Thursday, March 17, 2022

எண்ணப்பறவை_59

 எண்ணப்பறவை_59

செவ்வாய் மாலை மணி ஐந்து.  ஐஜி ஆஃபீஸ்.

வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பத் தயாராக இருந்தாள் அமுதா.

'ஹலோ.. ஹவ் ஆர் யூ?'

குரல் வந்த திசையில் அரவிந்த் நின்று கொண்டிருந்தான்.  உதிர்த்த புன்முறுவலில் சற்று கோபமும் வெளிப்பட்டது அவளிடமிருந்து.

'என்ன கோபமா என் மேல?'

'அதெல்லாம் இல்ல.  சொல்லுங்கோ.'

'அவ்வளவு தானா?'

'அதெல்லாம் ஒண்ணுமில்லை.  சொல்லுங்கோ சீக்கிரம்.'

இப்போது அவளிடத்தில் தடுத்து வைத்திருந்த சிரிப்பில் கோபத்தின் வெளிப்பாடு கொஞ்சம் கூடுதலாக இருந்தது.

'கொஞ்சம் பேசலாம்னு வந்தேன் ரெண்டு வார்த்தை.'

'அதான் எங்க அப்பாகிட்ட உங்க அம்மா சொல்லியாச்சே.  வேற என்ன பேசறதுக்கு இருக்கு?'

'ஃபரேங்கா ஒண்ணு சொல்லட்டுமா?  நீங்க கோபத்துல அழகா இருக்கீங்க.  நடு நடுவுல வந்துண்டிருக்கற சிரிப்பு ரொம்ப நல்லா இருக்கு.'

இப்போது வெளிப்பட்ட சிரிப்பு கோபத்தை தோற்கடித்துக் கொண்டிருந்தது.

'சார், நான் சொன்னது சொன்னதுதான்.  வேலைய நான் விடமாட்டேன்.  சம்மதம்னா அப்பா கிட்ட சொல்லுங்கோ.'

'நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே?  அதுக்குள்ள என்ன இவ்வளவு அவசரம்.'

'இங்க எல்லாரும் பார்த்துண்டிருக்கற மாதிரி இருக்கு.  சீக்கிரம் சொல்ல வந்தத சொல்லுங்கோ.  நானும் பஸ்ஸ பிடிக்கணும்.'

'நானும் இன்னிக்கு உங்களோட வரப்போறேன்.'

என்ன சொல்வது என்று தெரியவில்லை அவளுக்கு இப்போது.  ஆனாலும்  அரவிந்த் என்ன சொல்ல வந்திருக்கிறான் என்பதை கேட்கவும் ஒரு ஆர்வம் மனதில்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் கைப்பையை எடுத்துக் கொண்டு நடந்தாள்.  அவளை அரவிந்த வாசல் வரை தொடர்ந்தான் ஆஃபீஸ் வாசல் வரை.

'என்ன ஒண்ணுமே சொல்லலியே.  அன்னி மாதிரி பீச் லானில் ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்து பேசலாமா?'

'விட மாட்டீங்க போல இருக்கே.'

கொஞ்சம் யோசித்து விட்டு 'வாங்கோ.  ஒன்லி ஃபைவ் மினிட்ஸ்.   ஆத்துல அக்கா கவலப் படுவா லேட்டானா.'

'அப்படியே ஆகட்டும் யுவர் ஆனர்.'

இப்போது அவளது கோபம் சிரிப்போடு வெட்கத்தை கலந்து விடை பெற்றுக் கொண்டது.  கதை எழுதும்போது வெளிப்படாத வெட்கம் சற்று வித்யாசமாக அவளுக்கு தோன்றியது.

காதலை உணர்ந்திருக்கிறாள் கதை எழுதும்போது.  அப்போது கிடைக்காத ஒரு சுகம் இப்போது சுகந்தமாக மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்ததை அவளின் சிலிர்ப்புகளும் படபடப்பும் உணர்த்திக் கொண்டிருந்தது.

உட்கார்ந்தார்கள் எதிரெதிரே புல் வெளியில்.  உட்காரும்போதே அவள் கால்கள் அவள் கழுத்துப் 

பகுதிக்கு சமீபம் சுருங்கிக் கொண்டது.  பக்கத்தில் உள்ள ஒரு குச்சியை அவள் கை வாங்கிக் கொண்டு கோடுகளையும் வட்டங்களையும் வரைய ஆரம்பித்தன.  உதடுகளில் ஆர்வத்தின் நடுக்கம் என்ன சொல்லப் போகிறான் அரவிந்த் என்ற சிந்தனையில்

அதை அவன் ரசித்துக் கொண்டிருந்தான்.

'ஏங்க அமுதா, உங்க ட்ராயிங் க்ளாஸை முடிச்சுட்டா நீங்க சொன்ன அஞ்சு நிமிஷ கவுண்ட் dடவுனை ஆரம்பிச்சுடுவேன்.'

அவன் அப்படி சொன்னவுடன் வந்த சிரிப்பு கையிலிருந்த குச்சியை தள்ளி வைத்தது.  முகம் நேருக்கு நேர் பார்க்க சம்மதிக்காவிட்டாலும் காதுகளை கூர்மையாக்கியது.

'நான் அமுல் வேலைய வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டேன்.'

'ஏன்?  உங்க அம்மா என் அப்பாகிட்ட இப்ப வேல பார்க்கர உட்லண்ட்ஸ் வேலைய விட்டுட்டதா சொன்னாங்களே?'

'அதுவும் சரிதான்.  கையில இருக்கர வேலையையும் விட்டுட்டேன்.'

'அப்ப வேற வேலை?'

'அதுவா.  அதான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போற அமுதாவுக்கு கவர்மெண்ட் உத்யோகம் இருக்கே.  ஹவுஸ் ஹஸ்பெண்டா இருந்துடலாம்னு....'

'சும்மா விளையாடாதீங்கோ.  கண்டிப்பா இப்படி செஞ்சிருக்க மாட்டேள் நீங்க.'

இனிமேலும் அவளை ஆர்வத்தின் வட்டத்தில் வைத்திருக்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.

ஐஜி தன்னை அழைத்ததிலிருந்து அவன் டஃபேயில் இன்டர்வ்யூ சென்றது வரை ஒன்றுவிடாமல் சொன்னான்.  அவள் புருவங்கள் ஆச்சர்யத்தில் அடிக்கடி மேலே சென்று கொண்டதை அவன் ரசித்துக் கொண்டிருந்தான்.

'அப்புறம் என்ன ஆச்சு?' வெகுளித்தனமான கேள்வி ஆர்வத்தில் அவளிடமிருந்து.

'நேத்திக்கு திரும்பவும் போய் அந்த லக்ஷ்மிபதியை பார்த்தேன்.  இந்த ஆர்டரை கொடுத்தார்.'

நீட்டுகிறான் அந்த அப்பாய்ண்மென்ட் ஆர்டரை.  அவள் படிக்கும்போது அவளுடைய கண்களை இதழக்கள் அவளையும் அறியாமல் உதிர்த்த புன்னகைப் பூக்களை.

படித்தவுடன் திருப்பிக் கொடுக்கிறாள் அவனிடம் அந்த ஆர்டரை.

'இவ்வளவுதானா?  ஒண்ணும் இல்லையா?'

'ஒண்ணும் இல்லையான்னா?  நீங்கதான் சொல்லணும்.  நான் சொல்லணும்னா கங்க்ராட்ஸ் தான் சொல்ல முடியும்.  கங்க்ராட்ஸ்.'

'அதான் நம்ம கல்யாணத்துக்கு தடையா இருந்த என் உத்யோக பிரச்சனை கிட்டத்தட்ட ஸால்வ் ஆயிடுத்து.  உங்க அப்பாகிட்ட சொல்லி மேற்கொண்டு ப்ரொஸீட் பண்ண சொல்லலாமில்லையோ?'

'அது உங்காத்துலேந்து சொன்னாத்தான சரியா இருக்கும்.  சரின்னேள் வேண்டாம்னேள்.  இப்போ சரின்னு நீங்கதான அப்பா கிட்ட சொல்லணும்.'

'கம் ஆன்.  என்ன ஃபார்மாலிடி இது?  நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.  உன் கிட்ட நான் சொல்லிட்டேன்.  அத விட என்ன வேணும் சொல்லு.'

'அப்படி இல்ல.  இது பெத்தவாள்லாம் மனப்பூர்வமா ஒத்துண்டு நடக்கற கல்யாணம்.  அவாளுக்குள்ள மரியாதைல எந்த விதத்திலேயும் நாம குறை வெய்க்க கூடாது.'

'சரிங்க மஹாராணி.  என் அம்மா கிட்ட இன்னிக்கு ஆத்துக்கு போய்ட்டு நாளைக்கு ஏகேண்ணாவையும் பவானி மன்னியையும் உங்காத்துக்கு வர சொல்லி பேச சொல்றேன்.  சரியா.'

'மஹாராணி' என்று அரவிந்த் அழைத்ததில் ஒரு சின்ன ஆனந்தம்.

'எனக்கு இந்த டஃபே உத்யோகம் கிடைக்கறதுக்கு நீங்களும், சாரி, நீதான் காரணம்.  அதுக்கு ஒரு த்தேங்க்ஸ்.'

'என் கான்ட்ரிப்யூஷன் இதுல என்ன இருக்கு?'

'உன் மேல ஐஜிக்கு இருக்கிற மதிப்பும் மரியாதையும் தான் அவர் எனக்கு ரெகமெண்ட் பண்ண வெச்சிருக்கு.  நீ மறுத்தாலும் அதுதான் உண்மை.'

'இருக்கட்டும்.  வியாழக் கிழமை அவர கண்டிப்பா பார்க்க வருவேள்னோ?  முடிஞ்சா நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்.'

'கண்டிப்பா அமுதா.  பை தி பை, அஞ்சு நிமிஷம்னு சொன்ன.  இப்ப முக்கா மணி நேரத்துக்கு மேல ஆகறது.  அதுக்கும் ஒரு த்தேங்க்ஸ்.'

புடவையில் ஒட்டிக் கொண்டிருக்கும் துகள்களை தட்டிவிட்டு எழுந்திருக்கும் போது அங்கிருந்த கல்லில் ஒரு கால் பட்டு ஒரு ஸ்லிப்.

டக்கென்று அவள் கையைப் பற்றி அவள் கீழே விழாமல் பார்த்துக் கொண்டான்.

அந்த முதல் ஸ்பரிஸத்தை எதிர் பார்க்கவில்லை.  இரண்டு அடிகள் ஓடி கண்ணைப் பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

'அமுதா, என்ன ஆச்சு?  ஆர் யூ ஆல்ரைட்.'

'ஒண்ணுமில்லை.  ஒண்ணுமில்லை.  ஓகே.  ஐ ஆம் ஓகே.'

மௌனங்கள் நடையோடு பஸ் ஸ்டாப் வரை.

தொடரும்...

No comments:

Post a Comment