எண்ணப்பறவை_54
கணபதி சுந்தரத்திற்கு தெம்பு வந்துவிட்டது. ஓரளவு விசுவும் செல்லம்மாளும் போட்டுக் கொடுத்த பட்ஜட் மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்தது.
'விசு, இந்த வாரக் கடைசிலே திருக்காட்டுப்பள்ளிக்கு போய் மாப்பிள்ளையாத்துல பேசிட்டு வருவோம். அவாத்து சம்பிரதாயம் எப்படி என்னங்கறதையும் கேட்டுட்டு, நிச்சயதார்த்தம் என்னிக்கு வெச்சுக்கப் போறாங்கறதையும் தெரிஞ்சுண்டு வந்துட்டா நிம்மதியா இருக்கும். மாமியும் அழச்சிண்டு போவோம். நீங்க ரெண்டு பேர் கொடுத்த தைரியத்துல தான் நம்பிக்கையே வந்திருக்கு.'
'ஏண்டா, உனக்கும் உங்காத்து மாமிக்கும் சொந்தக் காராள்லாம் பக்கத்துல இருக்காளோன்னோ. அவாளையும் கலந்துக்க வைக்கலாமே எல்லா விஷயத்துலயும்.'
'இருக்கா. இல்லைனு சொல்ல மாட்டேன். என் மச்சினன் முத்துப் பேட்டைல கர்ணமா இருக்கான். பெரிய சம்சாரி. ஆத்துக்காரி போய்ச் சேர்ந்த போது வந்தான். நான் சரியா அவாள கவனிக்கலைனு அவனுக்கு நெனப்பு. ஒரு வார்த்த அவன் கிட்ட சொல்றதுல தப்பில்ல. ஆனா ஒவ்வொண்ணுக்கும் அவன் வருவாங்கறத எதிர்பார்க்க முடியாது. அவனத் தவிர ரெண்டு மூணு பேர் நெருக்கமான சொந்தம்னு பேரளவுக்கு இருக்கா. ஒப்புக்காவது அவா கிட்டேயும் சொல்லிட்டு வந்துடறேன். நீங்க ரெண்டு பேரும்தான் பார்வதி பரமேஸ்வரன் மாதிரி எனக்கு பக்கபலமா இருக்கேளே. அவாள்லாம் வந்தா என்ன வராட்டி என்ன?'
'என்னோட சொந்தங்களும் மெது மெதுவா சின்னதா ஆயிண்டுதான் வரதுடா. என்னவோ நம்மடவா குடும்பங்கள்லாம் இப்படித்தான் போயிண்டிருக்கு.'
'இப்ப வாழ்க்கைய ஓட்டறதுக்கு ஸ்பீட் வேண்டியிருக்கு. அவா அவா குடும்பத்துல எவ்வளவோ கஷ்டங்கள். இதுல எங்க சொந்தக்காரா குடும்பங்கள கவனிக்கறது?'
'அப்ப ஒண்ணு செய். ரெண்டு மாப்பிள்ளை ஆத்துலேயும் நிச்சயதார்த்தங்கள ஃபிக்ஸ் பண்ணிட்டு அப்புறம் உங்க சொந்தக்காராகிட்ட சொல்லலாம், என்ன?'
திருக்காட்டுப்பள்ளி சென்றனர். லௌகீக விஷயங்களை செல்லம்மாள் அவர்களுடன் பேசி குறித்துக் கொண்டாள்.
'கணபதி சுந்தரம், நிச்சயதார்த்தத்தை மெட்ராஸுலேயே வெச்சிக்கலாம்னு யோசிக்கிறேன். ஏன்னா, என் பொண்ணு, மாப்பிள்ளை, சம்பந்தி வகையறா, ஏன், உங்காத்து மாப்பிள்ளை கூட அங்கதானே இருக்கா. எல்லோரையும் சிரமப்படுத்தறதுக்கு பதிலா, நாங்க ரெண்டு பேரும் அங்க போனா போச்சு. என்ன நான் சொல்றது.'
'உங்க சொந்தக்காராள்லாம் இங்க ஏதோ பக்கத்துல இருக்கறதா சொன்னேளே.'
'சொன்னேன். வாஸ்தவம்தான். அவா கிட்ட சொல்றேன். விருப்பமுள்ளவா வரட்டுமே. கல்யாணம் திருச்சியில தான நடக்கப்போறது. அப்ப வந்துடப் போறா. எதுக்கும் எங்க மாப்பிள்ள கிட்ட பேசிட்டு கார்டு போடறேன்.'
'எதுவாயிருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்கோ. ஏன்னா, கணபதி இன்னொரு கல்யாணத்துக்கும் சேர்த்து ஏற்பாடு பண்ணனும் இல்லையா?'
'நானே கேட்கணும்னு நெனச்சேன். அந்த சம்பந்தம் எப்படி போயிண்டிருக்கு?'
'கல்யாணத்துக்கு சரின்னு சொல்லியிருக்கா. இனிமே தான் மத்த விஷயங்கள பத்தி பேசி தீர்மானம் பண்ணனும்.'
'நல்ல வரன்னு பவானி சொன்னா. கைகூடி வரும்போது முன்ன பின்ன பார்க்காம முடிச்சுடுங்கோ. ரெண்டு வருஷத்துல ரிடைர்மெண்ட் ஆகறதுக்கும், பேரன் பேத்திகள் தயாராகறதுக்கும் சரியா இருக்கும். பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பேரன் பேத்திகள் மூலம் வட்டியும் முதலுமா சந்தோஷங்கள் வரட்டும். நாங்க ரெண்டு பேரும் இந்த ஊர விட்டு வரது அவ்வளவு சுலபமில்ல. ஆனா நீங்க போய் உங்க பொண்ணு மாப்பிள்ளையோட இருங்கோ. என் பையன் உங்கள கூட நன்னா பார்த்துப்பான். எத்தனை நாள்தான் நீங்க தனியாவே இருக்கறது?'
'நீங்க இப்படி சொல்லறதே எனக்கு பெருமையா இருக்கு. பார்க்கலாம் பகவான் என்ன நெனைக்கறானோ அதுபடித் தானே வாழ்க்கை.'
'சரி மாமா. நாங்க உத்தரவு வாங்கிக்கறோம். உங்க கடுதாசிக்காக வெயிட் பண்ணறோம். ரெண்டு டேட்டா கொடுங்கோ. உத்தேசமா ரெண்டு மூணு முஹூர்த்தத்தையும் நீங்களே குறிச்சு எழுதிடுங்கோ. என்னா, அந்த பொண்ணு கல்யாணத்தையும் அதுக்கு எந்த மாதிரி பேசி முடிவு பண்ண சௌகர்யமா இருக்குமோன்னோ?'
'பார்க்கறேன். அடியே, மாமிக்கு மஞ்ச குங்குமம் கொடு. கொல்ல பக்கம் உரிமட்ட தேங்காய் எசக்கி குமிச்சிருக்கான் பாரு. அதையும் வெச்சு கொடு மறக்காம.'
'மெட்ராஸுக்கு போகும்போது மறக்காம எங்காத்து மாட்டுப்பொண்ண கேட்டதா சொல்லுங்கோ மாமா. சமத்துக் கொழந்த.'
'சரி மாமி. நாங்க கெளம்பறோம். நீங்க சொன்ன படியே எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிடறோம். ஒரு கொறையும் இல்லாம பார்த்துக்கறேன்.'
வரும் வழியில் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் மற்றும் சௌந்தர நாயகியை தரிசிக்கிறார்கள். கணபதி சுந்தரத்திற்கு நம்பிக்கை கூடுகிறது.
'உனக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும் விசு. எப்பேர்ப்பட்ட சம்மந்தம்! எனக்கு ஆரம்பத்துலேந்தே குமுதாவ பத்தி கவலை இருந்துண்டே இருந்தது. சின்னது படிக்கற மாதிரி குமுதா படிக்க மாட்டா. அமுதாவுக்கு நல்ல வேலை கெடச்ச மாதிரி இவளுக்கு கிடைக்கல. கதை எழுதறது, பேச்சுப் போட்டி பாட்டுப் போட்டின்னு நிறைய கப்பும் ப்ரைஸுமா வாங்கிண்டு வருவா அமுதா. இன்னும் சொல்லப் போனா அமுதாவ விட இவ கொஞ்சம் அழகும் கலரும் கம்மிதான். ஓரளவு நன்னா பாடிண்டிருந்தவளும் அமுதாவுக்காக மெட்ராஸுக்கு வந்து சமச்சு போட்டிண்டிருக்கா. கொழந்தைகளுக்குள்ள வித்யாசம் பார்க்க கூடாதுன்னாலும் யதார்த்தத்த யோசிக்க தான வேண்டியிருக்கு ஏதோ ஒரு கட்டத்துல. ஜாதகத்துல கூட செவ்வா தோஷம் அது இதுன்னு எல்லாரும் பயமுறுத்தினா. ரொம்ப கவலப் பட்டதுக்கு நீ பார்த்துக் கொடுத்த வரன் மனசுக்கு ஆறுதலா இருக்கு. சின்னத பத்தி நான் என்னிக்குமே கவலப் பட்டதே இல்ல. துருதுருன்னு சமத்து சாமர்த்தியம் ஜாஸ்தி அவளுக்கு.'
'இப்ப எதுக்கு இதெல்லாத்தையும் நெனச்சிண்டு. எல்லாம் உன் ஆத்துக்காரியோட ஆசீர்வாதம் பரிபூரணமா உன்னோட ரெண்டு பொண்களுக்கும் இருக்குடா. எல்லாம் அவதான் நடத்திண்டிருக்கா. அந்த மாமா சொன்ன மாதிரி ரிடையர் ஆனதுக்கப்பறமாவது அமைதியா பேரன் பேத்தியோட சந்தோஷமா இருடா. பழசெல்லாத்தையும் மறந்துட்டு ஹெல்த்த பார்த்துக்கோ முன்னாடி.'
'மாமி, இருக்கறத வெச்சிண்டு ரெண்டு கல்யாணத்தையும் சமாளிச்சுடலாமோன்னோ? பிரச்சனை எதுவும் வராதில்லையா?'
'படவா.. ஒன்ன என்ன பண்ணினா தேவல. திரும்பவும் ஆரம்பத்துலேந்து கணக்கு சொல்ல எங்களுக்கு தெம்பில்லப்பா.'
பயணத்தில் சிரிப்பலைகள்.
'இந்த வாரம் கொழந்தைகள பார்த்துட்டு அப்படியே அமுதா கல்யாண விஷயமா அவா கிட்ட பேசிட்டு வரேன். அவாளும் என்னை நெனச்சு கவலப் பட்டுண்டு இருப்பா.'
'நல்லதுடா. அப்படியே செய். நானும் வேணா வரட்டுமா அந்த மாமிகிட்ட பேச.'
'வேணாம் விசு. ஏற்கனவே பேசினது தானே. இன்னும் எனக்காக நீங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட வேண்டியது எவ்வளவோ இருக்கு கல்யாணங்கள் முடியறவரைக்கும். நானே பேசிட்டு வரேன்.'
'பரவாயில்லையே. தைரியம் வந்துடுத்தே என் ஃபரெண்டுக்கு.'
தொடரும்....
No comments:
Post a Comment