Saturday, March 19, 2022

ஈஸி சேர் - 4

 #Easychair_4

அத்யாயம் : 4 ...  ஈஸி சேர்

இருப்பு கொள்ளவில்லை.  நங்கநல்லூரில் இருக்கும் நடராஜ மாமாவாத்துக்கு போனான்.  வாசல் சாத்தியிருந்தது.  திறந்தவள் அவள்.  கொஞ்சம் சிலிர்ப்பும் சிரிப்பும்.  பழைய பட்டுப்பாவாடையும் தாவணியும் அவன் தேவதைக்கு அழகூட்டியது.

அப்பா இல்ல?

செத்த இங்க உட்காருங்கோ.  கூப்பிடறேன்.

ஜன்ம சாபல்யம் அடைந்த உணர்வு, பேசிவிட்டாளே!!  தனக்குள் அவள் சொன்ன 'செத்த இங்க உட்காருங்கோ, கூப்பிடறேன்' என்ற வாசகத்தை இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்தான்.

வைத்தா, உள்ள வாடா என்றது நடராஜ மாமா குரல். வாசலில் தலையை குனிந்து உள்ளே சென்றான்.

என்னடா, surprise ஆ வந்திருக்கியே.  நாளைக்கு தேவநாதன் ஆத்தில கணபதி ஹோமம் இருக்கு, தெரியுமோல்யோ?

மாமா, எனக்கு எங்க அம்மா அப்பாவ பார்க்கணும்னு தோண்றது.  அத சொல்லத்தான்....

நானே சொல்லணும்னு நெனச்சிண்டிருந்தேன்.  அம்மாப்பாவ எப்படியாவது மெட்றாஸ் அழைச்சுண்டு வந்துடு.  எத்தனை நாள்தான் தனியா சமச்சிண்டு இருப்ப?

புன் சிரிப்பை காரணம் இல்லாமல் உதிர்த்தான்.  என் பொண்ண கட்டிக்கோ, எத்தனை நாள்தான் தனியா சமச்சிண்டு இருப்ப  அப்படின்னு கேட்டமாதிரி இருந்தது.  அதான் அசட்டு சிரிப்பு.

அதான் மாமா நானும் நெனச்சுண்டு இருந்தேன்.  ஊருக்கு போய் ஏதாவது வழி செய்யணும்.  ரெண்டுபேருக்குமே அடிக்கடி ஒடம்ப படுத்தறது.

ஒன் நெனப்பாவே இருக்காளோன்னோ, இருக்காதா பின்ன.  நாளைய சமாச்சாரத்தை நான் பாத்துக்கறேன். விஜாரப் படாம நீ கெளம்பு.

சொல்லிவிட்டு ஒரு இருநூறு ரூபாய கையில் திணித்தார்.  செலவுக்கு வெச்சுக்கோ வைத்தா.  காஃபி சாட்டுட்டு போ, என்ன?

பர்வதம், வைத்தாக்கு காப்பி கொடும்மா, என்று கூப்பாடு போட்டார்.

அடிச்சதடா ஜாக்பாட், மனதுக்குள் மீண்டும் மத்தாப்பு.  வீடு முழுவதுமே ஃபில்டர் காப்பி மணம்.  லேசான கொலுசு சத்தத்துடன் பர்வதம் காப்பியோடு வந்தாள் சிறிது நேரத்தில்.

நேருக்கு நேர் பார்க்க பயம்.  வெண்ணெய் திரண்டு வறது, தாழிய ஒடச்சுடக் கூடாதேங்கற பயம்தான்.

டிகாக்‌ஷன் சர்க்கரை போருமா பாருங்கோ, அட அவள் குரல்தான்.  அவன் எங்க பதில் சொல்லப் போறான்?  வெந்நீரையே கொடுத்தாலும், காப்பின்னு குடிச்சிருக்க மாட்டானா என்ன?

காப்பி நன்னா இருக்கா?

மண்டையை மாத்திரம் ஆட்டினான்.

இரவு ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸில் கும்பகோணத்திற்கு டிக்கெட்.  அங்கேந்து மன்னார்குடி பஸ்ஸில் ஏறி பூவனூர் இறங்க வேண்டும்.

ரயில் ஓடியதே தெரியவில்லை.  மீண்டும் மீண்டும் வாசல் திறப்பு, பட்டுப்பாவாடை தாவணி, செத்த இங்க உட்காருங்கோ, அப்பாவ கூப்படறேன், டிகாக்‌ஷன் சர்க்கரை போதுமா, காப்பி நன்னாயிருக்கா....ரீவைண்ட் பண்ணி பண்ணி ஊரே வந்துட்டுது.

பூவனூர் வரும்போது காலை ஆறு மணி.  இரண்டு கிலோ மீட்டர் நடை, ஆம் வந்துடும்.

தொடரும்....

No comments:

Post a Comment