Monday, March 14, 2022

திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −29

 (திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −28

"எதுவுமே வேண்டாம்!..

எந்த பாகவதா கிட்டயும் அபசாரப் படாம, நீ அவாளோட அபிமானத்துல ஒதுங்கி இரு!..

அதுவே ஒன்னக் கரை சேர்க்கும் அம்மணி.."

.....என்று பெரிய ஜீயர், திருவல்லிக்கேணி அம்மையாரைப் பார்த்து, தற்பொழுது ஒரு வார்த்தை சொன்னதும்,

அம்மையார் விரக்தியாகச் சிரித்தாள்...

"ஸ்வாமி... பாகவத அபசாரம் படாம இருக்கணும்னு அடியேனுக்குத் தெரியறது..

ஆனா, அடியேன் இதுவரையிலும் அப்படி நடந்துண்டு இருக்கேனாங்கறது சந்தேகமாத்தான் இருக்கு!..

அப்படியே ஒரு வேளை அபசாரப் பட்டிருந்தாலும், ஒடனே அவாகிட்ட மன்னிப்பு கேட்டுக்கற பக்குவமாவது எனக்கு இருந்துருக்கானு யோசிக்கச்சே,

எனக்கு அதுக்கான விடை தெரியல!..

ஸ்வாமி... அடியேன் என்ன,

"உலகாரியனோ என்றுரைத்தேனோ தோழப்பரைப் போலே?.."

....என்று ஒரு கேள்வியை ஜீயரிடம் வைத்துவிட்டு, வெகு சகஜமாய் மேலே தொடர்ந்தாள்..

"முதலியாண்டான் ஸ்வாமிகளோட திருப்பேரனான "கந்தாடைத் தோழப்பர்", தம்மோட குலப்பெருமைக்கு ஏத்த மாதிரி மஹா வித்வானா இருந்தார்..

இவர் ஶ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்திலேயும் ரொம்ப ஊற்றத்தோட இருந்தார்..

அவர் காலத்திலே, அதே ஶ்ரீரங்கத்துல,  "நம்பிள்ளை"னு ஒரு மஹனீயர், ஆசார்யபதம் நிர்வஹிச்சுண்டிருந்தார்..

ரொம்பவும் "நா வண்மை"யும், குணபூர்த்தியும் கொண்டவர்கறதால, இவர் கிட்ட எப்பவும் வித்வான்களோட கும்பல் நெறய இருக்கும்..

ஆனா, குலப்பெருமை, அறிவு எல்லாம் நெறய இருந்தாலும், தோழப்பரத் தேடி வரவா ரொம்பவும் கொஞ்சம் பேர்தான் இருந்தா..

அதனால, அசூயைக்கு ஆட்பட்ட தோழப்பர், ஒரு சமயம்,  நம்பிள்ளைய கடுஞ்சொற்களால ஏசிட்டார்..

....இந்த மாதிரி தகாத வார்த்தைகளால நம்பிள்ளையத் தோழப்பர் ஏசின விஷயம், அவரோட பார்யாளுக்கும் (மனைவி) எட்டிடுத்து..

தோழப்பர் திருமாளிகைத் திரும்பின உடனே, அவரோட பார்யாள் ரொம்ப வருத்தத்தோட,

"இப்படியா நடந்துக்கறது?..

உலகுக்கெல்லாம் ஒரு ஆசார்யனா, ஆத்ம குண பூர்த்தியிலே சிறந்தவரான நம்பிள்ளையத் தகாத வார்த்தை பேசி, மஹா அபசாரத்தைத் தேடிக்கலாமா?..

இது ஒங்க குலபெருமைக்குத்தான் தகுமா?..

அவர்கிட்ட மொதல்ல "அபராத க்ஷாபணம்" (மன்னிப்பு) பண்ணிக்கோங்கோ..."

.....என்று தோழப்பருக்குப் புரியும்படியாக இதமாக எடுத்துரைத்தாள்..

அவளோட வார்த்தைகள் தோழப்பரச் சிந்திக்க வெச்சுது!..

தம்மோட நடத்தைக்கு ரொம்ப வெட்கப்பட்டவர்,  நம்பிள்ளைய அப்பவே சந்திச்சு க்ஷமை (மன்னிப்பு) வேண்டனும்னு உடனே புறப்பட்டார்..

வாசலுக்கு வந்த நேரத்தில, அங்க யாரோ ஒருத்தர், 

தம்மோட முகத்த வஸ்த்ரத்தால முட்டாக்கிட்டுண்டு, திண்ணையில உட்கார்ந்திருக்கறத தோழப்பர் பார்த்தார்..

ஒரே இருட்டா இருந்ததால, கைவிளக்க பிடிச்சு யாருன்னு பார்க்க, அது நம்பிள்ளையா இருக்கக் கண்டு ஆச்சர்யப்பட்டு நின்னார்..

தோழப்பர பார்த்த மாத்திரத்தில், நம்பிள்ளை நாத்தழுதழுக்க,

"அடியேன்...

பெருங்குலத் தோன்றலான முதலியாண்டானோட திருப்பேரனாரோட மனசு ஆதங்கப்படும்படி நடந்துண்ட அடியேனுக்கு, 

ஒம்ம வாசல் தவிர வேறு புகல் இல்லை!.."

என்று வருத்தத்தோடே விண்ணப்பித்தார்..

நம்பிள்ளையோட இந்த குணபூர்த்தியக் கண்டு,  தோழப்பர் ரொம்பவும் வெட்கிப் போய், அவரோட திருவடிகள்ல தெண்டனிட்டு,

"தேவரீர்தான் இந்த உலகத்துக்கெல்லாம் ஒரு ஆசார்யரா இருக்கத் தகுந்தவர்..

இன்னிக்கு அடியேன் தம்மிடத்தில ரொம்பவும் அபசாரப் பட்டுட்டேன்..

அடியேனோட பிழைய, க்ருபையோட தேவரீர் பொறுத்தருளணும்.."னு வேண்டினார்..

உடனே நம்பிள்ளை, தோழப்பரை அணைத்துச் சமாதானம் பண்ணினார்..

அதுலேந்து நம்பிள்ளைக்கு,  "லோகாசாரியர்", "உலகாரியன்" னு பெயர் நெலச்சு நின்னுது..

.....சொல்லுங்கோ ஸ்வாமி...

இவா ரெண்டு பேர்கிட்டயும் இருக்கற குணபூர்த்தியில ஒரு துளியாவது அடியேன் கிட்ட இருக்கா?..

அஹங்காரம் இல்லாம இருக்கறவாதானே ஸ்வாமி, ஒரு பாகவதரோட நிழல்ல ஒதுங்க ஆசப்படுவா!..

அடியேன் இதுக்கெல்லாம் ஒரு "விதி விலக்கு" ஸ்வாமி.."

.....என்று நெகிழ்ச்சியோடு பேசி, திருவல்லிக்கேணி அம்மையார் தலை குனிந்தாள்..

(வளரும்..)

No comments:

Post a Comment