Saturday, March 5, 2022

திருப்பதி முதல் திருமலை வரை பகுதி 8

திருப்பதி முதல் திருமலை வரை...ஒரு விரிவான 🚐பயணத்தொகுப்பு

By சுஜாதா &வெங்கடேசன்

பகுதி 8 மஞ்சி நீள்ள குண்டா

கிருமி கண்ட சோழன்

 சிதம்பரம் கோவிந்தராஜரைக் கடலில் போட்ட  சமாச்சாரத்தை உலகத்தார் அனைவரும் அறியும் வண்ணம்  'இறை நம்பிக்கை இல்லாதவர்'  சினிமா எடுத்துக்  காமிச்சது லேசில் மறக்கக்கூடியதா?  பெருமாளும் தானும் ஒன்னு என்றதைப்போல அதுலே பத்து அவதாரங்கள் வேற! போகட்டும்........  பெருமாள் இல்லைன்னு சொல்றவாளுக்குதான்  எப்பவும் அவர் நினைப்பு

சிதம்பரம் பெருமாள் திருப்பதி வந்த கதை:

சிதம்பரம் தில்லைக் கோவிந்தராஜப்பெருமாள் திருப்பதிக்கு வந்து கோவில் கொண்டு அந்த ஊர் இன்றைய திருப்பதி நகரம் ஏற்படுவதற்கு முன் கோவிந்தராஜ பட்டணம் என்று அழைக்கப் பட்டிருந்த காலகட்டங்களின் கதை இது.கீழே படத்தில் இருக்கும் இவர்தான் அந்தச்சிதம்பரம் கோவிலில் இருந்த மூலமூர்த்தி. சாக்ஷாத் இராமானுஜரால் சிதம்பரம் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.  

கிருமி கண்ட சோழன் என்ற சைவ மன்னரால்  பெயர்த்து வெளியே எறியப்பட்ட பின் இவரைத் திருப்பதி மலை அடிவாரத்தில் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்ய எண்ணி, பிறகு விக்கிரகத்தின் மூக்கும் விரல் நுனியும் பின்னப் பட்டுப்போனதால் அங்கேயுள்ள "மஞ்சி நீள்ள குண்டா"

என்ற குளத்தில் எழுந்தருளப் படுத்திவிட்டு, அதன் பிறகு அதே போன்று வேறு ஒரு சுதை விக்கிரகம் இன்றைய கபில தீர்த்தம்  அன்றைய ஆழ்வார் தீர்த்தம் எனப்படும் கோவில் அருகே இருந்த மற்றோர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  இன்று அந்தக் கோவில் இல்லை.  கோவிந்தராஜப் பட்டணமும் இல்லை.

 மறுபடியும் பல்லாண்டுகள் கழித்து வேறு ஒரு கோவிலும் வேறு கோவிந்தராஜப் பெருமாளும் எழுந்தருளப் பட்டு இன்று இருக்கும் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோவிலாக இருக்கிறது.  

இந்தக் கதை கேள்விப்பட்டதுதான். ஆனால் இந்த மூர்த்தியை அப்போத. பலரால்  தரிசிக்க இயலவில்லை.  ஏனென்றால் அத்தி வரதரைப் போல இவரும் குளத்தின் நடுவே இடப்பட்டிருந்தது தான். இடிபாடான பழைய கோவிலையும் இன்றைய திருமலா பைபாஸ் ரோடாக இருக்கும் இடத்தில் பார்த்திருக்கலாம் .  

பல வருடங்கள் கழித்து அதே குளக்கரையோரம் ஓர் மரத்தடியில் மரத்தோடு மரமாக இவர் எழுந்தருளி இருப்பதைக் கண்டு சில உள்ளூர் பக்தர்கள் இந்தக் கோலத்தில் இப்பொழுது இப்பெருமாளைச் சேவை சாதிக்கப் பண்ணியிருக்கிறார்கள்.  இது தசாவதாரம் கமல் சினிமாவில் காட்டப்படும் அதே கதைதான்.

 அடுத்த முறை திருப்பதி செல்லும் போது இந்த "நன்னீர்க்குளம்" என்று பொருள்படும் "மஞ்சி நீள்ள குண்ட்டா" வுக்குச் சென்று மரத்தைக் கையிலேயே தூக்கி நிறுத்தியபடி காட்சியளிக்கும் இந்த மிகப்பழைய சாளக்கிராமச் சிலையான பெருமாளைத் தரிசிக்க வேண்டும். ஓம் நமோ நாராயணாய….

கோவிந்தராஜர் சன்னதியிலேர்ந்து வெளியே வந்து அகோபிலமடம் நரசிம்மரைதரிசனம் பண்றோம். பட்டர் மாமா மதுராந்தகமாம்..தமிழ் பேசறார். 

பக்கத்து ஓட்டல்ல இட்லி பூரி சாப்ட்டுட்டு ஆட்டோல ஶ்ரீனிவாசம் வரோம்….

ராத்திரி கனால தசாவதாரம் ரீல் ஓடறது. 

திடீர்னு இவர் ரங்கராஜ நம்பியா மாறி சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனிடம் கர்வம் தவிர்க்க சொல்" னு சொல்றார்..

இவரை கட்டி தொங்க விட்டுண்டே நெப்போலியன் இவரப்பாத்து நம சிவாய ன்னு சொல்ல சொல்றார். 

இவர் நான் ரங்கராஜ நம்பி இல்லை. இதோ சொல்றேன் ஓம் நமசிவாயன்னு அலற அலற நெப்போலியன் இவரை பெருமாளோட கட்டி கடல்ல போட நான் அசினா மாறி நமோ நாராயணான்னு கத்தறேன். சுனாமி பொங்கி ரெண்டு பேரையும் இழுக்கறது. அலறிண்டு எழுந்து பார்த்தா இவர் குளிர்ல என் போர்வையையும் இழுத்து போர்த்துண்டு குறட்டை விட்டுண்டு தூங்கிண்டு இருக்கார்…

குறிப்புகள் 

4)பெருமாளுக்குப் பின்னால் கடல் : பெருமாளின் சிலை பின்புறம் உள்ள சுவற்றில் காதை வைத்துக்கேட்டால் கடல் அலை சத்தம் கேட்பதாகக் கூறப்படுகிறது. எனவே அவர் பாற்க்கடலில் இருப்பது போன்ற அமைப்பு கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாக நம்பப்படுகிறது…

ஏழு தீர்த்தங்கள்:

குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஸ்வாமி புஷ்கரணி

பெருமாளின் ஏழு பெயர்கள்:

பாலாஜி, சீனிவாசன், வெங்கடேஸ்வரன், ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருமால், திருவேங்கடநாதன்.




No comments:

Post a Comment