Tuesday, March 15, 2022

எண்ணப்பறவை_55

எண்ணப்பறவை_55

'வாங்கோ'

அழைத்த விதத்திலேயே சுரத்தில்லாமல் சுந்தரி இருந்தது புரிந்தது கணபதி சுந்தரத்திற்கு.

'மாமிக்கு உடம்பு சரியில்லையோ?'

'ஒடம்புக்கு என்ன கொறச்சல்?  நன்னாத்தான் இருக்கு.'

மேலும் சுந்தரியைக் கிளற விரும்பவில்லை அவர்.

'குழந்தை கல்யாண விஷயமா பேசிட்டு போகலாம்னு வந்தேன்.  நிச்சயதார்த்தம் எப்ப எங்க வெச்சுக்கறேள்னு தெரிஞ்சா அதுக்கு ஏத்த மாதிரி...'

'இல்ல மாமா.  நீங்க பெரியவ கல்யாணத்த பாருங்கோ.  அரவிந்த் கல்யாணத்த பத்தி கொஞ்சம் யோசிச்சு முடிவெடுக்கலாம்.'

'ஏன்?  நானும் என் பொண்கள் கிட்ட ஊருலேந்து வந்தோண்ண எல்லாத்தையும் கேள்விப் பட்டு சத்தம் போட்டேன்.  நான் அதெல்லாம் பார்த்துக்கறேன்.  நீங்க அதப்பத்தியெல்லாம் கவலைப் படாதீங்கோ.'

'இல்ல மாமா.  உங்க பொண்ணு சொல்றதிலேயும் ஞாயம் இருக்கு.  இந்த காலத்துல பெண் குழந்தைகள் தன்னப் பத்தி மாத்ரம் நெனைக்காம பெத்தவா மேலையும் அக்கறையா இருக்கறது எவ்வளவு பெரிய விஷயம்?  அத நாம தப்பாவே நெனைக்க கூடாது மாமா?'

'இல்ல மாமி.  எனக்கு வேல கையில இருக்கு.  ரெண்டு வருஷத்துக்கு அப்புறம்தான் ரிடைர்மெண்ட்.  நான் ஏதோ சமாளிச்சுப்பேன்.  உங்காம் மாதிரி நல்ல வரன் கிடைக்கறது எவ்வளவு கஷ்டம்?  இதெல்லாம் யோசிக்காம அமுதா உங்க கிட்ட பேசினது தப்புதான்.  நீங்க இத பெரிசு படுத்தாதீங்கோ.'

'நான் ஒண்ணும் தப்பா நெனைக்கல மாமா.  அந்த புது வேலைல ரொம்ப குறியா இருக்கான் அரவிந்த்.  என்ன தனியா இங்க அமுதாவோட விட்டுட்டு போகறதும் பிடிக்கல.  உங்க பொண்ணுக்கோ அரசாங்க வேலை.  அந்த வேலைய விட்டுடுன்னு சொல்லக் கூட மனசு வரல.  இதப்பத்தி ரொம்ப நேரம் நாங்க ரெண்டு பேரும் பேசிட்டோம்.  எங்காத்துக்காரரும் பொண்ணும் போனதுலேந்தே அவன் இந்த மெட்ராஸே வேண்டாம்னுதான் சொல்லிண்டிருக்கான்.  நான்தான் ஒரு கல்யாணம் கார்த்திகை அவனுக்கு ஆனவுடனே அதுபத்தி யோசிக்கலாம்னு சொல்லிண்டிருந்தேன்.  எல்லாம் கைகூடி வர்ரதேன்னுதான் சந்தோஷப் பட்டிண்டிருந்தேன்.  எங்களுக்குதான் கொடுத்து வைக்கலையோன்னு ...'

'அதெல்லாம் இல்ல மாமி.  என் பொண்ணு வேலைய விடுவா.  நான் சொல்லி புரிய வெக்கறேன்.  நீங்க நிச்சயதார்த்தம் எப்ப சௌகர்யப் படும்னு மாத்திரம் சொன்னா போதும்.  தேவைப் பட்டா போற இடத்துல அவ வேல தேடிண்டா போச்சு.'

'வேண்டாம் மாமா.  நம்ம சௌகர்யத்துக்காக குழந்தைகள் மேல கல்யாணத்த திணிக்க கூடாது.  உங்க பொண்ணு என் பையன் கிட்ட நேரடியாவே பேசினதுக்கப்பறம் இங்கேயே இருக்க முடிவெடுப்பனோன்னு யோசிச்சேன்.  ஆனா, திரும்ப திரும்ப அங்கதான் போவேன்னு சொல்றான்.  கேட்டா சம்பளம் ஜாஸ்தி, அது இதுன்னு சொல்லி சமாளிக்கறான்.  ஒண்ணும் புரியல மாமா எனக்கு.  ஒண்ணு வேணா செய்யுங்கோ.  முதல்ல உங்க மூத்த பொண்ணு கல்யாணத்த பண்ணுங்கோ.  கொஞ்சம் வெயிட் பண்ணலாம் அடுத்த கல்யாணத்துக்கு.  அதுக்குள்ள பகவான் அனுக்ரஹத்துல ஏதாவது மன மாற்றம் அவனுக்கு வர்ரதான்னு பார்ப்போம்.'

'ரெண்டு கல்யாணத்தையும் சேர்த்து பண்ண எல்லா ஏற்பாட்டையும் பண்ணி நான் தயாரா இருக்கேன்.  ஒரு பிரச்சனையும் என் ஸைடுல இல்ல மாமி.  நீங்க ஊஊம்னு சொன்னா சீக்கரமே குழந்தைகள் கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்திடலாம் மாமி.  திரும்ப திரும்ப சொல்றேன்னு நெனைக்காதீங்கோ.  என் பொண்ணுக்கு உங்காத்து பையன் மாதிரி வரன் கெடைக்கரதுக்கு அவ கொடுத்து வெச்சிருக்கணும்.'

'எனக்கும்தான் மாமா.  பவானி குடும்பத்தாரும் எங்க சொந்தக்காராளா ஆகப் போறான்னு ஆனந்தப்பட்டேன்.  எல்லாம் இந்த திருவாழத்தான் கொழப்பறதால கெட்டுப் போறது.'

'நீங்க இன்னும் கொஞ்சம் அவருக்கு புரிய வெச்சா சரியா போகும் மாமி.  தேவையில்லாத கொழப்பங்கள என் பொண்ணும் என்ன கேக்காம உங்களுக்கு கொடுத்துட்டா.  ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு.  நீங்க சம்மதிச்சா நானும் வேணா உங்க பையன் கிட்ட பேசிப்பார்க்கட்டுமா?'

'நாம ரெண்டு பேரும் திரும்ப திரும்ப இப்படித்தான் பேசிண்டிருக்கணும்.  அடுத்த வாரம் புது வேலைல  சேரணும்னு  சொல்லிண்டிருந்தான்.  மொதல்ல மெட்ராஸுலேயாம்.  அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சு வடக்க போகணுமாம்.  இன்னொரு தடவை பேசிப் பார்க்கறேன்.  அப்புறம் பகவான் விட்ட வழி.'

விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்.  சுபர்பன் ட்ரெயின் தாம்பரத்தில் ஏறியதிலிருந்து மாம்பலம் வரும் வரை அமுதாவை நினைத்துக் கொண்டே வந்தார்.

'எல்லாம் தோதா வர சமயத்துல இப்படி அவசரப் பட்டு குட்டிச் சுவராக்கிட்டாளே'

'அவன மனசால நெனச்சுட்டு இன்னொரு வரனுக்கு ஒத்துப்பாளோ?'

'இவ கவல எனக்கு இப்ப பெரிசா போயிடுத்தே'

'வாலுதான் அந்த அரவிந்து மனச மாத்தணும்.'

'நம்ம தரப்புல மேக்ஸிமம் பேசியாச்சு.  மாமி புடி கொடுத்து பேச மாட்டேங்கறாளே'

'இப்ப எப்படி இதெல்லாம் போய் பொண்கள் கிட்ட சொல்றது.  மனசு ஒடஞ்சு போயிடுங்களே.'

'நாம ஒருவேளை தனியா போயிருக்க கூடாதோ?  விசு சொன்னானே, நானும் வரட்டுமான்னு.  கேட்டிருக்கலாமோ.'

'அந்த பையனுக்கும் அப்படி என்ன புதுசா அந்த கம்பெனியில கொட்டிக் கிடக்கோ.  எல்லாம் நேரம்.'

'கொழந்தைகள் கிட்ட இப்ப சொல்ல வேண்டாம்.  அரவிந்தோட வேலை பார்க்கறாரே அனந்த கிருஷ்ணன்.  அவர் கிட்ட சொல்லலாம் முதல்ல.  அவர் சொல்லி புரிய வைக்க மாட்டாரா என்ன?'

'ரொம்ப சந்தோஷமா கனவு கண்டுட்டேன் போல இருக்கு.  அதான் பகவானா மண்டைல தட்டிட்டார் போல இருக்கு.'

இரவு எட்டு மணிக்கு அனந்த கிருஷ்ணனைப் பார்க்கிறார்.

திருக்காட்டுப்பள்ளி பேச்சுகளையும் தாம்பரம் சென்ற விவரங்களையும் பவானியிடத்தும் அனந்த கிருஷ்ணனிடத்தும் சுருக்கமாக கூறுகிறார்.

'மாமா, நீங்க கவலைப் படாதீங்கோ.  எல்லாம் நல்லபடியா நடக்கும்.  எங்காத்துக்காரர் அரவிந்த் கிட்ட பேசுவார்.'

'நான் பேசிண்டுதான் இருக்கேன் பவானி.  பிடிவாதமா இருக்கான்.  எங்க ஆஃபீஸ்ஸிலும் நின்னுக்கறேன்னு சொல்லிட்டான்.  என்னவோ அவனுக்கு அந்த அமூல் கம்பெனி பிடிச்சு போச்சு.  விடாம பேசிப் பார்க்கறேன்.  உங்க பொண்ணு கொஞ்சம் அவசரப் பட்டுட்டாளோண்ணு தோணறது.  நீங்க கடன்ல கஷ்டப் படக்கூடாதுன்னும் யோசிக்கறான்.  அடுத்த வாரம் அந்த கம்பெனியில சேரப் போறதா சொன்னான்.  இன்னும் கொஞ்சம் பேசிப் பார்ப்போமே.'

'ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா நடத்த ஓரளவு நம்பிக்கையோட இருக்கேன்.  நீங்கதான் எப்படியாவது...'

சொல்லும் போதே குரல் தழுதழுத்தது கணபதி சுந்தரத்திற்கு.  புரிந்து கொண்டார்கள் இருவரும்.

தொடரும்....

No comments:

Post a Comment