எண்ணப்பறவை_49
'ஒன்ன யாரு அந்த பொண்ண போய் பார்க்க சொன்னா? ஒன்னோட முந்திரிகொட்ட தனத்த நீ எப்பத்தான் விடப்போறியோ? இப்ப அந்த அமுதாவ பார்த்து என்ன ஆகணும் ஒனக்கு. என்னவோ போடா. ஒண்ணு நீயே எல்லாத்தையும் பேசி முடிவு பண்ணனும் இல்லாட்டி என்னையாவது நம்பணும். எங்க அம்மா என்ன சொல்வாளோன்னு என் மேல பழிய போட்டுட்டு வந்திருக்கியே இப்படி.'
'சாரிம்மா. ஏதோ அனுபவமில்லாம...'
'அதான் அவ அப்பா சொல்லியிருக்காளோன்னோ. ஓரளவு கணக்கு பண்ணிட்டு வந்து பேசறேன்னு. அதுக்குள்ள என்ன அவசரமோ உனக்கு. அவள பார்க்கணும்னு தோணியிருந்தா என் கிட்ட சொல்லியிருக்கலாமோன்னோ. நான் ப்ரியா கிட்ட பேசி அவள அவாத்துக்கு வரவழிச்சியிருப்பேனோன்னோ. மெனக்கெட்டு அவ ஆஃபீஸுக்கு போய் நாலு பேருக்கு முன்னாடி போய் பார்த்து... என்னவோ போடா. திருஷ்டி கிருஷ்டி படாம கல்யாணம் நடக்கணுமேங்கற கவல வந்துடுத்து.'
'புது வேலைய பத்தி அவ கிட்ட பேசிடலாமேன்னு....'
'போதும் ஒன் அசட்டுத்தனம். ஒன்னோட புது வேலைய ஒடப்புல போடு. நான் தான் சொல்லிட்டேனே ஏற்கனவே. கல்யாணம் பண்ணிக்காம நீ மெட்ராஸ் தாண்டப்படாது. ஆமாம், சொல்லிட்டேன். போனியே அவள பார்க்க, எதாவது சாதிச்சிட்டு வந்தியோ. என் மேல பழிய போட்டுட்டு தப்பிச்சு வந்துட்ட. ஒன்னால முடிஞ்சது அவ்வளவு தான்.'
'என்னையே சொல்லு. அவ கவர்மெண்ட் உத்யோகம் பார்க்கறா. அட்வான்ஸா சொன்னாத்தானே அவளுக்கு சௌகர்யமா இருக்கும்?'
'ஏண்டா, இன்னும் நிச்சயதார்த்தமே ஆகல. இன்னும் நானே பொண்ண பார்க்கல. அதுக்குள்ள என்ன அவசரம் ஒனக்கு. வெளியூர்ல வேல, மூணு பங்கு சம்பளம் அப்படி இப்படின்னு தற்பெருமை அந்த பொண்ணு கிட்ட பீத்திக்கணும். இத சாக்கா வெச்சிண்டு அவளோட கெக்க பிக்கன்னு பேசி இளிச்சிட்டு வரணும். அதுக்கு தானே போன நீ அங்க கனத்த காரியமா?'
'சரிம்மா, இனி நீ ஆச்சு என் கல்யாணம் ஆச்சு. நான் எதுக்கும் வரல.'
'முணுக்குனு கோபம் மாத்திரம் உங்க அப்பா மாதிரியே வரது. என் நிலைமையை யோசிச்சு பார்த்தியா. பொண்கள் எல்லாம் எவ்வளவு சாமர்த்தியமா இருக்கா இந்த காலத்துல. அந்த அமுதா எவ்வளவு அழகா பேசியிருக்கா ஒன் கிட்ட. அவளோட அப்பாவோட கஷ்டம் தான் அவளுக்கு பெரிசுன்னு எப்படி தீர்க்கமா சொல்லியிருக்கா பாரு. நீயும் இருக்கியே.'
இந்த அளவிற்கு அம்மா அவனிடம் கோபப் பட்டு இதுவரை பார்க்கவே இல்லை. அவன் அமுதாவை சந்தித்து பேசியதை சாதனையாக நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் ஞாயங்களை கோபத்தோடு சொல்லும்போது கோபமும் ஆத்திரமும் அவன் மேலேயே வருகிறது.
'சரி, சரி... நடந்தது நடந்துடுத்து. கொஞ்சம் பொறுமையா இரு. நான் யோசிச்சு ஏதாவது செய்யறேன். ஒரு சின்ன உபகாரம் பண்ணு எனக்கு. ப்ரியாவாத்துக்கு போய் அம்மா உங்கள பார்க்கணுமான்னு மாத்திரம் சொல்லிட்டு வா. அவ கிட்ட வேற எதுவும் பேசாதே. நான் கூப்டதா மாத்திரம் சொன்னா போதும், என்ன?'
'சரிம்மா'
அவன் ப்ரியாவிடம் சொல்லிவிட்டு அவன் நண்கனைப் பார்க்க சென்று விட்டான் அங்கிருந்து.
அவன் சொல்லிவிட்டுப் போன அரை மணியில் ப்ரியாவும் வந்து விடுகிறாள்.
'ஏண்டி ப்ரியா. பெரியவாளுக்கெல்லாம் தெரியாம ஏதேதோ ஏற்பாடு செஞ்சிண்டிருக்கேள் போல இருக்கு.'
'ஐயோ, மாமி. நேக்கு ஒண்ணும் தெரியாது. எல்லாம் உங்க பையன் அரவிந்த் தான்...'
'சொன்னான் சொன்னான். எல்லாத்தையும் சொன்னான். அந்த அமுதா பொண்ணு நீ சொன்ன மாதிரியே கெட்டிக்காரப் பொண்ணா தான் இருக்கா போல இருக்கே. அரவிந்த் ஆஃபீஸ்ல எப்படியோ. ஆனா ஆத்துல சமத்து சாமர்த்தியம் பத்தாது. அந்த அமுதா ராக்ஷசி கிட்ட சீக்கிரம் பிடிச்சு கொடுத்தா சரியாயிடுவான். நான் அவள பார்க்கணுமே சீக்கிரமா?'
'ஞாயித்துக் கிழம நம்மாத்துக்கு வர சொல்றேன். அப்படியே நம்மாத்துக்கும் அழச்சிண்டு வரேன்.'
'வேண்டாண்டி அம்மா. நானே உன்ன அழச்சிண்டு அவாத்துக்கு ஞாயித்துக் கிழமை போனா என்னன்னு யோசிச்சிண்டிருக்கேன். வர முடியுமா? வந்தா அவ அக்காவையும் பார்த்து பேசிட்டு வரலாம்னு தோணறது.'
'அதாவது பெரிய ராக்ஷஸியையும் பார்க்கலாம்னு யோசிச்சிண்டிருக்கேள். அப்படித்தானே.'
'போடி கொழுப்பெடுத்தவளே. ரெண்டு போட்டேன்னா பாரு.'
சிரித்து விட்டு, 'ஆமாண்டி அந்த கொழந்தையும் பார்க்கணும் போல இருக்கு. பவானி அவள பத்தி ஆஹா ஓஹான்னா. நிச்சயதார்த்தம் கூட ஆகல. அதுக்குள்ள மன்னி மன்னின்னு வாய் ஓயாம கூப்படறா.'
'உன் கிட்ட உண்மைய சொல்றதுக்கென்ன. அமுதாவோட அக்காக்கு ஒண்ணும் கவர்மெண்ட் உத்யோகம் இல்லையே. சட்டு புட்டுன்னு அந்த பொண்ணையே அரவிக்கு பண்ணிடலாம். அந்த பிராமணனும் ஒத்துண்டுருவார்னு எதிர்பார்த்தேன். இப்ப பார் எந்த பொண்ணு கவர்மெண்ட் உத்யோகத்த வேண்டாம்னு சொல்லும். நாம ஒண்ணு நெனச்சா, பகவான் வேற மாதிரி நெனைக்கிறார். நீ வேற அன்னிக்கு அமுதாவத்தான் அரவிக்கு முடிக்கணும்னு பிடிவாதம் பிடிச்சே.'
'மாமி, இப்ப என்ன நடந்துடுத்து. என் ஃப்ரெண்ட் அமுதாவ நீங்க பார்த்தேள்னு வெச்சுக்கோங்கோ, அவள கையோட உங்காத்துக்கு அழச்சிண்டு வந்துடுவேளாக்கும்.'
'இதுல ஒண்ணும் கொறச்சலில்ல. சரி, ப்ரியா. நாளைக்கு அவள பார்த்து சொல்லிடு. நாம அவாத்துக்கு ஞாயித்து கிழம வரோம்னு.'
'மாமி, அவ அப்பா ஊருல இருக்கிறதா சொன்னாளே. பரவாயில்லையா.'
'நாம அவாளத் தான் பார்க்கப் போறோம். அந்த பிராமணன் இருந்தா என்ன இல்லாட்டி நமக்கு என்ன?'
சரி, மாமி. நான் வரேன். நாளைக்கு அவ கிட்ட சொல்லிடறேன்.'
சொல்லிக் கொண்டதைப் போல ஞாயிறன்று சுந்தரி மாமியும் ப்ரியாவும் அமுதா வீட்டை சென்றடைந்தார்கள்.
அமுதா எண்ணப்பறவை கதையை எழுது கொண்டிருந்தாள். குமுதா சமையல் அறையில். வத்தல் குழம்பின் நறுமணம் இருவரையும் முதலில் வரவேற்றது.
ப்ரியாவுடன் வந்திருப்பது அரவிந்தின் அம்மாவாகத்தான் இருக்க வேண்டும் என யூகித்து இருவரையும் வரவேற்றாள் குமுதா.
'வாங்கோ வாங்கோ... உள்ள வாங்கோ. அமுதா...சீக்கிரம் வா. யார் வந்திருக்கா பார்.'
ஆச்சர்யம் .. சற்று வெட்கம் கலந்த படபடப்பு.
'நீ தான் அமுதாவா? ரொம்ப அழகா இருக்கியே. வாசல்ல கோலம் பிரமாதமா இருக்கே. நீ போட்டதா குமுதா போட்டதா?'
'குமுதா என்ன எந்த வேலையும் செய்ய விடமாட்டா.'
'சித்த சும்மா இரு அமுதா. இல்ல மாமி, அவளும் எல்லா வேலையும் செய்வா. இன்னும் சொல்லப் போனா அவ ரொம்ப நன்னா கோலம் போடுவா. நான் தான் எனக்கு போர் அடிக்குமேன்னு எல்லாத்தையும் நானே செய்யணும்னு பிரியப் படுவேன்.'
'பவானி உன்ன பத்தி கொண்டாடிதுண்டுல அர்த்தம் இருக்கு.'
'மாமி, சித்த இருங்கோ. காஃபி கலந்து எடுத்துண்டு வரேன். அமுதா, மாமிக்கு ரெண்டு பேரும் நமஸ்காரம் பண்ணிக்கலாம். வாம்மா சித்த.'
'இருக்கட்டுமே.'
'பரவாயில்ல மாமி. பெரியவாளா வந்திருக்கேள். ஆசீர்வாதம் பண்ணுங்கோ.'
நமஸ்கரித்தனர் இருவரும்.
'நன்னா இருங்கோடி அம்மா ரெண்டு பேரும். ராமனுக்கேத்த குமுதாவா அரவிந்துக்கு ஏத்த அமுதாவா சீக்கிரம் கல்யாணம் பண்ணிண்டு க்ஷேமமா தீர்க்காயுஸோட இருங்கோ.'
'மாமி, நீங்களே கௌரவம் எதுவும் பார்க்காம ஆம் தேடி வந்து பார்க்க வந்திருக்கேளே. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கோம்.'
குமுதா பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் ரசிக்கிறாள். ஒரு சிறு ஆதங்கம் தலை தூக்கிக் கொண்டும் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.
தொடரும்....
No comments:
Post a Comment