77. கிருஷ்ணார்ப்பணம் (2 of 2) (சிசீ9) #ganeshamarkalam
ஆத்துக்கு வந்த கோபாலய்யங்காருக்கு மண்டகப்படி காத்திண்டிருந்தது.
ஒருரூம் செட்டுல அவர், ஆத்துக்காரி ராஜி, ஒரே பையன் சினுவாசனோட. வந்தவர் பொன்னாடை, தேங்கா வாழைப்பழப் பையக் தரர். ஆசையா வாங்கிண்ட ராஜி “இன்னைக்கு என்ன கதை?” “குசேலர் கதை”. “அதுக்கு என்ன தந்தா?” “இதோ மின்னாடி வச்சேனே!” பாக்கரா. “சட்னி செய்யணம்னா பச்சைமிளகாய் வாங்கேண்டாமா? அதுக்கு காசு? சட்னிய எதுக்கு தொட்டுக்கவாம்? 2நாளா மோரை கரைச்சு ஒருவேளை குடிச்சாரது. பணம் கொடுத்தாளா?” “இல்லைடீ. நானும் கேக்கலை.”
“என்னண்னா இது? 100ஆவது கோண்டு வருவேள்னு பாத்தேன். கைவீசிண்டு குசேலர் மாதிரி வந்து நின்னா சீனு என்னத்தை சாப்பிடுவான்? நாமளாவது பசி பொறுத்துண்டலாம். பொன்னாடைய மெல்லுவானா குழந்தை? இதையாவது துணிக்கடைல கொடுத்து காசாப் பண்ணிண்டு வரப்பிடாதா?” “மரியாதை செஞ்சு போட்டதுடீ. உடனே விக்க மனசு வரலை. தாகத்துக்கு பால் சொம்புலேந்து 2 சொட்டுத்தான் வாயில விட்டுண்டேன். நீங்க பசியா இருக்கச்சே பாலக் குடிக்கத் தோணலை.” “சொம்புப் பால அப்படியே எடுத்துண்டு வரவாவது தோணித்தா?” “அதெப்படி? இவன் சொம்ப எடுத்துண்டே கிளம்பரான்னு நினைக்க மாட்டாளா? நமக்கும் கிருஷ்ணர் வழி காமிப்பர்”. “பக்கத்தாத்துல இரவல் வாங்கி அவுல் முடிச்சுத் தரட்டுமா? யாரண்டை போய் கொடுப்பேள்? எங்கே இருக்கான் உங்க கிருஷ்ணன்? இந்த குசேலர் கதைய 20 தடவையாவது சொல்லியிருப்பேள். இப்போ நாம என்னத்தை சாப்பிடன்னு யோசிச்சேளா என்ன?”
இதெல்லாம் நடந்தது உனக்கெப்படி தெரியும்? கேக்கலாம். கோபாலய்யங்கார் என் அப்பா. ஆத்துக்கு ஓடி வந்தது அப்பா நிச்சயம் காசு கொண்டு வருவர்னு. இல்லைன்னது அத்தன ஜோரா கதைசொன்ன எங்கப்பா மேல வெறுப்புதான் வந்தது. நம்பளுக்கு அரிதாக கிடைக்கும் ஒண்ணயே நாம ஸ்வீகரிச்சுக்காம கிர்ஷ்ணனுக்கு அர்ப்பணம்னு சொல்வதே உண்மையான சரணாகதி, அப்படி காரியத்தை குசேலர் செய்யலைன்னா கிருஷ்ணர் அத்தனை பெரீய அனுக்ரஹம் செஞ்சிருப்பாரா என்பது சந்தேகம்னு சொன்னர். சொன்ன இவர் கதை கந்தலான்னா இருக்கு!
எத்தனைநா தாக்குப் பிடிக்க? எனக்காக இவா பட்டினி கிடக்கா! கொஞ்ச நஞ்சம் யாசகமா வருவதையும் எனக்கு ஒதுக்கிடுவா. “நீ படி, ஏதாவது வாங்கிச் சாப்டுக்கோ!” இதை பொறுத்துக்க முடியாம ஊரை, தோப்பனார் தாயாரை விட்டூட்டு அன்னைக்கு ஓடிவந்ததும் என்னெல்லாமோ நடந்து மாமல்லபுரத்தில பாத்த வெளிநாடு ட்யூரிஸ்ட் “என்னோட வரீயா?”ன்னு அமேரிக்காக்கு கூட்டிண்டுபோய் படிக்கவச்சு இன்னைக்கு இத்தனை பெரீய நிலமையில.
லக்ஷ்மி சுந்தரம் ஹால் பக்கத்துலவே காமராஜ் நகர், 3ஆவது தெருல நாங்க இருந்த வீட்டு பக்கமா போரேன். வீட்டுக்காரர் நாடார். 3 போர்ஷண், ஒண்ணுல அவர் தங்கிண்டு. நல்ல மனுஷர். வாடகை தரலைனு கஷ்டப் படுத்த மாட்டார். முடிஞ்சப்போ அம்மாவோட வெத்தக் குழம்புக்கு புளியும் சுண்டைக்காயும் காசு கேக்காம தருவர். கோபாலய்யங்கார் வீடுன்னுதான் பிராபல்யம். யாரும் சாப்டேளான்னு விசாரிச்சதில்லை. வீடு கை மாறியிருக்கணம். வாசல்ல புதுசா காம்பவுண்ட் கட்டி தூண்ல “கிருஷ்ணா குடில்”னு பதிச்சு. “குசேலர் நினைவில்லம்” சரியாயிருக்கும்.
திரும்பி ஹோட்டலுக்கு வந்துட்டேன். மதுரைல கிருஷ்ணர் கோவில் எங்கே?
இஸ்கான் கோவிலே இருக்காம். ஸ்ரீ ராதா மதுராதிபதி கோவில். தேவி தியேட்டர் கிட்டக்க. நவநீத கிருஷ்ணன் கோவில்னு அப்பவே விளக்குக் கம்பத்துகிட்ட. போலாமா? ஐயங்காராச்சே! சிவன் கோவிலுக்கே போமாட்டம். அத்தனை பெரீசா, அழகா நடுநாயகமா மீனாக்ஷி கோவில், எங்கேந்தெல்லாமோ வந்து பாத்துட்டு போரா, நாங்க போனதில்லை. இன்னைக்கு அங்கேனு ட்ரைவரை வரச்சொல்லீட்டு கிளம்பினேன். அவன் “சொக்கிக்குளத்துல நவநீதகிருஷ்ணன் சக்கரத்தாழ்வார் கோவில் இருக்குசார்.” வைகையாத்தை கடக்கரச்சே மீனாக்ஷி கோபுரம் தெரிஞ்சதப் பாத்துண்டு.
அற்புதமான கோவில். இத்தன நா உள்ளே வராம இருந்துட்டமேன்னு பட்டது. ஈஸ்வரனும் கோபாலனும் ஒண்ணேன்னும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா உறவாடின ஆத்ம தத்துவமேன்னும் அந்த மீனாக்ஷி கல்யாண திருக்கோலத்தை கம்பத்தடி மண்டபத்துல பாக்கரப்போ புரிஞ்சிக்கரேன். தரிசனங்கள் முடிஞ்சதும் சுத்தீண்டு வந்து பொற்றாமரைக் குளக்கரையில் உக்காந்துண்டு ஆச்சர்யப்பட வைக்கும் தெற்கு கோபுரத்தை பாக்கரேன். பக்கத்துல ஒரு மாமா வந்து உக்காந்துண்டு “என்ன பாக்கரேள்?’ “கோபுரந்தான்”.
“இங்கேந்து பாக்கணம், அப்பரம் அது கிட்டக்க போய் நின்னுண்டு அண்ணாந்தும் பாக்கணம். வெளிப் பிரகாரத்துல சுத்திண்டே வரப்போ இன்ன பிற கோபுரங்களை பாத்தப்பரம் இன்னொருக்கா தெற்குவாச கோபுரத்தை பாக்கணம், அப்போதான் இதோட தனித்துவமான அழகு விளங்கும். எங்கேந்து வந்திருக்கேள் ஊருக்கு புதுசா?”
“மதுரைக்காரந்தான். எங்கப்பா கதாகாலக்ஷேபம் செய்வர். அப்போ தல்லாகுளத்துல இருந்தம். இப்போ ந்யூ ஜெர்ஸீல. ரெம்ப வருஷத்துக்கு அப்பரம்”. “அப்போ இந்த கோபுரத்தை பாத்திருப்பேளே!” “கோவிலுக்குள் வந்து ரசிச்சுப் பாத்ததில்லை”. காரணத்தை சொன்னதும் சிரிச்சுண்டர். “உங்க பேரென்ன, மதுரைல எங்கே இருக்கேள்?” நான் கேக்க “எம்பேர் மதுசூதனன். சென்னை. இங்கே பொண்ணாம் இருக்கு. வந்துட்டு போவேன். உங்கப்பா கதாகாலக்ஷேபம் செய்வர்னா, ராமாயணம் மஹாபாரதமா?” “ஆமாம். சின்ன கதைகளும். கூப்பிடுவது குறைஞ்சே போச்சு. அவருக்கு பிடிச்ச பிரவசனம் குசேலர், கிருஷ்ணர் பத்தின கதைகள். கீசக வதம், திரோபதி வஸ்திராபகரணம் இப்படீன்னு. குசேலர் கதைனா 3 மணிநேரம். அவரப்போல் இவரும் வறுமையில் கஷ்டப்பட்டர்”. “ஏன் கிருஷ்ணர் உதவ வரலையோ?”
இடக்கா கடவுளை நிந்திக்கராப்போல கமென்ட்! “ஒரு சுவாரஸ்யத்துக்கு கேட்டேன் கோச்சுக்காதீங்கோ. அந்த காலத்துல பிராம்ணா ரெம்பபேர் கஷ்ட ஜீவனம்தான். கடவுள் வந்து காப்பாத்திக் கொடுத்ததா ஒண்ணும் சரித்திரம் இல்லை. கிருஷ்ணார்ப்பணம்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சகிச்சுக்க வேண்டியதுதான்.”
அட! அதே வார்த்தை பிரயோகம்! இவர் அதுக்கு என்ன அர்த்தம் வச்சிருப்பர்? கேட்டா என்ன? “உங்களுக்கு குசேலர் சரித்திரம் தெரியுமோ?” “தெரியுமே!” அன்னைக்கு குசேலர் கிருஷ்ணருக்கு அவல் கொடுத்தப்போ அங்கே குசேலராத்துல என்னாச்சு? அதுக்கு என்ன காரணம்? கிருஷ்ணார்ப்பணம்னு நீங்க இப்போ சொன்னேளே அதுக்கென்ன அர்த்தம்? கிருஷ்ணர் இவன் அவல் கொண்டுவந்து நீட்டட்டும் அதுக்கப்பரமா அனுக்ரஹம் செஞ்சா போதும்னு அவாள வறுமையிலவேவா வைக்கணம்? சரியாப் படலையே? மின்னமே குருகுலத்துல இருந்தப்போ குரு சொன்னார்னுட்டு மரம் வெட்டப் போனப்போவே குசேலர் கிட்டயிருந்த அவுலை கொடூன்னு வாங்கித் தின்ன கண்ணன் அதுக்கே இவா குடும்பம் கஷ்டப்படாமன்னா வச்சிண்டிருக்கணம்?”
“ஆஹா! மடக்கிட்டேள்! எனக்குத் தெரிஞ்சதை சொல்ரேன்.” பீடிகையோட ஆரம்பிச்சர்.
“குசேலர்னு ஒருத்தர் நிஜமா இருந்தரான்லாம் வேண்டாம். இந்தக் கதை பாகவதத்துல சொல்லப் பட்டிருக்கு. வேதவியாசர் எழுதினது. மிகப்பெரீய விஷயத்தை நம்மைப்போல சாமான்யாளுக்கும் புரியணம்னு சொல்லியிருக்கர். 2பேரும் ஒண்ணா படிச்சு, பாகுபாடில்லாம குருகுலத்துல சேவை செஞ்சுண்டு கலைகளை கத்துண்டத அந்தக் காலத்துல சமுதாய அந்தஸ்து பாக்காம இருந்தான்னு சொல்ல. கிருஷ்ணரை விஷ்ணுவோட அவதாரம்னு வச்சிண்டா அவருக்கு குசேலர் கஷ்டப்படுவது தெரியாதா என்ன? குசேலர் அவலை எடுத்துண்டு அரண்மனைக்கு வரவரைக்கும் ஏன் டிலே செஞ்சர்னு கேட்டேள். அதுக்கு குசேலரைப் பத்தியும் நாம தெரிஞ்சுக்கணம். எப்படிப்பட்ட நிலமையிலும் தன் கவுரத்தை விட்டுக் கொடுக்காம, ஆசார சீலரா வாழ்ந்தவர் சுதாமா என்ற குசேலர். இந்தா வச்சுக்கோன்னு எப்பவோ வைர வைடூர்யங்கள் நிரம்பின பெட்டிய அவாத்துல கிருஷ்ணர் சேர்ப்பித்திருக்க முடியும். அது குசேலரை அவமானப் படுத்தும்படியா அமைஞ்சிருக்கும். இப்போதும் சுசீலை வற்புறுத்தினதின் பேரில் வந்திருக்கார் நண்பர்னு கண்ணனுக்கு தெரியாதா? எல்லோமும் அறிந்த கிருஷ்ணர், குசேலர் இப்போ வந்த காரணம் தெரியாமலா? குசேலர் தன்னோட நிஷ்காம்ய பக்தர். அன்புள்ள நண்பர். செல்வம் வேண்டி வழிபட்டவர் இல்லை. அதனாலவே இவருக்கு அனைத்து செல்வங்களையும் தரணம். அதுக்கு தக்க தருணம் வந்துடுத்துன்னும், கிருஷ்ணார்ப்பணம்னு சுசீலை சொல்லித் தந்ததின் உண்மை அர்த்தம் இந்த கதையை தெரிஞ்சுக்கப்போர ஒவ்வொருத்தருக்கும் புரியர நேரம் வந்துடுத்துன்னும் இப்போ அனுக்ரஹம் செய்ய தீர்மானிக்கரார். இப்படி கிருஷ்ணார்ப்பணம் செய்யரவாளுக்கு முக்தியும் அளிப்பேன். தேவர்களுக்கும் கிட்டாத அருளைப் புரிவேன் என்று கிருஷ்ணர் சொல்ரார்”.
“கிழிஞ்ச துணீல அவலை முடிஞ்சு எடுத்துண்டு நிண்ட தூரம் வந்திருக்கர். பிரிச்சு “இந்தா கண்ணா இதைத்தான் கோண்டு வர முடிஞ்சது!” கண்ணால ஜலம் விட்டுண்டே குசேலர் நீட்டரார். ஆசையா வாங்கிண்டு ஆங்காங்கே சிதறிய அவலை பொறுக்கி எடுத்து கிருஷ்ணர் வாயில் போட்டுக்கராராம். ஒவ்வொண்ணையும் சுவைத்து முழுங்கி. ஏன்னா இத வெறும் நேவேத்தியமா பாக்கலை. கிருஷ்ணார்ப்பணமா பாக்கரர். கிருஷ்ணார்ப்பணம் என்பது இப்போல்லாம் நம்மில் சிலர் மனக் கிலெசத்தோட ஆதாயம் தேடிண்டு கிளம்பும் மநோபாவத்துல செஞ்சுப்பது இல்லை. குசேலர் அன்போடு கோண்டுவந்த காணிக்கை. அதுவும் குசேலருக்கே கிடைக்கதற்கரிய அவசியமா அவா பசியைத் தீக்கக்கூடிய சமாச்சாரத்தை தொடாம, பத்திரமா எடுத்துண்டு வந்தது ஒப்பற்ற நம்பிக்கை வச்சிண்டிருக்கும் நண்பனின் இப்படிப்பட்ட அன்புக்கு பர்த்தியா காமிச்ச அன்பே இப்போ செல்வமா – இப்படி இனிமேல் இதுபோன்ற வறுமை இவனுக்கு ஏற்படவே கூடாதுனு நினைச்சு அனுக்ரஹமா. அதையும் சின்ன விளையாட்டா. “நீ போரப்போ உங்கூட வண்டீல எல்லாம் வரும்’னு சொல்லாம இங்கே இருக்கப்போவே அங்கே அவரோட குடிசை வீடு தங்க மாளிகையாக மாறித்தாம், மனைவி மக்கள் நல்லாடைகளுடன், உயர்ந்த நகைகளுடன் நின்னாளாம். அவா பசி தீந்ததாம். இதெல்லாம் இவர் திரும்பிப் போனதும்தான் பாக்கரார். அப்பவும்கூட கிருஷ்ணர் இதெல்லாம் தராமல் இருந்திருந்தால் நன்னா இருந்திருக்கும். செல்வம் ஒரு மனுஷணுக்கு கர்வத்தை கொடுத்து வீழ்ச்சி அடையச் செய்யுமேங்கிர கவலையோடவே குசேலர் வாழ்ந்ததா கதை”.
“அப்போ கிருஷ்ணார்ப்பணத்துக்கு உண்மையான அர்த்தம்?” “அன்னைக்கு உங்கப்பா சொன்னது, சுசீலை நினைச்சுண்டு சொன்னது, எல்லாமும் தவிர பற்று அற்ற மனப்பாங்குடன் கிருஷ்ணரை வழிபடுவதே, எல்லாம் உனக்கு அர்ப்பணம் நீ வச்சிண்டதுபோக எனக்கு என்ன கொடுப்பாயோ அதுலயே நான் சந்தோஷிப்பேன்னு பிரதிஞை எடுத்துப்பது. நாம வாழும் இந்த உலகம், இயற்கை நமக்கு கொடுக்கும் உணவு, இந்த பிரபஞ்சம் எல்லாம் கிருஷ்ணருக்கே சொந்தம் எங்கிர மனப்பாங்கும் இதுல எது நம்முதோ அது நமக்கு தானா வந்து சேரும்னு யாரண்டையும் போய் கையேந்தாம கடைசீ வரைக்கும் குசேலர் வாழ்ந்ததுபோல் நாமளும் வாழ்வம்னு பிரதிஞை எடுத்துப்பது”.
அப்போதான் இந்த மதுசூதனன்கிட்ட நான் வீட்டை விட்டு அதீத கஷ்டகாலத்துல எங்கப்பா அம்மாவை நிற்கதியா விட்டூட்டு ஒடிப் போய்டதை சொல்ரேன். ஆச்சர்யமா பாக்கரர். “சார் உங்களைப்போல இப்போ மிக அதிக அளவுல பிராம்ணக் குழந்தைகள் அமேரிக்காக்கு போயிடரா. பெத்தவாளை விட்டூட்டுத்தான். என்ன ஒண்ணு நீங்க சொல்லாம ஓடிட்டேள். இவாள்லாம் சொல்லிட்டுப் கைச் சிலவுக்கு காசையும் வாங்கீண்டு போயிட்டு திரும்பி வந்துடப்போராப்போல பாவனை பண்ணிண்டு”.
“அவா கிடக்கட்டும்சார். மிக அற்புதமான என்னத்தயோ ஒண்ணை தொலைச்சுட்டதா ஃபீல் ஆகி இப்போ அதைத் தேடிண்டு வந்திருக்கேன் சார்”. “என்னத்தை தொலைச்சேள்?” “அதான் பிடிபடலை. ஆனா மனசுக்குள் நிம்மதியே இல்லை. தொலைச்சது என்னமோ இங்கே மதுரைலன்னு மட்டும் தெரியும்”.
“சிம்பிள்! நீங்க தொலைச்சது உங்களை பெத்தவா அன்பைத்தான். விலை மதிப்பில்லாதது. அதை கிருஷ்ணராலேயும் கொடுக்கமுடியாது. அத்தனை கஷ்டத்துலேயும் அவா உங்கமேல் அன்புதான் வச்சிருந்திருப்பா. பணக்காரளாத்துல இருந்த அம்மாப்பாவைவிட ஒரு படி கூடுதலாவேன்னு சொல்லுவேன். அதைத்தான் நீங்க தொலைச்சுட்டு போயிருக்கேள். அதைப் புரிஞ்சிக்காம ஓடியிருக்கேள். இப்போ எங்கேந்து மீட்டுப்பேள்?” “தெரியலையே! அப்போ ஆயிசு பூரா மனவேதனையோட கஷ்டப் படணுமா? உடம்பு உபாதை அதுவும் ஒரு பக்கம்”. “தேவையில்லை”. “அப்படியா அதுக்கென்ன செய்யணம் சொல்லுங்கோ!”.
“உங்களுக்கு கிடெச்சதெல்லாம், கிடைக்கணம்னு நீங்க ஆசைப்படுவது ஆனா கிடைக்காமப்போனது எல்லாத்தையும் கிருஷ்ணார்ப்பணம்னு நினைச்சுக்கோங்கோ. இப்போ ரெம்பிக் கிடக்கும் மனக்கஷ்டத்தையும் அவனுக்கே அர்ப்பணமா கொடுத்துங்கோ. அவன் பாத்துப்பான். உங்க மனசு லேசாகும் அற்புதம் நடக்கும்”. பதிலுக்கு காத்திருக்காம மதுசூதன் கிளம்பிப்போரர்.
2நா மதுரைல, ஷேத்திரங்கள் பாத்துட்டு கும்மோணம் போயி கிருஷ்ணர் கோவிலா பாத்துண்டே பாண்டிச்சேரி வழியா வரச்சே “அன்னைக்கு போனமே விட்டலாபுரம் போ!”. ட்ரைவர் போரான். கோஷாலா மாமா எம்பின்னாடி காசு கெட்டு வந்த 80 வயசுப் பெரியவர தேடிப்போய் கோவிலோட பேங்க் அக்கவுன்ட் நம்பர் கேட்டு 1 மில்லியன் டாலர் ட்ரேன்ஸ்ஃபர் பண்ணினேன். அப்போ அந்த கோஷாலா மாமா சொன்னதில கிருஷ்ணார்ப்பணத்துக்கே ஓர் புது அர்த்தம் கிட்டித்து.
“வரவா நங்கொடை தர யோசிக்கரா. நீங்களே அன்னைக்கு கோச்சுண்டே போனேள். இன்னைக்கு இப்படி செஞ்சுட்டேள். உங்களை குசேலருக்கு அள்ளித் தந்த கிருஷ்ணனாத்தான் நான் பாக்கரேன். நாமெல்லாருக்குள்ளேயும் அவன் இருக்கான். குசேலர் மாதிரி யாராவது வாடினா அதைப் பாத்துட்டு அந்த கிருஷ்ணன் வெளீல வந்து இப்படி கஷ்டப்படரவாளுக்கு தன்னையே அர்ப்பணம் செஞ்சுண்டுடுவான்னு மின்னே கோபாலய்யங்கார்னு ஒருத்தர் கதை சொல்லக் கேட்டிருக்கேன். அதை நீங்க புரூவ் செஞ்சுட்டேள்!”
திரும்ப பிளேன் ஏறரப்போ மனசு நிர்மலமா, பரம நிம்மதியா ஃபீல் ஆச்சு. எங்கப்பாவையும் நன்னா புரிஞ்சுக்க முடிஞ்சது.
No comments:
Post a Comment