எண்ணப்பறவை_41
'உட்காருங்கோ. ரிலாக்ஸா இருங்கோ. ஒரு பத்து நிமிஷம். அவ்வளவுதான்.'
'வாங்கோ போங்கோ வேண்டாம். குமுதான்னே கூப்பிடலாம்.'
'நேத்திக்கு ராத்திரி என் ஸிஸ்டர் பவானி உங்களப் பத்தி பேசிண்டே இருந்தா என் கிட்ட தனியா. எனக்கு உங்கள, சாரி, உன்ன கண்டிப்பா பிடிக்கும்னு சொன்னா. அவ சொன்னது சரிதான். எனக்கு உன்ன பிடிச்சிருக்கு.'
தலையை சற்று குனிந்து கொண்டு, இதழோர புன்னகையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு ஒரு மௌனம் குமுதாவிடம்.
'பவானி அவளுக்கு தெரிஞ்ச இன்னொரு குடும்பத்த பத்தியும் சொன்னா. யாரோ அரவிந்தாமே, பவானி ஆத்துக்காரரோடு வேலை பார்க்கறாராமே. எப்படியாவது உன் தங்கைக்கு அவரை முடிக்கணும்னு ஆசைப் படறா. ரெண்டு கல்யாணத்தையும் சேர்த்து கல்யாணம் பண்ற அளவு உன் அப்பாவுக்கு சௌகர்யப் படாதோன்னு பவானிக்கு சந்தேகம்.'
'இதெல்லாம் என் கிட்ட ஏன் சொல்றேள். அப்பாகிட்டேயே உங்க தங்கை பேசலாமே.'
'கரெக்ட். ஆனா உன்னோட அப்பாவ விட உன் கிட்ட என்னோட அபிப்ராயத்த சொல்லிடலாம்னு தோணித்து. அதான் பேசினேன். பரவாயில்ல, நீங்க ஆட்சேபிக்கறதால என் கல்யாணத்த மாத்திரம் நான் பேசிட்டு போயிடறேன். ஒண்ணும் பிரச்சனை இல்ல'
'சாரி, நான் கொஞ்சம் அவசரப் பட்டுட்டேன். அப்பா முடிவெடுக்க வேண்டிய விஷயமாச்சேன்னு...'
'ஒரு வகையில நீ சொல்றது சரிதான். ஆனா, என் கல்யாணத்துல எங்க அப்பா அம்மா தன்னிச்சயா லௌகீகம் பேச மாட்டா. என் கிட்டேயும் டிஸ்கஸ் பண்ணுவா கண்டிப்பா. அவாளுக்கு நன்னாவே தெரியும் எனக்குன்னு சில ப்ரின்ஸிப்பிள்ஸ் இருக்குன்னு.'
'சாரி, உங்கள நான் தப்பா புரிஞ்சுண்டுட்டேன். மேல சொல்லுங்கோ.'
'நல்ல வரன் கிடைக்கும்போது மிஸ் பண்ணக் கூடாது. என் தங்கை பவானிக்கு ஜாதகமெல்லாம் பார்த்தா. இருந்தாலும் அனந்த கிருஷ்ணனை என்னமோ பிடிச்சிருந்தது எனக்கு. இத்தனைக்கும் அவர் வசதியான குடும்பமெல்லாம் இல்லை. நல்ல குணம். நான் இதை எதுக்கு சொல்றேன்னு கேட்டா, வசதியெல்லாம் எப்போதும் ஒரே மாதிரியெல்லாம் இருக்காது. பணம் இன்னிக்கு வரும். நாளைக்கு இல்லாமலும் போகலாம். பவானி சொல்றத பார்த்தா நல்ல வரனா உன் தங்கைக்கு இருப்பான்னு தோணறது. ரெண்டு கல்யாணத்தையும் ஒரே நாளுல வெச்சிக்க முடியுமான்னு கொஞ்சம் யோசிங்கோ நீங்க மூணு பேரும். என்னோட ஆஃபீஸ் நம்பர கொடுக்கறேன். தேவைப் பட்டா நானும் பவானி ஆத்துக்காரரும் நேரா அவாத்துக்கு போய் பேசறோம்.'
'அந்த ஜென்டில்மேனுக்கு ஏதோ குஜராத்துல வேற நல்ல வேலை கிடச்சிருக்குன்னு சொன்னா. உன் தங்கைக்கு கவர்ன்மெண்ட் உத்யோகம்னு சொன்னா. வேலைய விடறதுக்கு அவ சம்மதிப்பாளா அப்படி இப்படின்னு நிறைய விஷயங்கள் நீங்க உங்களுக்குள்ள டிஸ்கஸ் பண்ணுங்கோ. என்னோட ஸஜஷன் என்னன்னா, நல்ல வாழ்க்கை நம்பிக்கையா தெரிஞ்சா சில ஸேக்ரிஃபஸஸ் பண்ணிக்கலாம். தப்பு இல்ல.'
ராமன் பேசப் பேச கண் ஓரத்தில் வந்த துளிகளை குமுதாவால் அடக்க முடியவில்லை.
'என்ன இப்படி எமோஷனா ஆயிட்ட? இந்த ரூமை விட்டு போகும்போது யாராவது என்ன தப்பா நெனைக்கப் போறா?'
'நாம பேசினது நம்மோடையே இருக்கட்டும். எங்காத்த பொருத்த வரைக்கும் பணத்துக்கோ காசுக்கோ குறையில்ல. ஏதாவது கல்யாண செலவுல காம்ப்ரொமைஸ் செஞ்சுக்கலாம்.'
'நீங்க தீர்மானிக்க வேண்டியது ரெண்டு விஷயம்தான். ஒண்ணு உன் தங்கைக்கு அந்த ஜென்டில்மேனை புடிச்சிருக்கா. ரெண்டாவது, உன் தங்கை வேலைய விட சம்மதிப்பாளா. மத்ததெல்லாமே எல்லாரும் தனித்தனியா பேசியும் ஒண்ணா கூடி பேசியும் தீர்மானிக்கலாம். அப்பறம் மேல இருக்கறவன் எப்படி தீர்மானிக்கறானோ அப்படி நடக்கட்டும்.'
'சார், உங்க பவானிய விட்டு அவா கிட்ட ஒரு வருஷம் வெயிட் பண்ணலாமான்னு கேழ்க சொல்ல முடியுமா?'
'நல்ல யோசனை தான். ஆனா செலவை மாத்திரம் யோசிச்சுண்டு நாள் கிடத்தறது எவ்வளவு உசிதம்னும் யோசிக்கணும் இல்லையா? மனுஷா எல்லாம் ஒரே மாதிரி எப்போவும் இருப்பான்னு சொல்ல முடியாது இல்லையா? உன் தங்கையும் அவரும் ஒருத்தருக்கொருத்தர் பழகிண்டிருந்தாலும் அவா கிட்ட அப்படி பேசலாம். அப்படி ஒண்ணும் இருக்கறதா தெரியலையே.'
இவ்வளவு தூரம் ராமன் பேசும்போது உண்மையை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாள். என்னவோ அவளை தடுத்தது.
'சரி. நம்ம விஷயத்திற்கு வருவோம். ரொம்ப நன்னா பாடின. நல்ல குரல். யூ லுக் ப்ரெட்டி டூ. பொதுவா நான் கூச்ச சுபாவம்தான். என்னவோ உன் கிட்ட இவ்வளவு தைரியமா பேசிட்டேன். அங்க எல்லார் முன்னாடியும் தலையசச்சது இருக்கட்டும். நான் ஓகே தானே உனக்கு.'
வெட்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தன்னை அப்படியே திருப்பிக் கொள்கிறாள். எதிரில் தெரிந்த சமயபுரத்து மாரியம்மன் அவளைப் பார்த்து சிரித்த உணர்வு.
'எனக்கு ஷிஃப்ட் ட்யூட்டி. ஆஃபீஸில் வேலையெல்லாம் ரொம்ப டைட்டா இருக்கும். இதெல்லாம் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கணும். மத்தபடி என்னால எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நெனைக்கறேன்.'
'சரி, கிளம்பலாமா? நான் பேசினதெல்லாம் நெனச்சு ரொம்ப எமோஷனலா இருந்தா யூ டேக் ஸம் மோர் மினிட்ஸ். ஐ வில் வெய்ட்.'
'சித்த நாழியில் இவர் எப்படி என்னை இம்ப்ரெஸ் பண்ணிவிட்டார்? அமுதாவுக்கும் இப்படித்தான் ஆயிருக்குமோ? இதற்குப் பேர்தான் லவ்வா? ஈர்ப்பா? மனச பறிகொடுக்கறதுங்கறதா? என்னோட மனசு ஏன் இப்படி பட படன்னு வருது. உடனே இவரோட மணையில சீக்கிரம் உட்காரணும்னு தோண்றதே!'
குமுதாவின் மனதில் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. அதோடு, ராமனும் அவள் மனதில் மெள்ள மெள்ள விஸ்வரூபம் எடுக்கிறான்.
இருவரும் ருக்மணி மாமியாத்துக்கு வருகிறார்கள்.
'ராமா, கொடுத்து வெச்சவம்ப்பா நீ. சூப்பர் கேசரி. ரெண்டு மூணு தடவையா போட்டுண்டேன். நாக்கு இன்னும் கேட்டுண்டே இருக்கு.'
'என்னடா, குமுதாவோட பேசிட்டியோன்னோ? ஒண்ணும் மாத்தம் இல்லயே. இன்னொரு தடவையும் எல்லாருக்கு முன்னாடி சொல்லிடு.'
'அம்மா, முதல்ல அவன் ஸ்வீட்டெல்லாம் சாப்டட்டும். ஏற்கனவே தான் சொல்லிட்டானே புடிச்சிருக்குன்னு. அடிக்கடி கேட்டுண்டிருக்காத. என்ன சொல்லணுமோ அத நேராவே சொல்லியிருப்பாம்மா இத்தன நேரம்.'
அக்கம் பக்கத்திலிருந்து வந்தவர்கள் ஒவ்வொருவராக ராமனின் பெற்றோர்களிடம் குமுதாவைப் பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள்.
'குமுதா, நீயும் எங்காத்துக்கு ராமனோடையே ஒண்ணா ஒக்காந்து டிஃபன் எடுத்துக்கோ. சங்கோஜமெல்லாம் வேண்டாம்.'
'பரவாயில்லம்மா. அப்புறம் சாப்பிடறேன்.'
அவளிடம் வந்த யோகாம்பாள் அவள் தலையை தடவி ஆசீர்வதிக்கிறாள்.
'எங்க ராமனுக்கு பாந்தமா இருக்க. எங்க ராமன் மனசுக்கு எந்த மாதிரியும் இருக்க. உங்க தெருக்காராள்லாம் உன்ன எப்படி கொண்டாடிக்கறா. சீக்கிரமா எங்காத்துக்கு வந்துடு. எல்லோரும் போன உடனே ருக்மணி மாமிய விட்டு திருஷ்டி சுத்திப் போட சொல்லு. நானும் சொல்லிட்டு போறேன் அந்த மாமிகிட்ட.'
'ஓன் தங்க எங்க காணுமே?'
'அவ ஃப்ரெண்ட் அபிராமிய வழி அனுப்ப வாசலுக்கு போயிருக்காம்மா'
'ஒன் தங்கையும் நல்ல அழகு. துரு துருன்னு வேலையெல்லாம் பார்க்கறாளே. சமத்து. எங்காத்து ஸைடுலேயே நல்ல எடமா அவளுக்கும் பார்க்கறேன்.'
'யோகம், எவ்வளவு நாழியா பேசிண்டே இருப்ப? கிளம்புற வழிய பாரு. எனக்கு சந்தி வேற பண்ணனும் ஆத்துக்கு போய்.'
'இந்த மனுஷர் எப்போதும் இப்படித்தான் காலுல கஞ்சிய கொட்டிண்டு கத்திண்டே இருப்பார். ஒரு நாளாவது மூக்க லேட்டா புடிச்சாத்தான் என்ன?'
'சரி, குமுதா. நாங்க வரோம். ருக்மணி மாமி, தாயில்லாத கொழந்தகளுக்கு இவ்வளவு அனுசரணையா இருக்கேளே. ரொம்ப சந்தோஷம். தஞ்சாவூர் ஸைடு வந்தா கண்டிப்பா திருக்காட்டுப்பள்ளிக்கு வாங்கோ.'
அபிராமியை வழி அனுப்பி விட்டு வந்த அமுதாவை ருக்மணி மாமி யோகாம்பாளை நமஸ்கரிக்க சொல்கிறாள்.
'நன்னா இருடி அம்மா. உனக்கும் சீக்கிரம் கல்யாணமாகி புள்ள குட்டியோட தீர்க்காயுஸா இருக்கணும்.'
தாம்பூலங்களை பெற்றுக் கொண்டு அனைவரும் விடை பெறுகின்றனர்.
தொடரும்....
No comments:
Post a Comment