Monday, March 14, 2022

எண்ணப்பறவை_53

எண்ணப்பறவை_53

முதலில் மனதிற்குள் படிக்கிறார் கணபதி சுந்தரம்.  பிறகு விசுவும் செல்லம்மாளும் கேட்கும்படி.

'அன்புள்ள குமுதாவுக்கு,

அவசரமா எழுதறேன் இந்த கடுதாசிய.   உங்க அப்பா என்ன ஆஸ்பத்திரிக்கு உடனே கிளம்பணும்னு சொல்லிண்டே இருக்கா.  நீ மெட்ராஸுக்கு போயிருக்கறதால நேரா சொல்ல முடியல.  அதான் இந்த லெட்டர்.  ஓம் ஜொல்லரியில அமுதாக்காக ஒரு நகை சீட்டு போட்டுண்டு வரேன்.  உன் கிட்ட சொல்லியிருக்கேனான்னு ஞாபகம் இல்ல.   கடைசி மாச தவணைய நேரா கட்ட முடியல எனக்கு உடம்பு சரியில்லாததால.  இன்னிக்கு ஒன் ஃப்ரெண்ட் கல்பனா நம்மாத்து வாசல் வழியா போயிண்டிருந்தா.  சீட்டு புக்கையும் பணத்தையும் கொடுத்திருக்கேன் அவ கிட்ட.  மறக்காம வாங்கி வெச்சிக்கோ.  சின்னது இங்க வரச்சே நான் அழச்சிண்டு போய் அவளுக்கு பிடிச்ச டிஸைனா வாங்கிக் கொடுக்கறேன்.  நாலு வருஷமா கட்டிண்டு வரேன்.  அப்பாக்கு தெரியாது.  நான் ஆஸ்பத்திரியிலேந்து வந்தோண்ண நைச்சியமா சொல்லிக்கிறேன்.  என் உடம்பு விஷயமா அப்பா என் கிட்ட ஏதோ மறைக்கறார்.  ஆனாலும் கவலப் படாதீங்கோ.  ஒண்ணும் ஆகாது எனக்கு.  பட்டு குட்டிக்கு கவர்மெண்ட் உத்யோகம் கெடச்சுடுத்து.  இனிமே ஆத்துல ஒரு கவல இல்ல.  எல்லாம் நல்லபடியா சரியாயிடும்.'

பாராக்கள் இல்லை. பங்க்சுவேஷன்கள் இல்லை.  நுணுக்கி நுணுக்கி ஏத்தலும் இறக்கலுமா ஒரு கடிதம்.

'ஆத்துல ஒரு கவல இல்லையா?  அதான் பெரிய கவலையா கொடுத்துட்டு போயிட்டியேடி.  நீ இருக்கற வரைக்கும் எங்களுக்கு என்னிக்குடி இருந்தது கவல?'

படித்தவுடன் பீரிட்டு வந்தது அழுகை கணபதி சுந்தரத்திற்கு.

'குழந்தையாவே என்ன வளர்த்துட்டாடா.  ஒரு மண்ணும் தெரியாமயே ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டேன். குழந்தைகள நன்னா படிக்க வெச்சிருக்கோம்.  அதுக நல்ல உத்யோகம் பார்த்து நன்னா அவாளோட வாழ்க்கைய அமைச்சுக்கும்.  கவலப் படாம நீ உன் உடம்ப கவனிச்சுக்கோன்னு அடிக்கடி சொல்லுவேன்.  பஸ்ஸுல போடின்னாலும் கேட்க மாட்டா.  நடையா நடப்பா பத்து மைலானாலும்.'

'சரிடா GS.  அதெல்லாம் எங்களுக்கு தெரியாதா என்ன?  இந்த கல்பனா பத்தி ஏதாவது தெரியுமா?'

'இப்பதான் ஞாபகம் வரது.  வாலு போய் ஒரு மாசம் கழிச்சு ஒரு கொழந்த ஒரு புத்தகமோ அட்டையோ கொண்டு வந்து கொடுத்தா.  அத நான் என்ன ஏதுன்னு கூட பார்க்கல.'

'எங்க வெச்சேண்ணாவது ஞாபகம் இருக்கா?  கொஞ்சம் யோசிச்சு சொல்லு டா.'

'அப்ப இருந்த நிலையில யார் வந்தா யார் போனா யார் என்ன கொடுத்தா ஏன் கொடுத்தா.. எதுவுமே புரியல.  சின்னவளுக்கு உத்யோகம் மெட்ராஸுல கெடச்சதால குமுதாவ துணைக்கு அனுப்பி வெச்சோம்.  அப்பத்தான் வாலுவுக்கு வயறு வலி ஜாஸ்தியாயி என்னென்னவோ ஆயிடுத்து.  குழந்தைகளுக்கு தகவல் சொல்ல வேண்டாம்.  அப்புறம் அதுக அழும்னு சொல்லிண்டே இருந்தா...'

சீட்டு புத்தகம் ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ மற்றவைகள் எல்லாம் கரெக்டா ஞாபகம் வருகிறது.

'மாமா, நீங்க ஒவ்வொண்ணா சொல்ல சொல்ல சொல்ல எனக்கு அவ ஞாபகமாவே இருக்கு.  வேண்டாம் மாமா, மனசு ரொம்ப வேதனையா இருக்கு.'

'உங்க பேரை ஒரு நாளைக்கு அஞ்சு தடவையாவது சொல்லிடுவா.  சில சமயம் பகவான் ரொம்ப கொடூரமானவன் மாமி.  யார் மேலையோ இருக்கற கோபத்த நன்னா போயிண்டிருக்கற குடும்பங்கள்ல காட்டிடுறான்.'

'ஏய் GS.  சும்மா அனத்தாம சீக்கிரம் அந்த ஓம் ஜ்வல்லரி பாஸ்புக்க தேடற வழியப் பாரு.'

'என்னா, நம்ம கோர்டர்ஸுலேயே இருக்காரே கிச்சா மாமா.  அவருக்கு ரொம்ப தெரிஞ்சவாதான் அந்த ஓம் நகைக்கடக்காரா.  இந்த லெட்டர எடுத்துண்டு போய் அவர் கிட்ட பேசினா அவர் நல்ல வழிய காட்டுவார்.  பதட்டப்படாதீங்கோ மாமா.  சீட்டு நாட்டு போட்டுண்டு வரேன்னு சொன்னாளே தவிர எங்கே ஏதுன்னு என் கிட்ட கூட சொல்லல.'

'எதுக்கும் தேடறதுல ஜெயிச்சுட்டா யார் தயவும் தேவையில்லையே.  GS, நன்னா ஞாபகப் படுத்தி தேடுடா.  எனக்கு ஒண்ணுதான் புரியல செல்லம்.  எதுக்கு ஒரு லெட்டர எழுதி சர்வ ஜாக்ரதையா ஒரு ட்ரங்க் பொட்டியில பூட்டி கடைசி நேரத்துல கூட யார் கிட்டேயும் இந்த மாமி சொல்லாம இருந்தா?'

'லெட்டர்ல நம்பிக்கையா எழுதியிருந்தாலும் தான் இருக்க மாட்டோமோன்னு ஒரு பயம் அவளுக்கு வந்திருக்கும்னா.  அதான் பட படப்போட லெட்டர எழுதி எங்கேயோ ரகசியமா வைக்கணும்னு நெனச்சிருக்கான்னு யோசிக்கிறேன்.  எப்படியோ, மகராசி இக்கட்டான சூழல்ல மாமாக்கு எப்படி உதவறா பாருங்கோ.  எல்லாம் பகவானோட அனுக்ரஹம்னா.'

விசுவும் செல்லம்மாளும் பேசிக் கொண்டிருந்த போது எங்கெங்கேயோ அந்த அட்டையை தேடிக் கொண்டிருந்தார் கணபதி சுந்தரம்.

'விசுஉஉஉஉ.  இப்ப ஞாபகம் வந்துட்டுத்துடா.  ஏதோ ஒரு ஸ்லோக புத்தகத்துக்குள்ள வெச்சதா ஞாபகம்.  இரு பார்க்கறேன்.  கெடச்சுடும்.  நம்பிக்கை இருக்கு.'

'ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்திரம் மற்றும் லக்ஷ்மி ஸ்துதி பொருளுரையுடன்.'

அட்டையில் ஸ்ரீ லக்ஷ்மி ப்ரத்யக்ஷமாக கமலத்தில் வீற்றிருக்க உள்ளே அந்த ஓம் ஜ்வல்லரி அட்டை.

'அமுதா, C/o கணபதி சுந்தரம், B3, பெல் க்வார்ட்டர்ஸ், திருச்சி.'

'தவணை விவரம்: ரூ 200 X 50 மாதம்'

அட்டையை அவரிடமிருந்து வாங்கிய அடுத்த கணம் விசு அவரை ஆரத் தழுவுகிறார்.

'டேய் படவா.  பகவான் இருக்கார்டா உன் பக்கம் மாமி ரூபத்துல.  இனிமே தைரியமா இறங்குடா.  எல்லாம் பரிபூரணமா ஒவ்வொண்ணா கிடைக்கும் பாரு.  அடியே செல்லம், உன் ஃபரெண்டு ஃப்ரெண்டு தான்.  பத்தாயிரம் சேத்திருக்கா பாரேன்.  எப்படியும் ஆறேழு பவுன் தேறாது?.  நகை பிரச்சனையும் ஓரளவு தீர்ந்து போச்சு.  அமுதாவே கொஞ்சம் பணம் சேர்த்து வெச்சிருப்பா.  இவன் கிட்ட ஒரு ஐம்பது இருக்குன்னான்.  இது போதாதா என்ன?'

'ஓ.  தாராளமா போதும்.  மிஞ்சி மிஞ்சி போனா இன்னும் ஒரு அஞ்சாயிரம் கையில எதுக்கும் இருக்கட்டும்னு வெச்சிக்கலாம்.'

'ஏய் GS, இனிமே அத்தன சரீர ஒத்தாசைக்கும் நானும் செல்லமும் இருக்கோம்.  திருச்சியிலேயே ரெண்டு கல்யாணத்தையும் வெச்சிக்கோ.  ஒரே சத்திரம் சாப்பாடுன்னு சமாளிச்சுடலாம்.'

என்னென்னவோ சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.  ஆனால் அவை அனைத்தும் கணபதி சுந்தரம் காதுகளில் விழவில்லை.

உடல் முழுவதும் குருதியோட்டத்தில் அவருடைய வாலு அவரை படுத்திக் கொண்டிருந்தாள்.

'நாங்க என்னவோ பேசிண்டிருக்கோம்.  காரணமில்லாம சிரிக்கறையே?'

விசுவின் கேள்வி ஞாயம்தான்.  ஆனால் வாலுவின் லூட்டி கணபதிக்கு மாத்திரம்தானே தெரியும்?  வெளிப்படையா இதெல்லாம் சொல்ல முடியுமா என்ன?'

தொடரும்...

No comments:

Post a Comment