Saturday, March 12, 2022

எண்ணப்பறவை_50

எண்ணப்பறவை_50

'ப்ரியா, வந்த வேலைய விட்டுட்டு பேசிண்டே இருக்கியே.  ஆஃபீஸ் காரா ரெண்டு பேர் சேர்ந்தா போதுமே.  ஆஃபீஸ் அரட்டைய அங்க வெச்சுக்க கூடாதா?'

சிரித்துக் கொண்டே ப்ரியா அமுதாவை அழைத்துக் கொண்டு சுந்தரி மாமியிடம் வந்தாள்.

'சாரி மாமி.'

'அமுதா சித்த இங்க வந்து என் பக்கத்துல உட்கார்.  குமுதா நீயும் அடுக்களை வேலைய அப்படியே போட்டுட்டு வா.  கொஞ்சம் பேசலாம்.'

'அப்பா இல்லாத நேரத்துல இந்த மாமி கிட்ட எப்படி பேசணும்னு தெரியலையே?  எப்படியாவது சமாளிக்க வேண்டியதுதான்.'

மனதுக்குள் கொஞ்சம் படபடப்போடு வந்தாள் குமுதா.

'அமுதா.  என் பையன் கிட்ட என்ன பேசின.  உன் வாயால சொல்லு எல்லார் முன்னாடியும்.'

கொஞ்சம் கோபத்தோடும் ஆச்சர்யத்தோடும் அமுதாவை குமுதா பார்த்தாள்.

'என்னடி சொன்ன?  என் கிட்ட சொல்லவே இல்லையே.  எப்ப பேசின அவர் கிட்ட?'

'சொல்லுவா சொல்லுவா.  கேட்கத்தானே வந்திருக்கேன்.'

'இல்ல அம்மா.. அது வந்து...'

'அவன் கிட்டயே தைரியமா பேசியிருக்க.  இப்ப என்ன தயக்கம்.'

அரவிந்த் ஆஃபீஸ் வந்த்தையும், பிறகு பீச் லானில் உட்கார்ந்து பேசிய விவரங்களையும் சுருக்கமாக சொல்கிறாள்.

'அப்ப நீ வேலைய விட்டுட்டு அவனோட வடக்கு பக்கம் போகிற ஐடியா இல்ல.  அதானே.'

'என்ன அமுதா இது.  எல்லாம் கை கூடி வர நேரத்துல இப்படியெல்லாம் பேசியிருக்கியே.  நமக்குள்ள பேசிண்டுதானே அப்பா அவாத்துக்கு போனார்.  இப்படி போய் இப்ப பேசினா மாமி என்ன நெனச்சுப்பா நம்மள பத்தி.  நன்னாவே இல்ல நீ இப்படி பண்ணினது.  அவர் குஜராத்துக்கு போகப் போற விஷயம்தான் உனக்கு முன்னாடியே தெரியுமே.  இப்ப எதுக்கு புது குழப்பம்?'

அமுதா பதில் சொல்ல வில்லை.

'மாமி.  அவ கிடக்கா விடுங்கோ.  அப்பா ரெண்டு கல்யாணத்தையும் சேர்த்து பண்ணதான் ஏற்பாடு பண்ணிட்டு வரேன்னு போயிருக்கா.  அப்பா வந்தோண்ண பேசிக்கலாம்.  ஏதோ அப்பாவோட கஷ்டத்த உங்க புள்ள கிட்ட சொல்லியிருக்கலாம்.  வித்தியாசமா நெனச்சிக்காதீங்கோ.'

'இல்ல குமுதா.  நான் என்னோட பையனுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிடம்னு நெனச்சேனே தவிர உங்க அப்பாவோட பண கஷ்டங்கள துளியும் யோசிக்கல.  அமுதா சொல்றதுல நூத்துக்கு நூறு ஞாயம் இருக்கு.  என் புள்ள நடந்தத சொன்னதிலேந்து மனசு கேட்கல.  அதான் நேர வந்து உடனே பேசி முடிவு பண்ணிடலாம்னு வந்தேன்.'

'இல்ல மாமி.  தப்பா நெனைக்காதீங்கோ.  அவ ஏதோ சிறு பிள்ள தனமா ஏதோ சொல்லிட்டா உங்க பையன் கிட்ட.  உண்மையா சொல்லணும்னா உங்க பையன அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.'

'பிடிச்சுருக்குங்கறது வேற.  ஆனா, என்னோட நிலைமை நான் புள்ள கல்யாணத்த காலம் தாழ்த்த முடியாது.  புது எடத்துல அவன் தனியா இருந்து கஷ்டப்படறதுல எனக்கு விருப்பமில்ல.  அவனுக்கு சமையல் கூட ஒண்ணும் தெரியாது.  கண்ட கண்ட சாப்பாட்ட சாப்பிட்டு ஒடம்ப அவன் கெடுத்துக்க கூடாது இல்லையா.  உங்க அப்பா கஷ்டப் பட்டுண்டு இந்த கல்யாணம் நடத்தறதுலேயும் எனக்கு உடன்பாடு இல்ல.'

'மாமி.  திரும்ப திரும்ப சொல்றேன்னு நெனைக்காதீங்கோ.  ஏதோ அவ மனசு அப்பாவோட கஷ்டத்த நெனச்சிருக்கு.  அப்பா நல்ல முடிவோட வருவா.  அதுவரைக்கும் நாம எல்லாரும் பொறுமையா இருப்போம்.  அவ பேசினதெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்கோ.  உங்க புள்ள தான் எங்காத்து மாப்பிள்ள.  அதுல எந்த சந்தேகமும் வேண்டாம்.'

'நானும் அப்படித்தான் நெனச்சிண்டிருக்கேன்.  என் புள்ளைக்கும் அமுதாவ பிடிச்சிருக்கு.  இல்லாட்டி இப்படி உடனே வந்து சந்தேகத்த தீர்த்துக்கறதுக்காக ஓடி வருவேனா?'

அதுவரை பேசாமல் இருந்த அமுதா பேச ஆரம்பிக்கிறாள்.

'அம்மா.  உங்க பையன பிடிச்சிருக்குன்னு அவர் கிட்டேயே சொல்லிட்டேன்.  அதுவும் அன்னிக்கு முதல் முதலா bபாங்ல பார்த்த உடனே.  எனக்கு இப்ப நான் கேட்கறதெல்லாம் ஒண்ணுதான்.  கல்யாணத்த குமுதா கல்யாணம் முடிஞ்சு ஒரு ஆறேழு மாசம் தள்ளி வெச்சிக்கலாம்னு தான் கேட்கறேன்.  உங்க புள்ளை குஜராத் கம்பெனியில ட்யூட்டி ஜாயின் பண்ணிட்டு ஒரு ஆறு மாசம் தனியா இருக்கட்டும்.  அதுக்குள்ள எங்க அப்பா என் கல்யாணத்துக்கு தயாராயிடுவா.  எங்க அப்பாக்கு யார் கிட்டேயும் கடன் வாங்கறதெல்லாம் பிடிக்காது.  ஏதோ ஆசைப்பட்டு எங்களுக்கு தெரியாம அகலக் கால் வெச்சு ரெண்டு கல்யாணத்தையும் நடத்திட்டு அவர் கஷ்டப் படறத நான் பார்த்திண்டிருக்க முடியாது.  குமுதாவும் வேலைய விடணும்னு சொல்லிட்டா அவாத்துல.  அவளுக்கு ஒண்ணும் பெரிய வேலையில்ல.  அதனால பிரச்சனை இல்ல.  நானும் வேலைய விட்டுட்டா எந்த வித சப்போர்ட்டும் கொடுக்க முடியாம போயிடும் இல்லையா?'

'உங்களுக்கும் ஒரே பிள்ள.  அவர் கல்யாணம் இப்படி நடக்கணும் அப்படி நடக்கணும்னு மனசுல ஆசை இருக்கும் உங்களுக்கும்.  அதையும் மனசுல ஏத்திண்டுதான் நான் இப்படி சொல்றேன்.  புரிஞ்சுப்பேள்னு நெனைக்கிறேன்.'

'மனசளவுல தீர்மானிச்சிட்டோம்.  உங்க பையனுக்கு நான், எனக்கு அவர்னு.  இப்ப கேட்கறது கொஞ்சம் டைம்.  சுலபமான வழின்னா உங்க பையன் புது வேலைய ஏத்துக்காம இருக்கறது.  என் உத்யோகம் உங்க பையன் உத்யோகம் ரெண்டையும் வெச்சிண்டு நன்னா குடும்பத்த மெட்ராஸுலேயும் நடத்தலாம்.  எங்க அப்பாவுக்கும் தேவைப்பட்டா உதவியா இருக்கலாம்.  ஆனா, உங்க பையனோட முடிவில நான் குறுக்க நிக்க முடியாது.  அது அவர் தீர்மானிக்க வேண்டிய விஷயம் அது.'

'அவன்தான் அந்த வேலைக்கு போயே தீருவேன்னு ஒத்த காலுல நிக்கறானே.  எல்லா கொழப்பத்துக்கும் அந்த வேலைதான முன்னாடி நிக்கறது அமுதா.  நீ சொல்றது எல்லாம் நன்னா புரியறது.  இந்த மாதிரி அழகா தைரியமா சாமர்த்தியமா பேசற நீதான் எங்காத்துக்கு மாட்டுப் பொண்ணா வரணும்னு மனசு ஆலா பறக்கறது.  ஆளுக்காள் பிடிவாதம் காட்டினா நான் எங்க போவேன் சொல்லு.'

பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு ருக்மணி மாமி வருகிறாள்.

'அடியே சுண்டெலி.  நீதானா வந்திருக்க.  ரொம்ப நாழியா பேச்சு சத்தம் கேட்டுண்டிருக்கே.  யாருன்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.  எப்படி இருக்க சுண்டெலி?'

'நன்னா இருக்கேன் ருக்கு.  நீதான் இவாத்து ஹவுஸ் ஓனர்னு அமுதா அப்பா சொன்னார்.  பேச்ச முடிசுட்டு உங்காத்துக்கு வந்து உன்னையும் பார்த்துட்டு போகலாம்னுதான் இருந்தேன்.'

'நல்லது சுண்டு.  பேசியாச்சா?  நான் வேணா அப்பறம்...?'

'உனக்கு தெரியாமையா?  பரவாயில்ல நீ வந்ததும் நல்லதா போச்சு.  எல்லாம் என் பையன் கல்யாண விஷயமாத்தான் பேசிண்டிருந்தோம்.  அமுதாவ என்னோட மாட்டுப் பொண்ணா அழச்சிக்கலாம்னு...'

'ஆஹா.. கேட்கறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?  பொண் குழந்தைகள்னா இவா ரெண்டு பேர்தான்.  அழகு சமர்த்து சாமர்த்தியம் எல்லார் கிட்டேயும் அன்பு பழகறது ...  எல்லாத்துலேயும் இந்த கொழந்தைகள் அசத்தறா போ.  உண்மையா சொல்லணும்னா, கல்யாணம் முடிஞ்சுடுத்துன்னா உன்ன விட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது.  ஆனாலும் என் செல்ல பொண்ணு குமுதா தான்.  பொறுமைய அவ கிட்டதான் கத்துக்கணும்.  அதுக்காக அமுதாவ குறை சொல்றதா நெனக்க கூடாது.  அது கடைக்குட்டி.  தைரியமா வளர்ந்திருக்கு.'

களை கட்டத் துவங்கியது அவர்கள் இருவரின் பேச்சுக்கள்.  சம்மந்தம் தொடர்பான விஷயங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர்.

'எனக்கு மனசுல பட்டத சொல்லட்டுமா?  கல்யாணத்த மொதல்ல முடி.  ஒரு வருஷம் நீ உன் மாட்டுப் பொண்ணோட இரு.  உன் புள்ள நாள் கிழமைக்கு வந்துண்டு போகட்டும்.  அதுக்குள்ள குமுதா அப்பாவோட கஷ்டத்த சமாளிச்சுடலாம்.  ஓடற ஒட்டம் ஒரு வருஷம்.  புள்ள புள்ளன்னு பொத்தி பொத்தி வளர்க்காத.  அவனையும் நாலு இடத்துல தனியா பழக விடு.  இந்த ரெண்டு பொண் குழந்தைகள பாரு.  ஏங்கேயோ திருச்சிலேந்து வேலைக்காக இங்க வந்து, தனியா சமச்சு சாப்டுண்டு, தைரியமா சந்தோஷமா எல்லாரோடையும் நன்னா பழகிண்டு குடும்பம் நடத்தல.  எல்லாமே நம்ம விருப்பத்துக்கு அமஞ்சுடாது.  கெடச்ச நல்ல வரன்ல எப்படி நல்ல படியா கல்யாணத்த முடிக்கணும்னு பாரு.'

'நீ சொல்றதும் ஏத்துக்கும்படியாத் தான் இருக்கு.  யோசிக்கறேன்.'

'யோசிச்சிண்டே இருந்தா மண்டதான் காயும்.  இவாளோட அப்பா வந்தோண்ண நன்னா தீர்க்கமா பேசி முடிவெடுத்து சீக்கிரம் வாழ மரத்த கட்ட ஏற்பாடு பண்ணுங்கோ.'

சிலர் பேசும்போது குழப்பம் தெளிவு பெறுகிறது.  அந்த வகையில் ருக்மணியின் பேச்சு சுந்தரிக்கு ஒரு தீர்மானத்தை கொடுக்கும் நம்பிக்கையாகவே தெரிந்தது.

'ப்ரியா கிளம்பலாமா?'

'என்ன.... கிளம்பலாமாவா?  நம்மாத்துல ஒரு வாய் சாப்பிடாம உன்ன விட்டுடுவேனா என்ன?  அமுதா காலிஃப்ளவர் ரோஸ்ட் செஞ்சு சாப்டதில்லையே.  அமுதா, நம்மாத்துல காலிஃப்ளவர் வாங்கியிருக்கேன்.  ஒரு பிரட்டு பிரட்டி கொடுக்கறையா?'

'குமுதா, நீ சமச்சதையும் நம்மாத்துக்கு எடுத்துண்டு வா.  ஒண்ணா உட்கார்ந்து எல்லாரும் சாப்பிடலாம்.  சுண்டெலி ஃபார்மாலிடியெல்லாம் பார்க்க மாட்டா.  கவலைப் படாதீங்கோ.'

தொடரும்....

No comments:

Post a Comment