இமயத்தின் மீது மலர்ந்து கிடக்கிறது சிக்கிம், கேங்டாக்கின் குளிர்ந்த காற்றையும், இதமான மனிதர்களையும் விட்டுப் பிரிய மனமின்றித் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வருகிறேன். வெகுநேரமாக வெண்பசுமை நிறத்தில் நிலத்தில் கிடக்கிற அழியாத கோலமாகக் கூடவே வருகிறது டீஸ்ட்டா நதி.
இமயத்தின் எட்டமுடியாத உயரங்களில் நம் கண்களுக்குப் புலப்படாத எல்லாவற்றையும் கீழே கொண்டுவந்து காட்சிப்படுத்துகிற பிரம்மாண்ட நதி டீஸ்ட்டா, இசை கேட்பதற்கு இதைவிடவும் என்ன பொருத்தமான நேரமிருக்கும், எஸ்.ரா பிராங்பர்ட்டின் வானூர்தி நிலையத்தில் யாரோ ராஜாவின் இசை கேட்டதைக் குறித்துப் பேசியது நினைவுக்கு வந்தது.
கேங்டடாக்கின் பெயர் தெரியாத தெருக்களில் பனிசூழ்ந்திருந்த அதிகாலையில் நான் ராஜாவின் இசையைத் தெளித்தபடி நடந்தேன், அந்த இசை குளிர்காற்றின் கிளைகளைப் பற்றியபடி மேலேறி டீஸ்டாவில் கலந்திருக்க வேண்டும், கரையெங்கும் வண்ண மலர்களைப் பரப்பியபடி அது ஆடிக்களிக்கிறது.
கண்களை மூடிக்கொண்டால் இந்தப் பாடல் ஒலிக்கிறது, இந்தப் பாடலை எப்போது கேட்டு முடித்தாலும் கொஞ்ச நேரம் எந்த இசையையும் கேட்காமல் ஏகாந்த மௌனத்தில் கலந்திருக்கப் பிடிக்கும் எனக்கு, இந்தப் பாடல் தருகிற உணர்வை எப்படி விவரிப்பதென்று உறுதியாகத் தெரியவில்லை.
பதின் வயதில் கடந்து போன மனதுக்கு இதமான ஒரு பழைய காதலியின் கன்னக்குழி விழும் சிரிப்பை, அப்பாவின் சைக்கிள் கேரியரில் அமர்ந்து பயணிக்கிற போது அவ்வப்போது கால்களை முன்புற பாரில் வைத்திருக்கிறேனா என்று தொட்டும் பார்க்கிற அவருடைய நேசத்தை மீண்டுமொருமுறை உணரமுடிகிற வாய்ப்பென்று விவரிக்கலாம்.
எப்போதும் சரணங்களின் இடைவெளியில் சாகசங்கள் செய்து காட்டும் மிஸ்டர் மொட்டை இந்தப் பாடலில் துவக்கத்தலேயே வித்தை காட்டுவார், பியானோவில் ஒரு பெரிய காட்டுமலரை மலர்த்தி, ஒரு உடைப்பில் பேஸ் வயலின்கள் ஓங்காரமிட உங்கள் இதயச் சுவர்களை இன்னுமொரு வயலினால் கீறுவார், துயரமா? பேரானந்தமா?
ஒன்றும் புரியாத குழப்பத்தில் ஆழ்த்தி, வீணையின் தந்திகளை மெல்ல வருடி வருடி உங்களிடம் அமைதியைக் கொண்டு வருவார். டீஸ்ட்டாவின் துள்ளலைப் போலவும், பிறகு பேரமைதியைப் போலவும்.
இமயம் பிரம்மாண்டமானதாக இருக்கலாம், ஆனாலும் டீஸ்ட்டாவின் நிறத்துக்கு வழிகொடுத்தாக வேண்டும், வயலின்கள் தோலிசைக் கருவிகளோடு தழுவிக் கொண்டு கொஞ்சம் பின்வாங்க, பூங்கதவே, தாழ் திறவாய்.....என்று தீபன் சக்கரவர்த்தி இமயத்தின் வழியோடும் நதியாகக் கசிந்துருக நாம் நதிக்குள் விழுந்திருப்போம்.
பல்லவி முடிந்ததா, இப்போது ராஜாஸ் "டேர்ம்", பியானோவையும், வயலினையும் மோதவிட்டு நம்மை அசைப்பவர், இரண்டு சிகரங்களுக்கு இடையே திடீரென்று சிறகடிக்கும் புராதானப் பறவையைப் போல புல்லாங்குழலை மிதக்க விடுவார். இடையில் எதற்கென்று தெரியாது, எங்கோ மலைக் கிராமத்தின் திருவிழாவில் இருந்து கேட்கிற தவிலும், நாதஸ்வரமும் நம்மை ஒரு உலுக்கு உலுக்கும் போது நீரோட்டத்தை மெல்லக் கொண்டு வந்து நமக்குள் நுழைவார்.
ஆண் குரலுக்கும் பெண்ணும், பெண் குரலுக்கு ஆணும் தருகிற அந்த ஹம்மிங் மாதிரியெல்லாம் யோசிப்பதற்கு மொட்டையைத் தவிர யார் இருப்பார் மாயமாளவ கௌளைக்கென்று ஒரு தனியான உணர்வு எப்போதுமுண்டு, ராஜா இந்தப் பாடலில் அந்த ராகத்துக்கு செய்திருக்கும் "ஸ்டிரிங்" ஆலாபணைகள் இனம்புரியாத உணர்வுகளில் நம்மைத் தள்ளி இசை கேட்கும் அனுபவத்தை அதி அற்புதமானதாக மாற்றும் வல்லமை கொண்டது.
அது நமக்குள் தோற்றுவிக்கிற உணர்வுகள் என்னவென்று ஆய்வு செய்து அவரவர் கரையேறலாம். இரண்டு பாடகர்களும் முடிக்கிற ஹம்மிங் ஒரு தனி ஆவர்த்தனமாகி பாடலின் வாசம் நியூரான்களில் பரவிக் கிடக்கையில், கண்களைத் திறந்து மேகங்கள் சூழப் படர்ந்திருக்கும் இமயத்தையும், டீஸ்ட்டாவையும் பார்க்கிறேன், எங்கும் எங்கெங்கும் ராஜாவின் இசை மிதந்தலைவது போல பிரம்மாண்டமாக மேகங்களோடு மிதக்கிறது அவரது இசைத்துண்டங்கள்.
பாடல் - பூங்கதவே தாழ் திறவாய்...
பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் அல்ல தீபன் சக்ரவர்த்தி
இசை: மேஸ்ட்ரோ இளையராஜா
ராகம்: மாயமாளவகௌளை
கை.அறிவழகன்
No comments:
Post a Comment