Thursday, March 3, 2022

நிதர்சனங்கள்

 சிறுகதை: 

நிதர்சனங்கள்…

அப்பாவை மூன்றாம்கட்டில் போட்டபோது மனதுக்கு மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது. அப்பாவை அந்த நிலையில் பார்க்கவே சகிக்கவில்லை. எப்படி இருந்த அப்பா! 

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியொன்றின் சென்னைக்கிளையில் வேலை அவருக்கு. அந்த அலுவலகம் அன்றைய மவுண்ட் ரோடில் ஹிந்து அலுவலகத்துச் சற்றுத் தள்ளி இருந்தது. அப்பா பள்ளி வரை மட்டும் படித்தவர் தான். ஆனால் ஆங்கிலம் நன்றாகப் பேசுவார். அதனால் தான் அந்த ஆபீசில் அவருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். 

ஆங்கிலத்தில் பேசுபவர்களிடம் எந்தச் சிரமமும் இல்லாமல் அப்பா ஆங்கிலத்திலேயே பதில் சொல்வதைக்கேட்டு   அசந்து போயிருக்கிறேன். அப்பாவின் கையெழுத்தும் மிக அழகாக இருக்கும். தமிழும் சரி…ஆங்கிலமும் சரி.. அப்பாவின் கையெழுத்தைப் போல் வீட்டில் வேறு யாருக்கும் வரவில்லை என்பது தான் நிஜம்.

அப்பாவின் அலுவலகம் எட்டரைக்குத் தொடங்குமாம். டிபன் சாப்பிட்டு விட்டு வீட்டிலிருந்து ஏழரைக்குப் புறப்பட்டால் பஸ் பிடித்து சிம்சனில் இறங்கிக் கொள்வார் என்று சொல்வார்கள். அங்கிருந்து கொஞ்சம் நடந்தால் ஆபீஸ். கூவம் கடக்க வேண்டும். அப்பா சுலபமாகக் கடந்து கொண்டிருந்தார். காலப்போக்கில் அவருக்கு அந்த வாடை பிடித்துப் போயிருக்கலாம் அல்லது பழகிப் போயிருக்கலாம். தவிர்க்க முடியாதவைகளை ஏற்கப் பழகுவது தானே நல்லது..?

அப்பா ஒரு நாளும் மதிய உணவு எடுத்துக் கொண்டு போனதாக நினைவில்லை. "அப்பா எங்கேம்மா சாப்பிடுவார்?" என்று ஒரு முறை அம்மாவிடம் கேட்டதற்கு "ரோட் கிராஸ் பண்ணா அன்னபூர்ணா கேண்டீன் இருக்கு. அங்க சாப்பிட்டுக்குவார்.."  என்றாள் அம்மா. பிறகொரு சமயம் அதே அன்னபூர்ணா கேண்டீனுக்கு 

அம்மா அப்பாவுடன் நானும் போனது நினைவு இருக்கிறது.

ஆங்கிலம் பேசும் அப்பா மீது அம்மாவுக்கு பிரேமை இருக்கத்தான் செய்தது. ஆங்கிலம் பேசாவிட்டாலும் இருந்திருக்கக்கூடும். ஒவ்வொரு மாதமும் சம்பளக்கவரை கொண்டு வந்து அப்பா கொடுக்கும்போது அம்மாவின் முகம் மலர்ந்து மகிழ்வதைப் பார்த்திருக்கிறேன். அப்பா குடும்ப விஷயங்களில் அதிகம் தலையிட்டுக் கொள்ள மாட்டார்.  தன் கைச்செலவுக்குக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு மீதியை அம்மாவிடம் கொடுத்து விட்டாரானால் அவர் பொறுப்புத் தீர்ந்தது. அம்மாவின் மீது அத்தனை அதீத நம்பிக்கை அவருக்கு. 

அம்மாவை விடுத்து அப்பாவை நினைத்துப் பார்க்கவே முடியாது. படிக்காத மனைவி தான் என்றாலும் அப்படியொரு பிரேமை அவருக்கு அம்மாவின் மீது. கத்தரிக்காய் வாங்க மார்க்கெட்டுப் போவதாக இருந்தாலும் அம்மா கூடத் துணைக்கு வரவேண்டும் அவருக்கு.  

அம்மாவை விடுத்து அப்பா எந்த உறவினர் குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் போனதாக நினைவில்லை. அம்மாவின் தைரியமும் எவ்விதக் கூச்சமுமின்றி எந்த இடத்திலும்  புழங்கும் அவள் குணமும் அப்பாவுக்கு ஒரு  தற்காப்புக் கேடயமாக இருந்திருக்க வேண்டும். அம்மா உடனில்லாவிட்டால் ஒரு வேளை அவர் தன்னை‌ நிராயுதபாணியாக உணர்ந்திருக்கக்கூடும். அம்மாவுக்கும் அது தெரிந்தே இருந்தது. உள்மனதில் அதுவே அவளுக்கு ஒரு பெருமையாகவும் இருந்திருக்கக்கூடும்.

ஐம்பத்தெட்டு வயதில் அப்பா ரிடையராகி விட்டார். அவருக்குப் பென்ஷன் கிடையாது. ஆனால் கணிசமாக ஏதோ தொகையுடன் ரிடையரானார் என்று நினைவு. அதோடு அம்மா தன் சாமர்த்தியத்தால் கட்டிய வீட்டிலிருந்து வாடகை வருமானம் வேறு வந்து கொண்டிருந்தது. அதையும் அம்மாதான் நிர்வகித்தாள். குடும்பத்தின் தலைமகன் வேறு சம்பாதிக்கத் தொடங்கிருந்தான். அந்த வருமானமும் அவளைத்தான் சேர்ந்து கொண்டிருந்தது. அப்பா எதையும் கண்டு கொள்ளவில்லை. அவருடைய கைச்செலவுக்கு மட்டும் அம்மா ஏதாவது கொடுத்து விட்டால் போதும்.

சாயந்திரங்களில் வெளியே போனால் அப்பாவுக்கு ஓட்டலில்  காபி சாப்பிடும் பழக்கம் இருந்தது. சிலசமயம் காபியோடு ஒரு பிளேட் போண்டா அல்லது பஜ்ஜி. அப்பா தன்வரை எப்போதும் தன்னை நன்றாய்ப் பார்த்துக் கொண்டவர். காலையில் எட்டு  மணிக்கு டிபன் சாப்பிட்டால் பதினோரு மணிக்கு மறுபடி ஏதாவது சிறு தீனி உண்டு. குறைந்தபட்சம் ஒரு ‌முட்டை‌ ஆம்லெட். அல்லது ஒரு கோதுமை தோசை.

ஆனால் அப்பா படுக்கையில் விழுந்த பிறகு தான் நிலைமைகள் மாறியது. சட்டென்று ஒரு நாள் பாரிசம்  அவரைத் தாக்கியது. அவரால் சுயமாக  நிற்கவோ நடக்கவோ முடியவில்லை. எதையுமே சுயமாகச் செய்ய முடியவில்லை என்பது தான் நிஜம். 

டாக்டரிடம் காண்பித்து மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டதில் அப்பா சுவரைப் பிடித்துக்கொண்டு நகரத் தொடங்கினார். அப்பாவைப் அப்படிப் பார்க்க மனம் நொந்தது. அதுவும் கொஞ்ச நாள் தான். பிறகொரு சமயம் பாத்ரூமுக்கு அவரை தூக்கிக் கொண்டு போய் உட்கார வைக்க நேர்ந்த போது அப்பாவே நொந்து போனார். அவர் உடம்பு நடுங்கி அதிர்ந்தது. வியர்வையோடு கண்ணீரும் சேர்ந்து வந்தது.  "அழாதப்பா..அழாதப்பா.." என்றான். வேறு என்ன சொல்வது எனறு தெரியவில்லை.

நீட்டாக பேண்ட் சர்ட் அணிந்து ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியில் ஆங்கிலம் பேசி வேலை பார்த்துக் கொண்டிருந்த அப்பாவுக்கு இந்த நிலை வரும் என்று நினைத்தே பார்க்கவில்லை. அப்பாவின் பேண்ட் சர்ட்டுகள் எங்கே போனது என்று தெரியவில்லை. அப்பா வேட்டிக்கு மாறினார். கைவைத்த பனியன் அவருக்குப் பொருந்தவே இல்லை. ஏதோ ஆஸ்பத்திரி பேஷன்ட் போல்! 

அம்மாவின் போக்கிலும் சிறு வித்தியாசம் தெரியத் தொடங்கியது. பதினோரு மணிக்கு சிறுதீனி வராதபோது அவர் அம்மாவை கேள்விக்குறியோடு ஏறிட்டார். 

"ஆமாம்..ரெண்டு வேளை டிபன் சாப்பிட்டு மூணு வேளை கழிச்சா யார் அள்றது?" என்றாள் அம்மா. அப்பாவோடு சுகித்து அத்தனை பெற்ற அம்மா இப்படிப் பேசியது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 

சர்க்கரை நோய் வேறு இருந்ததில் அப்பாவுக்கு அடிக்கடி சிறுநீர் வந்து கொண்டிருந்தது. அதோடு வயிற்றுப்போக்கும் சேர்ந்து கொள்ள பெட்ரூம் நாற்றமடிக்கத் துவங்கியது. வயிறு குமட்டும் அந்த வாடை பொறுப்பதற்குக் கஷ்டமாகத்தான் இருந்தது.

அம்மா சொன்னாள். "இங்கே வெச்சு இவரைச் சீராட்டுறது இனியும் கஷ்டம். மூணாம்கட்டிலே படுக்க வெச்சுடலாம்.  அங்கேயே கழியட்டும். அள்ளிப் போட்டு சுத்தம் பண்றதுக்கு ஈசி."

மூன்றாம் கட்டு என்பது சமையலறையை ஒட்டிய இடம்.

வீட்டின் கடைக்கோடி. சமையல் முடிந்தது என்றால் ஆள் நடமாட்டம் அற்றுப் போகும் இடம். அதற்குப்பிறகு எலிகள் தாராளமாகப் புழங்கத் தெடங்கும். அதைப் பிடிக்கப் பூனையும். 

"மூணாம்கட்டிலே வெளிச்சம் காத்து கம்மி. அங்கே எப்படி அப்பாவைப் படுக்கப் போடறது?"  என்றான் இவன்.

"அப்போ நடுக்கூடத்திலே படுக்க வைக்கலாம்ங்கிறியா?" என்றாள் அம்மா. சட்டென்று அவள் அப்படிச் சொன்னது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

"இல்லம்மா..மூணாம்கட்டில் ஆள் நடமாட்டம் கம்மி. ராத்திரியில் அப்பாவுக்குப் பயமா இருக்கும்ல?" என்றான்.

அம்மா இவனை முறைத்துப் பார்த்தாள். "நீ வேணா அவருக்குத் துணைக்குப் போய்ப் படுத்துக்கிறயா?" என்றாள். 

"பாரு..அப்பா ஒரு நாளுக்கு மூணு வேளை கழியறார். 

 மணலை அள்ளிப்போட்டு கழுவித்தள்ள மூன்றாம்கட்டு தான் வசதி" என்றாள் அம்மா. அங்கு கழுவுகிற நீர் வடிகால் மூலம் தோட்டத்து மரங்களை சென்றடையும். அம்மாவுக்கு அது சரி என்று பட்டிருக்கிறது. 

அப்பாவின் கழிவுகளை அள்ளும் வேலையை வீட்டில் வளர்ந்து கொண்டிருந்த தூரத்து உறவு  சிறுபெண் தான் செய்து கொண்டிருந்தார்கள். பத்து வயதுதான் இருக்கும் அவளுக்கு. படிப்பு ஏறவில்லை. ஆனால் அப்பாவின் கழிவுகளை சுலபமாக அள்ளிப்போட்டு விட்டு சிரித்துக் கொண்டே நகர்வாள்.  அதற்கு அவ்வப்போது அம்மா கொடுக்கும் நாலணா அவளை ஆயத்தப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் தன்னை‌ மூன்றாமகட்டில் போட்டது அப்பாவுக்குப் பிடிக்கவே இல்லை என்று இவனுக்குத் தோன்றியது. இவன் அந்த இடத்தைக் கடக்கிறபோது எல்லாம் அப்பா படுத்தவாக்கிலேயே இவனை நோக்கிக் கையை நீட்டுவார். "என்னப்பா?" என்று கேட்டால் பதில் சொல்ல வாய் ஒத்துழைக்காது. "இந்த இடம் பிடிக்கலையா?"  என்று கேட்டால் ஆமாம் என்பது போல் தலையை அசைப்பார். கண்ணிலிருந்து நீர் வழியும்.  "ஹாலில் படுத்துக்கிறயா?" என்றபோது அவர் கண்ணிலிருந்து ஒரு ஒளி வீசியது போல் இருந்தது. 

"அப்பாவுக்கு ராத்திரில அங்க தனியாப் படுக்க பயமா இருக்கு போலருக்கு மா..அவரை ஹாலுக்கு மாத்திடலாமே..? சுத்தி நாலு மனுஷங்க நடமாடறது அவருக்கும் கொஞ்சம் தெம்பாயிருக்கும்.." என்று அவன் சொன்னபோது அம்மா இவனை எரிப்பது போல் பார்த்தாள்.

"அது எனக்குத் தெரியாதா.. ஆனா ஹாலிலே அவர் பேண்டு வெச்சா பொழுதுக்கும் அதை சுவாசிப்பது யாரு?

வீட்டுல ஏழு ஜீவன் இருக்கோம்…அவங்க நிலை என்ன..?" என்றாள்.

ஆனால் அப்பாவின் பரிதாபப்பார்வை மட்டும் இவன் நெஞ்சிலேயே நின்று போனது.

அப்பாவின் வெள்ளை வேஷ்டி பழுப்பு நிறமாகிறவரை அப்பா உயிரோடு இருந்தார். பிறகொரு நாள் செத்துப் போனார். அம்மா அழுதது கொஞ்சம் பொருந்தாதது போல் இருந்தது.  சிறுநீர், மலத்தின் நாற்றங்கள் அற்று காற்று சுத்தமாக வீசத் தொடங்கிய போது அம்மாவும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு விட்டாள். 

•••

"நேத்திக்கு உங்கப்பா என் கனவிலே வந்தார்..!" என்றாள் அம்மா சிலநாட்கள் கழித்து. 

"அப்படியா!? என்ன சொன்னார்? என்றான்.

"என்னைக் கூப்பிடறார்!" என்றாள்.

"என்னையா?"

"ஆமாம். கேட்டுக்கு அந்தப்புறம் ரோட்டில் ஒரு ரிக்ஷாவில்  உட்கார்ந்திருக்கார்!  என்னைப்பார்த்து வா..வா..ன்னு கூப்பிடறார்..! கடைக்கு எல்லாம் ரெண்டு பேரும் சேர்ந்து போனாப்போல இப்பவும் நான் அவர் கூட இருக்கணும்னு நினைக்கிறார் போலருக்கு!" என்றாள்‌ அம்மா.


"நீ என்ன சொன்னேம்மா?"

"என்ன சொல்லறது? அவருக்காக நானும் செத்துப்போக முடியுமா? வரமுடியாது போன்னு சொல்லிட்டேன்!"

என்றாள்.

அம்மா வேறுமாதிரி சொல்லியிருந்தால் தான் ஆச்சரியம் என்று தோன்றிற்று.

•••

By: Bhanumathy kannan

No comments:

Post a Comment