Sunday, March 6, 2022

திருப்பதி முதல் திருமலை பகுதி 9

 🌹🙏திருப்பதி முதல் 🏞திருமலை வரை...ஒரு விரிவான 🚐பயணத்தொகுப்பு

By சுஜாதா &வெங்கடேசன்

பகுதி 9 ஶ்ரீனிவாச மங்காபுரம் 

ஓட்டல்ல இட்லி பூரி சாப்ட்டுட்டு ஆட்டோல ஶ்ரீனிவாசம் வரோம். 

ராத்திரி கனால தசாவதாரம் ரீல் ஓட….

கார்த்தால மீதி ரெண்டு கோயில் சேவிச்சு அலமேலு மங்காபுரம் போக ஆட்டோ பேசறார்…

திருப்பதியை சுத்தி நெறைய பெருமாள் கோயில் தரிசனம் பண்ணதா சொல்றாளே.  இப்ப எங்க போறோம் அதைப்பத்தி சொல்லுங்கோங்கறேன். 

அதே மாதிரி இன்னொரு சந்தேகம் ...

பெரும்பாலானோருக்கு இருக்கும். பொதுவாக நாம் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும். ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி?

இவர் சொல்ல ஆரம்பிக்கறார்...

,திருப்பதி, வெங்கடேஸ்வர பெருமாளின் ஊர். 

திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஊர்.

பெருமாள் தாயாரைப் பார்க்க திருச்சானூருக்கு வந்தார். அதனால் அங்கு பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. 

ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் நாராயண வனம். இங்கு பெருமாளும், தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர்.

நாம இப்போ சீனிவாச மங்காபுரமும் சந்திர கிரியும் போய்ட்டு அலமேலு மங்காபுரம் போறோம்கறார் 

ஆட்டோ சீனிவாச மங்காபுரத்துல போய் நிக்கறது. 

சீனிவாசமங்காபுரம் திருத்தலத்தில் கல்யாண வேங்கடேசப் பெருமாள் அருளாட்சி புரியறார்.   தனக்கு திருமணம் நடந்த நாராயண வனத்தில் 5 அடி உயரத்தில் பால்ய வடிவிலும், சீனிவாசமங்காபுரத்தில் 8 அடி உயரத்தில் கம்பீரமாக யௌவன பருவத்திலும், திருமலையில் 6அடி உயரத்தில் சம்சாரக் கோலத்திலும் பெருமாள் காட்சி தருகிறார். *இம் மூன்று மூர்த்திகளும் சீனிவாசப் பெருமாளின் ஒரே வடிவங்களே *

என்பது குறிப்பிடத்தக்கது. 1540ல் அருகிலுள்ள கல்யாணி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது ஆலயம் நலிவடைந்தது. 

மூலவர் சந்நதி புற்றால் மூடப்பட்டது. பின்னாளில் சிறிய அளவில் பூஜை செய்யப்பட்டு வந்தது. 1967ல் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இக்கோயில் வந்தது. அதன்பின் கோயில் சீர்படுத்தப்பட்டு பூஜைகள் முறையாக நடக்க ஆரம்பித்தன.

கருவறையில் பெருமாள் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். நடுநாயகமாக சீனிவாசப் பெருமாளாக நின்ற கோலத்திலும், வலப்புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த கோலத்திலும், இடப்புறம் ரங்கநாதராக சயன கோலத்திலும் பெருமாள் இருப்பது இத்தலத்தின் மிகப்பெரிய 

சிறப்பம்சம். 

சந்நதி எதிரில் கருடாழ்வார் பெருமாளை வணங்கிய நிலையில் இருக்கிறார். திருமலை சீனிவாசப் பெருமாளுக்கும், சந்திரகிரி மன்னன் ஆகாசராஜனின் மகள் பத்மாவதிக்கும் நாராயண வனத்தில் (திருப்பதியில் இருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள புத்தூர்) திருமணம் நடந்தது. 

பின்னர் மணமக்கள் வேங்கடமலைக்குச் செல்லும் வழியில் அகத்தியர் ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அவர்களுக்கு அகத்தியர் விருந்தளித்தார். திருமணமான தம்பதிகள் ஆறு மாதம் மலையேறக் கூடாது என்ற அகத்தியரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட சீனிவாசன் அங்கேயே தங்க சம்மதித்தார். பெருமாளும் பத்மாவதியும் தேனிலவு கொண்டாடிய அத்தலம் பின்னாளில் கோயிலாக அமைந்தது…

குறிப்புகள்

ஏழு தலை கொண்ட ஆதிசேஷன்:

ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் ஏழு தலைகளை கொண்டுதான் காட்சி தருகின்றார். பிரம்மோற்சவத்தின் போது வெங்கடேசன் ‘பெத்தசேஷ வாகனம்’ என்ற ஏழு தலை நாக வாகனத்தில் தான் வீதி உலா வருகின்றார்.

திருப்பதியில் அவசியம் தரிசிக்க வேண்டிய இடங்கள் ஏழு:

கோவிந்தராஜர் சன்னிதி, பூவராக சாமி சந்நிதி, திருச்சானூர் கோவில், ஸ்ரீபேடி ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீவாரி சிகர தரிசனம், சிலோதோரண பாறைகள், ஸ்ரீவாரி பாதள மண்டப கோவில்.




No comments:

Post a Comment