எண்ணப்பறவை_33
அவர்களை அனுப்பியதிலிருந்து கணபதி சுந்தரத்திற்கு பல விதமான குழப்பங்கள்.
'ஒருவேளை அமுதாவும் அரவிந்தும்....:
'ஏன் திடுதிப்புனு அரவிந்த் ஆத்துக்கு வரணும்?'
'அவன் வந்துட்டு போன ரெண்டு நாளுல ஏன் அவ அம்மா வந்து பேசணும்?'
'ப்ரியா ஏன் ஆஃபீஸ் போகாம இந்த மாமியோடு வரணும்? ஏன் குறிப்பா அந்த பொண்ணு அமுதாவ அரவிந்துக்கு கேட்கணும்.'
'ஏன் அமுதா என்கிட்டேயும் குமுதாகிட்டேயும் மறைக்கணும்? ஒண்ணுமே நடக்காத மாதிரி நடிக்கணும்.'
'பொண்கள் மேல எவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தேன். இப்படி பண்ணிட்டாளே அமுதா.'
'அப்படி என்ன என் பேர்ல அமுதாவுக்கு அவநம்பிக்கை. குமுதாவுக்கு லேட் ஆகறத ஒருவேளை பொறுக்க முடியலையா? இப்படியா ஒரு பொண் ஸெல்ஃபிஷா இருப்பா? அதுவும் நம்ம அமுதா! என்ன குறை வெச்சோம் அவளுக்கு.'
'அமுதாக்கு முன்னாடி கல்யாணமானா குமுதாக்கு எப்படி கல்யாணம் ஆகும்? பொண் பார்க்க வரவா ரெண்டாவது பொண் லக்ஷணத்த கேள்விப் பட்டா குடும்பத்த பத்தி என்ன நினைப்பா? இன்னும்தானே லேட்டாகும் குமுதா கல்யாணம்? இதையெல்லாம் யோசிக்காமயா ஒரு பொண்ணு இருப்பா?'
கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் கலக்கம், கொஞ்சம் பயம், கொஞ்சம் எரிச்சல், கோபம்...
'அம்மாவும் இல்ல. நானும் திருச்சில இருக்கேன். அதான் ரொம்ப துளிர் விட்டுப்போச்சு இந்த அமுதாவுக்கு.'
உள்ளே நுழையும்போதே அப்பாவின் சோர்ந்த முகத்தைப் பார்க்கிறாள் குமுதா.
'என்னப்பா கண்ணெல்லாம் கலங்கின மாதிரி இருக்கே?'
'ஒண்ணுமில்ல. ஒண்ணுமில்ல. நீ உள்ள வா? காப்பி கீப்பி சாப்பிடு முதல்ல.'
என்னவோ என்று புரிந்து கொண்டாள். ஆனால் என்னவென்றுதான் புரியவில்லை அவளுக்கு.
தன்னை ஆஸ்வாசப் படுத்திக் கொள்ள பாத்ரூம் செல்கிறார். தன் முகபாவ மாற்றத்தை சற்று தண்ணீர் விட்டு மாற்ற முயற்சிக்கிறார். முகத்தை துடைத்துக் கொண்டு வெளியே வருவதற்கும் கலந்த காஃபியை ஹாலுக்கு குமுதா எடுத்துக் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது.
'அது எப்போ வரும் ஆஃபீஸ்லேந்து?'
'அது' என்று அப்பா அமுதாவை குறித்து கேட்டதில் குமுதாவுக்கு ஆச்சர்யம்.
'அவ தான் சொல்லிட்டு போனாளே அப்பா கார்த்தாலேயே. வரதுக்கு ஏழு மணிக்கு மேல ஆகும்னு. மறந்து போச்சா.'
'ஆமாம். ஊர சுத்திட்டு வரதுக்கு ஆஃபீஸ் வேல ஒரு சாக்கு.'
'அப்பாஆஆஆஆ. என்ன பேசரேள் நீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு இன்னிக்கு?'
'அவ பண்ணிய காரியத்த கேட்டா அவ வந்தோண்ண செவுள்ல அறைவ. வரட்டும் பார்த்துக்கறேன் அவள ஒரு கை. செல்லம் கொடுத்தா என்ன வேணா பண்ணலாம்னு நெனச்சுட்டாளா அவ. எல்லாம் வேலை பார்க்கிற திமிரு.'
'அப்பாஆஆஆஆ. என்ன ஆச்சு உங்களுக்கு. முதல்ல இந்த காஃபிய குடிங்கோ. நிதானமா பேசலாம் எதுவானாலும்.'
சூடான காஃபி உள்ளே போனதும் அமைதியாக அவர்கள் இருவரும் பேசியதை குமுதாவிடம் சொல்கிறார். குறுக்கீடு எதுவும் இல்லாமல் கேட்டுக் கொள்கிறாள் குமுதா.
'அப்பா, இதுக்காகவா இவ்வளவு வருத்தம் கோபம் எல்லாம்? இப்ப என்ன நடந்துடுத்து? ஏன் நம்ம அமுது குட்டி மேல இவ்வளவு சந்தேகம்?'
'என்ன குமுதா, இவ்வளவு நடந்திருக்கு? உன்ன பத்தி அவ கவலப் படல. ஆத்து கௌரவத்த பத்தி அவ யோசிக்கல. எல்லாமே ப்ளான் பண்ணி அவ செய்யற மாதிரி இருக்கு. என் சந்தேகத்துல ஞாயம் இல்லைனா சொல்ற?'
'அப்பா அன்னிக்கே இத பத்தி நாம ரெண்டு பேரும் பேசினோம். அப்பவே சொன்னேன் உங்க கிட்ட. அமுது குட்டிக்கு பிடிச்சிருந்தா அவனையே பண்ணி வைப்போமே. இதுல என்ன இருக்கு? எனக்கு சந்தோஷமே தவிர துளி கூட பொறாமையோ வருத்தமோ இல்ல.'
'இருந்தாலும் உனக்கு அசாத்ய பரந்த மனப்பான்மை டி. நம்ம கிட்ட இதப் பத்தி மூச்சு விடாம அமுக்கமா இருந்து அவ தன்னோட சுகத்த மாத்ரம் பார்த்துக்கறது உனக்கு தப்பா தோணவே இல்லையா?'
'எனக்கென்னவோ நீங்களா ஏதேதோ கற்பனை செஞ்சிண்டு குழப்பிக்கறேள்னுதான் தோணறது. என்னோடையே அவ இருக்கா. இப்படியும் அப்படியும் இருந்தா எனக்கு இத்தன நேரம் தெரிஞ்சிருக்கும்பா. அவ என்ன மாதிரி இல்ல. லொட லொடா. என் கிட்ட அப்படி ஏதாவது லவ் கிவ்வுனா மறச்சிருக்க மாட்டா. அவன அவளுக்கு பிடிச்சிருக்கலாம். அதுக்காக ஏதோ அவனோட ஊர் சுத்தரமாதிரி நீங்க கற்பனை பண்றது வேடிக்கையா இருக்கு.'
'ஆமாம்டி. நீ வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனைக்கிற. வரட்டும் அவ. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு கேட்டுடறேன். அப்ப அவ வண்டவாளம் தெரிஞ்சுடப் போறது.'
'அப்பா, நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கோ. சரி, நீங்க சொல்றபடியே வெச்சிப்போம். அந்த பையன் பார்க்க லக்ஷணமா இருக்கான். அவன் வந்துட்டு போனோன்ன உங்களுக்கே என்ன தோணித்து. அவன் மாப்பிள்ளையா வந்தா நன்னா இருக்குமேன்னு தோணலையா? உனக்கு புடிச்சிருக்கான்னு என்னையே கேட்கல? இப்ப என்ன குடி முழுகிப் போச்சு. எனக்கு பதிலா அமுது குட்டி. அவ்வளவுதானே? அவா ஒருத்தருக்கொருத்தர் பிடிச்சிருந்தா பண்ணிக் கொடுக்கலாமே. அந்த பையனுக்கும் நம்மாத்த பத்தி நல்ல அபிப்ராயம் விழுந்திருக்கும். அவனோட அம்மாவை அனுப்பிச்சிருக்கான். இதெல்லாம் வெச்சு பார்க்கும் போது நல்ல பையனாதான் எனக்கு படறது. அமுதாவுக்கே முடிச்சிடுங்கோ பேசாம. இதுல எனக்கு பரிபூரண சம்மதம். நல்ல வரன நீங்களே கெடுத்துடாங்கோ அமுது குட்டியோடு சண்ட போட்டு.'
'அப்ப உன் கல்யாணம்? ஏற்கனவே தள்ளி போயிண்டிருக்கு. உன் கல்யாணத்துக்கு மாத்திரம் தான் என் கிட்ட ஓரளவு பணம் இருக்கு. அதுக்கே தேவைப் பட்டா கடன உடன வாங்கணும். அவ கல்யாணத்த நான் இப்ப முடிச்சிட்டா உன் கல்யாணத்துக்கு எங்க போவேன் சொல்லு. ஆச்சு இன்னும் ரெண்டு வருஷத்துல ரிடைர்மெண்ட் பணம் வந்தோண்ண அவ கல்யாணத்த பண்ணலாம் உன் கல்யாணத்த முடிச்சிட்டுன்னு கணக்கு போட்டுண்டு இருந்தேன். எல்லாத்துலேயும் மண்ண அள்ளி அவ போடற மாதிரி இருக்கு. பெத்தவனுக்கு தாண்டி தெரியும் எத எத எப்போ நடத்தணும்னு.'
'பார்த்தேளா பார்த்தேளா. உங்க கோபத்த கொஞ்சம் கொறச்சிக்கோங்கோப்பா. அமுது செல்லத்த கோச்சுக்காதீங்கோப்பா. அவளுக்கும் நம்மள விட்டா யார் இருக்கா சொல்லுங்கோ. ஏதோ ஆசைப் பட்டுட்டாள்னே வெச்சுக்கோங்கோ. நல்ல வரனாத்தானே தெரியறது. முடிச்சுடலாம்ப்பா.'
'எல்லாம் அந்த பயதான் அவ மனச கெடுத்துருக்கான். பார்த்தான் கவர்ன்மெண்ட் உத்யோகம், அழகா வேற இருக்காளா. அதான் அவனும் அவ அம்மாவும் வளச்சுப் போட்டுட்டா.'
'அப்ப்ப்பாஆஆ. எப்படியெல்லாம் உங்க கற்பனை போறது. ப்ரியா பேசும்போது அவனோட அம்மா உங்க பக்கம் உள்ள ஞாயத்தையும் பார்த்ததாக நீங்க தானே சொன்னேள். அதுக்குள்ள அவாள போய் தப்பா பேசறேளே. நேத்தி வரைக்கும் அவன நல்ல பையன்னு சொல்லிட்டு இன்னிக்கு அந்தர் பல்டி அடிக்கிறேளே. உங்க ஆதங்கம் புரியறது. என்ன, எனக்கு கல்யாணமாகாம அவளுக்கு பண்றதுல உங்களுக்கு விருப்பம் இல்ல. அதானே. பேசுவோம்பா. அமுதாவ முன்னாடி கேட்போம். அப்புறம் அவா கிட்டேயும் சொல்லிப் பார்ப்போம். நம்ம குடும்ப கஷ்டத்தையும் சொல்லுவோம். ரெண்டு கல்யாணம் பண்ற அளவு வசதி இல்லைனு சொல்லிப் பார்ப்போமே. எதுக்கு இப்பவே இப்படி அதீத கற்பனை?'
'பேசி, ஒரு வேளை அந்த பையனோட அம்மா உன்ன பண்ணிக்கறான்னா உனக்கு ஓகே தானே?'
'நீங்க சரியான பச்ச குழந்தப்பா. ஒருவேளை அமுது குட்டி மனசுல அவன் இருந்து நான் பண்ணிண்டேன்னா நன்னாவா இருக்கும்? பொறுமையா ஹாண்டில் பண்ணுவோம்பா.'
'ஏண்டி, அவனோ குஜராத் அது இதுங்கறான். அப்படி இருந்தா அமுதா வேலைய விடணும். ரெண்டு பேரா வேல பார்த்தாதானே இப்பெல்லாம் குடும்பத்த நன்னா கொண்டு போக முடியறது.'
'ஏம்ப்பா, நானும்தானே அப்படின்னா வேலைய விடும்படியா இருக்கும். அப்ப பரவாயில்லையா?'
'என் வாய அடக்கறதுக்காக எனக்கு மடக்கா பேசாத
அவ உத்யோகமும் உன்னோட சொற்ப சம்பளமும் ஒண்ணா? அம்மா போனதுலேந்து பல காரணங்களால நீ சரியான வேலைக்கு போக முடியல. அம்மா ஸ்தானமாவே குடும்பத்த பார்த்துக்க வேண்டிய நிர்பந்தம்.'
'இப்ப நான் என்னதான் செய்யணுங்கற?'
'அப்படி வாங்கோ வழிக்கு. நான் நம்ம செல்ல குட்டியோட பேசி அவ மனச புரிஞ்சுக்கறேன். அதுக்குள்ள நீங்க அந்த விசு மாமா சொன்ன திருக்காட்டுப் பள்ளி ஜாதகம் என்ன ஏதுன்னு பாருங்கோ. அது ஒருவேளை எனக்கு முடிஞ்சுதுன்னா பாதி சிக்கல் தீர்ந்து போயிடும் இல்லையா?'
அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவருடைய கோபத்தை தணித்துக் கொண்டிருந்தது. குமுதா அம்மாவே அவரைத் தேற்றிய ஒரு உணர்வு.
'அப்படின்னா, இன்னிக்கே கிளம்பறேன் திருச்சிக்கு.'
'இன்னிக்கேவா?'
'ஆமாண்டி. லீவுல இருக்கும் போதே விசு மாமா மூலமா என்ன ஏதுன்னு பார்க்கறேன் அமுதா. இருந்தாலும் என் மனசு என்னவோ அரை மனசாதான் இருக்கு.'
'மனசு தானப்பா. நாளாவட்டத்தில அதுவே அதுக்கு ஆறுதல கொடுத்துக்கும்.'
'ரெண்டு கல்யாணத்துக்கு பணத்துக்கு எங்கடி போவேன்?'
'திருப்பியும் முதல்லேந்தா. நேரம்னு ஒண்ணு வந்துட்டா கொட்டிடும் அப்பா கூரைய பிச்சிண்டு. துவண்டு போகாதீங்கோ. எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் செய்யணும். நீங்க எதுவும் நம்ம செல்லத்துக்கிட்ட வாய திறக்கப்படாது. சொல்லிட்டேன். அப்படி வாய தொறந்தேள், எனக்கு கல்யாணமே வேண்டாம். சொல்லிட்டேன். அப்புறம் வருத்தப் படக் கூடாது.'
'சரிடி அம்மா. அப்பெல்லாம் உங்க அம்மா கிட்ட பும்பும் மாடாட்டம் தலையாட்டினேன். இப்ப உன் கிட்ட. அவ்வளவுதான்'
பேசிக் கொண்டிருக்கும்போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.
'அமுதான்னு நினைக்கிறேன். நீங்க நார்மலா இருங்கோ. கதவை தொறக்கறேன்.'
கதவைத் திறந்தாள்.
'வாங்கோ வாங்கோ. எப்படி இருக்கேள்? அமுதா ஆஃபீஸ்லேந்து வரதுக்கு லேட்டாகும்னு சொல்லிட்டு போனா? நீங்க வாங்கோ உள்ள'
தொடரும்.....
No comments:
Post a Comment