீரல் பாதிச்சால் தான் இப்படி வறட்டு இருமல் வரும் பரமு. நீ முழிச்சுக்க வேண்டிய நேரம் இது.." என்று சொல்லிப் பார்த்தான். கேட்கவில்லை.
"மிஞ்சிப்போனா செத்துப் போவேன். அவ்வளவு தானே சார்? போறேன்..எனக்கு என்ன புள்ளையா குட்டியா?" என்றான் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடி. கொஞ்சம் அதிர்ச்சியாகக் கூட இருந்தது. குடியை விட மரணம் சுலபமாக இருக்கிறதா இவனுக்கு?
பரமுவுக்குக் குழந்தை இல்லை. அதற்கு என்ன காரணம் என்று கூட அவன் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. ஒரு முறை, "டாக்டரைப் போய்ப் பாரேன்.." என்றதற்கு திரும்பி இவனை ஒரு விசித்திரப் பார்வை பார்த்தான். அதற்கு என்ன பொருள் என்று விளங்கவில்லை.
"வாசல்லயே நிற்கறீங்களே..உள்ள வந்து உட்காருங்க.." என்றாள் பரமுவின் மனைவி.
"பரவாயில்லை...இருக்கட்டும்..பரமு எப்ப வருவான்?"
"வந்துடுவாரு.. இன்னைக்கு ஞாயித்துக்கிழமை இல்லையா..கறி எடுத்துச் சாப்பிடணும்னு தோணிப்போச்சு அவருக்கு. கறிக்கடைக்குத்தான் போயிருக்காரு.." என்றாள். உள்ளேயிருந்து ஒரு ஃபோல்டிங் சேரைக் கொண்டு வந்து வாதாம் மர நிழலில் விரித்தாள். வாதாம் இலைகள் நல்ல பச்சையும் சிவப்புமாக ரம்மியமாக இருந்தது. பெரிய பெரிய இலைகள். அடர்த்தியான இலைகளுக்கு நடுவே சூரியன் புகுந்து கொஞ்சம் வெளிச்ச ஜாலமும் காட்டிக் கொண்டிருந்தான்
"மரம் நல்ல நிழலா இருக்கு.." என்றான்.
"ஆமாம். ஆனால் இலையுதிர் காலத்தில் அத்தனையும் கொட்டி மொட்டையாக நிற்கும்.." என்றாள். கொஞ்சம் பொறுத்து "பழுத்த இலைகள் உதிர்வது சகஜம் தானே?" என்றாள்.
இதை எதிர்பார்க்கவில்லை. பரமுவின் மனைவி பரமு போலவே ஒரு அழுக்குப் புடவை கட்டிக்கொண்டு பாமரத்தனமாக நிற்பாள் என்று நினைத்தான். ஆனால் இவள் இலையுதிர் காலம் பற்றியும் பழுத்த இலைகள் உதிர்வது பற்றியும் பேசுகிறாள்.
"காஃபி குடிப்பீர்களா..?" என்றாள்.
"வேண்டாம்.. கொஞ்சம் தண்ணி மட்டும்..."
உள்ளே போனாள்.
தான் ஏன் உட்கார்ந்திருக்கிறோம் என்று தோன்றியது. இரண்டு நாளாகப் பரமுவைப் பார்க்காததில் மனம் ஒரு நிலையில் இல்லை. லீவ் போட்டால் ஃபோன் பண்ணிச் சொல்லுவான். அதுவும் செய்யவில்லை. ஒரு வேளை ஃபோன் கூட செய்ய முடியாதபடி உடம்பு சரியில்லையோ என்று மனதில் ஒரு பதட்டம் ஏற்பட்டுத்தான் புறப்பட்டு வந்து விட்டான். அவன் குடிப்பழக்கம் எப்பொழுதும் இவனை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. நல்லகாலம்.. கறிக்கடைக்கு கறி எடுக்கப் போகிற அளவு தெம்பாகத்தான் இருக்கிறான். இருந்து பார்த்து விட்டே போகலாம் என்று தோன்றியது. தெருவுக்கு நாலு கறிக்கடை இருக்கிறது. பக்கத்தில் தான் எங்காவது போயிருப்பான்.
அவன் மனைவி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு கொஞ்சம் ஒதுங்கி நின்று கொண்டாள். பரமுவின் வீட்டையும் அவன் மனைவியையும் இப்போது தான் பார்க்கிறான். கிராமத்துப் பெண்ணா நகரத்துப் பெண்ணா என்று இனம் காண முடியாத ஒரு தோற்றத்தில் இருந்தாள். எளிய உடையை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உடுத்தியிருந்தாள். அலங்காரம் என்று பெரிதாக எதுவுமில்லை என்றாலும் அவள் இயல்பான தோற்றமே நன்றாகத்தான் இருந்தது. பார்த்ததுமே ஒரு மதிப்பும் மரியாதையும் ஏற்படும் போல. இவர்களுக்கு ஏன் இன்னும் குழந்தை பிறக்கவில்லை...
பரமு இ.பி.யில் லைன்மேன். இவன் சூப்பர்வைசர். அவன் லைட் போஸ்ட்களில் ஏறி ஒயர் கனெக்க்ஷன்கள் கொடுக்கிறபோது இவன் கீழே நின்று ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருப்பான. ஆயினும் பதவி மீறி இருவருக்குள்ளும் ஒரு அன்னியோன்யம் இருந்தது. இரவு நேர ட்யூட்டிகள் அதை இன்னும் அதிகப்படுத்தி இருந்தது.
ராத்திரி நேரத்தில் எந்த வீடு.. எந்தத் தெருவிலேயாவது விளக்கு எரியவில்லை என்றால் உடனே ஃபோன் கால்கள் பறந்து வரும். சிலபேர் நேரிலேயே வண்டி எடுத்துக் கொண்டு வந்து விடுவார்கள் கையோடு கூப்பிட்டுக் கொண்டு போக. தங்கள் மீது அவர்களுக்குள்ள அவநம்பிக்கை எரிச்சலூட்டினாலும் ஒன்றும் செய்ய முடியாது. " போங்க.! வரோம்.." என்று கொஞ்சம் உதாசீனமாகச் சொல்வது தான் எரிச்சலைத் தணித்துக் கொள்ளும் ஒரே வழி.
பரமு ஓட்ட இவன் பின்னால் உட்கார்ந்து கொள்வான். அவன் உடம்பிலிருந்து கலவையாக நெடிகள் வந்து கொண்டிருக்கும். வியர்வை.. அழுக்கு...சிகரெட் புகை நாற்றம்..கொஞ்சம் மதுவாடை. இப்படியொரு உடம்பை வைத்துக்கொண்டு எப்படி ஜீவிக்கிறான் என்று தோன்றிப் போயிருக்கிறது. அதற்குப் பிறகு இவன் தனியாகத் தன் வண்டியில் போகத் தொடங்கினான்.
"சாருக்கு என் கூட ட்ராவல் பண்றது புடிக்கல போலிருக்கு.." என்றான் பரமு ஒரு முறை சிரித்தபடி.
"அப்படி இல்ல பரமு...உனக்கு வேலை முடிக்க நேரமாகலாம்.. நான் உடனே திரும்ப வேண்டியிருந்தா என் வண்டியில் வருவது தான் சௌகரியம்?" என்றான். அதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும் கூட அவன் யூகித்ததும் உண்மை தான். நைட் டுயூட்டிக்குப் போகிறபோது குளித்துவிட்டு ஃப்ரெஷ்ஷாகப் போனால் தனக்கும் தெம்பாயிருக்கும் அடுத்தவர்களுக்கும் நல்லது என்று எப்போது இவனுக்குத் தெரியப் போகிறது? ஏன் தன் தோற்றம் ஆரோக்கியம் குறித்து எதுவும் அக்கறை கொள்ளாமலே இருக்கிறான்?
•••
கொஞ்ச நேரத்தில் கேட்டைத் திறந்து கொண்டு பரமு வந்தான். கையில் கறுப்பு பிளாஸ்டிக் பையில் ஆட்டுக்கறி கனமாகத் தொங்கியது. அரைக்கிலோவுக்கு அதிகமாகவே இருக்கும் போல. இவனைப் பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டுப் போனான்.
"என்ன சூப்பர்வைசர் சார்...நீங்க இங்க.?! " என்றான். அவன் கேட்ட தொனி கட்டாயம் அவன் இவனை இங்கு எதிர்பார்க்கவில்லை என்பதைப் பறைசாற்றியது.
"நீ பாட்டுக்கு சொல்லாமக் கொள்ளாம லீவ் போட்டுட்ட.. நான் என்னன்னு நினைச்சுக்கிறது பரமு?" என்றான்.
"சாரி சார்...ஃபோன் பண்ணனும்னு தான் நினைச்சேன். ஆனா அதுக்குக்கூட அலுப்பா இருந்தது. கொஞ்சம் இருமலு ஜாஸ்தி.. அதான்…"
"கொஞ்சம் எப்படி ஜாஸ்தியாகும்? நீ சொன்னா கேக்கிறதில்லை பரமு.." என்றான். அதற்குள் பரமுவின் மனைவி உள்ளிருந்து வெளியே வந்தாள்.
"சாரை எதுக்கு இப்படி வெளில உட்கார வெச்சிருக்கே.. உள்ளே கூப்ட்டு ஃபேன் போட்டிருக்கக்கூடாது?" என்றான்.
"அவங்க சொன்னாங்க. நான்தான் மர நிழல் நல்லாயிருக்குன்னு இங்கேயே உட்கார்ந்துட்டேன்" என்றான்.
பரமு அந்த கறுப்பு பிளாஸ்டிக் பையை மனைவியிடம் நீட்டியபோது அவள் முகம் ஒரு கணம் சிணுங்கியது. "இந்தப் பையில் வாங்கி வராதீங்கன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்.. " என்றாள் முணுமுணப்பாய்.
"ஏன்..இந்தப் பைக்கு என்னா..எல்லாரும் இதிலே தான் வாங்கிட்டுப் போறாங்க..?" என்றான்.
"வாங்கறவங்க வாங்கிட்டுப் போகட்டும்...நமக்கு வேண்டாம்னு சொல்றேன். எவர்சில்வர் டப்பா குடுத்தா எடுத்துப் போக மாட்டேன்றீங்க..இந்தக் கறுப்பு பிளாஸ்டிக் பை ரீசைக்ளிங் பண்ணினது. இதில் உணவுப் பொருள் வைக்கக்கூடாதுன்னு கவர்மென்ட்டே சொல்லிருக்கு...நம்ம வரையாவது ஜாக்ரதையா இருந்துக்கலாம்னு பார்த்தா நீங்களும் கேக்கறதில்லே." என்றாள்.
"போதும்..போய் வேலையைப் பாரு!" என்றான்.
அவள் முகம் கொஞ்சம் மாறியது போல் இருந்தது. கோபமாகவோ அவமானமாகவோ இருக்கலாம்.
"சார்..நீங்க கறி சாப்பிடுவீங்க இல்ல..?" என்றான் பரமு இவன் பக்கமாய் திரும்பி.
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ப்பா. உன்னைப் பார்த்துட்டு இதோ நான் பத்து நிமிஷத்துல புறப்பட்டுடுவேன்" என்றான்.
"அதெப்படி சார்...வராதவங்க வந்திருக்கீங்க..லீவ் நாள் தானே...இருந்து சாப்புட்டுத்தான் போகணும்...நான் விட மாட்டேன்.." என்றான்.
"இல்ல பரமு…"
"இல்ல சார்... எதுவும் சொல்லாதீங்க.." என்று மூர்க்கமாய் இடைமறித்தான். "சரசு..சாருக்கும் சேர்த்து சாப்பாடு வெச்சுடு..!" என்றான் உள்புறம் பார்த்து.
"சரி... நீங்க முதல்ல கைகால் கழுவிட்டு வந்து அவர் கூட பேசுங்க. கறிக்கடைக்குப் போயிட்டு வந்து அப்படியே உக்கார்ந்தாச்சு! " என்றாள் லேசாகக் குறறம் சுமத்துவது போல்.
"இவ ஒருத்தி..!" என்று எழுந்து போய் கைகால் கழுவிக் கொண்டு வந்தான். "உள்ள வாங்க சார்..எவ்வளவு நேரம் வெளியிலேயே உட்கார்ந்திருப்பீங்க?" என்று இவனை இழுத்துக்கொண்டு உள்ளே போனான்.
சிறிய வீடு தான். ஆனால் நேர்த்தியாக இருந்தது. தரைக்கு ரெட் ஆக்சைடு பூசப்பட்டிருந்தது. பொருட்கள் எதுவும் எங்கும் கலைந்து கிடக்கவில்லை. டிவி மீது ஒரு ஃப்ளவர் வாஷில் சிவப்பு செம்பருத்திகள் பூத்துக் கிடந்தது. வாசலில் செம்பருத்தி மரம் இருந்தது நினைவு வந்தது.
"டீ போடவா?" என்றாள் பரசுவின் மனைவி.
"போடு...குடிச்சுட்டு கொஞ்சம் காலாற நடந்து போயிட்டு வரோம்.."
சுத்தமாகத் தேய்த்துப் பளபளவென்றிருந்த இரண்டு எவர்சில்வர் டம்ளர்களில் டீ வந்தது. அளவான டிகாக்ஷன்.. மிதமான சர்க்கரை. பொறுக்கும் சூடு…
செருப்பை மாட்டிக்கொண்டபோது பரமுவின் மனைவி, "வரும்போது கொஞ்சம் கொத்தமல்லி வாங்கிட்டு வாங்க.." என்றாள்.
எங்க போறோம்?" என்றான் இவன் தெருவில் இறங்கியதுமே.
"சும்மா தான் சார்.. கொஞ்சம் காலாற.."என்றான். ஆனால் சும்மா இல்லை என்று ஏதோ உணர்த்தியது.
"சார் ..கேக்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க...நீங்க கட்டிங் அடிக்கவே மாட்டீங்களா?" என்றான்.
"கட்டிங்கா?"
"அதான் சார்...விஸ்கி..பிராந்தி இப்படி.."
"சேச்சே..!"
"எப்படி சார் உங்களால இருக்க முடியுது? எனக்கு தினத்துக்கு கொஞ்சம் வேணும். அதுவும் கறி எடுக்கிற அன்னைக்குக் கட்டாயம் வேணும்.."
இப்போது புரிந்தது எதற்கு வெளியில் வந்திருக்கிறான் என்று.
"தப்பா எடுத்துக்கிடாதீங்க சார்..ஒரே ஒரு நிமிஷம்.." என்று பரமு எதிரிலிருந்த டாஸ்மாக் பாருக்குள் நுழைந்தபோது இவன் தெருவை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். ஒரு தள்ளுவண்டி பச்சைப் பசேல் என்று காய்கறிகளோடு வந்தது. பரமுவின் மனைவி கொத்தமல்லி கேட்டது நினைவுக்கு வந்தது. வண்டியை நிறுத்தி ஒரு கட்டு வாங்கவும் பரமு வாயைத்துடைத்தபடி வெளியே வரவும் சரியாக இருந்தது. "ஐயோ..நீங்க எதுக்கு சார் இதையெல்லாம் போய் வாங்கிக்கிட்டு..?" என்றான் லேசான குற்ற உணர்வோடு.
"இதுல என்ன இருக்கு பரமு...எங்க வீட்டுக்கும் நான் வாங்கறது பழக்கம் தான்" என்றான்.
நல்ல வெயிலடித்தது. பரமுவின் மீதிருந்து இப்போது வியர்வை வாடையோடு டாஸ்மாக் வாடையும் சேர்ந்து வந்தது.
"சார்..தப்பா எடுத்துக்கலேன்னா ஒரு சிகரெட் பிடிச்சுக்கறேன்.." என்றான். டாஸ்மாக் வாடையை சிகரெட் வாடை மறைத்துவிடும் என்று நினைக்கிறான் போலிருக்கிறது.
அவன் வில்ஸ் பில்டரை பற்ற வைத்தபோது "இப்படி பொண்டாட்டிக்கு பயந்துக்கிட்டாவது குடிக்கணுமா பரமு?" என்றான்.
சிரித்தான். "பயம்னு ஒண்ணுமில்ல சார். ஆனா எதுக்கு அதை வீணா கத்த வைக்கணும்னு தான்.."
"அவங்க நல்லது தான் சொல்றாங்க பரமு. கேட்கிறது உனக்கு நல்லது.." என்றான்.
"போங்க சார்.." என்றான். அந்த போங்க சாரிலேயே யார் சொல்வதையும் கேட்க நான் தயாராயில்லை என்ற தொனி இருந்தது.
•••
டைனிங் டேபிளில் நியூஸ் பேப்பர் விரித்து, அதற்கு மேல் வாழையிலை போட்டு பரமுவின் மனைவி நீட்டாகப் பரிமாறினாள். சுடச்சுட வெண்சோறு... அதன் தலையில் எண்ணெய் மிதக்கும் குழம்பு...பஞ்சு போல் மெத்தென்ற கறி..எச்சிலூற வைக்கும் மசாலாக்களின் வாசனை.! முட்டை ஆம்லெட். பப்படம். கொதிக்கக் கொதிக்க மிளகு ரசம். ஊரில் அம்மாவின் கைமணத்தில் உண்டது போல் மனதில் ஒரு பெருந்திருப்தி நிலவியது.
பரமுவின் மனைவி பரமுவைக் கொஞ்சம் கவலையோடே பார்த்துக் கொண்டிருந்தாள். அடித்த கட்டிங் தலைக்கு ஏறி விட்டது போல. அவனால் ஒரு நிலையாக இருக்க முடியவில்லை என்று புரிந்தது. சோற்றைக் களைந்து நாலாபுறமும் சிதறிக் கொண்டிருந்தான். கறி எது..எலும்பு எது என்று தெரியாமல் தடுமாறினான். கூடவே இவன் இருப்பது உணர்ந்து கொஞ்சம் வெட்கப்புன்னகை பூத்தான். "எனக்கு இப்படி சாப்பிட்டுத்தான் பழக்கம்..தப்பா எடுத்துக்காதீங்க சார்."
கைகழுவ எழுந்தபோது அவன் மனைவி செம்பில் நீர் சேந்திக் கொடுத்தாள். இவன் சாப்பிட்ட இலையை, கீழே விரித்த பேப்பரோடு லாவகமாய் சுருட்டி வாசலில் கொண்டு போய் போட்டாள். பரமுவின் இலை களேபரமாக இருந்தது. பேப்பருக்கு வெளியிலும் எலும்பும் தோலுமாக சிதறிக் கிடந்தது.
அவன் மனைவி ஒரு சிறு துடைப்பம் கொண்டு வந்து எல்லாவற்றையும் கூட்டிப் பெருக்கி இலையோடு சுருட்டி முறத்தில் ஏந்தி தன்மீது பட்டு விடாதபடிக்கு ஜாக்கிரதையாகக் கொண்டு போய் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்த போது பரமுவுக்கு ஏன் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்று விளங்குவது போல் இருந்தது.
இவனுக்கு வருத்தமாக இருந்தது.
பானுமதி கண்ணன்
No comments:
Post a Comment