Tuesday, March 15, 2022

எண்ணப்பறவை_56

எண்ணப்பறவை_56

அமுதாவின் அதிகாரி குருராஜனுக்கு டிஐஜியிலிருந்து ஐஜியாக ப்ரொமோஷன் கிடைத்ததை அலுவலகமே கொண்டாடிக் கொண்டிருந்தது.  காலையிலிருந்தே அதிகாரிகள் ஒவ்வொருவராக அவர் இருக்கைக்கு வருவதும் போவதுமாக இருந்தனர்.

அழைக்கப் பட்டதன் பேரில் ஒரு சில கோப்புகளும் கையுமாக உள்ளே சென்றாள் அமுதா.

'இதுக்குத்தான் உங்கள மாதிரி ஒரு கேம்ப் க்ளார்க் வேணுமங்கறது.  நான் எந்த ஃபைல்கள்ல கையெழுத்து ஐஜியா போடணும்னு நெனச்சிகிட்டு வந்தேனோ அதே ஃபைல்ஸுகள எடுத்துகிட்டு வந்திருக்கீங்க.'

அந்த கோப்புகள் துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்பட்ட ஒரு சிலரின் அப்பீல்கள்.

'இவங்களையெல்லாம் மன்னிச்சு விட்டுடலாமா?  உங்க அபிப்ராயம் என்ன?'

'ஃபைல்களை பார்த்தா மன்னிப்புக்கு ஏத்தவங்கதான்'.

'போலிஸ் டிபார்ட்மென்டுல தண்டனைய தான் அதிகம் எதிர்பார்க்க முடியும் இல்லையா?'

'என்னோட அபிப்ராயம் கேட்டீங்க.  சொன்னேன்.  முடிவு உங்களோடது.  என்னோட அபிப்ராயம்  அவர்கள் க்ரிமினல்ஸ் இல்ல.  தே டிஸர்வ் அக்விட்டன்ஸ்'.

'தண்டனை இல்லைனா அவங்க மீண்டும் தப்பு செய்ய வாய்ப்பு இருக்கும் இல்லையா?'

'இருக்கலாம்.  இவர்கள் ஏதோ ஒரு கோபத்துல உயர் அதிகாரிகள் கிட்ட தப்பா பிஹேவ் பண்ணியிருக்கறதா ஃபைல்ஸ் சொல்றது.  அந்த ஸ்பாட்டுகள்ல நாம இல்ல.  ஒரு சில பேப்பர்கள வெச்சிண்டு தீர்ப்பு எழுதி தண்டனை கொடுக்கலாமான்னு நமக்குள்ளேயே கேட்டுண்டு இதையெல்லாம் ஃபைசல் பண்ணலாம் நீங்கங்கறது என் அபிப்ராயம்.  அவங்கள வார்ண் பண்ணி மன்னிச்சா அது அவங்கள திருத்திக்க உதவும்.  எனிவே, ஐ லீவ் இட் டு யுவர் டெஸிஷன்'

சிரித்துக் கொள்கிறார்.  'நீங்க IPS படிச்சிருந்தா மனிதாபிமானம் உள்ள போலிஸ் அதிகாரியா இருந்துருப்பீங்க.  அது இருக்கட்டும், ரெண்டு நாளா டல்லா இருக்கற மாதிரி தெரியறீங்க.  எனி ப்ராப்ளம்.'

'நத்திங் சார்.  ஐ அம் ஆல்ரைட்.'

கையெழுத்திட்ட கோப்புகளை வாங்கிக் கொண்டு திரும்புகிறாள் தன் இருக்கைக்கு.

வாசலில் நின்ற போலிஸ்காரரை மணி அடித்து உள்ளே அழைக்கிறார் ஐஜி.

'அமுதா மேடத்தோட அடிக்கடி பேசுவாங்களே ஒரு மேடம்.  அவங்க யாருன்னு தெரியுமா உனக்கு?'

'ஐயா, அவங்க பேர் ப்ரியா மேடம்.  அக்கௌண்ட்ஸுல இருக்காங்க ஐயா.  தாம்பரத்திலேந்து வராங்க ஐயா.'

'சரி.  ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு அமுதா மேடத்தை கூப்பிடறையா?  இப்ப இல்ல.  அஞ்சு நிமிஷம் கழிச்சு.'

'சரிங்க ஐயா'.

ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் ஐஜி ரூமிற்குள் வருகிறாள் அமுதா.

'நீங்க ஒரு முக்கியமான வேலை செய்யணும்.  இந்த கவரை ஆவடி பெட்டாலியன் ஆஃபீஸ்ல அங்க இருக்கற டிஐஜி அம்பலவாணன் கிட்ட கொடுத்துட்டு வரணும்.  அதுவும் உடனே.  போர்டிகோவில முப்பத்தாறு முப்பத்தாறு அம்பாஸடர் காரை எடுத்துக்கோங்க.  ஜீப்புல போக வேண்டாம்.'

அவளுக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது சற்று.  ஒரு ஜூனியர் அதிகாரிக்கு ஒரு மெஸஞ்சர் மூலம் கொடுத்தனுப்பியிருக்க வேண்டியதை தன் மூலம்?  அதிகாரியின் உத்தரவை மீற முடியுமா என்ன?  கிளம்பி விட்டாள்.

அவள் சென்றதை உறுதி செய்து கொண்டு அதே போலிஸ்காரரை கூப்பிட்டு ப்ரியாவை அழைத்து வர சொல்கிறார்.

'வாங்க.  உட்காருங்க.'

'கங்க்ராஜுலேஷன்ஸ் ஸார்.'

'த்தேங்க்ஸ் மா.  நேராவே விஷயத்திற்கு வரேன்.  அமுதா மேடத்திற்கு ஏதாவது பிரச்சனையா வீட்டுல?  ரெண்டு நாளா டல்லா இருக்காங்களே.'

'அது வந்து...ஒண்ணுமில்ல சார்....'

'பரவாயில்ல. தைரியமா சொல்லுங்க.  நம்மால ஏதாவது செய்ய முடிஞ்சா செய்யலாமேன்னுதான் கேட்கிறேன்.'

எல்லாவற்றையும் சொல்கிறாள் சுருக்கமாக.  அவள் திருமண பேச்சுக்கள் சற்று தடை பட்ட வரைக்கும்.

'அந்த மாப்பிள்ளை உட்லண்ட்ஸ்லதானே ஒர்க் பண்றாருன்னு சொன்னீங்க.  அவர் பேர் அரவிந்த் தானே.'

'சரி நீங்க கிளம்புங்க.  நாம ரெண்டு பேர் இதுவரைக்கும் பேசினது நம்மளோடவே இருக்கட்டும்.  குறிப்பா மேடத்திற்கு தெரிய வேண்டாம் என்ன?'

அவளையும் அனுப்பி வைத்துவிட்டு அந்த போலிஸ்காரரை மீண்டும் கூப்பிடுகிறார்.

'நீ என்ன பண்ற.  நேர உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்குப் போய் அங்கு அரவிந்துன்னு ஒருத்தர் இருப்பார்.  அவரை நான் கையோட அழச்சிகிட்டு வர சொன்னதா சொல்லு என்ன?  பத்து  நிமிஷத்துல அவர் இங்க இருக்கணும்.  உடனே கிளம்பு.  புல்லட் வெச்சிருக்கியா?'

'வெச்சிருக்கேன் ஐயா'

'போகும்போது அப்படியே டெலிஃபோன் ஆபரேட்டர் கிட்ட சொல்லி டஃபே கம்பெனிக்கு ஃபோன் போட்டு சிவசைலம் ஐயாவ கனக்ட் பண்ண சொல்லு.  மறக்காம சொல்லிட்டு போவியா?  இரு இரு.  எழுதியே கொடுத்துடறேன்.'

'சரிங்க ஐயா.  சொல்லிட்டு போறேய்யா.'

போலிஸ்காரர் கிளம்பிய மூன்று நிமிடத்தில் டஃபே கால்.

'ஹலோ எப்படி இருக்கீங்க.  நான் குருராஜன் பேசறேன்.'

'ஸர்ப்ரைஸிங்.  இப்பதான் ஞாபகம் வந்துதா நான் இருக்கேன்னு.'

'நீங்க ஒரு பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட்.  தொல்லை பண்ண வேணாமேன்னுதான்.  பை தி பை, இன்னிக்கு நான் ஜஜியா பதவி ஏத்துகிட்டிருக்கேன்.'

'ஓ.  க்ரேட்.  கங்க்ராட்ஸ்.'

'எனக்கு ஒரு உதவி வேணும்.  செய்வீங்களா?  எனக்கு ரொம்ப தெரிஞ்ச ஒரு ஸ்மார்ட் பாய் ஒருத்தருக்கு வேலை போட்டு கொடுக்கணும்.  உட் யூ?'

'கம் ஆன் குருராஜ்.  நீங்க சொல்லி நான் செய்யாம இருப்பேனா?  அவரை எங்க ஸீனியர் மேனேஜர் லக்ஷ்மிபதிய பார்க்க சொல்லுங்க நாளைக்கு.  ஏதாவது ப்ராப்ளம்னா திரும்பவும் எனக்கு ஃபோன் பண்ணுங்க.'

'தேங்க்ஸ் மிஸ்டர் சிவசைலம்.'

சிறிது நேரம் வேறு சில விஷயங்களையும் பேசிவிட்டு ரிஸீவரை வைக்கிறார்.


தொடரும்...

No comments:

Post a Comment