#Easychair_3
அத்யாயம் : 3 ... ஈஸி சேர்
இந்த வைத்யானாதன், நாராயணிக்கும் விஸ்வேஸ்வர ஐயருக்கும் காலம் சிறிது கடந்து பிறந்த மகன்.
நீடாமங்கலத்துக்கு அருகில் பூவனூரில் அவதரிப்பு. வைதீக குடும்பம். வேத சாஸ்திர சம்ப்ரதாயங்கள் அத்துப்படி அந்த விசு வாத்யார் என்கிற விஸ்வேஸ்வரருக்கு.
தானமாக பெற்ற இரு ஏக்கர் நிலம் மற்றும் ஊர் கொடுத்த ஒரு அக்ரஹார வீடு, சொந்தம். பணம் சுகங்களுக்கு குத்தகை பணம் கைகொடுத்துக் கொண்டிருந்தது.
கிலுகிலுப்பை நாட்கள் முடிந்தவுடன், வைத்தாவை கும்பகோணத்தில் வேதபாடசாலையில் சேர்த்துவிட்டார் விசு வாத்தியார்.
ப்பாதான் ஆரம்ப குரு. கணீர் என்ற குரலுக்கு விசு வாத்யார் சொந்தம். அந்த கணீர் குரல் இயற்கை அனுகூலத்தில் அவனிடத்தும் ஒட்டிக் கொண்டது.
மாதம் ஒருமுறை தாய் தந்தையை பார்க்க அனுமதி. பாடம் எப்படி சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று தந்தை கேட்டறிந்து சந்தேக விளக்கங்களையும் கொடுப்பார்.
பாலகனாய் இருக்கும் போது தந்தை மடியே அவனுக்கு சுகம் கொடுக்கும். மடியில் வைத்துக் கொண்டு மந்திரம் சொல்லுவார். எதிரே உள்ள உத்தரணியில் இவன் விளையாட்டு. அதை வைத்து மணி அடிப்பான் பஞ்ச பாத்திரத்தில். தீர்த்தத்தை கொட்டுவான். அர்ச்சனைப் பூக்களை அங்குமிங்கும் வீசுவான். விசு வாத்தியார் இவன் லீலைகளை ரசிப்பார். இவனுக்கு மட்டும் அவரிடத்தில் மடி விழுப்பு விதிவிலக்கு.
பாடசாலையில் படு சுட்டி. எல்லா குருமார்களுக்கும் இவன் அலாதி. சக மாணவர்களுக்கு இவனும் ஒரு குரு, சந்தேகங்களை தீர்த்து வைப்பதில். நீ ஒரு வாத்தியாராகத்தான் வருவாய், வித்யா தானத்தில் சிறந்து விளங்குவாய், அநேகமாக பாடசாலையில எல்லோர் விருப்பமும் ஆசியும் அவனுக்கு அதுவாகவே இருந்தது.
பாடசாலையை விட்டு வந்ததும் சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் ஆசிரியராக உத்யோகம், பெற்றோர் ஆசியோடு. ஒரிரு வருடங்களுக்குப் பிறகு வெளியே வந்து விட்டான்.
பரிச்சயமான நடராஜ சாஸ்த்திரிகள் வைதீக காரியங்களுக்கு தன் உதவிக்கு வைத்துக் கொண்டார். தன் தந்தையைப் போலவே அவர் வேத சாஸ்த்திரங்களில் ப்ரமிப்பூட்டுபவராக இருந்ததால் அவரிடம் இவனுக்கு அளவு கடந்த பாசம், பரிவு. இருவர் மன நிலையும் கிட்டத் தட்ட ஒரே ஃப்ரிக்கொன்ஸியில்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் பெற்றோரை பார்த்துவிட்டு வருவான்.
நடராஜ மாமாவாத்திற்கு போகும் போதெல்லாம் அங்கு ஒரு பெண் துருதுருவென்று வேலைகள் செய்து கொண்டிருப்பாள். அழகாகவும் தெரிந்தாள். நடராஜ மாமாவின் பெண் அவள் என்று பிறகு அறிந்தான்.
அவளுக்காகவும் அடிக்கடி நடராஜ மாமா ஆத்துக்கு செல்ல ஆரம்பித்தான். பெயர் கேட்க தயக்கம், அவள் பேசமாட்டாளா என்ற எதிர்பார்ப்பு. எல்லாம் வயதிற்கு ஏற்றார் போல வரத்தானே செய்யும்.
ஓரளவு தீர்மானித்து விட்டான். எப்படி ஆரம்பிப்பது என்பதே கவலை தற்போது. நடராஜ மாமா தன் மேல் வைத்திருக்கும் அன்புக்கு எந்த குந்தகமும் விளையக் கூடாது என்பதிலும் குறியாய் இருந்தான்.
பிறகு.....தொடரும்.
No comments:
Post a Comment